Thursday, 22 September 2011

நியுயோர்க் சென்றார் மகிந்த � அமெரிக்க அதிகாரிகள் வரவேற்கச் செல்லவில்லை


ஐ.நா பொதுச்சபையின் 66வது கூட்டத்தொடரில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று நியுயோர்க் சென்றடைந்துள்ளார்.

அவரை நியுயோர்க் விமான நிலையத்தில் வரவேற்க அமெரிக்க அதிகாரிகள் எவரும் செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணமாக அவர் செல்லாததால், அமெரிக்க அதிகாரிகள் மகிந்த ராஜபக்சவை வரவேற்கச் செல்லவில்லை.

சிறிலங்கன் விமானசேவை அதிகாரிகளும், நியுயோர்க்கில் உள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா உள்ளிட்ட சிறிலங்கா தூதரக அதிகாரிகளுமே சிறிலங்கா அதிபரை வரவேற்றுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 23ம் நாள்- வெள்ளிக்கிழமை ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றவுள்ளதாக சில கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

இது சிறிலங்கா அதிபரின் உரை இடம்பெறும் போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.நா முன்றலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்குதமிழ் நிகழ்வை குழப்புகின்ற முயற்சியாகவே கருதப்படுகிறது.

ஆனால் சிறிலங்கா அதிபர் இன்று ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என்று நியுயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா பொதுச்சபையில் பொதுவிவாதம் நாளையே தொடங்கவுள்ளது. நாளை 21ம் நாள் தொடக்கம் 23ம் நாள் வரையும், எதிர்வரும் 26ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரையுமே பொதுவிவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்முறை பொதுவிவாதத்தின் போது, “பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதில் நடுநிலைமையின் பங்கு“ என்ற தொனிப்பொருளில் அரச தலைவர்களின் உரைகள் இடம்பெறவுள்ளன.

இந்த விவாதத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மூன்றாவது தரப்பின் தலையீடுகள் மற்றும் நடுநிலைமை முயற்சிகளைக் கடுமையாக எதிர்க்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments: