Wednesday, 20 July 2011

படுக்கை அறை காட்சியை எடுத்தது ரஞ்சிதா தான்: நித்தியின் வழக்கறிஞர் ஸ்ரீதர்

2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின. இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச்சாட்டை கூறினார்.


இதையடுத்து, 'நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம். வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும்  நீதிமான்கள், சட்ட வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர்  முன்பாக  இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது.


இந்த சவாலை எதிர்கொண்டு, தங்களின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?' என்று நக்கீரன் கூறியிருந்தது.


இந்நிலையில் சென்னையில் 18.07.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர்,


எனக்கும் நக்கீரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நித்யானந்தா தொடர்பான வழக்கை நான்தான் நக்கீரன் மீது தொடர்ந்தேன். நான் எந்தக் கட்சியையும் சாராதவன். நித்யானந்தா எனக்கு வந்து ஒரு கிளைண்ட்.


நித்தியானந்தாவுக்கு யாரோ தவறான ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். தேவையில்லாமல் அவர் நக்கீரன் மற்றும் சில ஊடங்களை மட்டும் குற்றம் சாட்டியிருக்கிறார். அன்றைக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து ஊடங்களும் நித்யானந்தா பற்றிய செய்திகளை வெளியிட்டது. யாரும் நித்யானந்தாவை மிரட்டவில்லை.


இந்த சிடி விஷயம் பற்றி தெரிந்தது 5 பேர்தான். நித்யானந்தா, ரஞ்சிதா, லெனின் தர்மானந்தா, ஆர்த்திராவ். நித்யானந்தா என்னிடம் சொல்லும்போது, சிடி உண்மையானது என்றார். அப்போது அட்வைஸ் பண்ணினோம். உண்மையான சிடியாக இருந்தால் தாமதப்படுத்த வேண்டாம். கன்சல்டிங் பாட்னர் என்று சொல்லிவிட்டு கேஸில் இருந்து தப்பிக்க பாருங்க. அதைவிட்டுட்டு ரொம்ப டீப்பா போனீங்கன்னா டிரபுள் வரும். அதற்கேற்ற மாதிரி அவர் ஒத்துக்கிட்டார்.


இதையடுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சிடியில் இருந்தது நான்தான் என்று ஒப்புக்கொண்டார். அப்போது யோக நிலையில் இருந்ததாக கூறியிருந்தார். அதைப்போல ரஞ்சிதாவும், ஆமாம் நான் சாமிக்கு சேவை செய்வேன் என்று பேட்டி கொடுத்தார்.




தற்போது சிடி பொய் என்று கூறுகின்றனர். இது வழக்கை திசை திருப்பும் செயல். அந்த சிடியை பார்த்தால் நித்யானந்தா எழுந்து கையை நீட்டி அங்கபாரு என்று சொல்லும்போது, ரஞ்சிதா அதுவெல்லாம் ஒன்றும் இல்லை படு என்று சொல்லுகிற மாதிரி இருக்கும். அதை உன்னிப்பா கவனித்தால் தெரியும். கண்டிப்பா ரஞ்சிதா படுக்கை அறை காட்சியை, போக்கஸ் லைட் நடுவில் எடுத்திருக்காங்க அப்படியின்னா வேர்க்க விறுவிறுத்துதான் எடுத்திருப்பாங்க.

அப்போது நான் வழக்கறிஞராக சொல்லிவிட்டேன். ரஞ்சிதாதான் எடுத்திருக்காங்க. ரஞ்சிதாவிடம் சரண் அடைவதுதான் பெஸ்ட். ரஞ்சிதாவுக்கு பணத்தை செட்டில் செய்து நித்யானந்தா அந்த அட்வைஸை மட்டும் கரெக்டா செய்துவிட்டார் என்று கூறினார்.

உயிரை விடவும் தயார்: பிரதமருக்கு ஹசாரே எச்சரிக்கை கடிதம்

 ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் உயிரையும் விடவும் தயாராக இருப்பதாக பிரதமருக்கு மன்மோகன் சிங்குக்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.

ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவை உருவாக்கும் பணியில், 5 மத்திய அமைச்சர்களும், அன்னா ஹசாரே உள்ளிட்ட 5 சமூக பிரதிநிதிகளும் அடங்கிய கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் இவர்களுக்குள் ஒருமித்த கருத்து உருவாகாததால், இருதரப்பினரும் தனித்தனி வரைவு மசோதாக்களை உருவாக்கினர்.

இவற்றில் எந்த மசோதாவை ஏற்பது என்று நாடாளுமன்றம் முடிவு செய்யும்.

ஆனால், ஆகஸ்டு 16ம் தேதிக்குள் வலிமையான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால், மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டடத்தை துவக்குவேன் என்று ஹசாரே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து இந்த உண்ணாவிரதத்தையும் ராம்தேவ் உண்ணாவிரதத்தை முறியடித்தது மாதிரி முறியடிப்போம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், மத்திய அரசு தயாரித்துள்ள லோக்பால் மசோதா பலவீனமாக உள்ளது, கேலிக்கூத்தானதாக உள்ளது. அந்த மசோதாவின் பார்வை, ஒரு வரையறைக்குள் உள்ளது.

சாதாரண மக்கள் சந்திக்கும் ஊழல் பிரச்சனைகளுக்கு இந்த மசோதா தீர்வு காணாது. ஆகவே, இந்த மசோதாவில் உள்ள நிறைய ஓட்டைகளை மன்மோகன் சிங் நீக்க வேண்டும்.

அதே சமயத்தில், நாங்கள் தயாரித்துள்ள ஜனலோக்பால் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், நான் ஆகஸ்டு 16ம் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் ஹசாரே கூறுகையில், மத்திய அமைச்சர் கபில் சிபல் வெற்றி பெற்ற சாந்தினி சவுக் தொகுதி மக்களிடம் வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதிவரை எங்கள் இயக்கத்தினர் வாக்கெடுப்பு நடத்துவார்கள். அதில் 8 கேள்விகள் இருக்கும்.

இருவிதமான லோக்பால் வரைவு மசோதாக்கள் பற்றியும், லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை கொண்டு வரலாமா என்பது பற்றியும் இந்த சர்வே நடத்தப்படும்.

அந்த கேள்விகளுக்கு 2 நாட்கள் கழித்து பதில்களை பெற்றுக் கொள்வோம். 27ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்

எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமையாகும். பாபா ராம்தேவின் போராட்டத்தை நசுக்கியதுபோல எங்களுடைய போராட்டத்தையும் ஒடுக்குவோம் என்று கூறுவது சரியல்ல.

எங்களைக் கைது செய்தாலும், அடித்துத் துன்புறுத்தினாலும் கவலையில்லை. அவற்றை நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். எங்கள் உயிரையும் நாங்கள் தியாகம் செய்யத் தயாராகி விட்டோம். ஊழலால் நாம் பட்ட துன்பம் போதும் என்றார்.

இது குறித்து லோக்பால் மசோதா வரைவுக்குழுவில் இடம்பெற்றுள்ள பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறுகையில், எங்களுடைய அறப்போராட்டம் பற்றி டெல்லி போலீஸாருக்கு ஏற்கெனவே விவரங்களை அளித்துவிட்டோம் என்றார்.


குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயன்படுத்துவதில் தவறில்லை- விஜயகாந்த்

a
 குதிரையைக் கேட்டோம், கழுதைதான் கிடைத்துள்ளது. குதிரை கிடைக்கும் வரை கழுதையைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை அதிகம் பேசி வந்த விஜயகாந்த் தற்போதெல்லாம் எப்போதாவதுதான் பேசுகிறார். அப்படி அவர் அரிதாக பேசிய பேச்சு அடங்கிய அறிக்கை:

தமிழக அரசு ஏற்கனவே கொண்டு வந்த பொதுப்பாடத் திட்டத்தை அப்படியே செயல்படுத்த வேண்டுமென்றும், அதை இன்றைய அரசு திருத்தம் கொண்டு வந்ததை ஏற்க மறுத்தும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் பாடத்திட்டத்தில் நீக்க வேண்டியவற்றை நீக்கியும், சேர்க்க வேண்டியவற்றை சேர்த்தும் மூன்று மாத காலத்திற்குள் ஒரு துணை பாடப் புத்தகத்தை உருவாக்கவும் இந்தத் தீர்ப்பு வழி வகை செய்துள்ளது.

இந்த கல்வி ஆண்டு தொடங்கி ஏற்கனவே இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லையே என்ற கவலையால் பீடிக்கப்பட்டுள்ளனர். எந்த பாடப் புத்தகத்தையாவது வைத்தால் போதும் என்ற நிலையே அவர்களிடம் உள்ளது. 

இந்த சூழ்நிலையில் முந்தைய தி.மு.க அரசு கொண்டு வந்த பாடத் திட்டத்தில் உள்ள கருணாநிதி குடும்பத்தின் சுய புராணம் பாடும் பகுதிகளை நீக்கி, தரமுள்ள புதிய பாடத் திட்டங்களை கல்வி நிபுணர்களின் குழுவின் மூலம் சேர்த்து பாடத் திட்டத்தின் தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும்.

தமிழகத்தில் தற்போதைய கல்வியின் தரம் வெகுவாக குறைந்துள்ளது என்பதும், முந்தைய தி.மு.க அரசு கொண்டு வந்த பொதுப் பாடத்திட்ட சட்டம் இந்த தரத்தை மேலும் குறைக்கவே வகை செய்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இன்றைய மாணவர்கள்தான் நாளைய நாட்டின் எதிர்காலம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால் அந்த மாணவர்களுக்கு சரியான கல்வி கிடைக்க தமிழக அரசு ஏற்கனவே நிறைவேற்றிய பொதுப் பாடத்திட்ட சட்டம் தீர்வாகாது.

கல்வித் துறையில் கடந்த ஆட்சியால் ஏற்பட்டுள்ள சீர்கேட்டினை நிரந்தரமாகக் களைய வேண்டுமானால், அது குறித்து அனைத்து தரப்பினரும், குறிப்பாக கல்வி நிபுணர்களும், கலந்து கருத்தாய்வு செய்வது அவசியம். ஆகவே கல்வி சம்பந்தமாக அனைத்து விவரங்களையும் திரட்டி ஒரு வெள்ளை அறிக்கை கொண்டு வரவேண்டும் என்றும், அதில் அனைத்து தரப்பினரின் கருத்துகளை திரட்டி சட்டப் பேரவையில் அனைத்து கட்சியினர்களையும் கலந்து ஒரு விரிவான கல்வி சீர்திருத்த சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

இதற்கிடையில் நாம் கேட்பது குதிரையானாலும் கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல.

தேவை மற்றும் உடனடித் தேவை என்று இருப்பதைப் போல, நமக்கு தேவை சமச்சீர் கல்வி என்றாலும் உடனடித் தேவையாக இருப்பது தற்போது திறந்துள்ள பள்ளிக் கூடங்களை பாடப் புத்தகங்கள் தந்து நடத்துவதுதான். ஆகவே உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று உடனடியாக பள்ளிக் கூடங்கள் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.


இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

இந்தியாவின் எண்ணெய்த் தேவையை பெரிதும் பூர்த்தி செய்யும் நாடுகளில் முதன்மையாக உள்ள ஈரான், இனி இந்தியாவுக்கு கடனாக எண்ணெய் தர முடியாது என கறாராக கூறிவிட்டது.

கச்சா எண்ணை இறக்குமதிக்கு இந்தியா பெரிதும் வளைகுடா நாடுகளையே நம்பி உள்ளது. சவூதிஅரேபியாவில் இருந்து அதிகமான அளவுக்கு கச்சா எண்ணை இந்தியாவுக்கு கிடைக்கிறது. 

அடுத்தபடியாக ஈரான் நாட்டில் இருந்து அதிக கச்சா எண்ணை இறக்குமதியாகிறது. ஒவ்வொரு மாதமும் ஈரானில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் பேரல் கச்சா எண்ணை இந்தியா பெறுகிறது. அந்த வகையில் இந்தியாவின் ஒட்டு மொத்த கச்சா எண்ணை தேவையில் 12 சதவீதத்தை ஈரான்தான் பூர்த்தி செய்கிறது.

இந்த கச்சா எண்ணைக்காக ஈரானுக்கு கொடுக்க வேண்டிய கடன் 5 பில்லியன் டாலர். இந்தக் கடனை அடைக்காமல் இந்தியா இழுத்தடிப்பதால் கடுப்பான ஈரான், இனி இந்தியாவுக்கு எண்ணெய் கிடையாது என அறிவித்துள்ளது. 

ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்தத் தொகை வந்தாகவேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆகஸ்டிலிருந்து எண்ணெய் சப்ளை முற்றாக நிறுத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. 

ஈரான் நாட்டு எண்ணெய் அமைச்சகம் இந்த எச்சரிக்கையை எழுத்துமூலமாக இந்தியாவுக்கும் அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கலாநிதிமாறனை போட்டு கொடுத்த சக்சேனா :கலாநிதி மாறன்சொன்னதைச் செய்தேன்-சக்சேனா பரபரப்பு வாக்குமூலம்

 

 நான் ஒரு சாதாரண தொழிலாளிதான். எனது முதலாளியான கலாநிதி மாறன் என்ன செய்யச் சொன்னாரோ அதை மட்டுமே செய்தேன் என்று சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா வாக்குமூலம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மாப்பிள்ளை என்ற படத்தை ஹிதேஸ் ஜபக் தயாரித்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்டது. பெரிய அளவில் விளம்பரமும் செய்தார்கள். ஆனால் படம் ஓடவில்லை.

இந்த நிலையில் ஹிதேஸ் ஜபக் போலீஸில் புகார் கொடுத்தார். அதில் சக்சேனா தன்னை மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார்.

இதன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்சேனாவை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து போலீஸ் தரப்பு தகவல்கள் கூறுகையில், 

பல சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள் குறித்து சக்சேனா வாக்குமூலம் அளித்துள்ளார். தான் ஒரு சாதாரண தொழிலாளி என்றும், முதலாளியான கலாநிதி மாறன் என்ன செய்யச் சொன்னாரோ அதை மட்டுமே தான் செய்ததாகவும் சக்சேனா கூறியுள்ளார்.

எந்த ஒரு விஷயத்திலும் தன்னிச்சையாக தான் எதையும் செய்யவில்லை. தன்னுடைய மேல் அதிகாரிகள் சொன்னதை தான் தான் செய்ததாகவும் அவர் கூறியுள்ளாராம்.

இதையடுத்து சக்சேனா சொன்ன தகவல்கள் உண்மைதானா என்பதை அறிய கலாநிதி மாறனிடம் விசாரணை நடத்தி ஒப்பிட்டுப் பார்க்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே அவரை விசாரணைக்கு வருமாறு கே.கே.நகர் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதற்கு அவர் காலஅவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து ஜூலை 29ம் தேதி வரை டைம் கொடுக்கப்பட்டிருப்பது நினைவு கூறத்தக்கது.


ரஜினியை பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலமடைந்து திரும்பியுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ள அவரது ரசிகர்களுக்கு இன்னொரு சந்தோஷச் செய்தி. கோவையில் ரஜினியை நேரில் காணும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவிருக்கிறது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையிலும், பின்னர் சிங்கப்பூரிலுமாக சிகிச்சை பெற்றார் ரஜினிகாந்த். அதன் பின்னர் பூரண குணமடைந்து அவர் ஜூலை 13ம் தேதி இரவு சென்னை திரும்பினார்.

மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு பரபரப்புக்கு மத்தியிலும், சென்னை விமான நிலையத்தில் பெருமளவில் திரண்ட ரசிகர்கள், ரஜினியை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர்.

தற்போது ரஜினிகாந்த் முழு ஓய்வில் இருந்து வருகிறார். அவர் பூரண ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், ரஜினி ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. அது அவரது ஆன்மீக குருக்களில் ஒருவரான தயானந்த சரஸ்வதியின் 80வது பிறந்த நாள் விழா. இந்த விழா கோவையில் ஜூலை 20ம் தேதி முதல் 22வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு ரஜினிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாம். அவரும் வருவதாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் எப்போது வருவார் என்பது தெரியவில்லை.

ஒருவேளை ரஜினி கோவை போவதாக இருந்தால் அவரைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கலாம்.


கும்மிருட்டு... கொசுக்கடி...வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி

இமிகிரேஷன் அதிகாரிகளின் அலட்சியத்தால் ரஜினி ஏர்போர்ட்டில் மூச்சிரைக்க நடக்க வேண்டி வந்தது என்ற முணுமுணுப்பு எழுந்து இன்னும் அடங்கக்கூட இல்லை. அதற்குள் இன்னொன்று கிளம்பியிருக்கிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை ச்சும்மா கொசுக்கடி மேட்டர் இது. அதுவே ரஜினிக்கு என்று வரும்போது சற்று பூதாகரமாகிவிட்டது.

கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கியிருக்கிறார் ரஜினி. அங்கு போரடித்தால் வீனஸ் காலனியில் இருக்கும் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்துவிடுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் சொல்லாமல் கொள்ளாமல் ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்திருக்கிறார் ரஜினி.

அரண்டு போன மகள் ஏனென்று விசாரித்தாராம். அதற்கு ரஜினி சொன்ன பதில், ஒரு டிரான்ஸ்பார்மரே புகைந்து போகிற அளவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் அவரது ரசிகர்களுக்கு. விஷயம் இதுதான். நள்ளிரவில் பண்ணை வீட்டில் கரண்ட் கட். ...ந்தா வந்திரும் என்று காத்திருந்த ரஜினிக்கு நேரம் கடந்ததுதான் மிச்சம். வேறு வழியில்லாமல்தான் மகள் வீட்டுக்கு வந்து சேர்ந்தாராம்.

ஒரு ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ள விரும்பாத அளவுக்கா எளிமையானவர் ரஜினி? ஆச்சர்யமாகதான் இருக்கிறது.

என் கையை பிடித்து இழுத்த ரசிகர் -நமீதா வேதனை

நடிகை நமீதா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

நான் சினிமாவுக்கு வந்து 9 வருடங்கள் ஆகிறது. பெற்றோருக்கு நான் நடிக்க வந்தது பிடிக்கவில்லை. முதன் முறையாக சொந்தம்என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானேன். அப்போது எனக்கு வயது 17.

மேக்கப் ரூமில் இருந்து அரை குறை ஆடையுடன் வெளியே வந்தேன். அதை பார்த்து எனது தந்தை சங்கடப்பட்டார். எனக்கும் ஒரு மாதியாக இருந்தது. என் அப்பா அவரது தலையில் அடித்தபடி அங்கிருந்து வெளியேறி விட்டார்.

சினிமாகாரர்களை கேவலமாக பார்க்கும் நிலைமை உள்ளது. அது மாற வேண்டும். நடிகைகளுக்கும் குடும்பம் உள்ளது. உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களை இழிவுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சினிமாவுக்கு வந்து இத்தனை காலங்களில் நடிக்க கூடாத சில படங்களில் நடித்து விட்டேன். அதை இப்போதுதான் உணர்கிறேன்.

பிரபலமாக இருப்பதால் சில தொல்லைகளும் இருக்கிறது. ஒரு தடவை ரசிகர் ஒருவர் ஓடி வந்து என் கையை பிடித்தார். நான் பயந்து போய் கையை உதறினேன். பிறகு அந்த ரசிகர் எனது கையை தொட்ட அவரது கைக்கு முத்தம் கொடுத்தபடியே அங்கிருந்து சென்றார். அதை பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாதிரி ரசிகர்களும் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன்.

யாழ்ப்பாணத்திலுள்ள நாய்கள் தமிழ் உணர்வு மிக்கவை: பா.அரியநேத்திரன் !

நாய் நன்றி உள்ள மிருகம் அதிலும் சிறப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நாய்கள் தமிழ் உணர்வு மிக்கவை. காரணம் அரசாங்கம் அதன் அமைச்சர்களும் போடுகின்ற எலும்புத் துண்டுகளைக் கூட கௌவிச் செல்வதில்லை. இதன் காரணமாக இன்று நாய்களின் தலைகளை வெட்டி இனவெறியை காண்பிக்கும் அளவுக்கு யாழ்ப்பாணத்தில் நாய்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இவ்வாறு தமிழ்
தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மேலும் பேசுகையில், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீட்டு வாசல்களில் சிலர் மலர்வளையம் சாத்திவிட்டும் கழிவு நீரை ஊற்றிவிட்டும் செல்கின்றனர். இத்தகை யோருக்கு நாம் கூறுவது இதுதான், இன்று தமிழினம் ஒன்றுபட்ட சக்தியாக விழிப்படைந்து விட்டது. சோரம் போகும் இனமல்ல மானமுள்ள மறவர் குலம். எதிர்வரும் 23ஆம் திகதி எமது வேட்பாளர்களின் முற்றத்தில் சாத்தப்பட்ட மலர் வளையங்கள் வரலாறு காணாத வெற்றியினைப் பெறும்.

எமது வேட்பாளர்களின் கழுத்தில் நறுமண மலர்களாக விழவுள்ளன. கழிவு நீர்களின் துர்நாற்றம் அகன்று பன்னீர் வாசம் பரவவுள்ளது. வடக்கு கிழக்கில் மட்டுமன்றி சர்வ தேச நாடுகளிலும் தமிழினம் உணர்வுடன் தயாரித்துள்ள பன்னீர்வாசம் பரவவுள்ளது. அபிவிருத்தி அபிவிருத்தி என்று வடக்குக்கும் கிழக்குக்கும் படையெடுக்கும் அமைச்சர்களும் அவர்களின் எடுபிடிகளாக உள்ளவர்களும் கடந்த பன்னிரெண்டு வருட காலமாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர், யுவதிகளை விடுதலை செய்து விட்டு அபிவிருத்தி பற்றி பேசட்டும் பார்க்கலாம்.

வடக்கு கிழக்கில் வகை தொகையின்றி இடம்பெற்ற கைதுகள், ஆட்கடத்தல்கள், படுகொலைகள் என்பன பற்றி இந்த அபிவிருத்தி அரசியலாளர்கள் மௌனமாக இருப்பது ஏன்? அப்பாவி தமிழ் இளைஞர், யுவதிகளை சிறையில் அடைத்து வைத்திருப்பது சிறைக்கூடங்களை அழகுபார்க்கும் அபிவிருத்தியா ? வடக்கில் ஒரு கதையும் கிழக்கில் ஒரு கதையும் தெற்கில் ஒரு கதையும் என ஒரே நாவால் பேசும் அரசியல் எமக்குத் தெரியாது. அன்று தொட்டு இன்றுவரை எல்லா இடங்களிலும் நாம் ஒரே பேச்சுத் தான் பேசுகின்றோம். நாம் இடத்திற்கிடம் மாறுபட்ட விதத்தில் பேசி அரசியல் நடத்தும் வங்கு ரோத்துக்காரர்கள் அல்ல. தமிழினத்தின் வாக்கு வங்கியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே உள்ளது. இந்த வங்கியை சூறையாட முனையும் கூட்டத்திற்கு சுட்டெரிக்கும் சூரியன் போன்று சூட்டுக்கோல் வைக்க தமிழினம் தயார் நிலையில் விழிப்புடன் உள்ளது யூலை 23 ஆம் திகதி.

தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள் அன்றைய ஆட்சியாளர்கள் வழங்கிய நிவாரணங்களை யெல்லாம் பெற்ற கையோடு எதுவுமே கொடுக்காமல் இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்து பேசியதற்காக ஜெயலலிதாவை முதலமைச்சராக்கிய வரலாற்றை மறந்து போல் நேரடியாக வெந்து போயுள்ள மக்களுக்கு நிவாரணங்களை காட்டி வாக்கு கேட்க முனைவது வேடிக்கையாக உள்ளது. அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் சுயலாபங்களுக்காகவும் அரசியல் செய்பவர்களை துரோகிகள் என்று பொதுப் பெயர் சூடி அழைக்கும் இனம் தமிழினம்.

கடந்த 62 வருட காலமாக அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடிய தமிழினத்திற்கு கௌரவமான அரசியல் உரிமை வழங்கப்படாது போனால் மீண்டும் வடக்கு கிழக்கில் உள்ள மக்களை அணிதிரட்டி போராடவுள்ளதாக சம்பந்தன் ஐயா பாராளுமன்றத்தில் சூளுரைத்துள்ளார். அவ்வாறான போராட்டம் மக்கள் சக்தியுடன் இலங்கையில் மட்டும் இடம் பெறாது தமிழினம் புலம்பெயர்ந்து வாழும் நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளிலும் ஒரே நேரத்தில் இடம்பெறும்.

இது சர்வதேச மயமான போராட்டமாக வெடிக்கும். ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் கௌரவமான அரசியல் தீர்வை எமக்கு அளிக்க வேண்டும். இந்தியாவினதும் சர்வதேச சமூகத்தினதும் அழுத்தம் காரணமாக நாம் இதுவரை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட எந்தவொரு விடயம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இருப்பினும் நாம் பொறுமை காப்பதன் நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்வர். பதின்மூன்றாவது அரசியலமைப்பு காலாவதியாகி விட்டதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த கூறுகின்றார். அப்படியாயின் பதின் மூன்றாவது அரசியலமைப்பின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகளை கலைத்துவிட்டு அவற்றின் முதலமைச்சர்களை வீட்டுக்கு அனுப்ப அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கு முடியுமா?

வாய்க்கு வந்தபடி பேசுகின்றவர்களுக்கு எமது தமிழ் மக்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி சரியான பதிலை அளிக்கவுள்ளனர். அப்போது உண்மை புலனாகும் உலகறியும் தமிழினத்தின் தன்மான உணர்வை என்றார் பா.அரியநேத்திரன் !