Sunday, 4 September 2011

கடும் அழுத்தம் கொடுப்பார் பிளேக் கவலையில் சிறிலங்கா


அமெரிக்காவின உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் மூன்ற நாள் பயணமாக செப்ரெம்பர் 12ம் நாள் கொழும்பு வரவுள்ளார்.

கடந்த மாத இறுதியில் கொழும்பு வரத் திட்டமிட்டிருந்த பிளேக் ஐரின் சூறாவளியினால் தனது பயணங்களைப் பிற்போட்டிருந்தார்.
தற்போது அவர் தனது பயணத் திட்டங்களை மாற்றியமைத்து எதிர்வரும் 12ம் நாள் கொழும்பு வருவதற்கு ஒழுங்குகளைச் செய்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு வரும் பிளேக் இரண்டு விடயங்களை வலியுறுத்தவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு கொண்டு செல்வது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை மீளத் தொடங்குவது குறித்தும் சிறிலங்கா அரசிடம் அவர் வலியுறுத்துவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 19வது கூட்டத்தொடரில் விவாதிப்பது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 12ம் நாள் தொடங்கும் 18வது கூட்டத்தொடரில் கொண்டு வருவது குறித்து அமெரிக்கா இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சிறிலங்காவுக்குத் தெரியப்படுத்தியிருந்தது.

ஆனால் அது சிறிலங்கா விவகாரத்தை அனைத்துலக மயப்படுத்தி விடும் என்பதால், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அந்தத் திட்டத்தை உடனடியாகவே நிராகரித்து விட்டது.

எனினும் இந்தப் பயணத்தின் போது பிளேக் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இறுக்கமாக வலியுறுத்துவார் என்றும் சிறிலங்காவின் நிலைப்பாட்டை மீளாய்வு செய்யுமாறு அழுத்தம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தொடர்ச்சியாக மறுத்து வருவதால் மற்றொரு நாடு சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்று கவலையும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் மத்தியில் தோன்றியுள்ளது.

மூன்று நாள் சிறிலங்கா பயணத்தின் போது யாழ்ப்பாணத்துக்கும் செல்ல திட்டமிட்டுள்ள பிளேக், கொழும்பில் இருந்து செப்ரெம்பர் 14ம் நாள் புதுடெல்லி செல்லவுள்ளார்.

அங்கு அவர் தூதுவர் நிலையில் அல்லாத அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம்

சென்னை விமான நிலையத்தில் கடந்த வாரம் அவசரமாகத் தரையிறங்கிய சிறிலங்கா விமானப்படை விமானம் சீனாவில் இருந்து ஆயுத தளபாடங்களை ஏற்றி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடுவானில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரியிருந்தது.

இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அந்த விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த விமானம் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் ஏழு பேருடன் விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற கொண்டிருந்த போதே அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.

ஆனால் அந்த விமானம் சீனாவில் இருந்து சிறிலங்கா விமானப்படைக்கு ஆயுததளப்பாடங்களை ஏற்றி வந்தது என்று சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் கூறியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ரஸ்ய தயாரிப்பான அன்ரனோவ் 32 ரக போக்குவரத்து விமானம் கொழும்பில் இருந்து டாக்கா சென்று முதலில் எரிபொருள் நிரப்பியது.

அதன் பின்னர் சீனாவின் குங்மின் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு சீனாவின் சொங்குயிங் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தது.

அங்கிருந்து சீனாவின் எவ்-7 ஜெட் போர் விமானங்களுக்கான உதிரிப்பாகங்களையும், ஒரு தொகுதி வெடிபொருட்களையும் ஏற்றிக் கொண்டு கொழும்பு வரும் போதே சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக சிறிலங்கா விமானப்படை வட்டாங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அந்த விமானத்துக்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் முழுமையான பாதுகாப்பை வழங்கியதாகவும் கொழும்பு வாரஇதழ் தெரிவித்துள்ளது.

அதேவேளை சீனாவில் இருந்து ஆயுதங்களை ஏற்றி வந்த சிறிலங்கா விமானத்துக்கு சென்னையில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்பதாலேயே அது கொழும்பில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற போது அவசரமாகத் தரையிறங்கியதாக சென்னை அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மூவரது மரணதண்டனையை மீள்பரிசீலனை செய்யக் கோரும் தீர்மானம் - பாண்டிச்சேரி சபாநாயகர் அனுமதி மறுப்பு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரும் தீர்மானத்தைக் கொண்டுவர பாண்டிச்சேரி சட்டமன்ற சபாநாயகர் அனுமதி மறுத்துள்ளார்.

இதையடுத்து அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.

பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது, மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை குடியரசுத் தலைவர் மீளாய்வு செய்ய வேண்டும் என்று கோரும் பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக, திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இந்த விவகாரம் குறித்துப் பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறி அனுமதி அளிக்க மறுத்து விட்டார் சபாநாயகர் சபாபதி.

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் இருவரும் முதலில் வெளிநடப்புச் செய்ய அவர்கள் பின்னால் அதிமுக உறுப்பினர்கள் ஐவரும் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக சட்டமன்ற குழுத் தலைவர் அன்பழகன், ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

அத்துடன் போர்க்குற்றங்கள் புரிந்த சிறிலங்கா அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடைவிதிக்கக் கோரும் தீர்மானத்தையும் கொண்டு வரவிருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாண நகரைக் கண்காணிக்க காணொலிப் பதிவுக் கருவிகள்

யாழ்ப்பாண நகரின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் கண்காணிப்பு காணொலிப் பதிவுக் கருவிகளைப் பொருத்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு நகரில் பாதுகாப்பு சோதனைச்சாவடிகளை அகற்றிய பின்னர், முக்கிய இடங்களில் கண்காணிப்பு காணொலிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இதேபோன்று யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களிலும், படை முகாம்களின் முன்பாகவும் கண்காணிப்பு காணொலிப் பதிவுக் கருவிகளைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயர் தொழில்நுட்ப காணொலிப் பதிவுக் கருவிகளைப் பொருத்துவதன் இரகசியமாக கண்காணிக்க முடிவதுடன், பாதுகாப்பையும் பலப்படுத்த முடியும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கருதுவதாகத் தெரியவந்துள்ளது.

இத்தகைய உயர் தொழில்நுட்பக் கருவிகளை கொள்வனவு செய்வதால் அடுத்த ஆண்டுக்கான சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவினம் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவினம் 1300 கோடி ரூபாவினால் அதிகரிக்கும் என்று சிறிலங்கா நிதியமைச்சு மதிப்பிடு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் நாளை த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களைச் சந்திக்கின்றனர்


.
4-09-2011 தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் லண்டன் தமிழர்களைச் சந்திக்கவுள்ளனர்.

லண்டன் ஹரோ பகுதியில் உள்ள அலெக்ஸ்ஸான்ரா வீதியிலுள்ள சொரஸ்ரியன் சென்ரரில் நாளைமாலை சுமார் 5.30 மணிக்கு இச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சந்திப்பின்போது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலளிக்க உள்ளதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தீர்வு தொடர்பாக கலந்துரையாட உள்ளதாகவும் அறியப்படுகிறது.

குறிப்பாக புலம் பெயர் வாழ் தமிழ் சமூகம் என்ன நினைக்கிறது, அவர்களின் கருத்துக்கள் தான் என்ன என்பது தொடர்பாக கேட்டு ஆராயப்படவுள்ளது.

புலம்பெயர் தமிழ் சமூகத்தின் கருத்துக்களை கேட்டறிந்து அதனைத் தாம் உள்வாங்க உள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

5.30 pm between 9.00 pm
Zoroastrian Centre.
442-452 Alexandra Avenue,
South Harrow,
Harrow,
HA2 9TL