Tuesday, 7 February 2012

அரசியலில் என்னை தொடர்புபடுத்த வேண்டாம்- நடிகர் வடிவேலு ஆவேசம்


விஜயகாந்தும், வடிவேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மோதிக்கொண்டனர். இதையடுத்து விஜயகாந்த் கட்சியை எதிர்க்க வடிவேலு தி.மு.க. அணியில் சேர்ந்து பிரசாரம் செய்தார். தேர்தலில் தி.மு.க. தோற்றதால் வடிவேலு அதிர்ச்சியானார். புதுப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்.

சமீபத்தில் அ.தி.மு.க. வுக்கும், விஜயகாந்துக்கும் தகராறு ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் சமரசம் ஆகி மீண்டும் சினிமாவில் நடிக்க தீவிரமாக வடிவேலு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாயின. அ.தி.மு.க.வில் இணையப்போவதாகவும் கிசுகிசுக்கள் வந்துள்ளது.

இதுகுறித்து வடிவேலுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனது தாயை கவனித்துக் கொள்வதுதான் இப்போது எனக்கு முக்கியம். அவர் உடல்நலம் குன்றி இருக்கிறார். விரைவில் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நான் முதலில் ஒரு நடிகன். மக்களை சந்தோஷப்படுத்துவதை தொடர்ந்து செய்வேன். இந்தநேரத்தில் அரசியலில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவதை நான் விரும்பவில்லை. அரசியலோடு என்னை இணைத்து வெளியாகும் செய்திகள் மூலம் கற்பனைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

பொதுவாக எல்லாவற்றுக்கும் நேரம் முக்கியம். சிலருக்கு அந்த நேரம் சாதகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு எதிராக இருக்கும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய முக்கியத்துவம் எல்லாம் சினிமாவில் நடிப்பதுதான். அதில்தான் முழு கவனத்தையும் செலுத்துகிறேன்.

நான் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த படம் திரையுலகில் எனது மறுபிரவேசத்தை பறைசாற்றுவதாக இருக்கும்.

இவ்வாறு வடிவேலு கூறினார்.

கோச்சடையானில் ரஜினி நாயகி கத்ரீனா அல்ல... தீபிகா! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு


கோச்சடையான் படத்தின் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிப்பார் என்று படத்தின் இயக்குநர் சௌந்தர்யா அறிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் கோச்சடையானில் நடிக்க கத்ரீனா கைஃபுடன் பேசி வருவதாக சௌந்தர்யா கூறியிருந்தார். ஆனால் அவரது தேதிகள் ஒத்து வராததால், ராணாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தீபிகா படுகோனேவுக்கே மீண்டும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

'கோச்சடையான்' படம் வெறும் அனிமேஷன் என்பதைத் தாண்டி, புதிய தொழில் நுட்பத்துடன் ஒரு முழுமையான ரஜினி படமாக உருவெடுத்துள்ளது.

' கோச்சடையான் ' படத்தில் சரத்குமார், சிநேகா, ஆதி, ஜாக்கி ஷெரஃப் என பாத்திரத்திங்களுக்கு ஏற்றவாறு நடிகர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். படத்தின் முதல் ஸ்டில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நாயகி யார் என்பது மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. பலகட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு இப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக கேத்ரினா கைஃப் இடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'ராணா' படத்தில் ரஜினிக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தீபிகா படுகோன் ' கோச்சடையான் ' படத்தின் நாயகியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினி இன்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் இணையத்தில், "தீபிகா படுகோன் கோச்சடையான் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சி.. " என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஐக்கியமான விஜயகாந்தின் ஆருயிர் தோழன்

 


விஜயகாந்த்தின் சிறு வயது முதல் உற்ற தோழனாக விளங்கி, விஜயகாந்த் திருமணத்திற்குப் பிறகு அவரை விட்டு ஓரம் கட்டப்பட்ட இப்ராகிம் ராவுத்தர் இன்று அதிமுகவில் இணைந்தார்.

விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும் மதுரையில் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். விஜயகாந்த சென்னைக்கு வந்து நடிகராக முயன்றபோது அவருக்கு துணையாக இருந்தவர் ராவுத்தர். விஜயகாந்த்தின் வளர்ச்சியி்ல் ஆனந்தம் கண்டவர். விஜயகாந்த்துக்காக பலரிடமும் போய் நடிக்க வாய்ப்பு கேட்டு பாடுபட்டவர். விஜயகாந்த்தை வைத்துப் பல படங்களையும் தயாரித்தார்.

இவர்களது நட்பு அந்தக் காலத்தில் பெரும் ஆச்சரியமாகப் பேசப்பட்டது. அப்படி ராவுத்தர் பேச்சை விஜயகாந்த் தட்ட மாட்டார், விஜயகாந்த் பேச்சை ராவுத்தர் தட்ட மாட்டார்.

இந்த நட்புக்கும் பின்னர் பங்கம் வந்தது. விஜயகாந்த்துக்கு திருமணமான பின்னர் படிப்படியாக ராவுத்தர் ஓரம் கட்டப்பட்டார். ஒரு கட்டத்தில் ஒரேயடியாக ராவுத்தரவை விட்டுப் பிரிந்து விட்டார் விஜயகாந்த். இவர்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பது சத்தியமாக இதுவரை யாருக்குமே தெரியவில்லை.

கடந்த பல வருடங்களாகவே அமைதியாக இருந்து வருகிறார் ராவுத்தர். படத் தயாரிப்பிலும் ஈடுபடுவதில்லை. இடையில் சில காலம் காங்கிரஸில் இருந்தார் ராவுத்தர். ஆனாலும் ஆக்டிவாக அவர் எதிலும் ஈடுபடாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ராவுத்தரும், நடிகர் வடிவேலுவும் திடீரென சந்தித்துப் பேசியதாகவும், இருவரும் அதிமுகவில் சேர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அப்படி எதுவும் நடக்கவில்லை. இவர்களை அதிமுகவுக்குக் கொண்டு வரும் வேலையில் நடிகர் ராதாரவி இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று ராவுத்தர் அதிமுகவில் வந்து இணைந்தார்.

ராவுத்தரின் அதிமுக வருகை, விஜயகாந்த்தை குறி வைத்தா அல்லது தற்செயலானதா என்பது தெரியவில்லை.

தே.மு.தி.க. நிர்வாகிகளும் அ.தி.மு.கவில் இணைந்தனர்:

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை முறைப்படி அதிமுகவில் இணைத்துக் கொண்டார் இப்ராகிம் ராவுத்தர். இந்த நிகழ்ச்சி அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று நடந்தது.

ராவுத்தர் தவிர ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேமுதிகவினரும் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். அவர்களில் முக்கியமானவர் சென்னை மாநகராட்சித் தேர்தலில் மேயர் வேட்பாளராகப் போட்டியிட்ட வேல்முருகன் ஆவார்.

மேலும் தேமுதிக மாநில தேர்தல் பிரிவு செயலாளர் ஜெகவீரபாண்டியன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பாரி, திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ஜெய்சந்த் ஜேக்கப் உள்ளிட்டோரும் இன்று அதிமுகவில் இணைந்த தேமுதிகவினரில் முக்கியமான சிலர் ஆவர்.

குயிலியும் வந்தார்:

இதேபோல நடிகை குயிலியும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். கடந்த காலங்களில் இவர் திமுக தரப்புக்கு நெருக்கமாக நடந்து கொண்டவர் என்பது நினைவிருக்கலாம்.

இணைந்தவர்களின் நம்பிக்கை வீண் போகாது: ஜெயலலிதா

அதிமுகவினல் இணைந்தவர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், அதிமுகவில் இணைய வந்துள்ள உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

குறிப்பாக இத்தனை பெண்களும், இளைஞர்களும் தங்களை கட்சியில் இணைத்துக் கொள்வதை காணும் போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எத்தகைய நம்பிக்கையுடன் அ.தி.மு.கவில் இணைய வந்து உள்ளீர்களோ அந்த நம்பிக்கை வீண் போகாது. உங்கள் அனைவருக்கும் மிகவும் ஒளிமயமான எதிர்காலம் அமைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சூளைமேட்டில் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்கிறேன்: டக்ளஸ் தேவானந்தா பேட்டி

 


ஈழம் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (இ.பி.ஆர்.எல்.எப்) தலைவராக இருந்தவர் டக்ளஸ் தேவானந்தா. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக தனிக்குழுவாக செயல்பட்டு வந்த இவர்கள் 1980களில் சென்னை வந்து தங்கி இருந்தனர். 

1986-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி சென்னை சூளை மேட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இ.பி.ஆர்.எல்.எப்.பைச் சேர்ந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இ.பி.ஆர்.எல்.எப்.பைச் சேர்ந்தவர்கள் சுட்டதில் வாலிபர் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இ.பி.ஆர்.எல்.எப். தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் அவருடைய கூட்டாளிகள் 9 பேரும் கைதானார்கள். அவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

பிறகு டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.   1988-ல் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பணக்கார வீட்டு சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று டக்ளஸ் பல லட்சம் ரூபாய் பறிக்க முயன்றார். போலீசார் அந்த சிறுவனை மீட்டதோடு டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்தனர்.

சென்னை போலீசில் டக்ளஸ் மீது மீண்டும் வழக்கு பதிவானது. இதற்கிடையே டக்ளஸ் கொலை முயற்சி ஒன்றில் ஈடுபட்டார். போலீசார் தேடுவதை அறிந்ததும் சென்னையில் இருந்து தப்பி இலங்கைக்கு சென்று விட்டார்.   கொலை, கொள்ளை, கடத்தலில் ஈடுபட்ட டக்ளஸ் தேவானந்தாவுக்கு இலங்கையில் அது போல வாழ முடியவில்லை. எனவே சிங்களர்களுடன் சேர்ந்து கொண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயல்பட்டார். அதற்கு பரிசாக அவருக்கு இலங்கை தொழில் துறை மந்திரி பதவி கிடைத்தது.

இந்த நிலையில் சென்னை போலீஸ் நிலையங்களில் அவர் மீதான 3 வழக்குகளும் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் டக்ளசை கைது செய்ய சென்னை கோர்ட்டு பிடி வாரண்டு பிறப்பித்தது. இதனால் டக்ளஸ் சென்னை பக்கம் தலைகாட்டாமல் உள்ளார். 

இதற்கிடையே புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு டக்ளஸ் தேவானந்தா சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர், சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு நான் தார்மீக பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். துப்பாக்கி சூட்டை நடத்தியது இ.பி.ஆர்.எல்.எல்.பைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதற்கு நான் தான் பொறுப்பாகும் என்றார்.

சென்னை போலீஸ் நிலையங்களில் உள்ள வழக்கு பற்றி அவர் கூறுகையில், அந்த வழக்குகளை சட்டப்படி சந்திக்க நான் தயாராக உள்ளேன். ஆனால் இந்த பழைய விவகாரத்தை சிலர் அரசியல் லாபத்துக்காக மீண்டும் கிளப்பியுள்ளனர் என்றார்.

சட்டசபையில் சினிமா வசனம் பேசக்கூடாது: விஜயகாந்த் மீது டாக்டர் ராமதாஸ் தாக்கு


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாகடர் ராமதாஸ் இன்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஒரு வீடு கட்ட ரூ.1 லட்சம் போதாது. கடலூரை விட விழுப்புரம் மாவட்டத்தில் குடிசை வீடுகள் அதிகம் உள்ளன. எனவே 2 மாவட்டங்களிலும் 1 லட்சம் வீடுகளை விட கூடுதலாக கான்கிரீட் வீடுகளை கட்டி குடிசை இல்லாத மாவட்டங்களாக்க வேண்டும்.

ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சகிப்பு தன்மையும் பொறுமையும் வேண்டும். அதைவிட எதிர்கட்சி உறுப்பினர்கள் சகிப்பு தன்மையும் பொறுமையும் அதிகம் இருக்க வேண்டும்.

ஸ்டூடியோவில் ஆக்ஷன் செய்வது, வசனம் பேசுவது போல் சட்டமன்றத்தில் பேசக் கூடாது. ஆக்கப்பூர்வமான யோசனைகளை சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் சொல்ல வேண்டும். ஆளுங்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

15,000 வன்னியப் பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்

 


உள்ளாட்சித் தேர்தலில், வேட்பு மனு கட்டணம், 3.5 கோடி ரூபாய் வசூல் செய்து, கட்சி சார்பில், பிட் நோட்டீஸ் கூட அடித்து தராமல், பா.ம.க.,வின், 15 ஆயிரம் ஏழை, வன்னிய பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ். கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்த ராமதாஸ், தொண்டர்களுக்கு ஏதாவது செய்தாரா? இந்த உண்மைகளைச் சொன்னால் அவருக்கு சுடுகிறது என்று கூறியுள்ளார் தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன்.

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேல்முருகன் பேசுகையில்,

ஜாதி மதங்களை கடந்து, மனித குலத்தின் உரிமைகளுக்காக போராடவும், தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக குரல் கொடுக்கிற கட்சியாக, தமிழர் வாழ்வுரிமை கட்சி துவக்கப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், வன்னியர்களுக்காகவும் குரல் கொடுப்பதாகக்கூறி, 25 ஆண்டுகளாக, பா.ம.க.,வை நம்பி வந்தவர்கள், நடுத்தெருவில் நிற்கும் நிலையை, பொதுக்குழுவில் பேசியதற்காக, என்னை வெளியே அனுப்பிவிட்டனர்.

மாதத்திற்கு ஒரு திட்டத்தை அறிவித்து, தொண்டர்களின் உழைப்பையும், தியாகத்தையும் சுரண்டி, 63 குடும்ப உறுப்பினர்களோடு கட்சி முடிந்து விட்டது என்று செயல்படும் ராமதாசின் போக்கையும், தமிழகத்தில் தலை விரித்தாடும் ஊழலுக்கு எதிராகவும், தமிழர் வாழ்வுரிமைக்காகவும் என் கட்சி போராடும்.

தேர்தலுக்குத் தேர்தல் கட்சி மாறி கூட்டணி வைத்து, பா.ம.க., தொண்டர்களை ராமதாஸ் சுரண்டுவதை பற்றி பேசினால், என்னை, பொய்முருகன் என்கிறார் அன்புமணி. நான் பொய் பேசுவதாக கூறும் அன்புமணி, என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா?

உள்ளாட்சித் தேர்தலில், வேட்பு மனு கட்டணம், 3.5 கோடி ரூபாய் வசூல் செய்து, கட்சி சார்பில், பிட் நோட்டீஸ் கூட அடித்து தராமல், பா.ம.க.,வின், 15 ஆயிரம் ஏழை, வன்னிய பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்.

பசுமைத் தாயகம் சார்பில், பா.ம.க., தொண்டர்களை மரம் நடச் சொல்லி, அதை கணக்கு காட்டி, ஐ.நா., சபை மூலம் கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்த ராமதாஸ், தொண்டர்களுக்கு ஏதாவது செய்தாரா? இந்த உண்மைகளைச் சொன்னால் சுடுகிறதோ என்றார் அவர்.

ஹிட் நடிகர்கள் படங்களுக்கு எட்டு நாட்கள் !


பெரும்பாலான தியேட்டர்களில் பெரிய நடிகர்களின் படங்கள் ஆக்கிரமிப்பதால், சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகாமல் முடங்கி வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, இனி பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கரின் படங்களை ரிலீஸ் செய்வதென்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இனிமேல் பொங்கல், ஏப்ரல் 14, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் தீபாவளி ஆகிய தினங்களில் மட்டுமே பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளியாகும் என அறிவித்தது.  இதனால்  ' 3 ',  'சகுனி', 'பில்லா 2' உள்ளிட்ட படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் விநியோகஸ்தர்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர். குறிப்பிடப்பட்ட நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கள் படங்கள் வெளியானால் கடும் போட்டி ஏற்படும் என்பதால் பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாவதற்கு கூடுதல் நாட்கள் ஒதுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தினை கேட்டுக் கொண்டது.

இதனை கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர் சங்கம்  பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாக குறித்த நாட்களை,   5 நாட்களில் இருந்து 8 நாட்களாக அதிகரித்துள்ளது.

அந்த 5 நாட்களோடு, மார்ச் முதல் வாரம், ஜுன் முதல் வாரம் மற்றும் டிசம்பர் இரண்டாம் வாரம் ஆகிய நாட்களை இணைந்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவால், தயார் நிலையில் உள்ள ' 3 ' மற்றும் சகுனி ஆகிய படங்கள் தங்களது வெளியிட்டு தேதியை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

 


பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கடந்த 27ம் தேதி தேதி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்த மாடசாமி மற்றும் பிரபு ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியன், கடந்த 10ம் தேதி அன்று திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த வழக்கில் திண்டுக்கல் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா, திண்டுக்கல் கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த ஜான் பாண்டியன் கட்சி நிர்வாகி முத்துப்பாண்டியன் ஆகிய 2 பேரை மட்டும் தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் சுரண்டை இடையர் தவணை ஆறுமுகச்சாமி, தூத்துக்குடி முள்ளக்காடு அருளானந்தம், விருதுநகர் மாவட்டம் முத்துசுப்பையாபுரம் சண்முகம் என்ற சண்முகசுந்தரம், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகவூர் செல்வம் என்ற புறா மாடசாமி, பிரபு, நட்டு என்ற நடராஜன், ராஜபாளையம் சொக்கநாதன்புதூர் பாட்ஷா என்ற மாடசாமி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் தாரா என்ற தாராசிங் ஆகிய 8 பேர் வள்ளியூர், சென்னை, மேட்டுப்பாளையம், நெல்லை நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.

இதில் முக்கிய குற்றவாளிகளான ஆறுமுகச்சாமி, அருளானந்தம், சண்முகசுந்தரம் ஆகிய 3 பேர் விசாரணையின்போது கொடுத்த தகவல்களை வைத்து கார், கத்தி, ரத்தக்கறை படிந்த உடைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் கொலைக்கான பின்னணி பற்றிய தகவலும் கிடைத்தது.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சரணைடந்த புறா மாடசாமி மற்றும் பிரபு ஆகியோரை போலீசார் திண்டுக்கல் 2வது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் லதா முன்னிலையில் நேற்று மதியம் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களை போலீஸ் காவலிலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி துணை சூப்பிரண்டு நடராஜமூர்த்தி மனு தாக்கல் செய்தார்.

பசுபதி பாண்டியனை கொலை செய்ய புறா மாடசாமி, பிரபு ஆகியோர் சதித் திட்டம் தீட்டினர். இந்த கொலை சம்பவத்துக்கு ஆதரவாக அவர்கள் பயன்படுத்த வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றவும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் அந்த இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து வரும் 9ம் தேதி மதியம் அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,

புறா மாடசாமியின் நிஜப்பெயர் செல்வம். அவரது தந்தை பெயர் மாடசாமி. செல்வம் சிறு வயதில் இருந்தே புறா வளர்ப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்ததாலும், புறா பிடிப்பதில் திறமைசாலி என்பதாலும் அவருக்கு புறா மாடசாமி என்ற பெயர் கிடைத்துள்ளது.

தனது சொந்த ஊரான முகவூரில் ஏற்பட்ட பிரச்சனையால் புறா மாடசாமி தனது காதலியுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே திண்டுக்கல் வந்துவிட்டார். அவர் பசுபதி பாண்டியன் வீட்டருகே வீடு எடுத்து தங்கி இருந்தார்.

முதலில் திண்டுக்கல்-கரூர் ரோட்டில் ராஜாக்குளத்துக்கரையில் சைக்கிள் கடை நடத்தி வந்தார். பின்னர் அந்த கடையை இரு சக்கர வாகன ஒர்கஷாப்பாக மாற்றினார். இதற்கிடையே கொலையாளிகளின் அறிமுகம் கிடைத்து அவர்களுடன் சேர்ந்து பசுபதி பாண்டியனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார்.

தனது வீட்டில் இருந்தே பசுபதி பாண்டியனின் நடவடிக்கைகளை நோட்டமிட்டுள்ளார். மேலும் கொலையாளிகளை தன் வீட்டில் தங்க வைத்துள்ளார். கொலையாளிகள் மாடசாமியின் காரில் தான் ஆயுதங்களுடன் கொலை செய்ய நேரம் பார்த்து சுற்றித் திரிந்துள்ளனர். அந்த கார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூரில் கைப்பற்றப்பட்டது என்றார்.

ஜெய் ஜோடியாக அபிநயா


நாடோடிகள்’, ‘ஈசன்படங்களில் நடித்த அபிநயா, அடுத்து ஜெய் ஜோடியாக நடிக்கிறார். இதை பிரபுதேவாவிடம் இணை இயக்குனராக இருந்த பிரேம் சாய் இயக்குகிறார். கவுதம் வாசுதேவ் மேனனின் போட்டோன் கதாஸ், கணேஷின் வி.டி.வி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்குகிறது. இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, ‘டைட்டில் முடிவாகவில்லை. கொரியர் கம்பெனியில் வேலை பார்க்கும் இளைஞன் வேடம். சந்தானம், கணேஷ் காமெடி படத்தின் ஹைலைட்டாக இருக்கும்என்றார்.

11 நாட்களில் ‘அக்னிபாத்’ ரூ.100 கோடி வசூல்


நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்த இந்தி திரைப்படம் அக்னிபாத்வெளியான 11வது நாளில் ரூ.100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. 7 நாளில் இந்த சாதனை செய்து சல்மான்கானின் பாடி கார்டுதொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாலிவுட் நடிகர் ஹிருத்திக் நடிப்பில் வெளிவந்துள்ள அக்னிபாத்திரைப்படம் நாடு முழுவதும் 2,000 முதல் 3,000 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

முதல் நாளிலேயே ரூ.25 கோடி வசூலை குவித்த அந்த படம் 11வது நாளில் ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. முதல் 11 நாட்களில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய 9வது படம் இது. ஏழே நாட்களில் ரூ.100 கோடி வசூலை குவித்து சல்மான்கானின் பாடி கார்டுசாதனை செய்தது. அடுத்ததாக கஜினி (9 நாட்கள்), 3 இடியட்ஸ் (9 நாட்கள்), தபாங் (10 நாட்கள்), கோல்மால் 3 (14 நாட்கள்), ரெடி (15 நாட்கள்) என ரூ.100 கோடி வசூலை தொட்டுள்ளன. பிரின்ட்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, அதிக சிறப்பு காட்சி கள், சினிமா தியேட்டர்களின் அளவு, அதிக கட்டணம் ஆகியவற்றால் குறைந்த நாட்களில் அதிக வசூல் கிடைப்பதாக சினிமா வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

'துப்பாக்கி'யில் சத்யன் !


விஜய் - சத்யன் இருவரும் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான படம் 'நண்பன்'. சத்யன் நடிப்பு இப்படத்தில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் - சத்யமன் இருவரும் மீண்டும்  'துப்பாக்கி' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

'நண்பன்' படப்பிடிப்பில் இவரது நடிப்பை பார்த்தவர்கள் 'துப்பாக்கி' படத்திற்கு இவரை முருகதாஸிடன் சிபாரிசு செய்ய, முருகதாஸ் உடனே அவரை  'துப்பாக்கி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தாராம்.

'நண்பன்' படத்தில் இவரது நடிப்பை ரசித்த ஏ.ஆர்.முருகதாஸ், சத்யனை பாராட்டியதோடு  தன் படத்தில் அவரது கதாபாத்திரத்தை அதிகப்படுத்தியிருக்கிறாராம். இப்படத்தில் விஜய்யின் நண்பனாக நடிக்கிறார் சத்யன்.

'நண்பன்' படத்தினைப் போலவே 'துப்பாக்கி' படத்திலும் தனது நடிப்பிற்கு வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சத்யன்.

3 மொழிகளில் ' 3 '


தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ' 3 '. ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

தயாரிப்பாளர் சங்கம் வருடத்தில் 5 நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியீடு என்று அறிவித்து இருக்கிறது. ஆகையால் இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பயன்படுத்தி 3 படத்தினை தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பை தயாரித்து வருகிறார்கள். WHY THIS KOLAVERI பாடல் மூலம் தனுஷ் பிரபலமான காரணத்தால், இப்படத்திற்கான ஓப்பனிங் எல்லா மொழிகளிலும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

மேலும், தனுஷ் இந்தியில் RAANJHNAA படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால்,  ' 3 ' படத்தின் இந்தி பதிப்பு அதற்கு ஒரு முன்னோட்டமாக இருக்கட்டும் என தீர்மானித்து இருக்கிறார்களாம்.

' 3 ' ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

தனுஷின் பாடல் இந்தியா முழுவதும் சுற்றி வந்தது. இப்போது  தனுஷ் படத்தினை விளம்பரப்படுத்த இந்தியா முழுவதும் சுற்ற இருக்கிறார்