Tuesday, 16 August 2011

ராணா படப்பிடிப்பு தள்ளிப்போவது ஏன்? பரபரப்பான புதிய தகவல்கள்


ரஜினிகாந்த் உடல்நிலை தேறிய பிறகும், `ராணா' படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போவது ஏன்? என்பது பற்றி பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.  

ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கும் படம், `ராணா.' இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்கிறார்.

படப்பிடிப்பு தொடக்க விழா, கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி நடந்தது. அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை இசபெல்லா ஆஸ்பத்திரியில் அவர் இரண்டு முறை அனுமதிக்கப்பட்டார். பின்னர் போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 

அவருக்கு மேலும் நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்குள்ள மவுன்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபின், அவர் குணம் அடைந்தார். அவர் உடல்நிலை தேறியபின், கடந்த மாதம் 13-ந் தேதி, சென்னை திரும்பினார்.

இப்போது ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ், பேரக்குழந்தைகள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார். 

ரஜினிகாந்த் குணம் அடைந்து அவர் உடல்நிலை தேறினாலும், சிங்கப்பூர் டாக்டர்கள் கொடுத்த மாத்திரை-மருந்துகளை அவர் தொடர்ந்து சாப்பிட்டு வருகிறார். இதன் காரணமாகவே `ராணா' படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

`ராணா' படப்பிடிப்பு முதலில் செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றார்கள். இப்போது, அக்டோபர் இறுதியில் தொடங்கும் என்கிறார்கள். 

ரஜினிகாந்த் உடல்நிலையை பரிசோதிக்க, சிங்கப்பூரில் இருந்து இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் சென்னை வந்தார்கள். டாக்டர்கள் எதிர்பார்த்ததை விட, ரஜினிகாந்த் புத்துணர்ச்சியுடனும், தெம்புடனும் இருப்பதால், மாத்திரைகளின் எண்ணிக்கையையும், மருந்துகளின் அளவையும் டாக்டர்கள் குறைத்து விட்டார்கள். என்றாலும், சிங்கப்பூர் டாக்டர்கள் மீண்டும் ஒருமுறை சென்னை வந்து அவர் உடல்நிலையை பரிசோதித்து, ``இனிமேல் நடிக்கலாம்'' என்று சொன்ன பிறகே `ராணா' படப்பிடிப்பு தொடங்கும் என்று ரஜினிகாந்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒருவர் நேரில் பார்த்தால்கூட சிரிப்பது கிடையாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் இல்ல விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,

தற்போது ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் வளர்ந்து வருகிறார்கள். அவர்கள் 33 சதவீத இடஒதுக்கீடு போதாது 50 சதவீதம் வேண்டும் என கேட்கிறார்கள். இது விரைவில் நிறைவேறும் காலம் வரும். இந்த இளங்கோவனை காங்கிரஸ் மேலிடம் ஏமாற்றிவிட்டது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கடைசி வரை நம்ப வைத்து ஏமாற்றியது. அதற்காக வருத்தப்பட வில்லை.


மேலிடத்தின் மீது கோபம் இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. கட்சி நன்றாக இருந்தால்தான் இந்தியா நன்றாக இருக்கும். இந்தியா நன்றாக இருந்தால்தான் தமிழகம் நன்றாக இருக்கும். 1967 ம் ஆண்டு இழந்த பெருமையை நாம் பெற்றாக வேண்டும். அதற்கு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும். காந்தியடிகள், காமராஜர் உள்பட பல தலைவர்கள் சுதந்திர போராட்டத்திற்காக சிறைக்கு சென்றுள்ளனர். இதுதான் உண்மையான தியாகம். ஆனால் இன்றைக்கு அரசியல்வாதிகள் பலர் சிறைக்கு செல்கின்றனர். அதற்கு வேறு காரணம்தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இந்த கோஷ்டி, அந்த கோஷ்டி என உள்ளது. ஒருவருக்கு ஒருவர் நேரில் பார்த்தால்கூட சிரிப்பது கிடையாது. இது மாறவேண்டும். ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து நட்பு பாராட்ட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து ஒருவராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பதில் சொல்ல, பாடம் புகட்ட நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு


சென்னை ஆவடியில் தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

1977ம் ஆண்டு தேர்தலில் தோற்ற தி.மு.க. 13 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பிற்கே வர முடியவில்லை. அதன்பின்னர் 1989 ம் ஆண்டு மீண்டும் தலைவர் கருணாநிதி தலைமையிலே ஆட்சிக்கு வந்தோம். 2 ஆண்டுகளிலேயே நம்மீது அபாண்ட குற்றச்சாட்டை சொல்லி ஆட்சியை கலைத்தார்கள். அடுத்து வந்த தேர்தலில் நம்மீது அபாண்டமான கொலைப் பழி சுமத்தப்பட்டு அந்த தேர்தலில் தலைவர் கருணாநிதியை தவிர அனைவரும் தோற்று மோசமான தோல்வியை சந்தித்தோம். அதிலும், கருணாநிதிக்கு ஒரு பெருமை உண்டு. இதுவரையில் தேர்தலில் நின்று தோற்ற வரலாறே அவருக்கு கிடையாது.


அதற்கு பிறகு 1996ல் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையா? அதற்கு பிறகு 2001 ல் தோற்றோம். மீண்டும் 2006 ல் ஆட்சிக்கு வந்தோம். இப்போது 2011 ல் தோற்று இருக்கிறோம். மீண்டும் 2016 ல் தேர்தல் வரும், ஏன் அதற்கு முன்பே கூட தேர்தல் வரலாம். நாங்கள் பதவிக்கு வரவேண்டும் என்று அலையவில்லை. அது பதவிக்காக அல்ல. மக்களுக்கு ஆற்ற வேண்டிய தொண்டிற்காக. இதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் தி.மு.க. எத்தனையோ வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்தது உண்டு. வெற்றியையும், தோல்வியையும் ஒன்றாக கருதி உழைத்து கொண்டிருக்கக் கூடிய ஒரே இயக்கம் தான் தி.மு.க.


இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தார்கள்? முதன்முதலில், சமச்சீர் கல்வி ரத்து என்பதைத்தான் கொண்டு வந்தார்கள். அதை உச்சநீதிமன்றமே தவறு என்று தீர்ப்பளித்து, இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதுபோல, மற்றொரு காரியம் மக்கள் வரிப்பணத்திலே கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மூடியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவோம் என்றார்கள். ஆனால், இன்றைக்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு இல்லாமல் செய்தியே கிடையாது.


தி.மு.கவினர் மீது பல வழக்குகள் போடப்படுகின்றன. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரங்கநாதன், சிவாஜி, முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம். என்.கே.கே.பி.ராஜா என பலர் மீது வழக்கு போடுகிறார்கள். பூண்டி கலைவாணன் மீது என்ன வழக்கு? பள்ளிக்குச் சென்ற ஒரு மாணவனை பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுத்து, பாடங்களை படிக்க விடாமல் செய்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. கலைவாணன் அந்த வழக்கிலிருந்து ஜாமீன் பெற்று, பாளைச் சிறையிலிருந்து வெளியே வந்ததும், அவர் மீது இன்னொரு வழக்கைப் போட்டு உள்ளே தள்ளுகிறார்கள். ஆட்சிக்கு வந்த 3 மாதத்திலேயே இத்தனை அராஜகங்கள், அக்கிரமங்கள் நடக்கிறதென்றால் அதற்கெல்லாம் பதில் சொல்ல, பாடம் புகட்ட நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.


சட்டமன்றத்தில் நாம் எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுகின்ற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, மக்கள் மன்றம் இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொண்டாற்றக்கூடிய உணர்வோடு தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கைது நடவடிக்கைக்குப் பயந்து மு.க.அழகிரி மனைவி காந்தி டெல்லியிலேயே முகாம்

தமிழக போலீஸார் கைது செய்யக் கூடும் என்ற அச்சத்தால் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி தொடர்ந்து டெல்லியிலேயே தங்கியுள்ளார்.

மதுரை அருகே உத்தங்குடியில் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை காந்தி அழகிரி முறைகேடாக வாங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காந்தி அழகிரியின் பெயரில் தற்போது நிலம் இல்லை என்றும் வேறு ஒருவருக்கு அவர் பவர் கொடுத்துள்ளதாகவும், இதனால் இதை மட்டும் வைத்துக் கொண்டு காந்தியைக் கைது செய்ய முடியாது என்று சட்ட நிபுணர்கள் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

இதனால் காந்தி அழகிரியைக் கைது செய்வதை போலீஸார் நிறுத்தி வைத்துள்ளதாக கூறுகிறது. இருப்பினும் காந்தி அழகிரிக்கு எதிரான ஆதாரங்களை போலீஸார் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.

இந்தப் புகார் கிளம்பியதுமே மு.க.அழகிரியுடன் டெல்லிக்குப் போய் விட்டார் காந்தி. தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளார். கைது நடவடிக்கைக்குப் பயந்தே அவர் டெல்லியில் தொடர்ந்து தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மதுரையைச் சேர்ந்த மு.க.அழகிரியின் கூட்டாளிகள் பலரும் குறிப்பாக பொட்டு சுரேஷ், தளபதி, அட்டாக் பாண்டி என பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அழகிரி மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார். முதலில் காந்தி அழகிரியைக் கைது செய்து விட்டு இறுதியாக அழகிரி பக்கம் காவல்துறையின் பார்வை திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து மதுரையி்ல பரபரப்பு நிலவுகிறது.

காந்தி அழகிரியை டெல்லியிலும் தமிழக போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இதற்காக சிபிசிஐடி போலீஸ் குழு ஒன்று டெல்லியில் முகாமிட்டுள்ளது. அழகிரி வீடு அமைந்துள்ள காமராஜ் மார்க் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் 3 பேர் சுற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்த மத்திய போலீஸ் படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் தமிழக போலீஸார் என்று தெரிய வந்தது.

ஆகஸ்ட் 8ம் தேதி திஹார் சிறைக்குச் சென்ற காந்தி அழகிரி அங்கு கனிமொழியை சந்தித்துப் பேசினார். அதுகுறித்த தகவலை திஹார் சிறையில் உள்ள தமிழக ஆயுதப் படை போலீஸார் சென்னைக்குத் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கோவில் நிலத்தை காந்தி அழகிரிக்குக் கொடுத்தவராக கூறப்படும் லாட்டரி அதிபர் சான்டியாகோ மார்ட்டினை போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். இதையடுத்து அடுத்து காந்தி அழகிரிதான் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


மாணவியை வலுக்கட்டாயமாக கெடுத்தார் கல்லூரி தலைவர்- மாணவர்

நாகர்கோவில் நர்சிங் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக கல்லூரித் தலைவர் பலாத்காரம் செய்ததாக அக்கல்லூரியின் மாணவர் கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் பிரபலமான பகுதியில் பாராமெடிக்கல் கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு முதலாமாண்டு படித்து வரும் மாணவி அவசர கால ஹெப்-லைனுக்கு போன் செய்தார். அதில் கல்லூரியில் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறினார். இந்த தகவலை அடுத்து, குழந்தைகள் கடத்தல் மற்றும் சித்ரவதை தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர்.

முதலில் கல்லூரி நிர்வாகத்திடம் பேசியபோது அந்த மாணவிக்கும், ஒரு மாணவருக்கும் இடையேயான காதலை கல்லூரி நிர்வாகத்தினர் கண்டித்தனர். மற்ற மாணவ, மாணவிகள் வேண்டுகோளுக்கு இணங்கி, நேற்று காலையில் இருவரையும் கல்லூரியை விட்டு வெளியேற்றினோம்.

மாணவியின் உறவினர்களை வரசொல்லி இருக்கிறோம். அதற்குள் போன் செய்து விட்டாள் என்றனர். இதை கேட்ட போலீசார் மாணவிகளிடம் விசாரித்தனர். அப்போது கல்லூரி நிர்வாகத்தினரே 2, 3 மாணவிகளை அழைத்து வந்துள்ளனர். ஆனால் போலீசார் சம்பந்தப்பட்ட மாணவியை விசாரித்தனர்.

அப்போதுதான் கல்லூரி சேர்மன் தன்னை பலத்காரம் செய்துவிட்ட தகவலை கூறி அவர் அழுதார். மேலும் சில மாணவிகளை விசாரிக்க அவர்களும் தங்கள் தோழிக்கு நடந்த கொடுமைகளை கூறி அழுதனர். ஆனால் கல்லூரி நிர்வாகத்தினர் இதை மறுத்தனர். நிலை வேறு விதமாக சென்றதால் டிஎஸ்பி பாஸ்கரனுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உடனடியாக வடசேரி போலீசார் விரைந்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் ஜிடி தலைமையில் போலீசார் விசாரித்த போது தான் பலாத்கார விவகாரம் வெளியானது. இதனால் காதல் ஓன்று குற்றம்சாட்டப்பட்ட மாணவரை விசாரிக்க முடிவு செய்தனர். அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போது கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் எங்குசெல்வது எனதெரியாமல் நாகர்கோவில் பூங்காவில் இருப்பதாக கூறினார்.

இதையடுத்து போலீசார் பூங்காவில் இருந்து மாணவரை வரவழைத்து பேசினர். அப்போது கடந்த 11ம் தேதி பகல் 2.30 மணிக்கு மாணவியை ஆண்கள் விடுதிக்கு சேர்மன் அசோக்குமார் அழைத்து வந்தார். உடல் நிலை சரியில்லாததால் நான் வேறொரு அறையில் படுத்திருந்தேன். அப்போது மாணவியை தனி அறைக்குள் கூட்டி சென்றார்.

பின்னர் வெளியே வரும்போது அவர் பலத்காரம் செய்யப்பட்டு இருந்தது உறுதியானது. இதை வெளியே சொல்ல கூடாது என்றும் மிரட்டினார். ஆனால் நான் வெளியே சொல்லி விடுவேன் என பயந்து கல்லூரியில் இருந்து வெளியை அனுப்பி விட்டனர்.

மாணவி தனக்கு உதவும்படி இந்த மாணவரை கேட்டு கொண்டுள்ளார். இந்த விபரம் தெரிந்து தான் இருவரையும் வெளியேற்ற கல்லூரி நிர்வாகத்தினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது

மங்காத்தா ரிலீஸ் தேதியை வெளியிட்டார் வெங்கட் பிரபு

அஜீத்தின் பொன்விழா படமான மங்காத்தா வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்தத் தகவலை சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.

அஜீத், திரிஷா, அர்ஜுன், லட்சுமிராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்தப் படத்துக்காக காத்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. ரஜினியின் எந்திரன் படத்துக்குப் பிறகு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ஆடியோ சிடி மங்காத்தாதான் என்று விற்பனையாளர்கள் பாராட்டும் அளவுக்கு பரபரப்பான விற்பனையில் உள்ளது இந்த சிடிக்கள்.

சமீபத்தில் மங்காத்தா பட வெளியீடு குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறுகையில், "மங்காத்தா படத்தில் அஜீத் கெட்டவனாக நடித்துள்ளார். இந்தக் கதையில் மொத்தம் 5 கேரக்டர்கள். அதில் 4 பேர் கெட்டவர்கள். 5-வது ஆள் ரொம்ப ரொம்ப கெட்டவர்.

எனது படங்களின் கதை கிரிக்கெட்டோடு தொடர்புடையதாகவே இருக்கும். சென்னை 28-ல் பசங்களோட ஏரியா கிரிக்கெட்டை சொன்னேன். "சரோஜா"வில் கிரிக்கெட் போட்டி பார்க்க போனவர்கள் கதையை சொன்னேன். "மங்காத்தா"வில் கிரிக்கெட் பின்னால் உள்ள சூதாட்டங்களைச் சொல்லி இருக்கிறேன்.

அஜீத்துக்கு பிடித்தமான மோட்டார் சைக்கிள் ரேசையும் படத்தில் சேர்த்துள்ளோம். இந்த படத்தின் பாடல்களை யுவன்ஷங்கர்ராஜா பிரமாதமாக கொடுத்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியமான கெட்டப்பில் வெள்ளை முடியோடு அஜீத் வருகிறார். வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இம்மாதம் 30ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் படத்தில் அஜீத்துக்கு இணையான வேடத்தில் வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இது அஜீத்தின் பொன்விழா படம். அஜீத்துக்குதான் முக்கியத்துவம் இருக்கும் எனத் தெரிந்தும் அர்ஜூன் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார்," என்றார்.

மங்காத்தாவை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் வெளியிடுகிறது.


ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது தாக்குதல்

 

இன்டர்நெட் மையத்தில் ஆபாசப் படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகளை மட்டக்களப்பு மாவட்டம் கட்டங்குடி என்ற இடத்தில் பொதுமக்கள் தாக்கிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமியைத் தாக்கியவர்கள் அனைவருமே ஆண்கள்.

கட்டங்குடி பகுதியில் தமிழ் பேசும் முஸ்லீம்கள்தான் பெருமளவில் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள மத அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 2 டீன் ஏஜ் வயதுப் பெண்களை சிலர் சரமரியாக அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் விசாரித்தபோது, அப்பகுதியில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்தில், இந்த இரு சிறுமியரும் ஆபாசப் படம் பார்த்ததாக அடித்தவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், இந்த 2 பெண்கள் தவறு செய்ததால், தண்டிக்கப்பட்டனர் என அலுவலக மைக்கில் தெரிவிக்கப்பட்டது.

இதில் ஆவேசமடைந்த அப்பகுதியினரும், இளம்பெண்களை அடிக்க ஆரம்பித்தனர். இதற்கு 2 சிறுமிகளின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த, அப்பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தவறு செய்ததாக அடித்து, உதைக்கப்பட்ட இளம்பெண்களை மீட்டனர்.

ஆனால் தாங்கள் அதுபோல படம் எதுவும் பார்க்கவில்லை என்றும் பொய்யான புகாரின் பேரில் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் அந்த இரு சிறுமிகளும் கூறியுள்ளனர். மேலும் இன்டர்நெட் மையத்தில் போலீஸார் சோதனை நடத்தியபோது ஆபாசப் படம் பார்த்தது தொடர்பான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இரு சிறுமிகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஷம்மிஜி... எங்கள் இதயத்தில் எப்போதும் வாழ்கிறீர்கள்! - ரஜினி

ஷம்மி கபூர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, ஷம்மிஜி... நீங்கள் எப்போதும் என் இதயத்தில் வாழ்கிறீர்கள், என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டின் சாதனை நாயகர்களில் ஒருவரான ஷம்மி கபூர் நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. தேசபக்திப் படங்களாக இருந்தாலும், ஆக்ஷன் கதைகளாக இருந்தாலும் ரொமான்டிக் படங்களாக இருந்தாலும், ஷம்மி கபூர் தன் ஸ்டைலான உடல் மொழியால் தனி கவனத்தைப் பெற்றார்.

ஷம்மி கபூரின் உடல் இன்று மும்பையில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஷம்மி கபூரின் மறைவு கேட்டு நடிகர் ரஜினிகாந்த் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

ரஜினி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "நான் ஷம்மிஜியின் தீவிர ரசிகன். திரையில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தவன் நான். அவரது மறைவு திரையுலகிற்கு ஒரு பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ஒ மேரே சோனா... (தீஸ்ரி மன்ஸில் படத்தில் இடம்பெற்ற பாடலின் முதல் வரி) நீங்கள் எப்போதும் எங்களது இதயத்தில் வாழ்த்து கொண்டு தான் இருக்கிறீர்கள்!" என்று தெரிவித்துள்ளார்.


ஒரே நேரத்தில் இரண்டு மாதங்களாக தூங்குகிறார். (வீடியோ இணைப்பு)






லில்லி கிளார்க் என்ற மாணவி உண்மையிலேயே ஒரு கும்பகர்ணி தான். ஒரே நேரத்தில் இரண்டு மாதங்களாக தூங்குகிறார். 21 வயதான குறித்த மாணவி Kleine-Levin Syndrome என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் பல்கலைக்கழகப் பரீட்சைகள், கிறிஸ்துமஸ், புத்தாண்டையும் தூக்கத்தினால் இழந்துள்ளார்.

இவரின் 18 ஆவது பிறந்தநாளையும் பாழாகப் போன தூக்கத்தினால் இழந்துள்ளார்.

ஒருநாளைக்கு 23 மணிநேரம் நன்றாகத் தூங்குகிறார்.

மனிதனுக்கு அறிவூட்டும் பிரசாரத்தில் குரங்கு (படங்கள் இணைப்பு)

தாய்லாந்து நாட்டில் போக்குவரத்து விழிப்புணர்வூட்டல் பிரசாரத்தில் ஒரங்குட்டான் குரங்குகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

அந்நாட்டு அரசின் ஆதரவுடன் இப்பிரசாரம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இவ்விழிப்புணர்வுப் பிரசாரத்துக்காக இவை வீதிகளில் சைக்கிள்களை ஓட்டிச் சென்றன.

தலைமைக் குரங்கின் பெயர் பம். வயது 08. இது வெள்ளையும் மஞ்சளும் கலந்த ரீசேட் அணிந்து இருந்தது. நீல நிற சைக்கிள் ஒன்றில் வீதி உலா வந்தது. இந்த நீல நிற சைக்கிள் மீது இதற்கு அலாதிப் பிரியம்.

பம்முடன் கூடவே இரு குரங்குகள் இப்பிரசாரத்தில் பங்கேற்று இருந்தன. ஆனால் பம்மின் பரிவாரங்களில் ஒன்று தலைக்கவசம் அணிந்து இருக்கவில்லை.

இவ்விழிப்புணர்வுப் பிரசாரம் பொதுமக்களை குறிப்பாக குழந்தைகளை பெரிதும் ஈர்த்து உள்ளது.

பம்மும் அதன் பரிவாரங்களும் பாங்கொக்கில் உள்ள டுசிட் மிருகக்காட்சிச்சாலையைச் சேர்ந்தவை



யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி

வீரம் விளைந்த தன்மானத் தமிழன் வாழ்கின்ற யாழ்.மண்ணில் பட்டிமன்றம் நடத்துவதற்கு நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று தெரிவித்துள்ள திண்டுக்கல் ஐ.லியோனி, யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் தமிழனுக்கான தன்மானம் தானாகவே வந்து விடும் என்றும் தெரிவித்தார்.

நேற்று நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த திண்டுக்கல் ஐ.லியோனி குழுவினரின் பட்டிமன்றம் நடைபெற்றது.

கலாசாரத்தைப் பெரிதும் பேணிப் பாதுகாப்பது பழைய பாடல்களா? புதிய பாடல்களா? என்ற தலைப்பில் நடைபெற்ற மேற்படி பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தமிழ் என்றால் யாராவது உடனே சொல்வது இலங்கைத் தமிழனைக் குறித்தே. அந்தளவுக்கு அழகும், பெருமையும், தன்மானமும், வீரமும் கொண்டது இலங்கைத் தமிழ்.

அவற்றிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற தமிழர்கள் பேசுவதுதான் ஒழுங்கான தமிழ் என்று அடையாளப்படுத்தக் கூடியது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் மட்டுமே போதும் ஒரு தமிழனுக்கு இருக்க வேண்டிய தன்மானமும், வீரமும் தன்னாலே வந்து விடும்.

அதனாலேதான் யாழ்.மக்களுடன் பேச வேண்டும் என்ற அவா எங்களுக்கு உண்டு என்றார்.

�மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்� பத்திரிகையாளர் சந்திப்பு

ராஜீவ் கொலை வழக்கில் பொய்குற்றம் சாட்டப்பட்டு இருபத்தொரு ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணைமனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து, �மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்� சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் சேரன், அமீர், கௌதமன், புகழேந்தி தங்கராஜ், சிபிச்சந்திரன், ஓவியர் வீர சந்தானம், ஓவியர் மருது, விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் சரஸ்வதி, மருத்துவர் எழிலன், திருமுருகன், வழக்கறிஞர் ரஜினிகாந்த், டிவி.எஸ்.எஸ்.மணி, கவிஞர் இன்குலாப், மீனவர் அமைப்பைசார்ந்த மகேஷ், சீதையின் மைந்தன் மற்றும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.