Wednesday, 21 December 2011

சனிப்பெயர்ச்சி live

http://www.dinamalar.com/live/sani-peyarchi-live.asp

வைகோவை காணவில்லை : தேடும் உளவுத்துறை


பெரியாறு அணையை உடைக்க முயலும் கேரள அரசைக் கண்டித்து கேரளா செல்லும் அனைத்து வழித்தடங்களையும் அடைத்து நாளை போராட்டம் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் வைகோ கலந்து கொள்வதாகவும் மற்ற இடங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவு இயக்கத்தினர் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டது. வைகோவின் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள், சங்கங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரியாறு அணை விவகாரத்தில் கம்பத்தில் வைகோ தலைமையில் நடக்க இருந்த உண்ணாவிரதம், அங்கு பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவால் தேனியில் நடந்தது.


ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் தினமும் திரண்டு கேரள எல்லையை முற்றுகையிட்டு வரும் நிலையில், வைகோ கம்பம் பகுதிக்கு சென்றால் பிரச்னை பெரிதாகி விடும் என்று உளவுத்துறை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளது.

மேலும் வைகோவின் செயல்பாடுகளை கடந்த நான்கு நாட்களாக உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. கம்பத்தில் 144 தடையுத்தரவு தொடர்வதால், தேனியிலேயே வைகோவை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், நேற்று நள்ளிரவு கம்பம், கூடலூர் பகுதியில் உள்ள கிராமத்திற்கு வைகோ ரகசியமாக சென்றதாக தகவல் பரவியுள்ளது.

நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைகளை பார்வையிட்டு, போராட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து வைகோ ஆலோசனை நடத்தினார். பின்னர் கோவையில் நடந்த பெரியாறு அணையின் உண்மை நிலை குறித்த குறும்பட சிடி வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

நேற்று தேனியில் கேரள அரசை கண்டித்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்பவர் திடீரென தீக்குளித்தார். படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை நேற்று இரவு வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆனால் அதன் பின்னர் வைகோ எங்கு சென்றார் என தெரியாததால் போலீஸ், உளவுத்துறை குழம்பி போய் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகோவின் உறவினர்கள், கட்சியினரிடம் போலீசார் ரகசியமாக விசாரித்தபடி உள்ளனர்.


25 லட்சம் கொடுங்க... தனுஷின் புது டாரிஃப்


அடிக்கடி பாலிவுட் பக்கம் தென்படுகிறார் தனுஷ். ஏதோ அபிஷேக் பச்சன், ஷாரூக்கான் போன்ற முன்னணி ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்க போயிருக்கிறார் என்பது போல தமிழ்நாட்டில் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தப்பான மெட்டு தவறிப் போய் ஹிட்டாவது மாதிரி, இந்த பில்டப்புக்கும் ஒரு வடிவம் கொடுத்துவிட்டார்கள் பத்திரிகைகளில். அதாவது, தனுஷ் அடிக்கடி பாலிவுட் பக்கம் செல்வது அவர் இயக்கப் போகும் முதல் படத்தின் ஹீரோவை தேடுவதற்காகதான் என்பது போல. உண்மையில் என்ன நடக்கிறது அங்கே?

ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தேமாதரம் பாடலுக்கு விஷுவல் அமைத்துக் கொடுத்த பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறாராம். முதலில் கமலிடம் கால்ஷீட் கேட்டிருந்த பரத்பாலா, கொய்யாக்காய் சிறுத்து சுண்டைக்காயானது போல தனுஷ் வரைக்கும் வந்துவிட்டார். அவரது அழைப்பை கர்ம சிரத்தையாக ஏற்றுக் கொண்ட தனுஷ், இந்த புதிய படத்தின் டிஸ்கஷனுக்காகதான் அவ்வப்போது பாலிவுட் பக்கம் போகிறாராம்.

தனுஷ் பற்றி இன்னொரு ஆச்சர்யமான தகவல். இவர் பாடிய வொய் திஸ் கொலவெறிடி உலகம் முழுக்க பாப்புலர் ஆகிவிட்டதல்லவா? பல்வேறு நாடுகளில் இருந்தும் இவரை பாட அழைக்கிறார்களாம். எந்த நாட்டிலிருந்து இவரை பாட அழைத்தாலும் ஓ.கே என்கிறாராம் தனுஷூம். ஆனால் ஒருமுறை பாட 25 லட்சம் சன்மானத்தை நிர்ணயித்துவிட்டார். இதற்காக முன்னாலேயே வாங்கியிருக்கும் அட்வான்சை கூட்டிக்கழித்து பார்த்தால் மூன்று பட சம்பளத்தை தாண்டும் என்கிறார்கள் இப்போதே.

1 முதல் 6-ம் வகுப்பு வரை ஒரே ஒரு பாடப்புத்தகம்; மாணவர்களின் பாட சுமை குறைகிறது


மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் நோக்கத்தில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி முழுக்கல்வி ஆண்டிற்கும் உரிய புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முறையிலும் தொடர் மற்றும் உள் மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் மாணவர்களின் புத்தக சுமை குறைவதுடன், பயம், மன அழுத்தம் போன்றவை குறைகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு பாடநூல்களை மூன்றாகப் பிரிப்பது தொடர்பாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் அரசுக்கு பரிந்துரையை அனுப்பி இருந்தது. அந்த பரிந்துரையை ஏற்று பள்ளிக்கல்வி செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள பாடநூல் பக்கங்களை கணக்கீடும்போது கீழ்க்கண்டவாறு பாடநூல்கள் பிரிக்கப்படுகின்றன.

1 முதல் 6 வகுப்புகளுக்கு ஒரு பருவத்துக்கு ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்புத்தகம் வீதம் மூன்று பருவங்களுக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும். 1, 2 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் ஆகிய 4 பாடங்களும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் 3, 4, 5, 6 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்கள் ஒருங்கிணைக்கப்படும்.

7, 8 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலத்தை தொகுதி 1 எனவும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியலை தொகுதி-2 எனவும் ஒரு பருவத்துக்கு 2 புத்தகங்கள் வெளியிடப்படும். தமிழ்வழி, ஆங்கில வழி ஆகிய 2 வழிகளுக்கும் மற்றும் சிறுபான்மை மொழிகளுக்கும் மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்.

சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு அந்தந்த மொழி சார்ந்த மொழிப் பாடநூல் தனியாக வழங்கப்படும். அது மூன்றாக பிரிக்கப்படாமல் வருடத்துக்கு ஒரு புத்தகமாக, இப்போது நடை முறையில் உள்ளதைப் போலவே வழங்கப்படும். 9, 10 வகுப்புகளுக்கு முப் பருவமுறை 2012-13-ல் நடை முறைப் படுத்தப்படவில்லை என்பதால் பழைய முறையை பின்பற்றி பாடநூல்களை அச்சிட்டு வழங்க வேண்டும்.


ஜெயலலிதாவுடன் நிரூபமா ராவ் திடீர் சந்திப்பு-ஏன்?


முதல்வர் ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தூதராக பணியாற்றியவர் நிரூபமா ராவ். பின்னர் மத்திய வெளியுறவுத்துறை செயலாளராகவும் பணியாற்றினார். தற்போது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இவர் பொறுப்பு வகிக்கிறார்.

இந்த நிலையில் சென்னை வந்த நிரூபமா ராவ் திடீரென முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ராவ் தெரிவித்தார்.

நிரூபமா ராவின் பூர்வீகம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.


சசி விட்ட கேப்பில் உள்ளே நுழைய பார்க்கும் சுப்ரமணியசாமி


மன்னார்குடி மாபியா கும்பலான சசி மற்றும் அவரது குடும்பத்தினரை முதல்வர் ஜெயலலிதா விரட்டியடித்திருப்பது வரவேற்புக்குரியது. அவர் தொடர்ந்து இதேபோல புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் எதிர்காலத்தில் எனது முழு ஆதரவும் அவருக்குக் கிடைக்கும் என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி.

ஒரு காலத்தில் அதிமுக மகளிர் அணியினரால் சென்னை உயர்நீதிமன்றத்தால் 'சிறப்பான' வரவேற்பு அளிக்கப்பட்டவர் சாமி. அந்த காட்சி அந்த சமயத்தில் அங்கு கூடியிருந்த வக்கீல்கள், பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் மனதிலிருந்து இன்னும் மறையவில்லை. அதன் பிறகு சுப்பிரமணியசாமியும், ஜெயலலிதாவும் பெரும் விரோதிகளாகி விட்டனர். இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா மீது பல வழக்குகள் பாய திமுக ஆட்சி காரணமாக இருந்தாலும் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டதே நம்ம சாமிதான்.

இந்த நிலையில் சசிகலா நீக்கத்தை வரவேற்றுள்ளார் சாமி. மேலும் இதேபோல தொடர்ந்து ஜெயலலிதா ஒழுங்காக நடந்து கொண்டால் தனது முழு ஆதரவும் எதிர்காலத்தில் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சாமி கருத்து தெரிவிக்கையில், சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் அதிமுகவிலிருந்து நீக்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் முடிவை நான் வரவேற்கிறேன். அவர்கள் மன்னார்குடி மாபியாக்கள்.

இது உள்கட்சிப் பிரச்சினையாக இருந்தாலும் கூட, பொதுமக்கள் நலனும் இதில் அடங்கியுள்ளது. இப்போது நல்லாட்சியை, ஊழல் அற்ற ஆட்சியைத் தரும் அருமையான சந்தர்ப்பம் ஜெயலலிதாவுக்குக் கிடைத்துள்ளது. அவருடைய புத்திசாலித்தனமான ஆட்சியால், இந்த மாநிலத்திற்கு நிறைய நல்லது நடக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதேபோல ஜெயலலிதா தொடர்ந்து நடந்தால் எதிர்காலத்தில் எனது முழு ஆதரவும் அவருக்கே என்று கூறியுள்ளார் சாமி.

அஜித் மாதிரியே வேணும் - ஆசைப்பட்ட ஷாருக்கான்

 கொஞ்சநாட்களாகவே தமிழ்நாட்டின் பக்கம்தான் கண்ணையும், காதையும் தீட்டி வைத்துக் கொண்டு திரிகிறார்கள் இந்தி நடிகர்கள். ரஜினியின் வீடு வரைக்கும் வந்து நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துவிட்டு போனார் ஷாருக்கான். இப்போது இவர் நடித்து வரும் டான்-2 படமும் நம்ம அஜீத் நடித்த பில்லா படத்தின் தழுவல்தானாம்.

இந்த படத்தில் ஷாருக்கானின் ஸ்டில்களை பார்த்தவர்களுக்கு இந்த ஹேர் ஸ்டைலை எங்கேயோ பார்த்த மாதிரி தோன்றும். ஆனால் அஜீத் ரசிகர்களுக்கு மட்டும் சட்டென்று விளங்கியிருக்கும். யெஸ்... இந்த படத்தில் ஷாருக்கானின் கெட்டப்பும், ஹேர் செட்டப்பும் பரமசிவன் படத்தில் ஒரு அஜீத் வருவாரே, அவரை போலவேதான் இருக்கும். (இந்த படத்தின் நெகட்டிவ்வையே வாங்கி குடோனில் பதுக்கலாம் அஜீத். அந்தளவுக்கு அவரது இமேஜை இடியாப்பம் ஆக்கிய தோற்றமல்லவா அது?)

பரமசிவன் படத்தை யதேச்சையாக கவனித்த ஷாருக், அனில்பெம் கிரேக்கர் என்ற தனது மேக்கப் மேனை அழைத்து, அப்படியே அச்சு அசலாக அந்த ஹேர் ஸ்டைல் வேண்டும் என்று கேட்டாராம்.

அஜீத்தின் கிரேஸ் பாலிவுட் வரைக்கும் பரவியிருப்பது ஆச்சர்யம்தான்

டி.ஆரின் ஒஸ்தி ஆசை "நாஸ்தி" ஆன கதை!


தன் மகன் எஸ்.டி.ஆர் அலைஸ் சிம்பு நடித்து சமீத்தில் வெளிவந்த "ஒஸ்தி" படத்தை அடித்து பிடித்து., அடம் பிடித்து வாங்கி வெளியிட்டதன் மூலம் டி.ஆருக்கு சுமார் பத்து கோடி ரூபாய்க்கு மேலாக நஷ்டமாம். கிட்டத்தட்ட மிரட்டாத குறையாக ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.22 கோடிக்கு ஒஸ்தி படத்தை வாங்கி தனது குறள் டி.வி.,கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளியிட்டார் டி.ஆர்.

படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தாலும் கூட்டம் இல்லாமல் வாடிக் கொண்டிருப்பதால் வசூல் இல்லையாம்! இதனால் ரூ.பத்து கோடி நஷ்டத்தில் டி.ஆர்.தவிக்கிறாராம். படத்தை அவருக்கு விற்ற ரிலையன்ஸ் நிறுவனம் இப்படத்தின் சிட்டி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வினியோக உரிமையை 22 கோடிக்கு டி.ஆருக்கு கொடுத்து விட்டு. சேட்டிலைட் உரிமையை 6 கோடிக்கும், எஃப்.எம்.எஸ்., எனப்படும் வெளிநாட்டு உரிமையை 3 கோடிக்கும் வேறு வேறு பார்டிகளிடம் கொடுத்து சுமார் ஐந்தாறு கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளது. ஒஸ்தி படத்தை முதலில் தயாரித்த பாலாஜி பில்ம் மீடியா ரமேஷூக்கு ஐந்து கோடி லாபம் இருக்கும் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாதாதால் டி.ஆரோ அம்மாடி, அய்யோடி, ஆத்தாடி... என புலம்பி வருகிறாராம் பாவம்! டி.ஆர்., பேராசைக்கு கிடைத்த நெத்தியடி., ரூ. 10 கோடி நஷ்டம்!

அமலா பாலுக்கு வீடு வாங்கிக் கொடுத்தேனா... பதறும் விஜய்!


முல்லைப் பெரியாறு, தமிழக அய்யப்ப பக்தர்கள் தாக்குதல், கேரளாவில் தமிழ்ப் பெண்கள் மானபங்கம் என எதைப் பற்றியுமே கவலைப்படாமல் நாளொரு கிசுகிசும் பொழுதொரு பொழுதுபோக்குமாகப் போய்க்கொண்டிருக்கிறது தமிழ் திரையுலகம் (அம்மா சொன்னாதான் ஆவேசப்படுவாங்களாம்!).

நடக்கிற நிகழ்ச்சிகள் அனைத்திலும் சிறப்பு விருந்தினர்கள் அநேகமாக மலையாள நடிகைகள் அல்லது இயக்குநர்கள்தான்.

இப்போது கோடம்பாக்கத்தைக் கலக்கிக் கொண்டிருப்பதும் ஒரு மலையாள - தமிழ்க் காதல்தான். அது அமலா பால் - இயக்குநர் விஜய் இடையிலான நெருக்கம்.

'அமலா பாலை திருமணம் செய்யப் போகிறார் விஜய், அதற்கு பெற்றோரும் சம்மதம் சொல்லிவிட்டனர்' என்று கூறப்பட்ட நிலையில், இப்போது புதிதாக வந்துள்ள பரபரப்பு, அமலா பாலுக்கு புதிதாக வீடு வாங்கிக் கொடுத்து, சென்னையிலேயே செட்டிலாக வைத்துவிட்டார் விஜய் என்பதுதான்.

இதுகுறித்து இயக்குநர் விஜய்யிடம் கேட்ட போது, "எனக்கும் நடிகை அமலாபாலுக்கும் காதல் என எல்லோருமே சொல்கிறார்கள். எனக்கே அவர்கள் சொல்லித்தான் தெரிகிறது. இந்த வதந்தியால் என் குடும்பத்தினருக்கும் சங்கடம். எனக்கும், அமலா பாலுக்கும் இடையே இருப்பது வெறும் நட்புதான். வேறு மாதிரி எந்த உறவும் இல்லை.

சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. அதிகாலை 2.30 மணி வரை வேலை சரியாக உள்ளது. இதில் காதலுக்கு ஏது நேரம்.

நான் காதர் நவாஸ்கான் ரோட்டில் அமலாபாலுக்கு வீடு வாங்கி கொடுத்து இருப்பதாகவும், எனது பி.எம்.டபுள்யூ 5 சீரீஸ் காரை அமலாபால் உபயோகத்துக்கு கொடுத்து விட்டதாகவும் வெளியான செய்திகளிலும் உண்மை இல்லை.

நான் கஷ்டப்பட்டு உழைத்து எனது பெற்றோருக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளேன். அமலா பாலுக்கு எதற்காக வாங்கித் தரவேண்டிய நிலையில் இல்லை" என்றார்.

என்னமோ போங்க... இப்படி சொல்லும் ஜோடிகள்தான் முதலில் மாலையும் கழுத்துமாக போஸ் தருகிறார்கள்!

ஜெ.வின் அடுத்த 'டார்கெட்' ?

 


அதிமுகவின் எந்த ஒரு மூலையிலும் சசி குடும்பத்தாரின் நிழல் கூட இருக்கக் கூடாது என்ற முடிவில் ஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு அவர்களை துரத்தி விட்டு விட்ட ஜெயலலிதா, அடுத்த இந்தக் கும்பலிடமிருந்து ஜெயா டிவியை மீட்டு அதை சுத்தப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர் பல அதிரடி நடவடிக்கைகளில் அடுத்தடுத்து இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா லைம்லைட்டுக்கு வந்து முதல் முறையாக முதல்வரான போது அப்போது திமுகவுக்கு பெரும் பக்கபலமாக இருந்தது சன் டிவிதான். இதை உணர்ந்த ஜெயலலிதா அதிமுகவுக்கும் ஒரு டிவி வேண்டும் என்பதற்காக சசி குடும்பத்தார் மூலம் தொடங்கிய டிவிதான் ஜெஜெ டிவி. பின்னர் இது ஜெயா டிவியாக உருமாறியது.

ஜெயா டிவியின் நிர்வாகத்தை ஆரம்பத்திலிருந்தே சசிகலா குடும்பத்தினர்தான் கவனித்து வருகின்றனர். ஜெயா டிவியின் அனைத்து நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றிருப்பவர் அனுராதா. இவர் டிடிவி தினகரனின் மனைவி ஆவார்.

இந்த டிவியின் கணக்கு வழக்கு, நிர்வாகம், என்ன செய்கிறார்கள் என்பது ஜெயலலிதாவுக்கு எதுவுமே தெரியாது என்கிறார்கள். தனது பெயரில் டிவி வருகிறது, அதில் அதிமுக செய்திகளையும் காட்டுகிறார்கள் என்ற அளவுக்குத்தான் ஜெயலலிதாவுக்கும், இந்த டிவிக்குமான தொடர்பு என்றும் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு சசி குடும்பத்தாரின் நாட்டாமை ஜெயா டிவியில் அதிகம் என்பது அதிமுகவினரின் கருத்தாக உள்ளது.

தொடங்கி 14 ஆண்டுகளாகியும் இதுவரை மக்கள் மத்தியில் ஜெயா டிவிக்கு என்றொரு நல்ல பாப்புலாரிட்டி இல்லை. மேலும் அதிமுகவினர் மத்தியிலும் கூட இந்த டிவியால் பெரிய அளவில் லாபம் இல்லை என்றும் கூறப்படுகிறது. காரணம், அந்த அளவுக்கு கோக்குமாக்கான நிர்வாகம், சரியில்லாத நிகழச்சிகள், நடுநிலையுடன் கூடிய நிகழ்ச்சிகள் அதிகம் இல்லாதது, ஒளிபரப்பில் தரமில்லாதது என ஏகப்பட்ட குறைகள் ஜெயா டிவியில் உள்ளன.

சன் டிவிக்கு இதுவரை ஒரு நொடி கூட கடுமையான போட்டியையோ, பீதியையோ எழுப்பியதில்லை ஜெயா டிவி என்பதிலிருந்தே அந்த டிவியின் தொழில்துறை தரத்தைப் புரிந்து கொள்ளலாம். ஜெயா டிவி இப்படி பொலிவிழந்து கிடக்க முக்கியக் காரணமே சசி கலா குடும்பத்தார் அதை தங்களுக்கு சாதகமான ஒரு பணம் கறக்கும் கருவியாக மட்டுமே பார்த்து நடத்தி வந்ததுதான் என்கிறார்கள் அதிமுகவினர்.

மேலும் ஜெயா டிவியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் சசி குடும்பத்துடன் கை கோர்த்துக் கொண்டு பெருமளவில் விளையாடியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அனுராதவும், ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகி ஒருவரும் இணைந்து தனியாக விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்கள்.

இதேபோல அதன் செய்திப் பிரிவிலும் கூட ஜெயலலிதா குறித்த செய்திகளை பெருமளவில் குழப்பவே ஒரு தரப்பு எப்போதும் ஆயத்தமாக இருக்குமாம். அதாவது ஜெயலலிதா தொடர்பான செய்திகளை குழப்பமாகவே காட்டி மக்களைக் குழப்பி, ஜெயலலிதாவுக்கு மோசமான இமேஜை உருவாக்குவது என்ற சசி குருப்பீன் அஜென்டாவை இவர்கள் நீக்கமற நிறைவேற்றி வருகிறார்களாம்.

இப்படி ஏகப்பட்ட குழப்பங்களுடன் நடந்து வரும் ஜெயா டிவி நிர்வாகத்தை முற்றிலும் மாற்றியமைத்து, தரமான டிவியாக மாற்ற ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.

இரவு நேர காட்சி ரத்து: தியேட்டர் அதிபர்கள் முடிவு...!


தியேட்டர்களில் இரவு காட்சிக்கு கூட்டம் குறைந்து கொண்டே வருவதாலும், பெண்களின் பாதுகாப்பு கருதியும் இரவு நேர காட்சியை ரத்து செய்ய தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் நகர்பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் தினமும் 4 காட்சிகளும், கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களில் 3 காட்சிகளும் நடத்தப்படுகிறது. ஆனால் சமீபத்திய காலமாக தியேட்டர்களில் மக்களின் கூட்டம் குறைத்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக இரவு நேர காட்சிக்கு ஆட்களே வருவதில்லை. இரவு காட்சி முடியும்போது நள்ளிரவு ஆகிவிடுவதால், அந்த காட்சிக்கு வருவதை பெரும்பாலானவர்கள் தவிர்க்கிறார்கள். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை கருதி, இரவு காட்சிக்கு வருவதில்லை. இப்போது பனிக்காலமாக இருப்பதால், இரவில் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்கிறார்கள். இதனால் தியேட்டர்கள் காலியாக கிடக்கின்றன.

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தியேட்டர்களில் இரவு நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நிரந்தரமாக இரவு காட்சியை ரத்து செய்வது பற்றியும் தியேட்டர் அதிபர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி பெங்களூரை போன்று காலை காட்சியை 11மணிக்கும், பகல் காட்சியை 2மணிக்கும், மாலை காட்சியை 4மணிக்கும், இரவு காட்சியை 7மணிக்கும் நடத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

நயன்தாரா நடித்தால் தான் நடிப்பேன்! அடம்பிடிக்கும் ஹீரோ...!


ஸ்ரீ ராமராஜ்யம் படத்தில் சீதையாக நடித்த நயன்தாராவுக்கு, மீண்டும் ஒரு படத்தில் சீதையாக நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. நயன்தாரா சீதையாக நடித்தால் மட்டுமே, அந்தப்படத்தில் நானும் நடிப்பேன் என்று ஒரு ஹீரோ அடம்பிடித்து வருகிறார்.விரைவில் பிரபு‌தேவாவை கரம்பிடிக்க இருக்கும் நயன்தாரா, தெலுங்கில் கடைசியாக நடித்த படம் ஸ்ரீ ராமராஜ்யம். ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில், பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக சீதை வேடத்தில் நடித்து இருந்தார் நயன்தாரா. சமீபத்தில் வெளியான இப்படம், ஓரளவுக்கு வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக நயன்தாராவின் சீதை கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டது. பலரும் அவரை கூப்பிட்டு பாராட்டியதாக நயன்தாராவே தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா, அடுத்து ராமாயணத்தை மையப்படுத்தி, ராவணன் என்ற பெயரில் ஒரு புராண படத்தை எடுக்க இருக்கிறார். இதில் ஹீரோவாக நாகர்ஜூனா நடிக்கிறார். இதில் மீண்டும் சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவை அழைத்துள்ளனர். ஸ்ரீராமராஜ்யம்படத்தில் நயன்தாராவுக்கு, சீதை வேடம்  கச்சிதமாக பொருந்தியதால் ராவணன் படத்திலும் அவரையே சீதை வேடத்துக்கு ஒப்பந்தம் செய்யுங்கள் என்று இயக்குநரை, நாகார்ஜூனா வலியுறுத்தி இருக்கிறார். மேலும் சீதையாக நயன்தாரா நடித்தால் தான், நான் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம் நாகர்ஜூனா. இதனால் நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட படக்குழுவினர்.

ஏற்கனவே நயன்தாரா மீண்டும் படத்தில் நடிப்பேன் என்று சூசகமாக தெரிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி இந்தபடத்திலும் அவருடைய வேடம்  சீதை என்பதால், நிச்சயமாக நயன்தாரா நடிப்பார் என்று தெலுங்கு வட்டாராத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சசியை விரட்டிய "பவர் புல்' பைல்: ஜெயலலிதா கண்ணில் பட்டது எப்படி?


டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், முதல்வரின் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டது. அந்த பைலை, வெள்ளிக்கிழமை அன்று முதல்வர் ஜெயலலிதா எடுத்து படித்துள்ளார். அதன் பின்னர் தான் சசிகலாவின் ஆதரவர்களாக வலம் வந்த அதிகாரிகள், ஒவ்வொருவராக, "கழற்றி' விடப்பட்டுகின்றனர்.

"எம்.ஜி.ஆர்., கூட இந்தளவிற்கு தனி மெஜாரிட்டியில் ஜெயிக்கலைங்க... இந்தம்மாவிடம் (ஜெயலலிதா) பொதுமக்கள் நிறைய எதிர்பார்க்கிறாங்க' என்ற பேச்சு, தமிழகத்தின் அடிமட்ட அரசியல் தொண்டனிடம் இருந்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வரை பேசப்பட்டது.

முதல்வரின் நிழலாக பின் தொடரும் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள், "தமிழகத்தில் நடப்பது எங்கள் ஆட்சி' என்ற தோரணையில் தலைமைச் செயலகத்தில் வலம் வந்தனர்.தற்போது நீக்கப்பட்ட, 14 பேரில் ராகவன் என்பவர், தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த நேரத்தில், சி.எம்.டி.ஏ., பிரின்சிபல் செக்ரடரி தயானந்த கட்காரியை போனில் அழைத்து, "நாங்கள் சொல்லும் பைலில் கையெழுத்து போடா விட்டால் நடப்பதே வேறு' என மிரட்டியுள்ளார்.

அந்த நபர், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை என, தலையிட்டு, கடைசியாக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறையிலும் தலையை நீட்டினார். "2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் ஆசியுடன், கடந்த ஆட்சியில் சென்னையில் பணியாற்றி வந்த, "ஜிம் பாடி பில்டர்' ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கார்டன் அதிகார நபரை பிடித்தார்.அடுத்த சில நாட்களில் அந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி, மேற்கு மண்டலத்தில் உள்ள வளமான மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். இது போன்ற ஏகப்பட்ட தலையீடுகள், போலீஸ் துறையில் அரங்கேறின.

கார்டன் அதிகார மையத்தினரால் நடத்தப்படும் வசூல் வேட்டை குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து ரகசிய, "பைல்' முதல்வருக்கு அனுப்பப்பட்டது. அந்த பைலை முதல்வரின் பார்வையில் படாமல் கார்டனில் உள்ள சிலர் மறைத்து விட்டனர்.டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், ஒரு மாதத்திற்கும் மேலாக கார்டனில் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. இம்மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை, அந்த பைலை ஜெயலலிதா படித்துள்ளார்.அதில், சசிகலா மற்றும் அவரது வகையறாக்கள் ஒவ்வொருவரை பற்றியும், வசூல் வேட்டை பற்றியும் விலாவாரியாக, "புட்டு புட்டு' வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கார்டன் அதிகார மையத்தினரால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் தகவல், நியாயமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் முதல்வரிடம் தயக்கத்துடன் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின் தான், முதல்வர் சாட்டையை சுழற்றினார். தலைமைச் செயலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த, சிறப்பு திட்ட செயலரான பன்னீர்செல்வம் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.அவர், சசிகலாவின் கணவர் நடராஜனின் தீவிர விசுவாசி. பன்னீர்செல்வம், ஐ.ஏ.எஸ்., ஆனதற்கு, நடராஜன் உதவியதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான, திருமலைச்சாமி, கார்டனில் இருந்து விரட்டப்பட்டார்.இவர், கார்டன் அதிகார மையத்திற்கு மிகவும் நெருக்கமானவர். கார்டனில் நடக்கும் விஷயங்களை கேட்டு முகம் சிவந்த ஜெயலலிதா, திருமலைச்சாமியிடம் நேரடியாக விசாரித்த போது, பல தகவல்கள் முதல்வரை அதிர்ச்சியடை செய்தன.திருமலைச்சாமியின் வாக்கு மூலத்தை, அமைச்சர்களை நேரில் அழைத்து விசாரித்து, நூறு சதவீதம் உறுதி செய்தார் ஜெயலலிதா. இனிமேலும் தாமதித்தால் எல்லாம் வீணாகிப் போய்விடும் என்ற எண்ணத்தில், கழக தலைமைக் செயற்குழு குழு உறுப்பினர் சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது சகோதரர் ராமச்சந்திரன் உட்பட, 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், மற்ற பொறுப்புகளில் இருந்து ஜெயலலிதா விடுவித்து உத்தரவிட்டார்.

சனி பெயர்ச்சி சசி பெயர்ச்சியாகிவிட்டது: எஸ்.வி.சேகர் கமெண்ட்


அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவி முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சசிகலா நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நடிகரும், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான (அதிமுக) எஸ்.வி.சேகரிடம், தனியார் தொலைக்காட்சி ஒன்று கருத்து கேட்டது.


இதற்கு பதில் அளித்துப் பேசிய அவர், ஜெயலலிதா அவர்கள் உற்ற தோழி, நெருங்கிய தோழி என்ற பதவியை எடுக்கவில்லை. உற்ற தோழியாக இருக்கலாம். நெருங்கிய தோழியாக இருக்கலாம். அவர்கள் அறிவித்திருப்பது என்னவென்றால், அதிமுகவில் இருக்கக் கூடிய பதவியை பறித்திருக்கிறார்கள். இல்லத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். வெளியேற்றப்படவில்லை. இல்லத்தில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பே வெளியே போய்விட்டதாக சொல்லுகிறார்கள். அதைப்பற்றி பேசத்தேவையில்லை. நம்மைப் பொறுத்தவரை அதிமுகவில் இருந்து ஒரு பவர் செக்டராக இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.


இது என்றைக்கோ நடக்கும் என்று பலபேர் எதிர்பார்த்தார்கள். பலபேர் சாபமிட்டார்கள். பலபேர் இதுநடக்காதா என ஏங்கினார்கள். அது இன்று நடந்திருக்கிறது. நாளைக்கு சனி பெயர்ச்சி. அது சசி பெயர்ச்சியாகிவிட்டது என்றார்.

'ஜஸ்ட் மிஸ்'... சிம்ரனின் ஏக்கப் பெருமூச்சு!


ஒரு நடிகையின் வாக்குமூலம் படம் குறித்து பெரும் பெருமூச்சு விட்டுள்ளார் கடந்த கால கனவுக் கன்னியான சிம்ரன். இப்படத்தில் நான் நடிக்காமல் போய் விட்டேனே என்ற ஏக்கப் பெருமூச்சுதான் அது.

சோனியா அகர்வாலின் இரண்டாவது இன்னிங்ஸாக கருதப்படுகிறது ஒரு நடிகையின் வாக்குமூலம் படம். இப்படத்தில் அவர் நடிகையாக நடித்துள்ளார். ஒரு நடிகையின் உண்மைக் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இயக்குநர் செல்வராகவனை விட்டுப் பிரிந்த பின்னர் மீண்டும் நடிக்க ஆரம்பித்த சோனியாவுக்கு நல்ல ரோல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் வந்து அமைந்தது ஒரு நடிகையின் வாக்குமூலம் படம். கதையைக் கேட்டவுடன் கால்ஷீட் கொடுத்து விட்டார் சோனியா.

இந்த நிலையில் ராஜ்கிருஷ்ணாவை சமீபத்தில் சந்திக்க நேர்ந்த சிம்ரனுக்கு, ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் தான் நடிக்க முடியாமல் போனதை வெளிப்படையாகவே தெரிவித்தாராம். இந்தக் கதையை என்னிடம் சொல்லியிருந்தால் நிச்சயம் நான் நடித்திருப்பேன் என்று ஏக்கத்துடன் கூறினாராம் சிம்ரன். இதனால் தனது அடுத்த படத்தில் சிம்ரனை நடிக்க வைக்கிறாராம் ராஜ் கிருஷ்ணா.

இது என்ன முன்னாள் கனவுக் கன்னியின் கதையா...?

மம்பட்டியான் வெற்றி :பிரஷாந்த் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்...!

 


எதிர்பார்த்ததை விட மம்பட்டியான் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் பிரஷாந்த். சிம்ரன், ஜோதிகா, ரம்பா, சினேகா என தமிழில் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் ஜோடி போட்டு காதல் இளவரசனாக, டாப் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். இடையில் சின்ன தடுமாற்றத்திற்கு பிறகு, பிரஷாந்த்தின் அப்பா தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த வரலாற்று படமான பொன்னர் சங்கர் படம் மூலம் மீண்டும் புத்துணர்வு பெற்றார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த மம்பட்டியான் படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. 28 ஆண்டுகளுக்கு முன்னர் தியாகராஜன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற மலையூர் மம்பட்டியான் படத்தை, இந்தகாலத்திற்கு ஏற்றவாறு பல மாற்றங்களை செய்து, அதில் தன் மகன் பிரஷாந்த்தையே மம்பட்டியானாக நடிக்க வைத்து  இயக்கியுள்ளார் தியாகராஜன். கடந்தவாரம் வெளிவந்த இப்படம் அனைத்து ஏரியாவிலும் சபாஷ் போட வைத்துள்ளது. தியேட்டர் அதிபர்கள் பலரும் பிரஷாந்தின் நடிப்பை பாராட்டியுள்ளனர். பலரும் இப்படத்தை பாராட்டி வருவதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் பிரசாந்த்.

மேலும் மம்பட்டியான் படத்தின் வெற்றி, அவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளதாம். இதனால் தனது உடல் எடையை குறைத்தும், ஹேர் ஸ்டலையும் மாற்ற திட்டமிட்டுள்ளார். விரைவில் அவரின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளிவரலாம் என தெரிகிறது.

இதையே சினிமா பாஷையில் சொல்ல வேண்டுமானால் பிரஷாந்த் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்...!