![]() |
| கனேடிய மாகாணத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் மாகாணங்களுக்கான தேர்தல் ஒக்ரோபர் 6ம் நாள் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் விடுதலைப் புலிகள் சார்பு குழுக்கள் பலவும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக சிறிலங்கா அரசாங்கம் கவலையடைந்துள்ளது. இதுதொடர்பாக கனேடிய வெளிவிவகார அமைச்சுக்கு ரொறன்ரோவில் உள்ள சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வரா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் கனேடிய வெளிவிவகார அமைச்சுக்கு கூறியுள்ளார். அதேவேளை விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகளின் ஆதிக்கம் கனேடிய தேர்தலில் அதிகரித்து வருவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவலையடைந்துள்ளதாகவும் சித்திராங்கனி வகீஸ்வரா கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார். |
Wednesday, 7 September 2011
மாகாணத் தேர்தலில் புலிகள் சார்பு குழுக்கள் ஆதிக்கம் கனடாவை எச்சரிக்கிறது சிறிலங்கா
இந்திய ஆதரவு இல்லாதிருந்தால் பிரபாகரனை மீட்டுச் சென்றிருக்கும் நேட்டோ
![]() |
| சிறிலங்காவுக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியிருக்காது போனால், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முக்கிய தளபதிகளையும் நேட்டோ பறவை வான்வழியாக மீட்டுச் சென்றிருக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்காப் படைகளுக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியதால் தான், நேட்டோவின் கனவு பலிக்காது போனதாகவும் அவர் கூறியுள்ளார். சிறிலங்காவின் தென்மாகாணத்தில் உள்ள வலஸ்கல என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னர் சிறிலங்கா இராணுவத்தின் எட்டு படைப்பிரிவுகள் முல்லைத்தீவு நோக்கி முன்னேறிச் சென்றபோது, பிரபாகரனையும், அவரது குடும்பத்தினரையும், முக்கிய தளபதிகளையும் வான்வழியாக மீட்க சில வெளிநாட்டு சக்திகள் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதிஸ்டவசமாக இந்தியா துணை நின்றதால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் டலஸ் அழகப்பெரும மேலும் கூறியுள்ளார். சிறிலங்காவுக்கு எப்போதுமே ஒரு உண்மையான நண்பனாக இந்தியா இருப்பதாகவும், அதன்மூலமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொள்ள முடிந்தது என்றும் சிறிலங்கா அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். |
சிறிலங்காப் படைகளின் வெளிநாட்டுப் படைஅதிகாரிகளும் பார்வை (படங்கள் இணைப்பு)
| சிறிலங்காப் படைகளால் திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்டு வந்த கடற்காகம் தாக்குதல்-2 போர்ப்பயிற்சியை வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் குழுவொன்றும் பார்வையிட்டுள்ளது. நேற்றுமுன்தினம் திருகோணமலை மக்கெய்சர் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட பணய மீட்பு நடவடிக்கையின் ஒத்திகையையே வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் குழு பார்வையிட்டுள்ளது. அமெரிக்கா, ரஸ்யா, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஸ் போன்ற நாடுகளின் தூதரகங்களில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள் இந்தப் பயிற்சியைக் காண திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும் இந்தப் போர்ப்பயிற்சியை நேரில் பார்வையிட்டுள்ளார். மூன்று வாரகாலம் இடம்பெற்ற இந்தப் போர்ப்பயிற்சியில் சிறிலங்காவின் முப்படைகளையும் சேர்ந்த 4000 படையினர் பங்கேற்றுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவு, கொமாண்டோ படைப்பிரிவு மற்றும் 1வது விஜயபா படைப்பிரிவு, 20வது கஜபா படைப்பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த படையினரே இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மன்னார் சிலாவத்துறையில் மேற்கொள்ளப்பட்ட நீர்க்காகம் -1 தாக்குதல் போர்ப்பயிற்சி ஈரூடக நடவடிக்கையை மையப்படுத்தியே இடம்பெற்றிருந்தது. ஆனால் இம்முறை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பின் பேரில் படகுத்துறைகள் மீதான தாக்குதல், உயர் பெறுமான இலக்குகள் மீதான தாக்குதல், வேவு, இலக்குகளைக் கண்காணித்தல், வான்வழி நடவடிக்கைகள், கடல்வழி நடவடிக்கைகள், ஈரூடக தரையிறக்கம், தேடிப்பிடிக்கும் நடவடிக்கைகள், எதிரிகளின் கோட்டைக்குள் வான்வழியாக தரையிறங்குவது, பதுங்கித் தாக்குதல், தேடுதல் நடவடிக்கைகள், தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகள மற்றும் பணய மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழு அளவிலான போர்ப்பயிற்சியாக மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு நடவடிக்கையின் தளபதியாகவும், நீர்க்காகம் தாக்குதல் பயிற்சியின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் கே.பி.ஜெயசேகர நியமிக்கப்பட்டிருந்ததாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கொமாண்டோ றெஜிமென்ட்டின் 110 அதிகாரிகளும், சிறப்புப் படைப்பிரிவின் 90 அதிகாரிகளும், 400 கடற்படையினரும், 150 விமானப்படையினரும், 2750 சிறிலங்கா இராணுவத்தினரும் பங்கேற்ற இந்தப் போர்ப்பயிற்சி நேற்றுமாலையுடன் முடிவுக்கு வந்துள்ளது. கடற்சண்டைகள் தொடர்பான போர்ப் பயிற்சிகள் காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவுக் கடலில் மேற்கொள்ளப்பட்டதுடன், காங்கேசன்துறையில் இருந்த கடற்படைக்கப்பல் மற்றும் படகுகளில் கொண்டு வரப்பட்ட சிறிலங்காப் படையினரை தரையிறக்கும் பயிற்சிகள் புடவைக்கட்டுப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்
![]() |
| அயனாவரத்தை சேர்ந்தவர் அசோக் சக்கரவர்த்தி. சாப்ட்வேர் என்ஜினீயரான இவருக்கும், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி (30) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த ஜுலை மாதம் திருமணம் நடந்தது. கணவன்- மனைவி இருவரும் அயனாவரத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களது வீட்டு அருகில் உறவினர்கள் சிலரும் வசிக்கிறார்கள். நேற்று முன்தினம் மாலையில் அசோக் சக்கரவர்த்தி, வேலை முடிந்து வீடு திரும்பினார். புதிதாக வாங்கிய செல்போன், இனிப்புகள் ஆகியவற்றை எடுத்து வந்த அசோக் சக்கரவர்த்தி மனைவி அகிலாண்டேஸ்வரியிடம் முதலில் காட்டாமல் உறவினர்களிடம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அகிலாண்டேஸ்வரி தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்கில் தொங்கினார். இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப்பின் அகிலாண்டேஸ்வரி உயிர் பிழைத்தார். இதுதொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அகிலாண்டேஸ்வரி மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
செருப்பு வாங்க தனி விமானம் அனுப்பிய மாயாவதி : விக்கிலீக்ஸ் அம்பலம்!
![]() |
| புதுடெல்லி : உ.பி. முதல்வர் மாயாவதி செருப்பு வாங்குவதற்காக மும்பைக்கு ஜெட் விமானத்தை அனுப்பி வைத்ததாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் தூதரகங்கள் அந்நாட்டுக்கு அனுப்பிய தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. உலக தலைவர்களை பற்றி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட தகவல்களும் வெளியாகி வருகின்றன. 2007 முதல் 2009ம் ஆண்டு வரையிலான தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் உ.பி. முதல்வர் மாயாவதி பற்றி கூறியிருப்பதாவது: மாயாவதி மிகவும் அகம்பாவமும் கர்வமும் மிக்கவர். பிரதமர் பதவி மீது அவர் கண் வைத்துள்ளார். தனது துதிபாடிகள், கட்சியினர், தொழிலதிபர்கள் ஆகியோரிடம் தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுகிறார். பொதுக்கூட்டங்களில் அவருக்கு ஸி1000 நோட்டுக்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகிறது. ஆடம்பர செலவுகள், தனக்குதானே பொது இடங்களில் சிலை வைத்துக் கொள்வது போன்றவற்றுக்காக அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாகிறார். ஒரு முறை தனக்கு பிடித்தமான செருப்புகள் வாங்கி வருவதற்காக உ.பி.யில் இருந்து மும்பைக்கு தனக்கு சொந்தமான ஜெட் விமானத்தை இதற்காகவே மும்பைக்கு அனுப்பி செருப்பை கொண்டுவர செய்தார். மேலும், தன்னை சுற்றி இருப்பவர்கள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. உணவில் விஷம் கலந்து தன்னை கொலை செய்து விடுவார்களோ என்ற பயத்தில் தனக்கு கொடுக்கப்படும் உணவை சாப்பிட்டு பரிசோதனை செய்வதற்காகவே சம்பளத்துக்கு ஆட்களை வைத்துள்ளார். இந்த தகவல்கள் 2008ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி அமெரிக்க அரசுக்கு அனுப்பப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது. அமைச்சரை தோப்புகரணம் போட வைத்து தண்டனை அமைச்சர்கள் உட்பட அனைவரும் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று விரும்புபவர் மாயாவதி. அமைச்சர்களை அவர்கள் தகுதிக்கேற்ப மாயாவதி நடத்துவதில்லை. சிறிய தவறுகள் செய்தாலும் கடுமையாக தண்டிப்பார். அந்த தண்டனை சிறு குழந்தைகளுக்கு பள்ளியில் கொடுக்கப்படும் தண்டனை போன்றது. ஒரு முறை சிறு தவறு செய்ததற்காக அமைச்சர் ஒருவரை தன் முன்னிலையில் தோப்புக்கரணம் போட வைத்து தண்டித்துள்ளார். அமைச்சரும் அழுது கொண்டே தோப்புக்கரணம் போட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Subscribe to:
Comments (Atom)











