Saturday, 17 December 2011

முகேஷ் அம்பானிக்கு கைது வாரண்ட்


கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் கடந்த 2003-ம் ஆண்டு ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் இருந்து 24 ஆயிரம் ரூபாய் கொடுத்து நவீன செல்போன் ஒன்றை வாங்கினார்.  அந்த செல்போன் இணைப்புக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஏராளமான வெளி அழைப்புகளையும், எஸ்.எம்.எஸ்களையும் இலவசமாக பெறலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் கூறி இருந்தது.

ஆனால் சொன்னபடி அந்த இலவச சலுகைகள் ஜோசப்புக்கு கிடைக்கவில்லை. இலவச சேவைகளை பெற ஜோசப் பல தடவை முயன்றும் பலன் கிடைக்கவில்லை. இதனால் அவர் கடந்த 2005-ம் ஆண்டு திருச்சூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஜோசப்புக்கு செல்போன் விலையான ரூ.24 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டது.

மேலும் 5 ஆண்டுக்கான 12 சதவீத வட்டித் தொகையையும் சேர்த்து கொடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையும் ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. இதனால ஜோசப் மீண்டும் திருச்சூர் நுகர்வோர் கோர்ட்டை நாடினார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி பத்மினி, தவறான செல்போன் இணைப்பு கொடுத்து விட்டு, பதில் அளிக்காத ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியை கைது செய்ய வேண்டும் என்று வாரண்ட் பிறப்பித்தார். பிப்ரவரி மாதம் 15-ந் தேதிக்குள் முகேஷ் அம்பானியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ரெண்டு பாட்டு ! : 'நண்பன்' ஹாரிஸ்


தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு இடையே பொங்கல் 2012  அன்று வெளியாக இருக்கும் படம் 'நண்பன்'. விஜய் நடிப்பு, ஷங்கர் இயக்கம், இந்தியில் வெளிவந்து வரவேற்பை பெற்ற '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக் என அனைத்தும் சேர்ந்து படட்திற்கு எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் நிலவி வந்தன. இந்நிலையில் 23ம் தேதி 'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற இருக்கிறது.

இது குறித்து 'நண்பன்' படத்தின்  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது டிவிட்டர் இணையத்தில் " கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் 23ம் தேதி நடைபெற இருக்கும் ' HARRIS ON THE EDGE '  நிகழ்ச்சியில்  விஜய் நடிக்கும் 'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும்.

அப்போது 'நண்பன்' படத்தில் இருந்து 2 பாடல்களை பாட இருக்கிறோம் " என்று தெரிவித்துள்ளார்.

கொலைவெறி தொடர்ந்து YOUTUBE கலக்கும் பப்பப்பப்பா பத்திகிச்சு பம்பரம்'


மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடிப்பில் 2012 பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் ' வேட்டை'. லிங்குசாமி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறது.

இப்படத்தின் பாடல்களின் முன்னோட்டமாக 'பப்பப்பப்பா பத்திகிச்சு பம்பரம்' என்ற பாடலை மட்டும் வெளியிட்டார்கள். இப்பாடலின் MAKING- ஐயும் YOUTUBE இணையத்தில் வெளியிட்டார்கள். இந்த வீடியோ பதிவு வெளியிட்ட 3 நாட்களில் 1,25,000-க்கும் அதிகமானோர் பார்வையிட்டு இருக்கிறார்கள்.

இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்று ' வேட்டை ' படத்தின் அனைத்து பாடல்களின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

இன்று மாலை சென்னையில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா மற்றும் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

தமிழக கேரள பதட்டம்! நிருபரின் காலில் விழுந்தார் நடிகர் ஜெயராம்(வீடியோ

)


சபரிமலை கோவிலுக்கு மலையாள நடிகர் ஜெயராம் சென்றிருந்தார்.

தமிழக - கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பதட்டம் நிலவி வரும் நேரத்தில், இதுகுறித்து ஜெயராமிடம் கேரள தொலைக்காட்சி நிரூபர் ஒருவர், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கருத்து கேட்டபோது,

''ஐயோ ஆளவிடுங்கப்பா சாமி'' என்று அந்த நிருபரின் காலில் விழுந்தார்.


நடிகர் ஜெயராம் இவ்வாறு நடந்துகொண்டது ஏன்?


கடந்த வருடம் நடிகர் ஜெயராம் நடித்த 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் வெளியானது. இ‌ந்த பட‌‌த்‌தி‌ல் வீட்டு வேலைக்காரப் பெண்ணை ''சை‌ட்'' அடிப்பது போல் காட்சிகள் உள்ளன.


இந்த படம் தொடர்பான பேட்டி ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில், 'டாக் ஷோ'வில் பங்கேற்ற ஜெயராமிடம், இது பற்றி குறிப்பிட்டு நிஜ வாழ்க்கையில் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார்.


அதற்கு பதில் அளித்து ஜெயராம் கூறும்போது, என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி, போத்து (எருமை) மாதிரி இருப்பாள்; அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும்?" என்றார். இது அந்த தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ஒளிபரப்பானது.


த‌மி‌ழ் பெ‌ண்களை அவதூறாக பே‌சியதற்காக ஜெயரா‌மின் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தின் மீது 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.


இதையடுத்து தமது பேச்சுக்காக ஜெயராம் மன்னிப்புக் கேட்டார். தமது தாய் தமிழ்ப் பெண் என்றும், தமது தாய் மொழி தமிழ் என்றும், தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்துவது தமது தாயை இழிவுப்படுத்துவதற்கு சமமானது என்றும், நகைச்சுவையாகவே தாம் தொலைக்காட்சியில் அவ்வாறு கூறியதாகவும் அவர் மேலும் விளக்கம் அளித்திருந்தார்.


எதையாவது பேசிட்டு மன்னிப்பு கேட்டு காலில் விழுவதைவிட, பேசாமல் காலில் விழுவதே மேலானது என்று முடிவு எடுத்துவிட்டார் நடிகர் ஜெயராம்.




நிருபரை காக்க வைத்து விரட்டிய சிம்பு!


ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நிருபர் மற்றும் புகைப்படக்காரரை வரவழைத்த சிம்பு, அவர்களை மணிக்கணக்கில் காக்க வைத்து, பேட்டியோ போஸோ தராமலே திருப்பி அனுப்பிவைத்தார்.

சிம்பு இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பேட்டி எடுக்கவும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் ஒரு பத்திரிகை நிருபர் மற்றும் புகைப்படக்காரரை வரச் சொன்னாராம்.

காலையிலேயே இருவரும் போய்விட்டார்கள். ஆனால் சிம்புவோ எதையும் கண்டுகொள்ளாமல், தம்மடித்துக் கொண்டிருந்தாராம் அரைமணி நேரமாய்.

அதற்கு மேல் காத்திருக்க முடியாமல், நேரில் போய் விஷயத்தைச் சொல்ல நிருபரும் போட்டோகிராபரும் சென்றார்களாம். ஆனால் சிம்புவைச் சுற்றி நின்று கொண்டிருந்த அ(த)டியாட்கள், "யோவ்... உங்களையெல்லாம் யாருய்யா உள்ளே விட்டது. போங்க போங்க..." என்று விரட்டியடித்தார்களாம்.

இதனால் கடுப்பாகி கிளம் எத்தனித்தவர்களை, சிம்புவின் மேனேஜர் வந்து சமாதானப்படுத்தி இருக்கச் சொன்னாராம்.

ஆனால் அதுவரை தம்மடித்துக் கொண்டிருந்த சிம்பு, சட்டென்று எழுந்து கேரவனுக்குள் போய்விட்டாராம்.

அவ்வளவுதான்... இங்கே நிருபரும் புகைப்படக்காரரும் மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்க, சிம்புவோ கேரவனில் செட்டிலாகிவிட்டாராம்.

இனி வாழ்நாளில் சிம்பு பேட்டியும் வேண்டாம் போட்டோவும் வேண்டாம்.. ஆள விடுங்கப்பா என்று அங்கிருந்து கிளம்பி வந்துள்ளனர் பத்திரிகையாளர்கள். இதுகுறித்து விசாரிக்க நாம் முயன்றபோது, 'இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது' என்று சிம்பு தரப்பில் அலட்சியம் காட்டினர்.

படம் மட்டுமில்ல... நடவடிக்கை கூட ஒஸ்தியா இல்லையே

கேரளத்துக்கு தண்ணீர்...தமிழகத்துக்கு 'கண்ணீர்': பண்ருட்டி ராமச்சந்திரன்


முல்லைப் பெரியாறு பிரச்சனையை 1979ம் ஆண்டு முதலே தமிழக அரசு அரசியல் கோணத்தில் அணுகவில்லை. நிபுணர்கள் கூறியதன் அடிப்படையிலேயே அணுகியது. ஆனால், கேரள அரசு அரசியல் அடிப்படையில் அணுகி அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது என்று தேமுதிக அவைத் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக, சட்டசபையில் நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது அவர் பேசுகையில், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானத்தை தேமுதிக முழு மனதுடன் வரவேற்கிறது. இதில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும்.

முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு பலப்படுத்திய பிறகும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாக கேரள அரசு குறைத்தது. அதன்பின்னர், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மறுத்து வருகிறது.

அணையைப் பலப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்களோ அனைத்தையும் தமிழக அரசு செய்தது. அணையைப் பலப்படுத்திய பிறகு, நீர்மட்டத்தை உயர்த்துவதை கேரள அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு வீட்டில் வாடகைக்கு குடிவருபவர் கூட, அந்த வீட்டில் சிலவற்றை மாற்றியமைத்து தரும்படி வீட்டு உரிமையாளரிடம் கூறுவார்கள். பின்னர், வீட்டில் எல்லாம் சரிசெய்யப்பட்ட பிறகு, வீடு வேண்டாம் என்றால் வீட்டு உரிமையாளர் சும்மாவா விடுவார்?.

முல்லைப் பெரியாறு அணை குறித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகு, 2006ம் ஆண்டு நிபுணர் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்து ஆராய்ந்தது. அந்த நிபுணர் குழுவும் அணை பலமாக உள்ளது என்று அறிக்கை அளித்தது. அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்றும், மேலும் மேம்பாட்டு பணிகள் செய்து 152 அடியாக உயர்த்தலாம் என்றும் கூறியது.

இதை, உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, தமிழக அரசு ஏற்றுக் கொண்டன. ஆனால், கேரள அரசோ மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று சட்டம் இயற்றியது. உச்ச நீதிமன்ற மீறி கேரளா நயவஞ்சகமாக செயல்படுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

முல்லைப் பெரியாறு பிரச்சனையை 1979ம் ஆண்டு முதலே தமிழக அரசு அரசியல் கோணத்தில் அணுகவில்லை. நிபுணர்கள் கூறியதன் அடிப்படையிலேயே அணுகியது. ஆனால், கேரள அரசு அரசியல் அடிப்படையில் அணுகியது. அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது.

இப்போதுகூட இந்தச் சட்டத்தை எதிர்க்கும் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபிறகு அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.

தமிழகத்துக்கு தண்ணீர், கேரளத்துக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தை அந்த மாநில அரசு கூறிவருகிறது. கேரள மக்களின் பாதுகாப்பில் நமக்கும் அக்கறை உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் முழுக் கொள்ளவு 10.57 டி.எம்.சி. ஆகும். ஆனால், இப்போது 136 அடி வரை நீரைத் தேக்குவதால் 6 டி.எம்.சி. நீர் வரை மட்டுமே சேமிக்கப்படுகிறது.

அங்கு புதிய அணை கட்டினால், கேரளத்துக்கு தண்ணீரும் தமிழகத்துக்கு கண்ணீரும் தான் கிடைக்கும்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் வலியுறுத்தி வருகிறார். ஆனால், கேரள அரசு அனுமதித்தால்தான் மத்திய பாதுகாப்பு படையை அனுப்ப முடியும் என்று பிரதமர் கூறியதாக செய்தி வருகிறது. அந்த மாநில அரசு பாதுகாப்பு வழங்காத காரணத்தால்தான் மத்திய பாதுகாப்பு கோரப்படுகிறது.

எனவே, இந்த விஷயத்தில் அரசுக்கு யோசனை ஒன்றை கூற விரும்புகிறேன். இன்றைய சூழலில் முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கவும், இயக்கவும், நிர்வகிக்கும் பொறுப்பையும், அணையை சுற்றிய பகுதியை பாதுகாக்கும் பொறுப்பையும் மத்திய அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதற்காக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். இதை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மேலும், அங்கு அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்பவும் தமிழக அரசு மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

விஜய்யின் வாய்ப்பை தட்டி பறித்த சூர்யா

 


ஒவ்வொரு கட்டத்திலும் விஜய்யை வெற்றி கொள்வதையே தனது லட்சியமாக வைத்திருக்கிறார் சூர்யா. கண்ணுக்கு தெரியாத இந்த காட்டுத்தனமான போட்டி, முயல்- ஆமை ஓட்டம் போல செம சுவாரஸ்யம்.

'மாற்றான்' பட சம்பளத்துடன் சேர்த்து தெலுங்கு உரிமையையும் வாங்கிக் கொண்டிருக்கும் சூர்யா, தனது கணக்குப்படி பார்த்தால் கூட பதினெட்டு கோடி ரூபாய் சம்பளத்தை 'கிராஸ்' செய்துவிட்டார். இந்த சம்பளத்தை இன்னும் விஜய்யே தொடவில்லை என்பதுதான் வேதனை.

ஒவ்வொரு முறையும் முதலில் விஜய்யிடம் சொல்லப்பட்ட சில கதைகளில் நடித்துதான் இத்தனை பேரையும் புகழையும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார் சூர்யா. இவரது லேட்டஸ்ட் கபளீகரம் முன்னணி சேனல் ஒன்றில் வெளிவரப்போகும் கேம் ஷோ.

முதலில் இந்த நிகழ்ச்சியை விஜய் நடத்துவதாகதான் இருந்தது. நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் சம்பளமும் பேசப்பட்டதாம். ஆனால் இடையில் என்ன நடந்து யார் குழப்பிவிட்டார்களோ தெரியாது. விஜய்க்கு பதிலாக அந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் சூர்யா. மாற்றான் படப்பிடிப்புக்காக இத்தாலி போயிருந்தவர், சென்னை திரும்பிவிட்டார். பெரிய செட் போட்டு படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார்கள். அநேகமாக பொங்கலில் இருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பப்படலாம்.

பாரத ரத்னா விருது : சச்சினுக்காக விதி மாற்றம்?


விளையாட்டு வீரர்களுக்கும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கும் வகையில் மத்திய அரசு சில சட்டத் திருத்தங்களை செய்து உள்ளது. ஆனால் சச்சினை மனதில் வைத்துக் கொண்டே இந்த முக்கியத் திருத்தத்தை மத்திய அரசு செய்துள்ளதாக கருதப்படுகிறது. சச்சினுக்கு பாரத ரத்னா தர வேண்டும் என்று தொடர்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நினைவிருக்கலாம்.

இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிகப் பெரிய சிவிலியன் விருது பாரத ரத்னா. இந்த விருது பொதுவாக கலை, இலக்கியம், அறிவியல், பொது வாழ்வில் சிறந்த நபர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. விளையாட்டு வீரர்களுக்கு இந்த விருது பெறத் தகுதி கிடையாது. ஆனால் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சச்சினுக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள், அன்னா ஹசரே போன்ற பொது வாழ்வில் உள்ளவர்களும் வலியுறுத்தி வந்தனர். யாரைப் பார்த்தாலும் சச்சினுக்கு பாரத ரத்னா தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

ஆனால் விதிமுறை அதற்கு இடம் தரவில்லை என்பதால், பாரத ரத்னா விருதினை விளையாட்டு வீரர்களுக்கும் வழங்கும் வகையில், மத்திய அரசு சில சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை விடுத்தது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், பிரதமருக்கு பரிந்துரை செய்தது.

பிரதமர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, பாரத ரத்னா விருது வழங்கும் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்மூலம் தற்போது கிரிக்கெட் சாதனையாளர் சச்சின், முன்னாள் பிரபல ஹாக்கி வீரர் தயான் சந்த் உள்ளிட்டோர் பாரத ரத்னா விருது பெற தகுதிப் பெற்று உள்ளனர். விளையாட்டுத்துறையிலிருந்து பார ரத்னா விருது பெற எக்கச்சக்கம் பேர்தகுதி படைத்தவர்களாக உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு அந்த விருது முதலில் தரப்படுமா அல்லது சச்சினுக்கு முதலில் கொடுத்து விட்டு பிறகு மற்றவர்களுக்குத் தரப்படுமா என்பது தெரியவில்லை.

கடந்த 1954ம் ஆண்டு ராஜகோபாலச்சாரிக்கு முதல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, காமராஜர், அம்பேத்கார், எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தி, அப்துல்கலாம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர் உட்பட 41 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா உள்ளிட்டோரும் பாரத ரத்னா விருதை பெற்று உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு இந்துஸ்தான் இசைக் கலைஞர் பண்டிட் பிஷ்மன் ஜோஷி பாரத ரத்னா விருது பெற்றார்.

கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டிருக்கு: டிராவிட் அதிருப்தி!


டெஸ்ட் போட்டியை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் டெஸ்ட் போட்டிகளை பகல்-இரவு போட்டிகளாக நடத்த வேண்டும். மேலும் தேவையற்ற ஒருநாள் போட்டிகளை நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று இந்திய வீரர் டிராவிட் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய அணியில் இடம் பெற்றுள்ள டிராவிட், நேற்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட்மேனின் நினைவு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், பகல்- இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்தலாம் என்று டிராவிட் கருத்து தெரிவித்தார்.

இது குறித்து கிரிக்கெட் வீரர் டிராவிட் கூறியதாவது,

கடந்த 1985ம் ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒருநாள் போட்டிகளின் மீது விருப்பம் இல்லாமல் இருந்தது. ஒருநாள் போட்டிகள் தேவையில்லாமல் நடத்தப்படுவதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவே ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் விரும்புகின்றனர். டெஸ்ட் போட்டிகளின் மூலம் தான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரின் திறமைகளை அறிய முடியும்.

எனவே டெஸ்ட் போட்டிகளை பாதுகாக்க வேண்டும். அதற்காக டெஸ்ட் போட்டிகளை பகல்- இரவு போட்டிகளாக நடத்தலாம். மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களை நடத்த ஐ.சி.சி. முன்வர வேண்டும். டெஸ்ட் போட்டிகளை பகல்- இரவு போட்டிகளாக நடத்தினால், சிவப்பு பந்தை சரியாக பார்க்க முடியாது என்பது உண்மை தான். ஆனால் கிரிக்கெட் போட்டியின் வளர்ச்சிக்கு தடையாக கிரிக்கெட் பந்தின் நிறம் தடையாக இருக்காது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை 2013ம் ஆண்டு நடத்த ஐ.சி.சி. முடிவு செய்து இருந்தது. ஆனால் விளம்பர நிறுவனங்களும், ஒளிப்பரப்பு நிறுவனங்களும் சேர்ந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை 2017க்கு தள்ளி வைக்க ஐ.சி.சி.க்கு நெருக்கடி கொடுத்தன.

சமீபகாலமாக ஒருநாள் போட்டிகள் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. அதிக அளவில் ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுவதால் ரசிகர்களிடம் கிரிக்கெட் ஆர்வம் குறைந்து வருகிறது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான தொடர்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டதால் போட்டிகளை காண வந்த ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்திய அணி, இங்கிலாந்து சென்று விளையாடிய போது ரசிகர்களிடையே ஆர்வம் இருந்தது. அடுத்த வாரத்திலேயே அதே இரு அணிகளும் மீண்டும் மோதியதால், ரசிகர்கள் இடையே போட்டியை காணும் ஆர்வம் குறைந்தது.

இதன் மூலம் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரவேற்பு குறைந்து வருவதை காண முடிந்தது. எனவே உலகப் கோப்பை போன்ற முக்கிய போட்டிகள் தவிர தேவையற்ற ஒருநாள் தொடர்களை நடத்துவதை நிறுத்த வேண்டும்.

கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் டிவியில் பார்ப்பதால், கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பார்வையாளர்கள் பகுதி வெறிச்சோடி கிடக்கும் நிலை ஏற்படும். இதனால் கிரிக்கெட் போட்டியின் மீது உள்ள விளம்பர நிறுவனங்களின் ஆர்வமும் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பு உள்ளது, என்றார்.

விஜயகாந்த் எப்படிச் சொல்லலாம்- பாஜக பாய்ச்சல்


தமிழகத்திலிருந்து யாரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் போகக் கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பது தவறு. சபரிமலைக் கோவிலில் நமக்குள்ள உரிமையை நாம் விட்டுக் கொடுக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் போராட்டம் நடத்துவதற்கு தேனி சென்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஐயப்ப பக்தர்கள் கேரளாவுக்கு சென்று சபரிமலையில் தான் ஐயப்பனை தரிசிக்க வேண்டுமா? தமிழ்நாட்டில் சுவாமி ஐயப்பன் கோவில்கள் கட்டி இங்கேயே தரிசனம் நடத்தலாம். அங்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என்பது போல் பேசியுள்ளார்.

விஜயகாந்த்தின் இந்தப் பேச்சு, கேரளத்தில் ஐயப்ப பக்தர்களை தாக்குவோர்க்கு சாதகமாகவும் தலைமுறை தலைமுறையாக சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்ற ஐயப்ப பக்தர்களின் உரிமைகளை பறிப்பதாகவும் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

விஜயகாந்தின் இந்தப் பேச்சு சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும் உரிமை இனி தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு இல்லை என்பது போலவும் அமைந்துள்ளது.

எத்தனை பிரச்னைகள் எப்படி நடந்தாலும் கேரள மக்களையும் தமிழக மக்களையும் மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென்று எந்த சக்திகள் முயன்றாலும் அவற்றை எல்லாம் முறியடித்து தேச ஒருமையை காக்கக் கூடிய ஒன்றாக தமிழக ஐயப்ப பக்தர்களுடைய சபரிமலை பயணமும் கேரள முருக பக்தர்களின் பழனி பயணமும் தொடர்ந்து நடந்தே தீரும். அதை தடுக்க யார் முயன்றாலும் பாரதிய ஜனதா கட்சி தமிழக மக்களின் முழு ஒத்துழைப்போடு அதனை முறியடித்தே தீரும்.

சபரிமலையில் தமிழர்களுக்கு இருக்கும் வழிபடும் உரிமையை விட்டுக் கொடுக்கும் வகையில் பேசியுள்ள விஜயகாந்த், தமிழக மக்களிடமும் குறிப்பாக ஐயப்ப பக்தர்களிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்

'நண்பன்' இசை வெளியீட்டு தேதி அறிவிப்ப்பு.. வருகிறார் அமீர்கான்?

 


ஷங்கர் இயக்கத்தில் விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடித்துள்ள நண்பன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 23-ம் தேதி கோவையில் நடக்கிறது.

கோவையில் நடக்கும் முதல் பிரமாண்ட சினிமா இசை வெளியீட்டு விழா இதுவே.

இந்த விழாவுக்கு நண்பன் படத்தின் ஒரிஜினல் கதையான 3 இடியட்ஸின் நாயகன் அமீர்கான் வருவார் என்று கூறப்படுகிறது.

ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள நண்பன் பொங்கல் ஸ்பெஷலாக களமிறங்குகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏழாம் அறிவில் சொதப்பிவிட்டதால், இந்தப் படத்துக்கு மிக கவனத்துடன் அவர் இசையமைத்திருப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இந்தப் படப் பாடல்களை மேடையில் நேரடியாக தனது குழுவினரை வைத்து வழங்க ஹாரிஸ் ஜெயராஜ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மிகப் பிரமாண்டமாக இந்த விழா நடக்கிறது.

3 இடியட்ஸ் படத்தின் ஹீரோ அமீர் கான் இந்த விழாவுக்கு வருவார் என கடந்த சில தினங்களாக செய்தி பரவி வருகிறது. வருவாரா என்பதை படத்தின் இயக்குநரோ தயாரிப்பாளரோ உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்தநாட்டிலேயே அகதியாக்கப்படும் தமிழன்: கேரளாவிலிருந்து 170 தமிழ் குடும்பங்கள் விரட்டியடிப்பு

 


கேரளா மாநிலத்தில் இருந்து இதுவரை 170 தமிழர்களின் குடும்பங்கள் வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அடர்ந்த வனப்பகுதி வழியே நடந்து தமிழகம் வந்து சேர்ந்தனர்.

முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினை காரணமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், உடும்பன்சோலை, பாப்பம்பாறை, பாரத்தோடு, கைலாசபாறை, காமாட்சிகுளம், ஆனைக்கல் மெட்டு, தூக்குப்பாலம், நெடுங்கண்டம், பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் மீது அங்கு வசிக்கும் கேரளாவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதனால் தோட்டத்தொழிலாளர்கள் தேவாரம் குதிரைப்பாஞ்சான்மலையின் வழியாக சதுரங்கப்பாறை, சாக்குலூத்து மெட்டு மலையடிவார பகுதிகளில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து தமிழகத்துக்கு வருகின்றனர். ஏற்கனவே 70 குடும்பத்தினர் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். கடந்த 3 தினங்களாக 170 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர்.

தேனி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி உத்தரவின் பேரில் அவர்களை இங்குள்ள பள்ளிகளில் தங்க வைத்து மதிய உணவு, பால், ரொட்டி, போன்றவைகளை வருவாய்த்துறையினர் வழங்கி வருகிறார்கள். இவர்களுக்காக அந்த பள்ளியிலேயே சமையலும் செய்யப்படுகின்றது. மேலும் அவர்களின் விருப்பத்துக்கிணங்க சொந்த ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இவர்களில் வீடுகள் இல்லாதவர்கள் பற்றி வருவாய்த்துறை அலுவலர்கள் கணக்கெடுத்து தனியார் மண்டபங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்து உள்ளனர். கேரளாவில் உள்ள தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபநிலை குறித்து கேரளாவில் இருந்து வெளியேறி தேவாரத்திற்கு வந்தவர்கள் கூறியதாவது:

அழகுராணி: (உடுப்பஞ்சோலை), கேரளாவில் நாங்கள் பல ஆண்டுகளாக தங்கி எஸ்டேட்களில் வேலை செய்து வருகிறோம். இரவு நேரங்களில் குடிபோதையில் வரும் கேரளாவைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினார்கள். இதனால் நான் பயந்தபடி இரவு நேரத்தில் யானைகளின் பயத்திற்கு இடையே எனது சிறு குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தேன்.

அபிலாஷ், அம்மு: (செம்மனார் எஸ்டேட்) : நாங்கள் கேரளாவில் உள்ள பள்ளிகளில்தான் படிக்கிறோம். முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையினால் எங்களை பள்ளிகளிலேயே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றனர். கடந்த 3 நாட்களாக ஏற்பட்ட நெருக்கடியினாலும், எங்களது குடும்பத்தினரை மலையாளிகள் கும்பல் மிரட்டியதாலும் அதிகாலையில் எழுந்து நடந்து வந்தோம். இதுபோன்ற பரிதாபநிலை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது.

மணிகண்டன்(உடும்பன்சோலை): எனக்கு கேரளாவில் வாக்குரிமை உள்ளது. குடும்பத்தோடு எஸ்டேட் கூலித்தொழிலளியாக வேலை பார்க்கிறேன். முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு பின்பு இங்குள்ள யூனியன்களில் கூட தமிழர்கள் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது. கேரளாவை சேர்ந்தவர்கள் எங்களை விரட்டும் நோக்கத்தோடு திட்டினார்கள். எதற்கு பிரச்சினை என்று கிளம்பி வந்துவிட்டோம். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.