Monday, 15 August 2011

கலைஞருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்


தமிழக  நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,   திமுக தலைவர் கலைஞருக்கும்  கண்டன  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில்,     ’’தனக்குத்  தானே கேள்விகளை கேட்டுக் கொண்டு, அதற்கு பதில்களை அளிப்பதை பொழுதுபோக்காக கொண்டுள்ள கருணாநிதி, “கண் துடைப்பு, கபட நாடகம் எது?” என்ற தலைப்பில் மனம் போன போக்கில், சில புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

அமைச்சரவை இலாகா பட்டியலை படிக்காமல் அரைகுறை அறிக்கையை வெளியிட்டிருக்கும் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதில் உள்ள உண்மை நிலையை எடுத்துக் கூறுவது எனது கடமை என கருதுகிறேன்.

கருணாநிதி தன்னுடைய கேள்வியும் நானே, பதிலும் நானேஅறிக்கையில்,  விஜிலென்ஸ் துறையை முதல்வர் ஜெயலலிதா வகித்துக் கொண்டிருப்பதாகவும், அந்தத் துறையை வைத்துக் கொள்வது நியாயமில்லை என்றும் கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.


ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற 16.5.2011 அன்று முதலே ஊழல் தடுப்பு இலாகா சட்டத் துறை அமைச்சர் வசமே இருந்து வருகிறது.

இது மட்டுமல்லாமல், ஜெயலலிதா 2001 முதல் 2006 வரை முதலமைச்சராக இருந்த போதும், ஊழல் தடுப்பு இலாகா என் வசம் தான் இருந்தது.

உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல், ஆட்சி அதிகாரமும் போய்விட்டது, குடும்ப உறுப்பினர்களும், தனது அமைச்சரவை சகாக்களும் ஒவ்வொருவராக ஜெயிலுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் என்ற விரக்தியில், உண்மை விவரங்களை தெரிந்து கொள்ளாமல் உளறலின் உச்சக்கட்டத்திற்கு கருணாநிதி சென்று இருக்கிறார்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், கேரள முதல் அமைச்சர் மீது விஜிலென்ஸ் குற்றச்சாட்டு எழுந்ததுமே அந்தத் துறையின் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டுவிட்டதோடு, விசாரணையை சந்திப்பதாக அவர் தெரிவித்து இருப்பதாக கூறி இருக்கிறார். 


தன் மீதுள்ள பல ஊழல் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்திற்கு சென்று சந்திக்க திராணி இல்லாமல், தனக்குத் தானே நீதிபதியாக செயல்பட்டு அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்ற கருணாநிதி,

தன் மகன் மு.க. அழகிரி சம்பந்தப்பட்ட தா. கிருட்டிணன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்யாத கருணாநிதி, கேரள முதலமைச்சரை உதாரணம் காட்டி ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. 

ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில், தன் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் நீதிமன்றத்தில் துணிச்சலுடன், நேர்மையாக சந்தித்து வருவதுடன், இதுவரை  13-க்கும் மேற்பட்ட வழக்குகளில் வெற்றி பெற்று இருக்கிறார்.

 ஜெயலலிதா நினைத்திருந்தால் தன் மீதுள்ள வழக்குகளை கருணாநிதி போல் கொல்லைப் புற வழியாக அப்பொழுதே திரும்பப் பெற்றிருக்கலாம்.  ஆனால் அதைச் செய்யாமல், துணிச்சலுடன், நேர்மையாக தன்மீது கருணாநிதியால் புனையப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறார்.

இதே கேள்வி-பதில் அறிக்கையில் இன்னொரு புளுகு மூட்டையையும் அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அன்றைய பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று ஜெயலலிதா சொன்னதாகக் குறிப்பிட்டு, இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் புகைப்படத்தை காட்டி அன்றைய பேரவைத் தலைவர் பதில் அளித்ததாகவும் கூறியிருக்கிறார் கருணாநிதி.  இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.

உண்மை நிலை என்னவென்றால், ஜெயலலிதா  11.1.2010 அன்று சட்டமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை என்பது தான் குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டினை மறுக்கும் வகையில், ஜெயலலிதா  அன்றைய பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும், அதற்கு அவர் பதில் அளிப்பது போலவும் ஒரு வண்ணப் புகைப்படம் 20.1.2010 தேதியிட்ட மாலை மலர்நாளிதழிலும்,  21.1.2010 தேதியிட்ட தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘டெக்கான் கிரானிக்கல்போன்ற ஆங்கில நாளிதழ்களிலும் வெளியானது.

ஆனால், அன்றைய பேரவைத் தலைவரின் சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்த வண்ணப் புகைப்படம் வெளிவந்த உடனேயே, அந்த வண்ண புகைப்படத்தில் தான் அணிந்திருந்த புடவையின் நிறம் கருஞ் சிவப்பு என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, 11.1.2010 அன்று சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்ததாகவும் எடுத்துக் கூறினார்கள்.

இந்தச் செய்தி அன்றே அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது; தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது’’என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜயகாந்தை பைத்தியக்காரன் என்று சொன்ன கருணாநிதி

 


இலங்கையில் தமிழ் ஈழம் மலரும் என்றால், ஆட்சியை இழக்கக்கூட நாங்கள் தயார் என்று அறிவித்தவன் நான், என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கேள்வி:- கேரள முதல்-அமைச்சர் மீது விஜிலன்ஸ் குற்றச்சாட்டு என்றதும், விஜிலன்ஸ் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகிக் கொண்டிருக்கிறாரே?.

பதில்:- அது கேரளா. இங்கே தமிழ்நாட்டில் உள்ள முதல் அமைச்சர் மீது விஜிலென்ஸ் துறை சார்பில் பெங்களூருவில் சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இவர் மீது விஜிலென்ஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, இவரே அந்தத் துறையை வகிப்பது முற்றிலும் நியாயமல்ல.

கேள்வி:- ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரையில், அவர்தான் அந்தக் கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று பேரவையில் ஜெயலலிதாவே அறிவித்துக் கொண்டிருக்கிறாரே?.

பதில்:- "இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜனநாயகவாதி'' என்று அமைச்சர்கள் எல்லாம் தலைப்பிட்டு மாலை ஏடுகளில் விளம்பரம் செய்யலாம். 

கேள்வி:- பேரவையில் வணக்கம் சொல்ல பேரவைத் தலைவர் மறந்து விட்டதாக ஏடுகளில் ஒரு செய்தி வந்திருக்கிறதே?.

பதில்:- தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா அன்றைய பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தனக்கு வணக்கம் செய்யவில்லை என்று ஒரு புகாரைக் கூறினார். உடனே பேரவைத் தலைவராக இருந்த ஆவுடையப்பன் தான் வணக்கம் செலுத்துகின்ற புகைப்படத்தை காட்டி, தான் வணக்கம் செலுத்தினேன் என்று பதில் அளித்தார்.

இப்போது தனது ஆட்சிக்காலத்திலும், பேரவைத் தலைவர் வணக்கம் செலுத்த மறந்த நிலையில் அதை ஜெயலலிதாவே ஞாபகப்படுத்தி, பேரவைத் தலைவர் உடனடியாக அதைக் கேட்டு வணக்கம் செலுத்தி, ஏடுகளில் செய்தி வெளியிட் டிருக்கிறார்கள். அவ்வளவுதான். 

கேள்வி:- சரியான கேள்வியை பேரவையில் கேட்க பேரவைத் தலைவர் தவறி விட்டதாக - இது "பேரவைத் தலைவரின் தவறு'' என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவையிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறாரே, அவ்வாறு பேரவைத் தலைவர் மீது அவையிலே குற்றஞ் சாட்டலாமா?.

பதில்:- உறுப்பினர்கள் கேட்கின்ற கேள்விகளைத்தான் பேரவைத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும். உறுப்பினர் முதன் முதலாக கேள்வி கேட்கிறார். அவருக்கு அரசின் சார்பில் சாதகமான பதிலைச் சொல்கின்ற கேள்வியைத்தான் பேரவைத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதெல்லாம் எந்த விதியின் கீழ் என்பதுதான் தெரியவில்லை. அது மாத்திரமல்ல. உறுப்பினர்களுக்கு பேரவை விதி முறைகள் தெரியவில்லை என்றும், அதைப் பேரவைத் தலைவர் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும், அதை அவர் செய்யாததால் முதல் அமைச்சரே செய்ய வேண்டியிருக்கிறது என்றும் முதலமைச்சர் நொந்து கொண்டிருக்கிறார். 

கேள்வி:- தி.மு.க. ஆட்சியிலே இலங்கைத் தமிழர்களுக்காக நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை யெல்லாம் பேரவையில் ஜெயலலிதா சுட்டிக் காட்டி, அவைகள் எல்லாம் "கண் துடைப்பு நாடகங்கள்'' என்று குறிப்பிட்டிருக்கிறாரே?.

பதில்:- 1956-ம் ஆண்டிலேயே சிதம்பரம் தி.மு.க. பொதுக்குழுவிலே அண்ணா முன்னிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான்தான்!. 24-8-1977 அன்று சென்னை மாநகரிலே ஒரேநாள் அறிவிப்பில் 5 லட்சம் பேரைத் திரட்டி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பிரம்மாண்டப் பேரணி நடத்தக் காரணமாக இருந்தவனும் நான்தான்!.

2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாத்திரம் 7-12-2006 அன்றும், 23-4-2008 அன்றும், 12-11-2008 அன்றும், 23-1-2009 அன்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பேரவையில் தீர்மானங்களை முன் மொழிந்தது நான்தான். 14.10.2008 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத் தைக் கூட்டியதும் நான்தான்.

15.10.2008 அன்று பிரதமருக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கடிதம் எழுதியதும் நான்தான். 13.11.2008 அன்று உணவுப் பொருட்கள், துணிவகைகள் மற்றும் மருந்து பொருட்களை இலங்கைத் தமிழர் களுக்காக கப்பல் மூலம் அனுப்பி வைத்ததும் நான்தான். 2009-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக் காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது - இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என்று அறிவித்தவன் நான்தான். 

கேள்வி:- அப்துல் கலாமை இரண்டாவது முறையாக குடியரசு தலைவராக விடாமல் தடுத்தது நீங்கள்தான் என்று விஜயகாந்த் பேசியிருக்கிறாரே?.

பதில்:- பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி காலத்தையும் கண்ணியத்தையும் வீணாக்க நான் விரும்பவில்லை. நான் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா'' புத்தகத்திற்காக - "தொல்காப்பியர்'' விருதினை எனக்கு வழங்கி - அந்த விழாவில் அவர் ஆற்றிய உரையையும் அறியாதவர்கள் இப்படியெல்லாம் சொல்கிற பொய்யை யார் நம்புவார்கள்?.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

லிப் டு லிப் காட்சியில் நடிச்சா வீட்ல சேர்க்க மாட்டாங்க! - அஜ்மல்

பொதுவாக காதல் காட்சிகளில் உதட்டோடு உதடு பதித்து முத்தம் தரும் காட்சி வைத்தால் அதில் நடிக்க ஹீரோயின்கள்தான் தயங்குவார்கள்.

ஆனால் முதல்முறையாகத ஒரு ஹீரோ வேண்டாம் என்று மறுத்த, பிடிவாதமாக அந்தக் காட்சியை மாற்றச் சொல்லியுள்ளார்.

அவர் அஜ்மல். படம் கருப்பம்பட்டி.

இந்தப் படத்தில் அஜ்மல் ஜோடியாக அபர்ணா பாஜ்பாய் நடிக்கிறார். பிரபுராஜ சோழன் இயக்குகிறார்.

பழனியின் இறுதிக் கட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட போது, ஒரு கட்டத்தில், அஜ்மல் தன் காதலை அபர்ணாவிடம் சொல்கிறார். அந்தக் காதலை அபர்ணா ஏற்க, அப்படியே கட்டிப் பிடித்து உதட்டோடு உதடு பதித்து முத்தமிடுவது போல் நடிக்க வேண்டும்.

இந்தக் காட்சிக்கு நாயகி ஒப்புக் கொண்டார். ஆனால் நாயகன் அஜ்மல் மறுத்துவிட்டாராம். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நடிக்க மறுத்துவிட்டாராம் அஜ்மல். பின்னர் உதட்டுக்கு பதில் கன்னத்தில் முத்தமிடுவதாக மாற்றி எடுத்திருக்கிறார்கள். இதனால் 2 மணிநேரம் ஷூட்டிங் வேறு பாதிக்கப்பட்டுள்ளது.

உதட்டோடு உதடு முத்தக் காட்சியில் நடிக்க மறுத்தது குறித்து அஜ்மல் கூறுகையில், "நான் சினிமா நடிகர் ஆவதை என் பெற்றோர்கள் விரும்பவில்லை. சில நிபந்தனைகளோடுதான் நடிக்க வந்தன். அதன்படி "நடிகைகளுக்கு முத்தம் கொடுத்து நடிக்க மாட்டேன், விரசமான காட்சிகளில் நடிக்க மாட்டேன், இரட்டை அர்த்த வசனம் பேச மாட்டேன்," என்றெல்லாம் அவர்களுக்கு உறுதி அளித்துள்ளேன்.

அதில் இன்று வரை உறுதியுடன் இருந்து வருகிறேன். நான் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்து நடித்தால், வீட்டில் சேர்க்க மாட்டார்கள்,'' என்றார் அப்பாவியாக!


'நமக்கு நாமே போட்டுக்கொண்ட சூடு' - ஒபாமா

அமெரிக்காவின் கடன் ரேட்டிங் குறைந்ததற்கு காரணம் எதிர்க்கட்சிதான். இதன் மூலம் நமக்கு நாமே சூடு போட்டுக் கொண்டோம் என்று பாரக் ஒபாமா கூறினார்.

இப்போதுதான் பதவி ஏற்றதுபோல உள்ளது. ஆனால் அதற்குள் அடுத்த தேர்தலைச் சந்திக்கிறார் பாரக் ஒபாமா. 2012-ம் ஆண்டு நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கும் ஒபாமா அதற்கான பிரசாரத்தில் இறங்கிவிட்டார்.

மிச்சிகன் நகரில் ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் நேற்று அவர் பேசினார். 

அவர் கூறுகையில், "கடன்களை திருப்பி செலுத்த அமெரிக்காவுக்கு உள்ள திறனுக்கான மதிப்பீட்டை, தரச்சான்றிதழ் வழங்கும் நிறுவனம் ஒரு புள்ளி குறைத்து விட்டது. 'ஏஏஏ' என்ற தர மதிப்பீட்டில் இருந்து 'ஏஏ பிளஸ்' என்ற மதிப்பீட்டை கொடுத்துள்ளது. இது நமக்கு நாமே போட்டுக்கொண்ட சூடு ஆகும்.

அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சிக்கு ஆதாயம் தேடுவதற்காக நாட்டின் நலனை பலிகொடுத்து விட்டார்கள். கடனுக்கான உச்சவரம்பை உயர்த்துவதற்கு குடியரசு கட்சியினர் தொடக்கத்தில் மறுத்து விட்டனர். இதன்மூலம் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை அவர்கள் நாசப்படுத்தி விட்டார்கள். 

இவர்களுக்கு நாட்டின் வெற்றியை விட எதிரிகளின் தோல்வி தான் முக்கியம். இந்த போக்கை அவர்கள் கைவிட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். வேலை இல்லாத் திண்டாட்டம் இப்போது 9 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இதை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். தொழில் வளர்ச்சியை பெருக்க நடவடிக்கை எடுப்பேன். தர சான்றிதழ் வழங்கும் கம்பெனிகளின் நம்பிக்கையை பெறுவதில் வெற்றி பெறுவேன்.

தீர்க்க முடியாத பிரச்சினையே இல்லை
வாரா வாரம் புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவேன். அந்த திட்டங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாண்பேன். இதன்மூலம் அதிகம் பேருக்கு வேலை கொடுப்பேன்.

இப்போது நாம் சந்திக்கும் பிரச்சினைகள் எதுவும் தீர்க்க முடியாதது அல்ல. அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பொருளாதார பலம் இன்னும் உள்ளது என்பதை அனைவரும் புரிந்து வைத்து இருக்கிறார்கள்,'' என்றார்.


சீமானின் அணுகுமுறை தப்பு சேரனின் பதிலால் சீறும் தம்பிகள்...


சரத்குமாரின் மீடியா வாய்ஸ் இதழில் ஒரு பேட்டியளித்திருக்கிறார் டைரக்டர் சேரன். அது வெளியான நாளில் இருந்தே அடுப்பை மூட்டி அதன்மேல் அமர்ந்த கதையாகிவிட்டது அவரது நிலைமை. நாலாபுறத்திலிருந்தும் வீசப்படும் கோபக்கணைகளால் சற்றே தடுமாறிப் போயிருக்கிறாராம் சேரன்.

இலங்கை பிரச்சனை பற்றி எழுப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தவர், சீமானுடைய அணுகுமுறை தாதாவை போல இருக்கிறது. அவர் முதலில் இங்கிருக்கும் தமிழர்களின் நலனை கவனிக்கட்டும். அப்புறம் பேசலாம் இலங்கை தமிழர் நலன் குறித்து என்று கூறியிருந்தார். பொறுப்பார்களா சீமானின் தம்பிகள்?

தினந்தோறும் சேரனுக்கு போன் செய்து தங்கள் எதிர்ப்பை காட்டுகிறார்களாம். அதிர்ந்து போன சேரன், சீமானை தொடர்பு கொண்டு அவரை சந்திக்க நேரம் கேட்க, உன்னை சந்திக்க விரும்பல. போனை வை என்று கூறிவிட்டாராம் அவர். தற்போது சேரனுக்கு சொல்லப்பட்டிருக்கும் அட்வைஸ், பிரஸ்சை கூட்டி நான் அப்படி சொல்லவே இல்லை என்று பேட்டி கொடுங்க. அப்புறம் பேசலாம் சமாதானத்தை பற்றி என்பதுதான்.

நல்ல படைப்பாளி, நாக்கு மட்டும் கோமாளி...

'மாமியார்' மீனா... ஆவாரா ரஜினிக்கு அம்மா!

ஒரு காலத்தில் பல லட்சம் ரசிகர்களின் தூக்கம் கெடுத்த கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இப்போது திருமணமாகி, குழந்தை பெற்றுவிட்ட அவர், மீண்டும் நடிக்க வருகிறார்... மாமியார் வேடத்தில்!

நடிகை மீனா 1982-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2009 வரை படங்களில் நடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக சேர்ந்தார். அதன் பிறகு பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினீயர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

கடந்த ஜனவரியில் மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நைனிகா என பெயரிட்டனர். திருமணத்துக்கு பின் மீனாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க அழைத்தனர். ஆனால் மறுத்து விட்டார். மீண்டும் நடிக்க மாட்டேன் என கூறி வந்தார்.

ஆனால் திடீரென தன் முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். தெலுங்கில் பிரபல நடிகர் ராம்சரண் படத்தில் மாமியார் வேடத்தில் நடிக்க வந்த அழைப்பை ஏற்று நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை வி.வி.வினாயக் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்கயுள்ளது. மீனா நடிப்பதற்கு அவர் கணவரும் சம்மதம் சொல்லி விட்டாராம்.

முன்பு ஒரு திரைப்பட விழாவில், "மீனா என் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் ஜோடியாக நடித்தார். யார் கண்டது, பின்னாளில் எனக்கு அம்மாவாகக் கூட அவர் நடிக்கலாம்," என்று ரஜினி கூறியிருந்தார். போகிற போக்கைப் பார்த்தால் அவர் சொன்னது நிஜமாகிவிடும் போலிருக்கிறதே!


"ஜெயா அரசு' என பெயர் சூட்டி தி.மு.க., பாராட்டு?

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்று செயல்படும் புதிய அரசுக்கு, "ஜெயா' அரசு என, பெயர்சூட்டி தி.மு.க., நாமாவளி செய்கிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில் சட்டசபையில் ஆட்சியமைக்க போதுமான பலமின்றி கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தனித்து தி.மு.க., ஆட்சியமைத்தது. இதை சுட்டிக்காட்டி ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க., சார்பில், "மைனாரிட்டி தி.மு.க.,' அரசு என்றே விமர்சித்து பேசினார்.


தி.மு.க., தற்போது, தன் ஊடகங்களில், "ஜெயா அரசு' என, புது நாமகரணம் சூட்டியுள்ளது. தமிழில் புலமை பெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி, வார்த்தை ஜாலங்களில் விளையாடுவார். அவரது யோசனைப்படி இப்புது நாமகரணம் சூட்டப்பட்டு தி.மு.க., ஊடகங்களில் தொடர்ந்து தினமும் உச்சரிக்கப்படுகிறது. "ஜெய' என்ற வார்த்தைக்கு வெற்றி என்று அர்த்தம். "ஜெயா' அரசு என, தி.மு.க.,வின் புதிய நாமகரண உச்சரிப்புப்படி வெற்றி பெறாத அரசாகும்.

மந்திரத்தை சொல்வது போல் பெயரை தொடர்ந்து சொல்வது நாமாவளி. ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளோர் நாமாவளி சொல்லி பலன் பெறுவர் என்பது அனைவரும் அறிந்ததே. "ஜெயா அரசு' என, கூறும் தி.மு.க.,வினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "திறம்பட தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்து ஜெயமாக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க.,வினர் மத்தியில் எழுந்துள்ளது.


எம்.ஜி.ஆர். விரும்பிய தமிழ் ஈழம்


முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். விரும்பிய தனி தமிழ் ஈழத்துக்காக, அனைவரும் ஒன்றுப்பட்டு போராட வேண்டும் என வலியுறுத்தினார்.

 எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களின் சார்பாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை கண்டித்து, சென்னையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் மணிவண்ணன், நடிகர் சத்யராஜ், கவிஞர் புலமைப் பித்தன், எம்.ஜி.ஆர். கட்சியின் தலைவர் லியாகத் அலிகான் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

 உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.


அவர்,    ’’போர் என்ற பெயரில் இலங்கையில், பல அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

 மேலும் இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றம் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இதைத் தவிர, அச்சமயத்தில் இலங்கையில் உள்ள பல தமிழ் பெண்களும், குழந்தைகளும் பல்வேறு சித்ரவதைக்குள்ளாகி பலியாகினர்.

 இதற்கு மூலக் காரணமாக விளங்கிய ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவித்து அவரிடம் நீதி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமைவதற்கு எம்.ஜி.ஆர். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

 இதற்காக அவர் தன்னால் இயன்ற பல உதவிகளைச் செய்தார். ஆனால், அவர் விரும்பிய தமிழ் ஈழம் இன்றுவரை அமையவில்லை. எனவே எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டர்கள், ரசிகர்கள், அவர் மீது பற்றுள்ளவர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு, தமிழ் ஈழத்துக்காக போராட வேண்டும்’’ என்றார்.

குறை கூறி என்னிடம் வராதீர்கள்-அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை!

 



 குற்றச்சாட்டுக்கள், குறைகள் இருந்தால் அதற்குரிய அதிகாரிகளை அணுகி தீர்வு காணுங்கள். மாறாக என்னிடம் அவற்றைக் கொண்டு வர வேண்டாம் என்று கடும் எரிச்சலுடன் அன்னா ஹஸாரேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

ஆகஸ்ட் 16ம்தேதி தான் தொடங்கவுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டுள்ளதால் அதிருப்தி அடைந்த அன்னா ஹஸாரே இதுகுறித்து பிரதமருக்கு காட்டமான கடிதம் எழுதியிருந்தார். வழக்கமாக எந்தப் பிரச்சினைக்கும் உடனடியாக பதில் தரும் வழக்கமில்லாத பிரதமர் மன்மோகன் சிங் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஹஸாரேவுக்கு ஒரு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உங்களது போராட்டக்குரிய அனுமதி, ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்காவில் 3 நாட்களுக்கு மட்டுமே உண்ணாவிரதம் இருக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நீங்கள் என்னிடம் குறை கூறி கடிதம் எழுதியுள்ளீர்கள். இவை அனைத்தையும் அந்த முடிவுகளை எடுத்த அதிகாரிகள் மற்றும் அமைப்பை நேரில் அணுகியோ அல்லது பிற முறைகளிலோ தெரிவித்து நிவர்த்தி காண முயலுங்கள். மாறாக, என்னிடம் இந்தப் பிரச்சினையை எழுப்புவதில் அர்ததம் இல்லை.

இந்த விவகாரத்தில் எனக்கோ அல்லது எனது அலுவலகத்திற்கோ எந்தத் தொடர்பும் இல்லை. இதில் நானோ அல்லது எனது அலுவலகமோ சற்றும் சம்பந்தப்பட்டவர்கள் இல்லை. இதில் நாங்கள் தலையிடவும் முடியாது என்று கூறியுள்ளார் பிரதமர்.

லோக்பால் வரைவு மசோதா தொடர்பாக தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு முற்றிலும் நிராகரித்து விட்டதாக அன்னா ஹஸாரே குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து ஆகஸ்ட் 16ம் தேதி முதல் ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்காவில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.

ஆனால் இந்தப் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 3 நாள் மட்டுமே போராட்டம் நடத்தப்பட வேண்டும். அளவுக்கு அதிகமாகஆட்களைச் சேர்க்கக் கூடாது. வாகனங்களும் கூட குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும். அதிக அளவில் ஒலிபெருக்கிகளை உபயோகிக்க கூடாது. யாரையும் தூண்டும் வகையில் பேசக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் கடுப்பான அன்னா ஹஸாரே பிரதமருக்கு கடும் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். அதில், உங்களது அரசு எங்களது அமைதி வழிப் போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது என்று கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். அதற்குத்தான் தற்போது பிரதமர் இப்படி ஒரு பதிலை எழுதியுள்ளார்.


தனுஷுக்கு ஆடுகளம்- சிம்புவுக்கு 'தாதா' களம்!

இயக்குநர் வெற்றி மாறன் அடுத்து சிம்புவை இயக்கப் போகிறார். தனுஷை வைத்து ஆடுகளம் கொடுத்த அவர் சிம்புவை வைத்து ஒரு தாதா கதையை படமாக்கவுள்ளார்.

தனுஷ் நடித்த படம் ஆடுகளம். தேசிய அளவில் சிறந்த நடிகர் விருதை தனுஷுக்கு வாங்கிக் கொடுத்த படம் இது. மேலும் பல விருதுகளையும் அள்ளியது.

இந்த நிலையில் அடுத்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் வெற்றிமாறன். இது ஒரு தாதா கதையாம். வடசென்னைப் பின்னணியில் படத்தை உருவாக்குகிறார் வெற்றி மாறன்.

வட சென்னையை மையமாக வைத்து பெரும்பாலும் தாதா டைப் படங்கள்தானன் வருகிறது. வட சென்னை என்றாலே ரவுடிகள்தான் தெருக்களில் அதிகம் நடமாடுவது போல சித்தரித்து விட்டது தமிழ் சினிமா. அந்தவரிசையில் இப்போது வெற்றிமாறன், சிம்பு கூட்டணியும் ஒரு தாதா கதையை கையி்ல் எடுத்துள்ளதாம்


தூக்குக் கொட்டடியிலி​ருந்து நான் கேட்பது உயிர் பிச்சையல்ல​! மறுக்கப்பட்ட நீதி!-ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டு கைதி பேரறிவாளன்

19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களை யெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காகத் தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப்பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.
பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,
வணக்கம்.
நான், அ.ஞா.பேரறிவாளன்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவால் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள்முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.
தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனித நேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின் அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என்மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களையெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காகத் தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப்பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.
1. திரு.ராஜீவ் அவர்களின் கொலையை நியாப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம், மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னை போன்றவர்களும் மரணதண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.
2.  திரு.ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11-06-1991 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.
3.  அக்கொலைக்கு பயன்பட்ட “பெல்ட் பாம்” செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழிவகுத்த குற்றச்சாட்டு. இதற்க்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. இந்தியா ருடே நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், “சிபிஐ யால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த “பெல்ட் பாம்” ஐ செய்தவர் யார் என்பதே” என்று இந்த வழக்கை விசாரித்த தலைமை புலனாய்வு அதிகாரி திரு, இரகோத்தமன் தான் ஓய்வு பெற்றவுடன் எழுதிய நூலிலும், பல்வேறு பேட்டிகளிலும் கூறியுள்ளார். ஆக விடை தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப்படவேண்டுமா?
4.  அந்த “பெல்ட் பாமிற்கு” 9V பற்றரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த “பெல்ட் பாம்” ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டயப் படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வாங்கித் தந்த 9V பற்றரி தான் பெல்ட் பாம் வெடிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.
5.  உண்மை என்னவெனில் நான் 9V பற்றரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9V பற்றரி வாங்கினேன் என்பதற்கு வழக்கில் உள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டிக் கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக்கொண்டுவிட்டார். நான் வாங்காத பற்றரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்ல வைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.
6.  தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதே தவறு என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்தது. காரணம் இந்த கொலை குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்லுவதோ நோக்கம் இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது.
அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?
மேலும் நம் நாட்டில் வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்து தான் பல வாக்குமூலங்கள் இரத்தத்தால் கையெழுத்தாகின்றன.
பொதுவாக அப்படிப் பெறப்படும் வாக்குமூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினை வழங்குவது கிடையாது, ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.
  1. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு.தியாகராஜன் கேரளா மாநிலத்தில் 1993 ல் நடைபெற்ற அருட்சகோதரி.அபயா கொலை வழக்கை “தற்கொலை” என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும் அவரது முறைகேட்டை எதிர்த்து அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு.தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் அவர்கள் 23-06-2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்கவேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள் தானே இவர்கள்..
  2. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால், பெரும்பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப்பட்டன, அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற இயலாமற் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர்நீதிமன்றம், பிறகு உச்சநீதிமன்றம் என்று இருமுறை மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. இந்த செயல்பாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவி வந்தது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர்நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைப்பட்டு போனது. இப்பொழுது தடா நடைமுறை தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும், எப்பொழுது கிடைக்கும்.
  3. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.
  4. அவர் முன்னாள் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.
  5. குற்றப் பின்னணி உள்ள குடும்பத்தை சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்கிறது தடா நீதிமன்றம்.
  6. பேரறிவாளனுக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்.
  7. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதில் 22 தூக்குத் தண்டனைகளை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒருதலைப்பட்சமாக, முன்முடிவுகளுடன் விசாரிக்கப்பட்டதென்பது தங்களுக்குப் புலப்படும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கை பொருத்தவரை கொல்லப்பட்டவர் ராஜீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது.
இன்னொரு வாய்ப்பு கிடைக்கப்பெற்று, நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும். அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம்.. ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப்போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக்கயிற்றால் நசுக்கப்படுமோ?
  1. திருமதி. சோனியா காந்தி அவர்கள் இவ்வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை எனக் கூறியுள்ளார்.
  2. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்கு கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.
  3. 1980-களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களை போல் நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மேலும் பற்று கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலை போராட்டத்திற்காக உதவி வந்தார்கள். ஒரு நாள் கூலியை கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தார்கள். ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப்போனேன்?? ஏன் தனிமை படுத்தப்பட்டேன்?? உங்களில் ஒருவன் தானே நானும்??
தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் திரு.வீ. ஆர். கிருஷ்ணய்யர்.
செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?
2. முடிவுறா விசாரணையில், முடிவினை நோக்கித் தள்ளப்படும் அப்பாவி நிரபராதிகளின் வாழ்க்கை.
  • ராஜீவ் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட வர்மா கமிசன் பாதியில் முடக்கப்பட்டது.
  • ஜெயின் கமிசன் அறிக்கையில் காங்கிரஸ்கார்ர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற அறிக்கையோடு நிறுத்தப்பட்டது.
  • மறுவிசாரனை, வெளிப்படையாக நடைபெறுதல் அவசியம் என வலியுறுத்தப்பட்டும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
  • உலகம் முழுவதும் போற்றப்படும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் வீ.ஆர் கிருஷ்ணஅய்யர், திரு.பேரறிவாளின் மடலையும், வழக்கையும் படித்துவிட்டு பேரறிவாளான் நிரபராதி என்று வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அவரை தண்டனைக் குறைப்பு செய்து உடனடியாக சிறையில் இருந்த காலங்களை கணக்கில் கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கும், பிரதமருக்கும், சோனியா காந்திக்கும், இந்நாள் ஜனாதிபதிக்கும்,பிரதமருக்கும் மேலும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலைமைச்சருக்கும் தனிப்பட்ட முறையில் அழுத்தம் கொடுத்தார்.
  • முன்னாள் மத்திய சட்டஅமைச்சர் ராம்ஜெத் மலானி , இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முகாந்திரங்களும் இருப்பதாக அவர் அமைச்சராக இருக்கும் போதே அறிவித்தார்.
  • முன்னாள் மும்பை உச்சநீதிமன்ற நீதிபதி எச். சுரேஸ் அவர்களும் பேரறிவாளனை தண்டனை குறைப்பு செய்து விடுதலை செய்ய அனைத்து தகுதிகளும் உள்ளதாக அறிவித்தார்.
  • சோனியா காந்தி அவர்கள், எனக்கோ என் மகனுக்கோ என் மகளுக்கோ இவர்களை தூக்கிலிடுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. உங்களிடம் (ஜனாதிபதியிடம்) கருணை மனு வரும்பொழுது இவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கடிதம் எழுதியிருக்கிறார்.
  • கேரளா கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில், முறைகேடுகள் செய்து நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்ட புலனாய்வு அதிகாரி திரு.தியாகராஜன் அவர்கள் பேரறிவாளனிடம் எடுத்ததாக சொல்லப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
  • இந்த வழக்கின் மூலமாக ஈழ விடுதலைப் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதும், அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்களை கடுமையாக அச்சுறுத்துவதுமே, நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
3.   பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் கோரிக்கை.
இருபத்தியொரு ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து கருணை மனுவை மட்டுமே நம்பி இன்று ஏமாற்றத்தின் உச்சியில் இருக்கின்றேன்.. வழக்கில் இத்தனை குளறுபடிகள், முடிவடையாத விசாரணைகள், கண்டுபிடிக்க முடியாத முடிச்சுகள், இருப்பதை காரணம் கொண்டு நிரபராதியான என் மகன் உறுதியாக விடுவிக்கப்படுவான் என்று நம்பி இருந்தேன்..
உலகில் எங்கும் நடக்காத அநியாயமாக காந்திய நாடு என்று சொல்லிக்கொள்ளும், அஹிம்சையை போற்றும் இந்திய நாட்டில், ஒருவன் நிரபராதி, நிரபராதி என்று கதறிக்கொண்டிருக்கும்பொழுதே தூக்கிலிட துடிக்கிறது காங்கிரஸ் அரசாங்கம்.
மக்களிடம் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்று தான். பத்திரிகைகள் சித்தரித்தது போல் ராஜீவ் கொலையாளி, விடுதலைப் புலி என்று ஒருதலைப்பட்சமாக பார்க்காமல், அவனையும் ஒரு சக மனிதனாக மட்டுமே பாருங்கள். அவன் நிரபராதி என்று உரக்க கூறுவதை சற்றே கவனியுங்கள். அவனுக்கும் ராஜீவ் கொலை சதிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
இனி மக்களாகிய நீங்கள் உணர்ந்து, உங்கள் கருத்தை உரக்கச் சொன்னால் மட்டுமே என் மகனும் அவனை போல் மற்ற இருவரும் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது.
தாய்மார்கள் ஒரு தாயின் தவிப்பை உணர்ந்து, என் மகனின் உயிர் மீட்பு போராட்டத்தில் கண்டிப்பாக என்னுடன் வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
மாணவர்களும், சட்ட வல்லுனர்களும் ஒரு வரலாற்று தவறு நிகழ்வதை இப்பொழுதே தடுக்க வேண்டும்.
மனிதஉரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் இவர்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்ய  ஒருசேர உரத்து குரல் கொடுக்க வேண்டும். இனியும் காலம் இல்லை என்பதை நான் சொல்லத் தேவை இல்லை என்று நம்புகிறேன்.
தமிழக மக்களின் பேராதரவுடன் இப்பொழுது ஆட்சி செய்யும் முதல்வர், தனது தற்போதைய செயல்பாடுகளினால் உலகத் தமிழர் அனைவரின் மனங்களிலும் போற்றப்படும் தாயாக உயர்ந்துள்ளார். அவர் தாயுள்ளம் கொண்டு, என் ஒரே மகனின் குற்றமற்ற தன்மையை உணர்ந்து, அவன் உயிர் காக்கும் அணைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று மிக பணிவுடனும், நம்பிக்கையுடனும் கோரிக்கை வைக்கிறேன்.. நாதியற்ற இந்த தாய்க்கு வேறு வழி இல்லை

ராஜீவ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க விரும்பினால் அதைச் செய்யட்டும்!- புலனாய்வு குழு தலைவர் கார்த்திகேயன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று சிலர் கோரி வருகின்ற நிலையில், அரசும் நீதிமன்றமும் அப்படி கருதினால் அதைச் செய்யட்டும் என்று அந்த விசாரணையை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான டி. ஆர். கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணையை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான டி. ஆர். கார்த்திகேயன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் மே மாதம் 21 ம் திகதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கை விசாரிக்க காவல்துறையின் மூத்த அதிகாரியாக இருந்த டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றுஅமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றன.
புலன் விசாரணைகளில் பலர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முதல் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டார்.
வழக்கு விசாரணை பல்வேறு மட்டங்களை கடந்து, இதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அனைவரும் குற்றவாளிகள் என்று கூறப்பட்டு சிறப்பு நீதிமன்றம் ஒன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் அதை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்தபோது நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது.
அதில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட நளினியின் மரண தண்டனை பின்னர் ஆயுட் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற மூன்று பேரின் தண்டணையும் உறுதிசெய்யப்பட்டது.
அவர்கள அளித்த கருணை மனுவும் கடந்த வாரம் இந்தியக் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.
தற்போது இந்த வழக்கின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாக சிலரால் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இந்த வழக்கில், ராஜீவ் காந்தியை கொலை செய்தது யார், ஏன், எப்படி என்கிற விசாரணை பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதை தாங்கள் இந்திய சட்டப்படி விசாரித்து, தடயங்களை சேகரித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்ததாகவும் நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பைக் கொடுத்ததாகவும் கார்த்திகேயன் தெரிவித்தார்.
எனினும் மறுவிசாரணை தேவை என்று எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்து தான் கருத்து ஏதும் சொல்லும் நிலையில் இல்லை என்றும், அரசும் நீதிமன்றமும் இது குறித்து முடிவெடுக்கலாம் என்றும், தாங்கள் விசாரணைகளை நடத்தியதைத் தவிர தங்களுக்கு இந்த வழக்கு தொடர்பில் எந்தவிதமான விருப்பு வெறுப்புகளும் இல்லை என்றும் கார்த்திகேயன் கூறுகிறார்.
இலங்கையில் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டதே அங்கு நடைபெற்ற போராட்டத்துக்கு காரணம் என்பதை இந்த வழக்கின் விசாரணை தொடர்பில் தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதையும அவர் சுட்டிக்காட்டினார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரும் மேல்முறையீடு செய்தால் அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளே முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக தமது குழு நடத்திய விசாரணைகள் தம்மைப் பொறுத்தவரையில் மறந்து போன விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டத்தை கையிலெடுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை! குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் யுத்தகால நிலைமை!– படையினர் எச்சரிக்கை

சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு குழப்பங்கள் விளைவிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண இராணுவத்தளபதி பொனிபஸ் பெரேரா, கிறீஸ் மனிதன் என்பது எல்லாம் வங்கிக் கொள்ளையர்களும் கொள்ளையர்களும்,மரம் கடத்துவோரும் கிளப்பி விட்டுள்ள புரளி எனவும் தெரிவித்தார்.
கிறீஸ் மனிதன் தொடர்பாக ஆராயும் உயர்மட்டக் கூட்டமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்றது.
இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் விஜே குணவர்தன, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி பிரிகேடியர் மஹிந்த முதலிகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மட்டக்களப்பு மாவட்ட 234 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி சுகந்த திலகரட்ன உட்பட இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள், சமய பிரமுகர்கள், பள்ளிவாசல்கள், இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்களின் நிர்வாகிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தற்போது சர்ச்சையையும் பீதியையும் எற்படுத்தியுள்ள கிறீஸ் மனிதன் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா,
மக்கள் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இன்று இடம்பெற்று வரும் சம்பவங்கள் படையினருக்கு சேறு பூசும் சம்பவங்களாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்களையும் ,கொள்ளைகளில் ஈடுபட்டு வருபவர்களையும், மரங்களை கடத்தி விற்றவர்களையும் படையினர், பொலிஸார் பிடித்து வருவதால் அதனால் ஆத்திரமுற்றவர்களே இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாங்கள் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்துள்ளோம். அத்துடன் அதன் பின்னர் இங்கு 15 மேற்பட்ட ரி56 ரக துப்பாக்கிகளை மீட்டுள்ளோம்.
இது தொடர்பில் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும். மீண்டும் கலவரங்களையும் தாக்குதல்களையும் மேற்கொள்ள முனைந்தால் மீண்டும் இந்த மாவட்டத்தில் முன்னர் நிலவிய நிலையே ஏற்படும்.
மீற்றருக்கு ஒரு சோதனைச்சாவடி ஏற்படுத்தப்படும், சுற்றிவளைப்புகள் இடம்பெறும். அரை மணித்தியாலத்திற்குள் செல்லும் பயணங்கள் இரண்டு மணித்தியாலமாகும். இதனை நீங்கள் விரும்பினால் எதனையும் செய்யலாம்.
இரண்டு அப்பாவி இளைஞர்கள் வியாபாரத்துக்கு சென்றபோது அப்பகுதி மக்களின் மதியில்லாத காரணத்தினால் கொலைசெய்யப்பட்டனர்.
இதேபோன்று பொத்துவில் பிரதேசத்திலும் பிரச்சினை வந்தது. யானை கணக்கெடுப்புக்கு சென்றவர்கள் வெளியே வந்தனர். அவர்களையும் பிடித்து அடித்தனர். அவ்வாறு செய்யமுடியுமா?.

அதனை தடுக்கச்சென்ற பொலிஸாருக்கு அடித்தார்கள். வாகனங்களுக்கு நெருப்பு வைக்கப் பார்த்தார்கள். அதன்பிறகே நாங்கள் படையினரை அனுப்பினோம். நீங்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் கிரிஸ் மனிதர்கள் அல்ல, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள்.
இந்தநிலையில் பொத்துவில் நிலைமையை அவதானிப்பதற்காக இரண்டு தாங்கிகளையும் எடுத்துக்கொண்டு சென்றபோது, காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு முன்பா ரயர்கள் எரிகின்றன. பைத்தியக்காரர்கள். நான் அந்த ரயர்களை அப்புறப்படுத்தி விட்டே சென்றேன்.
இந்த சமாதானம் கிடைத்த பின்னர் ஒரு நீண்ட அபிவிருத்தியில் செல்கின்ற ஒரு மாகாணம் இந்த கிழக்கு மாகாணம்.
இந்த நாட்டில் பயங்கரவாதம் தோற்றகடிக்கப்பட்ட பின்னர் எமது யுத்த தாங்கிகளையும் கவச வாகனங்களையும் மூடிவைத்துள்ளோம். இயந்திரத் துப்பாக்கிகளை அறைகளில் பூட்டிவைத்துள்ளோம். எமது வீதித் தடைகள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தியுள்ளோம். வீதியில் காபட் போட்டுள்ளோம்..
முன்னர் புனானையில் இருந்து இங்கு வருவதற்கு எனக்கு இரண்டு மணித்தியாலம் எடுக்கும். ஆனால் தற்போது வெலிக்கந்தையில் இருந்து இங்கு வருவதற்கு எனக்கு 40 நிமிடமே எடுக்கின்றது.
எனவே தற்போது உங்களுக்கு அந்தக் காலத்துக்கு செல்ல விருப்பமா? இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடன் நீண்ட ஒரு விடயமாக எடுத்துக் கலந்துரையாடியுள்ளேன்.
கிழக்கு மாகாணத்திலே ஏதாவது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீதித் தடைகளை ஏற்படுத்துவேன். மட்டக்களப்பில் இருந்து களுவாஞ்சிக்குடிக்கு செல்வதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் நேரம் எடுக்கும்.
உங்கள் வாழ்நாளில் அதிக காலத்தை ரோட்டில் கழிக்கவேண்டிவரும். சுற்றிவளைப்பு, சோதனை நடவடிக்கைகள், வீதித் தடைகள் ஏற்படுவது உங்களுக்கு விருப்பமா?
வீட்டுக்கு வந்து படையினர் தேடுதல்களை மேற்கொள்வது உங்களுக்கு விருப்பமா?அது விருப்பமானால் ரோட்டில் போட்டு ரயர்களை எரியுங்கள் பரவாயில்லை.
இதுகளுக்கெல்லாம் சரியான ஊசி மருந்து எங்களிடம் உள்ளது. ஒரு மாதத்துக்கும் ஊசிமருந்து கொடுக்கலாம், ஒரு கிழமைக்கும் ஊசிமருந்து கொடுக்கலாம், ஒரு நாளைக்கும் ஊசிமருந்து கொடுக்கலாம்.
இதேவேளை இக்கூட்டத்தில் கிழக்கில் ஏற்பட்டுள்ள கிறீஸ் மனிதன் தொடர்பில் கிராமங்கள் தோறும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை தணிக்க விழிப்புக் குழுக்களை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், இதன் பின்னணி குறித்தும் பல்வேறு கேள்விகள் தொடுக்கப்பட்டன.
அத்துடன் தற்போது தோன்றியுள்ள நிலைமையினை கட்டுப்படுத்த இரவு வேளைகளில் படையினரை சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்துவது என்றும் அவர்களுடன் விழிப்புக் குழுவை சேர்ந்தவர்களையும் ஈடுபடுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இந்த விழிப்புக் குழுவை அமைப்பது தொடர்பில் அந்ததந்த பிரதேசங்களில் உள்ள பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் படைப் பொறுப்பதிகாரிகள், பொது அமைப்புக்கள், மதப்பெரியார்களை அழைத்து கலந்துரையாடல்களை நடத்த பணிப்புகள் வழங்கப்பட்டன.

தொடங்கியது வன யுத்தம்... வீரப்பன் மனைவியாக விஜயலட்சுமி!

 
ஒருவழியாக சந்தனக் காட்டு வீரப்பன் வாழ்க்கையை படமாக்கும் வேலையை தொடங்கிவிட்டார் குப்பி புகழ் ஏஎம்ஆர் ரமேஷ். காட்டையும் நாட்டையும் கலக்கி வந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படமாக்கும் முயற்சியில் நான்கைந்து இயக்குநர்கள் இறங்கியிருந்தனர்.

பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா கூட, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி துணையுடன் இந்தப் படத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்.

இப்போது, ஏஎம்ஆர் ரமேஷ் அதற்கான படப்பிடிப்பையே ஆரம்பித்துவிட்டார்.

படத்துக்கு வன யுத்தம் என பெயர் வைத்துள்ளனர். வீரப்பன் வேடத்தில் நடிப்பவர் கிஷோர். பொல்லாதவன் உள்ளிட்ட எக்கச்சக்க படங்களில் ஹீரோக்களை முந்திக் கொண்டு நல்ல பெயரை தட்டிச் சென்றவர்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராகும் இந்தப் படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடிப்பவர் விஜயலட்சுமி. சீமானை மிரட்டிப் பார்க்கும் விஜயலட்சுமி அல்ல.... இவர் சென்னை 28 புகழ் விஜயலட்சுமி!

அதிரடிப் படை தலைவர் விஜயகுமார் வேடத்தில் அர்ஜூனும், எஸ்பி செந்தாமரைக் கண்ணன் வேடத்தில் ரவி காலேவும் நடிக்கிறார்கள். கன்னட நடிகர் ராஜ்குமார், அவர் மனைவி பர்வதம்மா பாத்திரங்களில் முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்தப் படம் குறித்து ஏஎம்ஆர் ரமேஷ் கூறுகையில் , "வீரப்பன் குறித்து ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்து இந்தப் படத்தை உள்ளது உள்ளபடி எடுக்கப் போகிறேன். வீரப்பனின் கோபி நத்தம், ஒகேனக்கல் பகுதிகளில்தான் முழுப் படமும் எடுக்கப்படும்," என்றார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தமிழில் இதற்கு முன் வந்த படம் கேப்டன் பிரபாகரன். இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வீரப்பன் கதை. இதற்கு இளையராஜா மகன் யுவன் இசை!