Sunday, 21 August 2011

குறித்த நேரத்தில் வருமா மங்காத்தா? சிக்கலை உருவாக்கும் தியேட்டர்காரர்கள்


சீட்டுக்கட்டுகளின் சிக்கலான ஏரியாவை பற்றி பேசும் படம்தான் மங்காத்தா. ஆனால் அதை சிக்கல் இல்லாமல் வெளியே கொண்டு வருவார்களா என்பதில்தான் இப்போது சிக்கலே! ஏனென்றால் இதே நிறுவனம் தயாரித்த முந்தைய படங்களான வ குவார்ட்டர் கட்டிங், அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்களை திரையிட்டு பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்கள் தியேட்டர் காரர்கள். இந்த சிறு மெழுகு வர்த்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எரிமலைக் குழம்பை கக்குவார்கள் போலிருக்கிறது.

மங்காத்தா படத்தை வெளியிட விடக்கூடாது என்று கூடி கூடி விவாதிக்கிறார்களாம். அதற்கு முன் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இம்மாதம் 30 ந் தேதி அல்லது அடுத்த மாதம் 1 ந் தேதி மங்காத்தாவை வெளிக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் கிடுக்கிப்பிடி அவர்களை அதிர வைத்திருக்கிறது.

ஒரு படத்தை முடித்துக் கொடுத்ததோடு தன் கடமை முடிந்தது. அதற்கு பிறகு அது தயாரிப்பாளர் பாடு, விநியோகஸ்தர்கள் பாடு என்று ஒதுங்கிக் கொண்டார் அஜீத். மஙகாத்தாவின் அடுத்த ஆட்டம் என்னவாக இருக்குமோ?

விஜயின் யோகன் தள்ளிபோகிறது :சீமானை தொடர்ந்து கவுதம் மேனன்-க்கும் அப்பு

 

மார்க்கெட்டில் திடீர் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது தெய்வ திருமகள் இயக்குனர் விஜய்க்கு. சுட்டுக்கொடுப்பதில் மட்டுமல்ல, அதையே சூடாக கொடுப்பதிலும் வல்லவர் என்று நினைத்திருக்கலாம். இந்த டிமாண்ட் நடிகர் விஜய் வரைக்கும் தொற்றியிருப்பதுதான் ஆச்சர்யம்.

தெய்வ திருமகள் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பின் போதே அடிக்கடி அஜீத்தை சந்தித்து கதை பேசி வந்தார் விஜய். எனவே அஜீத்தின் பில்லா-2 வுக்கு பிறகு விஜய்க்குதான் அஜீத்தின் கால்ஷீட் என்று பரவலாக பேசி வந்தார்கள். இல்லையில்லை, யூடிவி தயாரிக்க, மீணடும் விக்ரமும் விஜய்யும் இணைகிறார்கள் என்ற பேச்சும் பரவியது. ஆனால் இவ்விரு தகவல்களையும் வெளுத்துப் போக வைத்திருக்கிறது புது தகவல் ஒன்று.

நடிகர் விஜய்யிடம் ஒரு கதை சொன்னாராம் டைரக்டர் விஜய். அது பிடித்துப் போனதால் நண்பன் முடிந்த கையோடு இதில் நடிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறாராம் விஜய். கவுதம் மேனன் படத்தை சற்றே ஒத்தி வைத்துவிட்டு விஜய்யை உள்ளே நுழைத்திருப்பதாகவும் பேச்சிருக்கிறது.

திடீர் திடீரென்று ஏற்படும் திருப்பங்களில் சிக்கி நசுங்கிப் போய் கிடப்பதென்னவோ, செந்தமிழன் சீமான் இயக்குவதாக சொல்லப்பட்ட படம்தான்!

பப்ளிக்கில் பிளையிங் கிஸ்... நமீதா செயலால் சேரன் அலுப்பு

சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு வரும் முழுமையான 3டி திரைப்படம் அம்புலி. மைடியர் குட்டி சாத்தான் படத்தில் கூட சில காட்சிகள் மட்டுமே 3டி தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அம்புலியில் எல்லா காட்சிகளையும் முப்பரிமாணத்தில் அமைத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்களான ஹரி ஷங்கர், மற்றும் ஹரிஷ் நாராயணன் இருவரும்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் நடந்தது. விழாவில் பேசிய பார்த்திபன், இப்போதெல்லாம் திருடி படமெடுக்கிறவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. அண்மையில் வெளிவந்த இந்தியா டுடே வார இதழில் கொரியன் மற்றும் ஹாலிவுட் படங்களில் இருந்து திருடப்பட்ட படங்களின் பெயரை வெளியிட்டிருந்தார்கள். அப்படி திருடி படமெடுப்பவர்கள் மத்தியில் 3டி படம் எடுக்க வந்த லோகநாதனை பாராட்டுகிறேன் என்றார் தனக்கேயுரிய தனித்தன்மையோடு.

விழாவில் கலந்து கொண்ட இன்னொரு விஐபியான தயாரிப்பாளர் கேயார், நான் 1984 ம் வருடத்தில் மை டியர் குட்டிசாத்தான் படத்தை உருவாக்கினேன். அது ஓன்றேகால் வருடம் ஓடி சாதனை படைத்தது. படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது எல்லாரும் என்னை பைத்தியக்காரன் என்றார்கள். ஆனால் அப்படம் வசூலில் பெரிய சாதனை படைத்தது. மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்தார்கள். அதன் பின் அந்த டெக்னாலஜியை பயன்படுத்தி ஏராளமான படங்கள் தமிழில் வந்திருக்க வேண்டும். யாருமே தங்கள் தொழில் நுட்ப அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டததால் மீண்டும் ஒரு 3டி படம் வர இருபத்தைந்து வருடம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது என்றார்.

விழாவுக்கு நடிகை நமீதாவும் வந்திருந்தார். மச்சான்ஸ் என்று ரசிகர்களை அழைத்து குஷியேற்றியவர் அனைவருக்கும் பிளையிங் கிஸ் கொடுக்க, அரங்கமே ஜில்லானது.

அவருக்கு பின் பேசவந்த சேரன், இங்க நமீதா வந்தாங்க. இவ்வளவு பப்ளிக்கான மேடையில எல்லாருக்கும் கிஸ் கொடுத்தாங்க. நியாயமா நம்ப வீட்டு பொண்ணுங்க இப்படி மேடையில் வந்து கிஸ் கொடுத்தா ரசிப்போமா? ஆனால் அவங்க கொடுக்கும் போது எல்லாரும் ரசிச்சீங்க. மக்களோட மனசு மாறிடுச்சு. நாமும் அதற்கேற்ப மாறிக் கொள்ள வேண்டியதுதான் என்றார் மிகவும் கவலையாக.

கவுதம் மேனன் - ஜீவா இணையும் படம்: சமந்தா ஹீரோயின்!

ஜீவாவை வைத்து ஒரு புதிய படம் இயக்குகிறார் கவுதம் மேனன். இந்தப் படத்துக்கு நித்யா எனப் பெயரிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. பாணா காத்தாடி மூலம் அறிமுகமாகி, விண்ணைத் தாண்டி வருவாயாவில் கடைசி நேரத்தில் வரும் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சமந்தா. தமிழில் இன்னும் சரியான இடத்தைப் பிடிக்க முடியவில்லையே என தவிக்கும் சமந்தாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இந்தப் படம் பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் வரும் 2012-ல் வெளியாகவிருக்கிறது. கோ படத்தைத் தயாரித்த ஆர்எஸ் இன்போடைன்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்ய, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ராணாவுக்கான பாடல்கள் அனைத்தையும் ரஹ்மான் முடித்துக் கொடுத்துவிட்டதால், இப்போது புதிய படங்களை தமிழில் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார் ரஹ்மான். அப்படி ஒப்புக் கொண்ட முதல் படம் இதுதான்.

வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி சென்னையில் 'நித்யா'வின் படப்பிடிப்பு நடக்கிறது.


நண்பன் குழுவினருக்கு விஜய் விருந்து!

நண்பன் படக்குழுவைச் சேர்ந்த 250 பேருக்கு விருந்தளித்தார் படத்தின் ஹீரோ விஜய்.

இந்தியில் கலக்கிய '3 இடியட்ஸ்' படம் தமிழில் நண்பன் பெயரில் தயாராகிறது. விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா, லாரன்ஸ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடிக்கிறது. கதாநாயகியாக இலியானா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எந்திரன் படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படம் இது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் 250 பேருக்கு விஜய் நேற்று இரவு தனது சொந்த செலவில் விருந்தளித்தார். வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் விருந்தில் பரிமாறப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மிமிக்ரி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. ஆட்டம் பாட்டம் என கலகலப்பாக போனது அன்றைய மாலைப் பொழுது.

விருந்துக்கு வந்த எல்லோரிடமும் விஜய் சகஜமாக சிரித்து பேசினார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார். இந்த விருந்தில் விஜய்யுடன் நடித்த சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர், வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோரும் பங்கேற்றனர்.


தீக்குளிக்கப் போறேன்... கெரசினோடு வந்த டைரக்டர்



வெங்காயம் என்றொரு படம் நேற்று வெளியாகியிருக்கிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருத்திருக்கிறார்கள். ஒரே ஒரு பாடலுக்கு சத்யராஜ் நடித்திருக்கிறார். கழகங்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவு பிரசாரத்தை தனி ஒரு ஆளாக நின்று செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான சங்ககிரி ராச்குமார். அதற்காக இது தமிழிலக்கணம் மாதிரி அவ்வளவு வறட்சியான படமல்ல. பொழுதுபோக்கு அம்சங்களும் கலகலப்பு காட்சிகளும் நிறைந்த படம்.

பத்திரிகையாளர்கள் காட்சியில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ராச்குமாரை பாராட்டி மகிழ்ந்த படமும் கூட. இந்த ராச்குமார்தான் இன்று காலை பதினொரு மணிக்கு மண்ணெண்ணை டின்னோடு தீக்குளிக்க கிளம்பியிருக்கிறார். இன்று காலை மீடியா தோழர்களை தொடர்பு கொண்ட ராச்குமார், இந்த அநியாயத்தை தட்டி கேட்டால் சரியான பதில் வர மாட்டேங்குது. தீக்குளிப்பதை தவிர வேற வழியில்ல. அப்படியாவது எனக்கு நியாயம் கிடைக்குதா பார்ப்போம் என்றார் பொங்கி வரும் ஆத்திரத்தோடு.

என்னவாம்? இந்த படத்தின் க்ளைமாக்சில் சாமியார்களை பார்த்து பாதிக்கப்பட்ட சிறுமி ஒருத்தி தேவடியாப் பசங்களா என்று திட்டுவது போல காட்சி. இதன் தீவிரத்தையும் அவசியத்தையும் உணர்ந்த சென்சார் அதிகாரிகளே போகட்டும் என்ற அப்படியே இந்த வசனத்தை நறுக்காமல் அனுமதித்துவிட்டார்கள். அப்படியிருக்க, படத்தின் பிரிண்ட்டை க்யூப் சிஸ்டம் மூலம் தியேட்டருக்கு கொண்டு செல்லும் யூ எப் ஓ என்ற நிறுவனம், அந்த ஒரு வசனத்தை மட்டும் சைலண்ட் செய்துவிட்டது.

அரசு அமைப்பான தணிக்கை துறையே ஒப்புக் கொண்ட ஒரு காட்சியை தனியார் நிறுவனம், அதுவும் எங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்து தரும் நிறுவனம் நறுக்குவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று கொந்தளிக்கிறார் ராச்குமார்.

சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் முன்புதான் இந்த தீக்குளிப்பை நடத்தப் போகிறாராம் அவர். படைப்பாளியின் சீட்டுக்கு அடியில் பச்சை மிளகாயை கொட்டி ரசிக்கிற இதுபோன்ற ஆட்களை என்ன செய்யலாம்

புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருகின்றது : அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உலகப் பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டுக்கான உலகப் பயங்கரவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டில் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்ற போதிலும், பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஆயுதக் கொள்வனவு போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதனை தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருவதகாக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசியாவிலேயே மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடு சிறிலங்கா � நியுசிலாந்து ஊடகம்

தெற்காசியாவில் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் ஆயுதப்படைகள் வணிக நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவது, குடியியல் சமூகத்தை இராணுவ மயப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக நியுசிலாந்து ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.

‘நியுசிலன்ட் ஹெரால்ட்‘ என்ற ஊடகத்தில் ராகுல் பேடி என்பவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளின் இராணுவத் தலைமைகள் விமானசேவைகள் தொடக்கம் சீனித் தொழிற்சாலைகள் வரைக்கும், வங்கிகள் தொடக்கம் வெதுப்பகங்கள் வரைக்கும், மின்ஆலைகள் தொடக்கம் துறைமுகங்கள் வரைக்கும் முதலீடுகளைச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இராணுவ உயர்மட்டத்தின் கட்டுப்பாட்டில் பில்லியன் கணக்கிலான டொலர் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவது, குடியியல் அதிகாரத்தை மறைப்பதாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தெற்காசியாவிலேயே மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக சிறிலங்காவைக் குறிப்பிட்டுள்ள ‘நியுசிலன்ட் ஹெரால்ட்‘, அங்கு ஒரு மில்லியன் மக்களுக்கும் 8000இற்கும் அதிகமான ஆயுதப்படையினர் இருப்பதாகக் கூறியுள்ளது.

போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் 300,000 ஆயுதப்படையினரை கொண்டுள்ள சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச நிர்வாகம், மரக்கறிகள் விற்பனை, பயண முகவரகங்கள், விடுதிகள், நெடுஞ்சாலை உணவகங்கள், குப்பை சேகரிப்பு போன்ற தொழில்களில் படையினரை ஈடுபத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும் ‘நியுசிலன்ட் ஹெரால்ட்‘ குறிப்பிட்டுள்ளது.

வடக்கில் 22 அறைகளைக் கொண்ட விடுதி ஒன்றை சிறிலங்கா இராணுவம் நிர்வகித்து வருவதாகவும், படகுச்சேவைகள் மற்றும் திமிங்கலக் காட்சிப் பயணங்களை கடற்படை ஒழுங்கு செய்வதாகவும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இராணுவ முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதையும் ‘நியுசிலன்ட் ஹரால்ட்‘ சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து முதல் பெண் பிரதமர் நியமனம்!


தாய்லாந்தின் புதிய பிரதமராகப் பியூ தாய் கட்சியைச் சேர்ந்த இங்லக் ஷினவத்ரா வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் இளைய சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தில் கடந்த யூலை 3ம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் இங்லக்கின் பியூ தாய் கட்சி ஆளும் கட்சியான ஜனநாயக் கட்சியைத் தோற்கடித்தது.

நாட்டின் மொத்த வாக்கில் ஐந்தில் மூன்று பங்கு வாக்கைப் பெற்று வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 296 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்லக்குக்கு ஆதரவாகவும், 3 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 197 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர். இதையடுத்து 50 சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று இங்லக் வெற்றி பெற்றதாக அவைத் தலைவர் சோம்சாக் அறிவித்தார்.

தாய்லாந்தில் 2006ம் ஆண்டில் இருந்தே மறைமுக இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. 2006ல் பிரதமராக இருந்த தக்ஷின் ஷினவத்ராவைப் பதவி இறக்கிவிட்டு இராணுவம் ஆட்சியைக்கைப்பற்றியது. பின்னர் சுராயுத் சுலனான்ட் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2008 வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார். திடீரென அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சொம்சாய் வோங்சாவத் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜனநாயக ரீதியிலான அரசைத் தேர்ந்தெடுக்க கடந்த யூலை 3ம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இத் தேர்தலில் இராணுவத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தி பிரதிபலித்தது. தாய்லாந்து இக்கட்டான சூழலை சந்தித்துவரும் நிலையில் இங்லக் ஷினவத்ரா பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தை உருவாக்குவதுடன் ஜனநாயக அரசிடமிருந்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கட்டாய நிலையில் அவர் உள்ளார்.

முல்லைத்தீவில் இறுதிப்போர் நடந்த இடங்களில் மீள்குடியமர்வுக்கு அனுமதியில்லை (வீடியோ இணைப்பு)


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் உள்ளிட்ட சில கிராம அதிகாரி பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.


கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சிறிலங்கா அரசின் இந்த நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் சில கிராம அதிகாரி பிரிவுகளில் மீள்குடியமர்வுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக முல்லைத்தீவின் சில பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை கோம்பாவில் என்ற இடத்தில் மீளக்குடியேற்றவுள்ளதாக முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரி கூறியிருந்தார்.

கோம்பாவில் பகுதியில் காடுகளை அழித்து தற்காலிக குடியிருப்புகளை அமைக்கும் பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றன. அந்த இடத்தை ஐ.நாவின் சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினய் நந்தி அண்மையில் சென்று பார்வையிட்டிருந்தார்.

ஆனால் இடம்பெயர்ந்த மக்களை வேறு இடங்களில் குடியேற்ற சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகள் , போர்க்குற்றங்கள் குறித்த சாட்சியங்களை முற்றாக அழிப்பதற்கே சிறிலங்கா அரசு அங்கு மீள்குடியமர்வுக்கு அனுமதி மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலத்துக்கடியில் புதைந்த போயுள்ள போர்க்குற்ற ஆதாரங்கள் வெளியே வந்து விடுமோ என்ற அச்சத்தினாலேயே சிறிலங்கா அரசு இவ்வாறு செயற்படுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.