Friday, 6 January 2012

முல்லைப் பெரியாறு - உண்ணாவிரதத் திட்டத்தைக் கைவிட்டது இயக்குநர்கள் சங்கம்!


முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் கேரளாவின் சதியைக் கண்டித்தும், அணையைக் காக்கக் கோரியும் வரும் ஜனவரி -ம் தேதி தேனியில் நடக்கவிருந்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமுகமான சூழல் உருவாகி வருவதால் உண்ணாவிரதம் கைவிடப்படுவதாகவும், தேவைப்பட்டால் மீண்டும் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் பொங்கி எழும் என்றும் இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை முன்வைத்து தேனி மாவட்டம் வீரபாண்டியில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சார்பில் 8.1.12 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அனைத்து திரைத்துறை சங்கங்களின் ஆதரவையும் இயக்குநர்கள் சங்கம் கோரியிருந்தது.

இந்தச் சூழ்நிலையில், "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க முடியாது. 1979-ம் ஆண்டு முதல் 132 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அதனால் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும் நில நடுக்கத்தாலும் பாதிப்பு வர வாய்ப்பில்லை என தொழில்நுட்ப வல்லுநர் குழு அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்பதை எடுத்துக்காட்டிய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ எஸ் ஆனந்த் தலைமையிலான குழு, கேரளாவின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளது. இதுகுறித்த செய்திகள் பத்திரிகைகளில் வந்துள்ளன.

இந்தத் தீர்ப்பு மூலம் தமிழக கேரள எல்லைகளில் மீண்டும் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் வரும் 8-ம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டத்தை கைவிடும்படியும், தேவைப்பட்டால் மொத்த திரையுலகமும் இணைந்து போராடலாம் என்றும் திரையுலகப் பிரமுகர்கள் பலர் கூறிய கருத்துக்கு மதிப்பளித்து, வரும் 8.1.12-ம் தேதி நடக்கவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்து செய்வதென்று தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு தங்கள் ஆதரவு தேவை என்று கேட்ட உடனே, செயற்குழுவைக் கூட்டி உடனடியாக தங்கள் ஆதரவைத் தெரிவித்த நடிகர் சங்கம், அதன் தலைவர் ஆர் சரத்குமார், செயலர் ராதாரவி மற்றும் நிர்வாகக் குழுவினருக்கு இயக்குநர்கள் சங்கம் தனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

இப்படியொரு போராட்டம் அறிவித்த உடனே அதில் பங்கெடுத்துக் கொள்ள முன்வந்த இயக்குநர்கள், உதவி இயக்குநர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என அந்த அறிக்கையில் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

ரூ. 1 கோடி நில மோசடி: நடிகர் மன்சூர்அலிகான் கைது

 


சென்னை கே.கே. நகரைச் சேர்ந்தவர் துரைவேலன். இவர் நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் அரும்பாக்கம் புலியூர் பகுதியில் தனக்கு சொந்தமான ரூ. 1 கோடி நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து நடிகர் மன்சூர்அலிகான் அபகரித்து விட்டதாக தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் நில மோசடிப் பிரிவு உதவி கமிஷனர் ஜேசுராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டுக்கு போலீசார் சென்று கைது செய்தனர்.

பின்னர் மன்சூர்அலிகானை வேனில் ஏற்றி போலீஸ் கமிஷனர் அலுவலத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இலவசத்தில் தமிழ்நாட்டை மிஞ்சும் உ.பி.:வாக்களித்தால் இலவசமாக துப்பாக்கி உரிமம்


இலவச அரிசி, டிவி கொடுப்பேன் என்பதெல்லாம் பழைய வாக்குறுதி. எங்களுக்கு வாக்களித்தால் துப்பாக்கி உரிமம் கொடுப்போம் என்பது தான் லேட்டஸ்ட் வாக்குறுதி. உத்தரபிரதேச மாநில சமூக நல அமைச்சர் இந்திரஜித் சரோஜ் தான் இந்த அதிரடி வாக்குறுதியைக் கொடுத்து அரசியல் வட்டாரத்தை பரபரப்பு அடையச் செய்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த முறையும் எப்படியும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான மாயாவதி முனைப்பாக உள்ளார். அவருக்கு சற்றும் சளைக்காதவர்களாய் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாடி கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளன.

இதனால் அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காசா, பணமா என்று ஆளாளுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வருகின்றனர். நம்ம ஊரில் எல்லாம் வாக்களித்தால் இலவச அரிசி, மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் தானே தருகிறார்கள். ஆனால் உத்தர பிரதேச மாநில சமூக நலத்துறை அமைச்சர் இந்தரஜித் சரோஜ் தனது பிரச்சாரத்தின்போது அளித்த ஒரு வாக்குறுதி தான் அரசியல் வட்டாரங்களில் ஹாட் டாபிக்.

அப்படி என்ன தான் வாக்குறுதி கொடுத்தார் என்று பார்க்கிறீர்களா. பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்தால் இலவசமாக துப்பாகி உரிமம் வழங்கப்படும் என்பது தான் அந்த வாக்குறுதி. பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் இனிப்பு வழங்குவது போன்று அனைவருக்கும் இலவசமாக துப்பாக்கி உரிமம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் அவர் பலருக்கு துப்பாக்கி உரிமம் வாங்கிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மட்டும் உத்தர பிரதேசத்தில் 1,000 பேர் து்பபாக்கி உரிமம் பெற்றுள்ளனர். 5,000 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே அமைச்சரின் இந்த வாக்குறுதியால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெடும் என்று கூறி கௌஷம்பி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அதுல் குமார், அமைச்சர் தேர்தல் விதிமுறைகளை மீறியிருந்தால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

சினிமாக்காரர் என்பதால் சினிமா பாணியில் திருமணம் செய்துவிட்டு, டாடா காட்டிவிட்டார்: கதறி அழுத காயத்ரி

 


சென்னை மேற்குமாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி . 50 வயது நிரம்பிய இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.


 அந்த புகார் மனுவில்,   ‘’நான் திருமணம் செய்துகொள்ளாமல் ஆன்மிகத்தில் ஈடுபட்டு வந்தேன். எங்கள் வீட்டு அருகில் உள்ள கோவிலுக்கு தினமும் பஜனைபாடல்கள் பாடசெல்வேன். அப்போது, சினிமா துணை டைரக்டர் ஒருவர் என்னிடம் அன்பாக பழகினார்.


திருமணம் ஆகாமல் இருந்த அவர் திடீரென்று ஒருநாள் என்னை காதலிப்பதாக கூறினார். உங்களுக்கும், எனக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது. நாம் காதலிப்பது பொருத்தமாக இருக்காது. உலகமும் அதை ஏற்காது என்று அவரிடம் கூறினேன்.




ஆனால் அவர் காதலில் உறுதியாக இருப்பதாக சொன்னார். திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார். ஒருநாள் எனது வீட்டுக்கு வந்து காதலை ஏற்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று நெஞ்சுருக பேசினார்.

நான் எதிர்பார்க்காமல் எனது நெற்றியில் குங்குமத்தை வைத்து இப்போது முதல் நாம் இருவரும் கணவன், மனைவி என்று ஆசையாக என்னை கட்டிப்பிடித்தார். நானும் அன்று முதல் அவரது மனைவியாக வாழ்ந்து வந்தேன்.


தற்போது, அவர் என்னை பார்க்க வருவதில்லை. தலைமறைவாகிவிட்டார். ஒருநாள் கோவிலில் அவரை பார்த்தேன். என்னிடம் அவர் நமது காதல் திருமணம் முறிந்துவிட்டது. நான் எனது வயதுக்கு ஏற்ற பெண்ணை திருமணம் செய்து வாழப்போகிறேன். இனிமேல் உங்கள் வழியை நீங்கள் பாருங்கள் என்று கூறி, என்னை தூக்கி எறிந்து பேசினார்.


அதை கேட்டவுடன் எனது இதயம் நொறுங்கிப்போனது. நீங்கள் வேறு திருமணம் வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள். ஆனால் என்னையும், உங்களோடு வைத்து கொள்ளுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இப்போது என்னை பார்த்தாலே, ஒதுங்கி ஓடுகிறார்.


அவரது முகத்தை மட்டுமே பார்த்து நான் அவரை காதலித்து, என்னையும் அவருக்கு முழுவதுமாக கொடுத்துவிட்டேன்.

இப்போது அவர் இல்லாமல் எனக்கு வாழ்வில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். அவரது முகவரி கூட தெரியாமல் முந்தானையை விரித்துவிட்டேன். அவரை தேடி கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகிறேன். ஒருவேளை அவர் என்னை ஏற்க மறுத்தால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்த புகார் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, குமரன் நகர் போலீசாரை உரிய நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்த புகார் மனு கமிஷனர் அலுவலக அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.


`நீங்கள் அந்த வாலிபரை முறையாக பதிவு திருமணம் செய்தீர்களா, அதற்கான ஆதாரம் எதுவும் உள்ளதா?' என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால் காயத்ரி, `அவரை பதிவு திருமணம் செய்யவில்லை என்றும், நெற்றில் வைத்த குங்குமத்தை மங்கலநாணாக மதித்து, அவரை எனது கணவராக ஏற்றுக்கொண்டுவிட்டேன். அவர் சினிமாக்காரர் என்பதால் சினிமா பாணியில் என்னை திருமணம் செய்துவிட்டு, டாடா காட்டிவிட்டு போய்விட்டார் என்றும் கூறி காயத்ரி கதறி அழ ஆரம்பித்தார்.


போலீஸ் அதிகாரிகள், `உங்கள் முகவரி தெரியாத காதல் கணவர் கண்டிப்பாக உங்களுக்கு கிடைப்பார்' என்று ஆறுதல் கூறி அனுப்பினார்கள்.

''உங்க மனைவியை எப்பக் கொல்லப் போறீங்க?''... இப்படிக்கு 'குண்டு இட்லி'!


கள்ளக்காதல் விவகாரத்தில் கோவையில் ஒரு கல்லூரிப் பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். உங்களது மனைவியை எப்போது கொல்லப் போகிறீர்கள் என்று கேட்டு தனது கள்ளக்காதலருக்கு அவர் எழுதிய கடிதமும் சிக்கியுள்ளது.

காதலுக்கு கண் இல்லை என்பார்கள், அதேபோல கள்ளக்காதலுக்கும் படித்தவர் படிக்காதவர் என்ற பேதம் இல்லை. நன்கு படித்த, கல்லூரியில் பேராசிரியையாக இருந்து வந்த ஒரு பெண் உங்களது மனைவியை எப்போது கொல்லப் போகிறீர்கள் என்று சற்றும் பதட்டமில்லாமல் கேட்டு கடிதம் எழுதியிருப்பது போலீஸாரை அதிர வைத்துள்ளது.

கோவை அத்தப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் கவுதமன். 26 வயதேயாகும் இவர் ஒரு இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி கீதா. கீதா போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில்,

நானும், கவுதமனும் காதலித்தோம். இருவீட்டாருக்கும் இது தெரியவந்ததும், பெற்றோர் பேசி முடித்து 21.9.09 அன்று எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது என்னுடைய பெற்றோர் நகையை வரதட்சணையாக அணிவித்தனர். கவுதமனுக்கும் பிரஸ்லெட் நகை போடப்பட்டது.

திருமணத்துக்கு பிறகு கவுதமன் என்னுடன் நெருங்கி பழகுவதை குறைத்தார். அவருக்கு பீளமேடு பகுதியை சேர்ந்த கல்லூரி பேராசிரியை உமா மகேஸ்வரி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி கவுதமனிடம் கேட்டபோது `எனக்கு தொழில் செய்ய பணம் தேவைப்படுகிறது. அவள் எனக்கு எல்லாம் தருகிறாள். நான் அவளை விட வேண்டும் என்றால் உன் தாயிடம் போய் ரூ.5 லட்சம் வாங்கி வா' என்று மிரட்டினார்.

இதனால் ஓரளவு நகை, பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகும் அந்த பெண்ணுடன் உள்ள கள்ளத்தொடர்பு நீடித்தது. இதுபற்றி எனது மாமனார், மாமியாரிடம் கேட்டேன். அவர்களும் என்னை மிரட்டத் தொடங்கினார்கள். ஒழுங்காக என்னுடைய மகன் சொன்ன மாதிரி ரூ.5 லட்சம் பணம் வாங்கி வா. இல்லையென்றால் அந்த பெண்ணுடன்தான் அவன் வாழ்வான் என்று கூறினார்கள்.

என்னுடைய கணவர் கவுதமன், கள்ளக்காதலி உமாமகேஸ்வரியுடன் சேர்ந்து என்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதும் ரகசிய கடிதம் மூலம் தெரியவந்தது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் கீதா.

இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். இதில் கள்ளக்காதல் கொண்டிருந்தது, மனைவியைக் கொலை செய்ய கவுதமன் திட்டமிட்டது, தாய் தந்தையுடன் சேர்ந்து வரதட்சணைக் கொடுமை செய்தது ஆகியவை உறுதியானது.

இதையடுத்து போலீஸார் கவுதமனையும், உமா மகேஸ்வரியையும் கைது செய்தனர். கவுதமனின் பெற்றோர் பாலசுந்தரம், சரோஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'ஜில்லுன்னு ஒரு காதல்' போல இருக்கக் கூடாது!

இதற்கிடையே, உமா மகேஸ்வரி, கவுதமனுக்கு எழுதிய ஒரு கடிதம் போலீஸார் கையில் சிக்கியுள்ளது. அதில்தான் கவுதமனின் கொலைச் சதித் திட்டம் இடம் பெற்று இருவரையும் மாட்டி விட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் உமா மகேஸ்வரி எழுதியிருப்பதைப் பாருங்களேன்...

குண்டு இட்லியே என்று என்னை நீங்கள் வர்ணிப்பீர்கள். நீங்கள் மட்டும் எப்போதும் ஸ்மார்ட்டாக இருங்கள். நீங்கள் எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும்.

என்னை ஏன் தவிக்க விடுகிறீர்கள். என்னை விட்டு நீங்கள் போகிற நேரத்தில் நான் அனுபவிக்கும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. என்னை ரொம்ப கஷ்டப்படுத்துகிறீர்கள்.

அவுங்க (அதாவது கவுதமனின் மனைவி கீதா) போன் பண்ணினா உடனே என்னை விட்டு விட்டு ஓடிப் போய் அவசரமாக பேசுகிறீர்கள். என்னுடன் மட்டும்தான் படுக்கையை பகிர்ந்துக்கணும்.

எப்போது உமா கவுதம் ஆகப் போகிறீர்கள். எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அக்ஷதா என்று இப்போதே பெயரிட்டு விட்டேன்.

ஜில்லுன்னு ஒரு காதல் படத்தின் கதை போல நமது கதை உள்ளது என்று அடிக்கடி நீங்கள் கூறுவீர்கள். ஜில்லுன்னு ஒரு காதல் கதை போல இல்லாமல் கீதாவை கொன்று விடப் போவதாகவும் நீங்கள்தான் கூறினீர்கள். கீதாவை எப்போது கொல்லப் போகிறீர்கள். என்னுடன் நிரந்தரமாக எப்போது வாழப் போகிறீர்கள்.

நீங்கள் சொன்னதை சீக்கிரம் செய்யுங்க. நாம சந்தோஷமாக இருக்கலாம்.

உங்கள் அன்புள்ள குண்டு இட்லி.

கொடுமை...!

புகழுக்குள் அடங்கி விடாத கொலை வெறி அனிருத்

 

உலகின் சந்து, பொந்துகளில் எல்லாம் ஒலி(ளி)த்து கொண்டிருக்கும் பாடல் என்றால், அது கொலவெறி தான். ஒரே பாட்டிலேயே உலகம் முழுவதையும் தன் பக்கம் திரும்ப வைத்த கொலவெறி பாடலின் இசையமைப்பாளர் அனிருத், ரொம்பவே அடக்கமாக, அமைதியாக இருக்கிறார். 3 படத்தின் தற்போதை நிலை என்ன என்று அனிருத்திடம் தொலைபேசியில் பேசினோம். மும்பையில் இருந்த அவர் கூறுகையில், தற்போது படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் பணி நடந்து வருகிறது. பிப்ரவரி முதல்வாரத்தில் படம் திரைக்கு வரலாம் எனத் தெரிகிறது என்றார்.

ஒரே பாட்டில் ஓஹோன்னு பாராட்டும், நிறைய ரசிகர்களும் கிடைச்சாச்சு போல என்று கேட்டதும், அப்படி எல்லாம் நான் எடுத்துக்கல, எப்பவும் போல என்னுடைய வேலையை பார்த்துக்கிட்டு இருக்கேன் என்கிறார் அடக்கமாய்.

முதல் படம் வெளிவருவதற்கு முன்பே இந்தி படங்களிலும் வாய்ப்பு வந்துள்ளதே என்று கேட்ட போது, இம்மாதம் மட்டும் நிறைய புதுப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. படத்தை தேர்ந்தெடுப்பதில் ரொம்ப கவனமாக உள்ளேன். இந்தியில் கே.எஸ்.ரவிக்குமார் சார் இயக்கும் படம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் வேறு ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இதைத்தவிர தமிழில் ஒரு படமும், தெலுங்கில் ஒரு படமும் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளேன் என்றார்.

அனிருத்திடம் பேசியதில் இருந்து, எவ்வளவு பெரிய வெற்றி கிடைச்சாலும், புகழ் அடைந்தாலும் அதை தலையில் ஏற்றி கொண்டாடமால், பார்க்கும் வேலையை மட்டும் ரொம்ப கவனமாக சிறப்பாக செய்ய வேண்டும் என்பது மட்டும் புரிகிறது.

கரிகாலன் படத்திற்கு தடை கேட்டு வழக்கு: நடிகர் விக்ரமுக்கு, கோர்ட்டு நோட்டீசு


கரிகாலன் என்ற தலைப்பில் சினிமா படம் எடுக்கத் தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விக்ரமுக்கு, சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு நோட்டீசு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை 15-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் போரூரை சேர்ந்த ராஜசேகர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பிரியமுடன் பிரிவோம் என்ற ஆவண படம், டி.வி. தொடர்கள் ஆகியவற்றுக்கு இசையமைத்துள்ளேன். நாட்டிலேயே முதல் அணையை சோழ சக்கரவர்த்தி கரிகாலன் கட்டியுள்ளார். அவரது வரலாற்றை படித்து, அவர் மீது மிகுந்த பற்று கொண்டேன். ஆனால் வரலாற்று புத்தகத்தில் கரிகாலனை பற்றி விரிவான தகவல் இல்லை.

இதையடுத்து கரிகாலன் வரலாற்றின் சாராம்சத்தை வைத்து கதை ஒன்றை எழுதினேன். இந்த கதைக்கு கரிகாலன் என்ற தலைப்பை வைத்துள்ளேன். அதை சினிமாவாக தயாரிக்க நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோரின் உதவியாளர் உட்பட பலரை அணுகினேன். பலரிடம் கரிகாலன் கதை சொன்னேன். கரிகாலன் என்ற கதையின் தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996-ம் ஆண்டு பதிவு செய்தேன். அந்த பெயர் பதிவை புதுப்பிக்க பல முயற்சிகள் எடுத்தும் முடியவில்லை.

இந்த நிலையில் கரிகாலன் என்ற பெயரில் நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தை சில்வர் லைன் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. கண்ணன் என்பவர் இயக்குகிறார். கரிகாலன் என்ற பெயரில் இவர்கள் படம் தயாரித்து வெளியிட்டால், எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். எதிர் திரையுலக வாழ்வும் பாதிக்கும். எனவே கரிகாலன் என்ற பெயரில் படத்தை தயாரிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதி விஜயகாந்த் விசாரித்தார். இந்த மனுவுக்கான பதில்மனுவை ஜனவரி 12-ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி நடிகர் விக்ரம், இயக்குனர் கண்ணன், சில்வர் லைன் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.


கமலின் 'காக்கி சட்டை'யில் நரேன்!


முகமூடி படத்தில் வில்லன் பாத்திரம் ஏற்று நடித்து வரும் நரேன், அடுத்து கமல்ஹாசனின் முத்திரைப் படங்களில் ஒன்றான காக்கிச் சட்டையின் ரீமேக்கில் நடிக்கவுள்ளாராம்.

ஜீவா கதாநாயகனாக நடிக்கும் முகமூடி படத்தை தற்போது மிஸ்கின் இயக்கிவ ருகிறார். இந்த படத்தில் புதுமையாக நரேனை வில்லானாக நடிக்க வைத்துள்ளார் மிஸ்கின். இவர்தான் மலையாளத்து நரேனை தமிழுக்கு சித்திரம் பேசுதடி மூலம் கூட்டி வந்தவர். தொடர்ந்து அஞ்சாதே படத்திலும் வித்தியாசமான வேடத்தில் நரேனை நடிக்க வைத்திருந்தார். இதில் பிரசன்னா வில்லனாக நடித்தார்.

மலையாளத்திலேயே உழன்று கொண்டிருந்த தனக்கு தமிழில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதால் முகமூடி படத்தில் வில்லனாக நடிக்க உடனே ஒப்புக் கொண்டாராம் நரேன்.

இந்தப் படத்திற்கு அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற காக்கிசட்டை படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போகிறாராம் நரேன்.

கமல் சார் நடித்த கதாபத்திரத்தில் நடிக்கப் போகிறேன். இதை எந்தவித குறையில்லாமல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் நரேன்.

காக்கி சட்டை படத்திற்காக இப்போதே பயிற்சிகளை எடுத்து வருகிறாராம். முகமூடி படத்திற்கும் சேர்த்தே இந்தப் பயிற்சியாம்.

கமல்ஹாசன், மாதவி, அம்பிகா ஆகியோரது நடிப்பிலும் சத்யராஜின் வித்தியாசமான வில்லத்தனத்திலும் உருவாகி வெற்றி பெற்ற படம் காக்கி சட்டை. இப்படத்தில்தான் வில்லத்தனத்தில் புது முத்திரை பதித்தார் சத்யராஜ். அப்படத்தில் அவர் பேசிய தகடு தகடு வசனம் இன்றளவும் பிரபலமானது என்பது நினைவிருக்கலாம்.

கமலுக்கு கன கச்சிதமாக பொருந்திய காக்கிசட்டை நரேனுக்கு எப்படி இருக்கும் என்பது படத்தைப் பார்த்தால்தான் தெரியும்.

தனுஷிடம் தோற்று போன சிம்பு


தனுஷின் வொய் திஸ் கொலவெறிடி…’ என்ற தமிங்கிலீஷ் பாட்டு தாறு மாறாக ஹிட்டானதைத் தாங்க முடியாமல், சிம்பு உருவாக்கிய 'ஒரு வார்த்தைப் பாட்டு'க்கு யுட்யூப் வெண்கல விருதை கொடுத்துள்ளது.

தனுஷ் கொலவெறி என்று எதையோ பாடி, யுட்யூப்பில் ஏற்றி, அதற்கு கிடைத்த ஹிட்ஸை வைத்து பிரபலமாக்க ஆரம்பித்தார். ஒரு மாதத்துக்குள் அந்தப் பாட்டு 3 கோடி ஹிட்ஸைப் பெற்றுவிட்டது யு ட்யூப் தளத்தில். அடுத்த சில தினங்களில் அதே ரூட்டைப் பிடித்தார் சிம்பு. உலகில் உள்ள பல மொழிகளில் உள்ள காதல் என்ற வார்த்தையை மட்டும் எடுத்து ஒரு ட்யூனுக்கு ஏற்பட பாடினார். அதே சோனி மியூசிக் மூலம் இதனை யுட்யூபில் பிரபலப்படுத்த ஆரம்பித்தார்.

அதற்கு தோதாக வந்தார் பிஆர்ஓ நிகில் முருகன். அவரது அசத்தல் பிரமோஷன் இந்தப் பாட்டுக்கு ஒரு பலமாக அமைந்துவிட்டது. ஒருவழியாக இந்த வீடியோவை ஒரு மில்லியன் பேர் பார்த்துவிட, ஒரு விருதைக் கொடுத்திருக்கிறது யுட்யூப். தனுஷுக்கு தங்க விருதைக் கொடுத்தவர்கள், சிம்புவுக்கு கொடுத்திருப்பது வெண்கல விருதாம்.

இதுகுறித்து அனுப்பப்பட்ட பிரஸ் ரிலீஸில் தன்னை 'சூப்பர் ஸ்டார் சிம்பு' என்று சிம்புவே போட்டுக் கொண்டிருப்பதுதான் காமெடி (நீங்களாவது சொல்லக் கூடாதா நிகில்?!)!

ஒரிஜினலுக்கு தங்கம்அதற்குப் போட்டியாக வந்த பாட்டுக்கு வெண்கலம்... ரெம்ப்ப நல்லாத்தான் ஜட்ஜ் பண்றாங்க!!

நண்பன் ! : சிம்பு

 கே.வி.ஆனந்த இயக்கிய ' கோ ' படத்தில்  நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் சிம்பு. ஆனால் பல்வேறு காரணங்களால் சிம்பு படத்திலிருந்து விலகிக் கொள்ள அப்படத்தில் ஜீவா நடித்தார்.

அதன் பின், ஜீவா சிம்பு இருவருமே பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசினர். இதனால் இருவரும் எதிரும் புதிருமாகி விட்டனர் என ரசிகர்களிடையே கருத்து பரவியது.

இந்நிலையில், சிம்பு தனது டிவிட்டர் இணையத்தில் 'நண்பன்' டிரெய்லர் குறித்து " நண்பன் படத்தின் டிரெய்லர் அருமையாக இருக்கிறது. நண்பன் படத்தில் நடிக்காதது குறித்து வருத்தம் அடைகிறேன். ஷங்கர் சார் மற்றும் விஜய் அண்ணா இருவரோடும் பணியாற்றும் வாய்ப்பை தவறியதில் வருத்தம்.  ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் இருவருமே அழகாக இருக்கிறார்கள். " என்று தெரிவித்துள்ளார்.

அதோடு நேற்று (ஜனவரி 4) ஜீவாவின் பிறந்தநாள் அன்று டிவிட்டர் இணையத்தில் சிம்பு " பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதர்.. 'நண்பன்' டிரெய்லர் அருமையாக இருக்கிறது. நீங்கள் சூப்பராக இருக்கிறீர்கள். படம் வெற்றியடைய வாழ்த்துகள் " என்று தெரிவித்துள்ளார்.

சிம்புவின் பிறந்தநாள் வாழ்த்துக்கு ஜீவா " வாழ்த்துக்கு நன்றி.. உங்களுக்கு டிரெய்லர் பிடித்து இருப்பதில் மகிழ்ச்சி. விரைவில் சந்திக்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்

மிஸ்டு காலா? 'மிஸ்' பண்ணுங்க, இல்லாவிட்டால் பணம் போய்விடும்!


வெளிநாட்டு எண்களில் இருந்து செல்போன்களுக்கு மிஸ்டு கால்' கால்கள் வந்தால், அந்த எண்ணை திரும்ப அழைக்க வேண்டாம் என செல்போன் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இதனால் நுகர்வோரின் பணம் பறிபோய்விடும் என்பதால் மிஸ்டுகால்களை அழைப்பதில் எச்சரிக்கைத் தேவை என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உப்பில்லா பண்டம் குப்பையிலேஎன்பது பழமொழி ஆனால் செல்போன் இல்லாத மனிதன் செல்லாக்காசு என்பது புதுமொழியாகிவருகிறது. அந்த அளவிற்கு தற்போது செல்போன் இன்றிமையாத ஒன்றாகிவிட்டது.

சராசரி மனிதன் தன்னுடைய இல்லத்திற்கு அன்றாட தேவையான சமையலுக்கு வாங்கித்தர பணம் இருக்கிறதோ இல்லையோ செல்போன் ரீசார்ஜ் செய்வது அன்றாட வாடிக்கையாக வைத்துள்ளான். இந்த செல்போன்கள் மூலம் நன்மைகள் பல இருந்தாலும் தீமைகள் பல உள்ளது. அதே வேளையில் நுகர்வோரை பணம் பறிக்க புது புது திட்டங்களையும். கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் காட்டி செல்போன் நிறுவனங்கள் பணம் பறிப்பதிலேயே குறியாக உள்ளனர். சில நிறுவனங்கள் மிஸ்டு கால் மற்றும் அழைப்பை துண்டித்தாலோ பணத்தை காலி செய்கின்றனர் இது ஒரு வணிக மோசடியே.

பெண் குரலில் பேசி மோசடி

இதையெல்லாம் விட பெண்ணின் குரலில் பேசி பணத்தை கறக்கும் வேலையும் நடைபெறுகிறது. தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவன செல்போனில் 239,243,246,960 போன்ற எண்களில் இருந்து மிஸ்டு கால் வரும். மிஸ்டுகாலை திரும்ப அழைத்தால் அழகான குரலில் பெண் கடலை போடுவார். மூன்று நிமிடம் பேசினால் பணம் அனைத்தும் காலிதான்.

இது ஒரு புறமிருக்க மெசேஜ் ஒன்று வரும். அதில் இரத்தம் தேவை. இந்த மெசேஜை பத்து பேருக்கு பார்வடு செய்தால் உங்களுக்கு போனசாக 100 ரூபாய் தரப்படும் என கூறி பேலன்சை காலி செய்யும் நிலையும் உள்ளது.

இது சம்பந்தமாக விளக்கம் அளித்த தொலைத் தொடர்புத்துறை உயர்அதிகாரி ஒருவர், ஆப்ரிக்கா, லிபியா, மலேசியா, தைவான் போன்ற நாடுகளில் ஒரு கும்பல் பணம் பறிக்க இந்த வேலையை செய்கிறார்கள். இதனை கண்டுபிடிப்பது சிரமம். அவர்களுடன் நெட்வொர்க் அமைத்து பணம் பறிக்கின்றனர். என விளக்கம் அளித்திருக்கிறார்.

நிறுவனம் எச்சரிக்கை

தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசங்களில் உள்ள சில செல்போன்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இதுபோன்ற மிஸ்டு கால்'கள் வந்ததாகவும், அந்த எண்களுடன் திரும்ப தொடர்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், வோடோ போன் நிறுவன பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து இதுபோன்று வந்த புகார்கள் குறித்து அந்த நிறுவனம் விசாரித்து வருவதாக கூறிய அவர், அதுபோன்ற அழைப்புகளை பொருட்படுத்தி மீண்டும் தொடர்பு கொண்டு பேச வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இனி மேல் மிஸ்டு கால் வந்தால் மறக்காம மிஸ் பண்ணிடுங்க சரியா!.