Sunday, 10 July 2011

தெற்கு சூடான் உதயமானது போல் தமிழ் ஈழம் மலரவும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்: வைகோ

 
தெற்கு சூடான் உதயமான திருநாளான இந்த ஜூலை 9 ம் நாள் அன்று தாய் தமிழகத்து மக்கள் சூளுரைப்போம். சுதந்திர தெற்கு சூடானின் உதயம், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கு பன்னாட்டு அரங்கில் நுழைவாயில் ஆகட்டும். இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம்பெற்று விட்டது. பிரபஞ்சப் பூச்செடியில் புதிதாக ஒரு மலர் பூத்து உள்ளது. ஆபிரிக்க கண்டத்தின் வடபகுதியில், தெற்கு சூடான் சுதந்திரத் தனிநாடு என உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது. தலைநகர் ஜூபாவில் சுதந்திரக்கொடி பறக்கிறது.
சல்வாஹிர் மியார்டிட், நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராக ஆகி விட்டார். இனப்படுகொலைக்கு ஆளாகி, துன்பம் என்னும் நரக இருளில் தத்தளித்த கருப்பர் இன மக்களின் அடிமை நுகத்தடியை முறித்து தங்கள் மண்ணை, சுதந்திர பூமியாக உலகம் ஏற்றுக் கொண்டதை, ஆடிப்பாடி கோலாகலமாக நடத்தும் கொண்டாட்டங்களில், கருப்பர் இனத்து சிறுவர் சிறுமிகள், தங்களின் சுதந்திர தேசக்கொடியுடன் குதித்து கும்மாளம் இடுவதை, ஊடகத்திரைகளில் காணும் போது, ஈழத்தமிழர்களும், அவர்களின் பிள்ளைகளும் இப்படி சுதந்திர ஆனந்தப் பள்ளு பாடும் நாள் விரைவில் மலராதா? என்ற ஏக்கம் நெஞ்சை அடைக்கிறது.
தெற்கு சூடான் விடுதலைத் திருநாள் கொண் டாட்டங்களில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், அமெரிக்க குடியரசின் முன்னாள் தலைவர் ஜார்ஜ் புஷ் உள்ளிட்ட பன்னாட்டு அதிபர்களும் பங்கு ஏற்கின்றனர். இந்தியாவும், தன் பங்குக்கு குடியரசின் துணைத்தலைவர் ஹமீது அன்சாரியை அனுப்பி வைத்து உள்ளது.
நைல் நதி தீரத்தில் இந்த கருப்பர் நாடு மலர்ந்திட, அம்மக்களின் பொது வாக்குப்பதிவை நடத்தியது. அந்த தீர்வைத்தானே தமிழ் ஈழ மக்கள் இன்று கேட்கிறார்கள். தாய்த் தமிழகத்தின் இளைஞர்கள், கோடிக்கணக்கான மக்கள், அந்த இலக்கை அடைய, உரிமைப்போர், முழக்கம் செய்யும்போது எந்த சக்தி அந்த தீர்வை தடுத்து விட முடியும்? உலகின் மிகப்பழமையான நைல் நதி பாய்ந்தோடும் சூடான் குடியரசு நாடு, முன்னோரு காலத்தில் எகிப்தியப் பேரரசின் ஆதிக்கத்திலும், பின்னர் பிரித்தானியகக் காலனி நாடாகவும் இருந்து, 1956 முதல் சுதந்திர நாடாக ஆயிற்று.
வடக்கு சூடான் பகுதியில் அராபியர்களின் வழித்தோன்றல்களும், நூபியர்களும் வாழ்கின்றனர். தெற்கு சூடான் பகுதியில் கருப்பர் இன மக்களும், இயற்கை வழிப்பாட்டுப் பழங்குடியினரும் வசிக்கின்றனர். வடக்கே இஸ்லாம் மார்க்கமும், தெற்கே கிறிஸ்துவ மார்க்கமும் ஆளுமை கொண்டு உள்ளன. வடக்குக்கும், தெற்குக்கும் இடையே மூண்ட மோதல்களால் 56 முதல் 72 வரை உள்நாட்டுப் போரும், மீண்டும் 83 ல் இரண்டாம் உள்நாட்டுப் போரும் மூண்டன.
1989 ல் திடீர் புரட்சியை நடத்திய ராணுவ தளபதி உமல்அல்பசீர், குடியரசு தலைவராக முடிசூட்டிக் கொண்டார். இன்று வரையிலும், அவரே சர்வாதிகாரியாக இருக்கின்றார். எண்ணெய் வளம் மிக்க தெற்கு சூடானில் தொடர் ராணுவத் தாக்குதல்கள், இனப்படுகொலையாகவே அல்பசீர் அரசால் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் படுகொலைக்கு உள்ளாயினர்.
பாய்ந்தோடும் நைல் நதியில் அவர்களின் செங்குருதி கலந்தது. இனக்கொலை நடத்திய அதிபர் உசேன்அல்பசீருக்கு 87 சதவீத ஆயுதங்களை சீனாதான் வாரி வழங்கியது. ரஷியா தன் பங்குக்கு 8 சதவீத ஆயுதங்களை தந்தது. இதெல்லாம் எதற்காக? சூடானின் எண்ணெய் வளத்தை கொள்ளை அடிப்பதற்காக.
தெற்கு சூடானில் முதலில் ராணுவத்தில் பணி ஆற்றி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஜான்கராங், சூடான் மக்கள் விடுதலைப்படையின் தலைவர் ஆனார். 2005 ம் ஆண்டு விமான விபத்தில் அவர் மாண்டார்.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் விதித்த பொருளாதாரத் தடை உள்ளிட்ட அழுத்தங்களால், சூடான் அரசும், தெற்கு சூடான் மக்கள் விடுதலை இயக்கமும் நய்வாசா அமைதி உடன்படிக்கை செய்து கொண்டன. தெற்கு சூடான், தனி நாடாகப் பிரிந்து செல்வதா? அல்லது சூடான் குடியரசிலேயே நீடிப்பதா? என்பதை 2011 ம் ஆண்டு ஜனவரியில் பொது வாக்குப்பதிவு மூலம் தீர்மானிப்பது என்று முடிவு செய்தனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி பொது வாக்குப்பதிவை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு அமெரிக்க குடியரசு தலைவர் ஓபாமா, சாட், லிபியா, கென்யா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா, ஏதியோப்பியா, நைஜீரியா, ருவாண்டா ஆகிய நாடுகளின் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். திட்டமிட்டவாறு வாக்குப் பதிவை நடத்தாவிடில் சூடான் நாட்டின் மீது பொருளாதார முற்றுகையை அமெரிக்கா தீவிரப்படுத்தும் என்றும், திட்டமிட்டப்படி வாக்குப்பதிவை நடத்தினால் பயங்கரவாத நாடு என சூடான் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதாகவும் அறிவித்தார்.
தெற்கு சூடானில்தான் 80 சதவீத எண்ணெய் கிணறுகள் உள்ளன. இந்த எண்ணெய், வடக்கு சூடானின் துறைமுகங்கள் வழியாகத்தான் அயல்நாடுகளுக்கு அனுப்ப முடியும். எனவே தங்கள் துணை இல்லாமல் தனிநாடாக, தெற்கு சூடான் இயங்க முடியாது என்று சூடான் அரசும், அதற்கு துணையாக சில அதிபர்களும் கூறி வந்தது உரிமைச் சம்மட்டியின் அடியால் நொறுங்கிப் போய்விட்டது.
சூடான் ராணுவமும், அரசு ஏவிய ஆயுதப் குண்டர் கூட்டமும் நடத்திய படுகொலைகளால் வீடு, வாசல் இழந்து வடக்கு சூடானில் தலைநகர் கர்டோமைச் சுற்றிலும் உள்ள முகாம்களில் மட்டும் ஏறத்தாழ இருபது லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம் புகுந்து இருந்தனர். துன்பத்தில் துடிதுடித்த அந்த மக்களும், இந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க உரிமை கோரியபோது, முதலில் மறுத்த சூடான் அரசு பின்னர் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டது.
உகாண்டாவிலும், கென்யாவிலும் அகதிகளாக இருந்தவர்களும் தங்கள் தாயகத்துக்கு திரும்பி வந்து வாக்கு அளித்தனர். 2011 ஜனவரி 9 ந்தேதி முதல் 15 ந்தேதி வரையிலும், ஆறு நாட்கள் பொது வாக்குப்பதிவு நடைபெற்றது. தெற்கு சூடானின் மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டினர் அந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க வேண்டும். அதில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தருகின்ற தீர்ப்பு எதுவாயினும் ஏற்பது என சூடான் அரசும், விடுதலை இயக்கமும் ஒப்புக்கொண்டு இருந்தன.
ஆனால் வாக்குப் பதிவில் பங்கு ஏற்ற 97 விழுக்காட்டினருள், 99 விழுக்காட்டினர் தெற்கு சூடான் தனி நாடாக அமைவதற்கு ஆதரவு அளித்தனர். வாக்கு அளிக்கப்பதிவு செய்து கொண்டோர் 39,47,676 பேர். வாக்கு அளித்தவர்கள் 38,41,994 பேர். செல்லுபடியான வாக்குகள் 38,37,406 பேர். தனிநாட்டுக்கு ஆதரவு 37,92,518 பேர். எதிர்ப்பு 44,888.
தெற்கு சூடான், சுதந்திர தேசக்கொடி பட்டொளி வீசுகிறது. விடுதலை சங்கநாதம் திசையெங்கும் கேட்கிறது. ஆனாலும், சூடான் நாட்டுக்குள் எந்த நேரமும் குமுறி வெடிக்கும் என்ற நிலையில், டர்புர் பிரதேசப் பிரச்சினை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. அங்கு வாழும் பழங்குடி மக்கள், ஆதிக்க இனத்தினரால் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். மனித இனத்தின் பேரழிவுகளுள் ஒன்று என்றே உலகத் தலைவர்களுள் பலர் அதை குறிப்பிட்டு உள்ளனர். அங்கும் ஒரு வாக்குப்பதிவை 2012 ம் ஆண்டில் நடத்துவது என தீர்மானித்து உள்ளனர்.
வடக்கு, தெற்கு, மேற்கு டர்புர் பகுதிகளை உள்ளடக்கி, சுயாட்சி அதிகாரம் கொண்ட, ஒருங்கிணைந்த டர்புர் மாநிலம் அமைப்பதா? அல்லது தற்போது உள்ளவாறு மூன்று மாநிலங்கள் என்ற நிலையே நீடிப்பதா? என்பதை அந்த வாக்குப் பதிவு முடிவு செய்யும்.
மேலும் வடக்கு சூடானுக்கும், தெற்கு சூடானுக்கும் நடுவே அமைந்து உள்ள அபெய் மாநிலம், யாருக்கு சொந்தம் என்பதுவும் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. மோதலுக்கு இது வழிவகுக்கக்கூடும் என்பதால், அதற்கும் ஒரு தனி வாக்குப்பதிவுதான் தீர்வாக அமையக்கூடும். சூடான் அதிபர் அல்பசீர் நடத்திய இனப்படுகொலைக் குற்றங்களுக்காக அனைத்து உலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று 2004 ம் ஆண்டு ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம், 1564 ஆவது தீர்மானத்தின்படி முடிவு செய்தது.
2005 ம் ஆண்டு மார்ச் மாதம், அதே மன்றம் அறிவித்ததற்கு இணங்க, 2008 ம் ஆண்டு ஜூலை 14 ம் நாள் அனைத்து உலக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் அல்பீசீரை கைது செய்யும்படி ஆணை பிறப்பித்தது. 2010 ம் ஆண்டு ஜூலை மாதம் திஹேக் நகரில் உள்ள நீதிமன்றம், அல்பசீரை இனக்கொலை நடத்திய குற்றவாளி என அறிவித்து விட்டது.
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் அவனது கூட்டாளிகளும் அனைத்து உலகக் குற்ற இயல் நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவும், அதற்கு உரிய நடவடிக்கைகளை ஐ.நா.மன்றமும், உலக நாடுகளும் மேற்கொள்ளவும், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்குப்பதிவு, பன்னாட்டுப் பார்வையாளர்களின் மேற்பார்வையில் நடத்தப்படவும், தெற்கு சூடான் உதயமான திருநாளான இந்த ஜூலை 9 ம் நாள் அன்று தாய் தமிழகத்து மக்கள் சூளுரைப்போம்.
சுதந்திர தெற்கு சூடானின் உதயம், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கு பன்னாட்டு அரங்கில் நுழைவாயில் ஆகட்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

13வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படம்


13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தில் சத்தியராஜ், சீமான் , நாசர், மணிவண்ணன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவர உள்ள நிலையில், இப் பட இசைவெளியீட்டு விழா லண்டனிலும், நோர்வேயிலும் நடைபெறஉள்ளது. இப் படத்தில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள், மற்றும் பாடகர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். உச்சிதனை முகர்ந்தால் படத்தை ஈழத் தமிழர்கள் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும் ! இன்ஸ்பெக்டராக வரும் சீமான் அவர்களின் வசனங்கள் அணல் பறப்பவையாக அமைந்துள்ளதோடு, ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத் திரைப்படமானது உலகளாவியரீதியிலும், மற்றும் இந்தியாவிலும் பல விருதுகளை தட்டிச் செல்லும் அளவுக்கு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.


உணர்வாளர்கள் சீமான், சத்தியராஜ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் முதல் தமிழ்ப்படம் "உச்சிதனை முகந்தால்" ஆகும். ஈழத்துச் சிறுமியாக செல்வி நீதிகா இப் படத்தில் நடித்துள்ளார். இப்படமானது சர்வதேச விருதுகளைத் தட்டிச்செல்லும் அளவுக்கு தரத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளதாக அப் படத்தின் ரெய்லர்களைப் பார்வையிட்டவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இத் திரைப்படம் தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது !



உச்சிதனை முகர்ந்தால்


செய்திக் குறிப்பு:


எல்லாக் குழந்தைகளும் இறைவனால் ஆசீர்வதிக்கப் படுவதில்லை. 13 வயது புனிதவதியை அறிந்தவர்கள், கனத்த மனத்துடன் இந்த உண்மையை ஒப்புக்கொள்வார்கள். இறைவனால் ஆசீர்வதிக்கப்படாத ஆயிரமாயிரம் குழந்தைகளின் அடையாளம் அவள். புனித நதியைப் போல உற்சாகம் பொங்க ஓடிக்கொண்டேயிருந்த புனிதவதியின் வாழ்க்கை, வானவில்லைப் போல கண்ணெதிரில் தொலைந்துபோகும் கதையைக் கண்ணீர் மல்கக் கவிதையாக்கியிருக்கிறது, புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படம்.
உச்சிதனை முகர்ந்தால் - திரைப்படத்தின் கதை, புனிதவதி என்கிற அழகுத்தேவதையைச் சுற்றியே படர்கிறது. எனினும் இது அற்புதங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்த கற்பனைத் தேவதைகளின் கதை இல்லை. எல்லாச் சாத்தான்களாலும் சபிக்கப்பட்டிருக்கும் ஒரு யதார்த்த தேவதையின் கதை. அவளுடன் சேர்ந்து சிரிப்பதும், அவளுடன் சேர்ந்து அழுவதும்தான் எவருக்கும் சாத்தியம்.


புகழேந்தி தங்கராஜ் இயக்கிய முந்தைய திரைப்படமான - காற்றுக்கென்ன வேலி - தமிழ்த் திரையுலகில் பேசாப் பொருளையும் துணிவுடன் பேசிய படம். குறுக்கே கிடக்கும் 26 மைல் கடல், மனித நேயத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்த படம். தணிக்கைத் தடைகளை உடைத்தெறிந்து வெற்றி கண்ட காற்றுக்கென்ன வேலி . யைப் போன்றே, கண்மூடித் தனமாக நசுக்கப் பட்ட ஓர் இனத்தின் வரலாற்றை, அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது - உச்சிதனை முகர்ந்தால்.


புனிதவதியாக சிறுமி நீநிகா நடித்துள்ளார். நீநிகா, தேவர் பிலிம்ஸ் தயாரித்த எம்.ஜி.ஆர். படங்களுக்கு வசனம் எழுதிய அய்யாப்பிள்ளையின் பேத்தி. உயிருக்குயிராக அவளை நேசிக்கும் பேராசிரியர் நடேசனாக சத்யராஜ், அவரது மனைவியாக சங்கீதா நடித்துள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் அன்டனியாக சீமான், மூத்த மருத்துவர் தெய்வநாயகமாக நாசர் நடித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன், ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், அமுதன் என்கிற நாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. உச்சிதனை முகர்ந்தால் - திரைப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார், புகழேந்தி தங்கராஜ். பிரபல எழுத்தாளர் தமிழருவி மணியன் வசனம் எழுதியுள்ளார். திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவது இதுவே முதல்முறை. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளுக்கு மேலும்மேலும் மெருகேற்றியுள்ளார், இசையமைப்பாளர் டி. இமான்.


ஒளிப்பதிவு: பி. கண்ணன் மற்றும் மணவாளன்.
படத்தொகுப்பு: பி. லெனின்.


தயாரிப்பு: குளோபல் மீடியா ரூ என்டர்டெய்ன்மென்ட் (Global Media & Etertainment as) நிறுவனத்தின் சார்பில் குளோபல் மீடியா இன்வெஸ்ட் (Global Media Invest as) இணைத் தயாரிப்பாளர்கள்: ஸ்ரீவன் புஸ்பராஜா, சிறி பாலசுந்தரம், சிவகணேசன் தில்லையம்பலம், றமணன் கந்தையா மற்றும் விஜயசங்கர் அசோகன் ஆகஸ்ட் மாதம் - உச்சிதனை முகர்ந்தால் - திரைப்படத்தை வெளியிடத் தேவையான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


ஜூலை 31ம் தேதியன்று, உச்சிதனை முகர்ந்தால் - திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, லண்டன் மாநகரில் நடைபெற இருக்கிறது. மறுநாள், ஆகஸ்ட் 1ம் தேதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இசை வெளியிடப்பட இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாக்களில், சத்யராஜ், இமான், சங்கீதா, பாடகர்கள் மாதங்கி மற்றும் பல்ராம் பங்கேற்கின்றனர்.


நன்றி.








இலங்கையின் தோல்வியைக் கொண்டாடிய தமிழர்கள் !

சிங்களப் பேரினவாதத்தின் ஆசீர்வாதத்தினை பெற்ற அணியான சிரிலாங்காவின் மட்டையாட்ட விளையாட்டுத் தொடரில் இறுதியாக இங்கிலாந்து வெற்றி பெற்றது. இவ் வெற்றியினை பிரித்தனியா வாழ் தமிழர்கள் அனைவருக்கும் இனிப்புக் கொடுத்து கொண்டாடினார்கள். தமிழர்களுடன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து அவ்வழியே சென்றவர்களுக்கு இனிப்புக்கள் கொடுத்ததோடு தமிழீழத்தின் தேசியக் கொடிகளைத் தாங்கியவாறு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

சிரிலங்காவுடன இங்கிலாந்து விளையாடக்கூடாது என பிரித்தானிய தமிழ் இளையோர்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்புப் போராட்டம் நடாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


உலகின் மிகப்பெரிய புகைப்படத்தினால் உருவாக்கப்பட்ட தரை (படங்கள் இணைப்பு)

பிரிட்டிஷ் கலைஞர் Helen Marshall என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த புகைப்பட பாலிங்கித்தரை ThinkTank என்ற நகரத்தில் உள்ள Millenium பூங்காவில் உள்ளது. இவற்றுள் மொத்தம் 1,10,000 புகைப்படங்கள் உள்ளன.





ஆபத்தான நாற்காலியில் சாகசம் (வீடியோ இணைப்பு)

ரஷ்யாவிலுள்ள மாஸ்கோ என்ற நகரத்தில் வசிக்கும் 66 வயதான Henri Rechat என்பவர் தரையிலிருந்து 144 அடி உயரமுள்ள கட்டிடத்தின் விளிம்பில் நாற்காலியில் அமர்ந்து சாகசம் செய்துள்ளார்.

மாட்டிற்கு பிறந்த ஏலியன் (வீடியோ இணைப்பு)

தாய்லாந்தில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு மாட்டிற்கு பிறந்தது தான் இந்த ஏலியன். இறந்து போன இந்த ஏலியன் பார்ப்பதற்கு குழந்தை போல வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறது.

பிரித்தானியாவில் தனது திறமையை வித்தியாசமாகக் காட்டிய முரளி! (வீடியோ இணைப்பு)

முரளி பந்து வீச்சில் சூரப் புலி என்பது யாவரும் அறிந்ததே... இங்கே முரளியின் இன்னொரு அசாத்திய திறமையைக் காணலாம்...


உலகில் இதுவரை யாரும் விளையாடாத ஒரு வித்தியாசமான அதேவேளை சுவாரசியமான போட்டி இங்கிலாந்து சுழல்பந்து வீச்சாளர் கிரகெம் பீட்டர் சுவனுக்கும் இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

விக்கெட்டின் மேல் ஒரு கிளாசை நிற்கவைத்து அதன் மேல் ஒரு நாணயத்தை வைத்து தனது அபார பந்து வீச்சினால் நாணயத்தை மட்டும் வீழ்த்தியுள்ளார் முரளி...

அந்த விளையாட்டை நீங்களும் கண்டு களியுங்கள்...

யாழ். நீர்வேலியில் தோன்றிய அதிசய வானம்! (பட இணைப்பு)

இயற்கை அன்னையின் அழகு எப்பவுமே அதிசயிக்கதக்கது தான்.... அனுபவமான ஓவியக் கலைஞனால் நேர்த்தியாக வரையப்பட்ட ஓவியம் போலக் காணப்படுகிறது வானம்...

யாழ்ப்பாணத்தில் உள்ள நீர்வேலி பிரதேசத்தின் ஒரு தோட்டத்திலிருந்தே மேற்படி அழகிய காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது....

நேற்று மாலை 5 .30 மணியிலிருந்து 6 மணி வரையான காலப்பகுதியினுள் இவ்வாறு ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வானம் அதிசயமாகக் காணப்பட்டது....

இந்தப் புகைப்படத்தினை மனிதன் வாசகர் ஒருவரே எமது செய்திப் பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளார்...

விளையாட்டு வீரர்கள் போதியளவு அறிவில்லாதவர்கள் போல் நீண்ட காலம் நடிக்க முடியாது



விளையாட்டு வீர வீராங்கனைகள் போதியளவு அறிவில்லாதவர்கள் போல் நீண்ட காலம் நடிக்க முடியாது. விளையாட்டு என்பது விளையாட்டு வீர வீராங்கனைகளின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்.
அதிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. விளையாட்டு அவர்களின் நேசிப்பிற்குரிய ஒன்றாகும். குறிப்பாக துடுப்பாட்ட விளையாட்டானது இனம் மற்றும் சமய வேறுபாடுகளைக் களைந்து எல்லோரும் ஒற்றுமையுடன் விளையாட வழிவகுக்கின்றது.

இவ்வாறு அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட The Sydney Morning Herald ஊடகத்தின் கருத்தாடல் பகுதியில் Peter Roebuck எழுதியுள்ள கருத்தாடலில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், சிறிலங்கா இராணுவப் படைகளால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், மற்றும் ஏனைய துன்புறுத்தல்கள் என்பன தற்போது அவுஸ்திரேலிய துடுப்பாட்ட [Cricket] வீரர்கள் மத்தியில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனின் சனல் 04 தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் தொடர்பான ஆவணப்படம் இந்த வாரம் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியின் Four Corners ல் வெளியிடப்பட்ட பின்னர் அத்திரைப்படத்தைப் பார்த்த அந்நாட்டின் பிரபல துடுப்பாட்ட வீரர் ஒருவர் மிகவும் அதிர்ச்சியில் உறைந்திருப்பதுடன் பயங்கரக் கனவுகளைக் காண்பதாகவும் அறியப்படுகிறது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய விளையாட்டு அமைப்பானது சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதப் படுகொலை தொடர்பான விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் சிறிலங்காவிற்கு செல்லவுள்ளனர்.



இது தொடர்பான நிலைப்பாட்டை எடுக்கும் வரை அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், சிறிலங்காவுடன் எந்தவொரு விளையாட்டுச் செயற்பாடுகளிலும் ஈடுபட விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தப் படுகொலைகள், 1980ல் சிம்பாப்வேயின் மக்களுக்கு ஏற்பட்டதைப் போன்றதொரு சம்பவம் எனவும் அவுஸ்திரேலிய விளையாட்டுச் சமூகம் தெரிவித்துள்ளது.

1950 களில் மேற்கிந்தியத் தீவானது தனது நாட்டின் கிரிக்கட் தலைவராக ஒரு கறுப்பினத்தவரை நியமிப்பதில் மறுப்புத் தெரிவித்தபோது அதனை சிலர் கண்டித்தனர். அந்த மக்கள் துடுப்பாட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் lbw விதிமுறை தொடர்பாகப் பேசுவதில் மிக விருப்பம் கொண்டிருந்தனர்.

மிக மகிழ்ச்சியான மேற்கிந்தியத்தீவு மக்கள் தொடர்பான ஒளிப்படங்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்கும் நற்பண்பு கொண்ட சிறிலங்கா மக்கள் தொடர்பான ஒளிப்படங்கள் என்பவற்றை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் இவ்வொளிப்படங்கள் தொடர்பான உண்மைத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகின்றன.

இந்நிலையில் விளையாட்டு வீர வீராங்கனைகள் போதியளவு அறிவில்லாதவர்கள் போல் நீண்ட காலம் நடிக்க முடியாது. விளையாட்டு என்பது விளையாட்டு வீர வீராங்கனைகளின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்.

அதிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. விளையாட்டு அவர்களின் நேசிப்பிற்குரிய ஒன்றாகும். குறிப்பாக துடுப்பாட்ட விளையாட்டானது இனம் மற்றும் சமய வேறுபாடுகளைக் களைந்து எல்லோரும் ஒற்றுமையுடன் விளையாட வழிவகுக்கின்றது.

அண்மையில் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு முஸ்லீம், இந்து, பௌத்தம், கிறீஸ்தவம் எனப் பல்வேறு மதங்களை, இனங்களைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள். இன மத பேதமின்றி சகல மக்களுக்கும் உதவ வேண்டிய கடப்பாடு விளையாட்டு வீரர்களுக்கு உண்டு.

தனது உள்ளுர் விடயங்களில் தலையீடு செய்யவேண்டிய தேவை விளையாட்டுத்துறைக்கு இல்லை. சட்டபூர்வமான கட்சிகளுக்கிடையிலான தெரிவை அரசியல் சட்டங்கள் வழங்குகின்றன.

இறையாண்மைத் தேசங்கள் தமக்கான நலனில் அதிக அக்கறை காட்டுகின்றன. சர்வதிகார ஆட்சி என்பது பிறிதொரு விதமான ஆட்சியை மேற்கொள்கின்றது.

கடந்த 40 ஆண்டுகளில் துடுப்பாட்ட உலகானது கறுப்பினத்தவர்கள் மீதான நிறவெறி ஆட்சி மற்றும் சிம்பாவேயின் ZANU-PF கொடுங்கோன்மை ஆட்சி ஆகிய இரண்டையும் எதிர்த்து நின்றது.

இந்த இரு சம்பவங்களிலும், விளையாட்டைப் புறக்கணிப்பது தொடர்பான விவாதங்கள் பலமாக முன்வைக்கப்பட்டன. இந்த அடிப்படையில், தென்னாபிரிக்காவில் ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அதன் பின் தென்னாபிரிக்காவில் மீண்டும் விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

சிம்பாப்வேயின் எதிர்க்கட்சியினரின் விட்டுக் கொடுப்பில் ஜனநாயக ஆட்சி இடம்பெறுவதால் அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தின் A அணியினர் சிம்பாப்வேயுடன் கிரிக்கட் விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது சிறிலங்கா விவகாரத்தை துடுப்பாட்ட உலகம் தனது கவனத்தில் எடுத்துள்ளது. அடுத்த ஆண்டில் சிறிலங்காவிற்கான தனது சுற்றுப் பயணத்தை பிரிட்டன் துடுப்பாட்ட அணி மேற்கொள்வதற்கு முன்னர் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தனது நாட்டு அரசாங்கத்திடம் பிரிட்டன் துடுப்பாட்ட அணித் தலைவர் மைக்கல் அதேற்றன் [Michael Atherton] வலியுறுத்திக் கூறியுள்ளார்.

எதியோப்பிய உணவு நெருக்கடிக்குப் பின்னர் சனல் 04 தொலைக்காட்சிச் சேவையில் காண்பிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் கொலைக்களங்கள் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அதேற்றன் மேலும் விபரித்துள்ளார்.

சிறிலங்காவில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கமே இவ்வாறாள கொடூரச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை சாட்சியங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர்க் காலத்தில் எந்தவொரு ஊடகவியலாளர்களையும் அனுமதிக்கவில்லை. அத்துடன், தற்போது சிறிலங்காவின் யுத்தக் குற்றங்களை ஆதாரத்துடன் நிரூபித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிக்கும் சிறிலங்கா அரசாங்கமானது பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.

எந்தவொரு நாட்டிற்குச் செல்வதற்கான தீர்மானத்தை எடுக்க முன்னரும், அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் அது தொடர்பாக மிக ஆழமாகச் சிந்திப்பது வழமையாகும்.

சிறிலங்காவில் பல பத்தாண்டு காலங்களாக இடம்பெற்று முடிவிற்கு வந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்கா இராணுவப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் அரசாங்கத்தின் பெரும் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது முடிவிற்கு வந்ததன் பின்னர் தற்போது அங்கு வெளிப்படையாக அமைதி நிலவுகின்றது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்ப உறுப்பினர்களின் கைகளில் சிறிலங்காவின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரங்கள் குவிந்துள்ளன.

இது தொடர்பில் விளையாட்டு செயற்பாடுகள் தொடர்பான புறக்கணிப்பை எங்கிருந்து ஆரம்பித்து முடிப்பது என்பதைத் தெரிந்து கொள்வது மிகக் கடினமான செயலாக உள்ளது.

நியாயமற்ற யுத்த நடவடிக்கைகளால் ஈராக்கியப் பொதுமக்கள் பல குண்டுத் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தார்கள். இதற்குப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டனரா? மிக மோசமான செயற்பாடுகளுக்கும் தீமையான முறைமைகளுககும் இடையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இரங்குவதென்பது மிகக் குறைவே.

துடுப்பாட்ட உலகமானது தனக்கான விளையாட்டுத் துறை சார் பெருமைகளைக் கொண்டுள்ள அதேவேளை, இது பல துறைசாரா திருப்திகரமான செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது.

மேற்கிந்தியத்தீவின் துடுப்பாட்ட தலைவராக கறுப்பினத்தவர் ஒருவரை நியமிப்பதற்கு வழிசமைத்தமை, அவுஸ்திரேலிய துடுப்பாட்ட அணியில் முஸ்லீம் இனத்தவர் ஒருவர் உள்வாங்குப்பட்டமை, பிறிதொரு முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த ஒருவரை இந்திய துடுப்பாட்ட அணித் தலைவராக்கியமை, தமிழர் ஒருவர் தனது நாட்டுக்காக 800 ரெஸ்ற் விக்கற்றுக்களைப் (Test wickets) பெற்றுக் கொண்டமை போன்றன துடுப்பாட்ட உலகால் சாதிக்கப்பட்ட விடயங்களாக உள்ளன.

விளையாட்டுத் துறையால் முன்னேற்றத்தைக் காட்ட முடியும். ஆனால் விளையாட்டுத்துறை சார் வீர, வீராங்கனைகள் தாம் பிறிதொரு உலகில் வாழ்வது போன்று பாசாங்கு செய்ய முடியாது. அதாவது உலகம் வேறு விளையாட்டு வேறல்ல. துன்பங்களில் பங்கு கொள்ளாது தப்பித்தல் என்பது சிறுபிள்ளைத்தனமான ஒன்றாகும்.

இவ்வாறு அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட The Sydney Morning Herald ஊடகத்தின் கருத்தாடல் பகுதியில் Peter Roebuck எழுதியுள்ள கருத்தாடலில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
சுவரில் நடக்கும் வினோத மனிதன் (வீடியோ இணைப்பு)
மனிதர்கள் அவர்களின் திறமைகளின் அடிப்படையில் பார்க்கும் போது மிகவும் வினோதமானவர்களாக காணப்படுகிறார்கள். வீட்டு சுவற்றில் நம்மால் நடக்க முடியுமா, முடியாது. ஆனால் இந்த வினோத மனிதர் சுவரில் ஓடி காட்டுகிறார்.
சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியே போலிக் காணொலியை தயாரித்தார் (வீடியோ இணைப்பு)
சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றக் காட்சியின் உண்மையான மூலப்பிரதி என்று சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட காணொலியை இராணுவப் புலனாய்வுப் பிரிவே தாயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



இந்தக் காணொலியை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்.கேணல் சுரேஸ் சாலியே தயாரித்து தமிழ்மொழியில் குரல் மாற்றம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் பணிப்பின் பேரிலேயே லெப்.கேணல் சுரேஸ் சாலி இந்த போலிக் காணொலிப் பதிவைத் தயாரித்துள்ளார்.

லெப்.கேணல் சுரேஸ் சாலி நன்றாக தமிழ்மொழியில் உரையாடும் தேர்ச்சி பெற்றவர் என்பதாலேயே அவரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன் இந்தக் காணொலிப் பிரதியைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவே வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.