Wednesday, 31 August 2011

ஜெயலலிதா வரலாற்று புகழ் பெற்றுள்ளார்: வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசு தலைவருக்கு வேண்டுகோள்விடுத்து, ஒரு மனதாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதா வரலாற்று புகழ் பெற்றுள்ளார்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு தீர்மானம் இதுவரை நிறைவேற்றப்பட்டது கிடையாது. பிற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் வழிகாட்டும் ஒளிச்சுடராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோடான கோடி தமிழ் மக்கள், தமிழகத்தில் மட்டும் அல்லாது தரணி எங்கும் வாழுகின்ற தமிழ் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனையை எதிர்ப்போரும், உச்சி மேல் வைத்து மெச்சும் பெருமையை முதல் அமைச்சர் பெற்றிருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகம் அவருக்கு பாராட்டும், வாழ்த்தும், நன்றியும் தெரிவிக்கிறது.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

வாதாடுவதற்கு கட்டணத்தைப் பற்றி கவலையில்லை! மூன்று உயிர்கள் முக்கியம்! தமிழர்களுக்காக வருகிறேன்!- ராம் ஜெத்மலானி!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் செப்டம்பர் 9-ம் தேதி தூக்குத் தண்டனை’ என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் தமிழ் உணர்வாளர்கள் தொடங்கிவிட்டார்கள்.
பூந்தமல்லி தனி நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்திய நிலையில்... தமிழக ஆளுநர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, மூவரும் 'கருணை மனு’ அனுப்பிவைத்தார்கள்.
தமிழக ஆளுநராக அப்போது இருந்த ஃபாத்திமா பீவி இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்தார். இதை எதிர்த்து பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். 'ஒரு மாநிலத்தின் ஆளுநர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது.
மாநில அமைச்சரவையின் முடிவைத்தான் வழிமொழிய வேண்டும். எனவே, ஃபாத்திமா பீவியின் முடிவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்!’ என்று பழ.நெடுமாறனுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் சந்துரு சொல்ல... நீதிபதி அதனை ஏற்றுக்கொண்டு ஃபாத்திமா பீவியின் நிராகரிப்பைத் தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் இந்தியக் குடியரசுத் தலைவர் முன்னால் இருக்கும் மனு ஒன்று மட்டுமே பாக்கி இருந்தது. 1999-ம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்ட கருணை மனுவை 12 ஆண்டுகள் கழித்து நிராகரித்துள்ளார் பிரதிபா பாட்டீல்!
ஆளுநர், குடியரசுத் தலைவர் இருவருமே கருணை மனுவை நிராகரித்த நிலையில்... மீண்டும் நீதிமன்றத்தை நாட தமிழ் உணர்வாளர்கள் முடிவெடுத்தார்கள்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை அடிக்கடி வேலூர் சிறைக்குச் சென்று சந்தித்து வந்த இளம் வழக்கறிஞர்களான பாரிவேந்தன், பிரபு ஆகியோர், 'கருணை மனு நிராகரிக்கப்பட்டால் அதன் பிறகு உடனடியாகச் செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்துவிடுவது...’ என்று பல மாதங்களுக்கு முன்பே வேலைகளை ஆரம்பித்தார்கள்.
டெல்லியில் காலின் கான்சிவேல்ஸ் என்ற வழக்கறிஞரை சந்தித்தனர். 'ஹியூமன் ரைட்ஸ் லா நெட்வொர்க்’ என்ற அமைப்பின் மூலம், நெடுங்காலமாக மனித உரிமை வழக்குகளுக்காக மட்டும் வாதாடி வருபவர் இவர்.
மனித உரிமைகளுக்கான உலகளாவிய பல விருதுகளைப் பெற்றவர். அவர் இந்த வழக்கில் வாதாடுவதற்கு ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே, மும்பையில் இருக்கும் மொகித் சவுத்ரி என்ற இன்னொரு வழக்கறிஞர் குறித்த தகவல் கிடைத்தது. தூக்குத் தண்டனைக்கு எதிராகத் தொடர்ந்து வாதாடி வரும் மொகித் சவுத்ரியையும் இதற்காகக் கொண்டுவந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்து, இந்த வழக்கறிஞர்கள் அவரையும் சந்தித்தனர். 'ராம்ஜெத்மலானி இருந்தால் நல்லது’ என்று அவர் ஆலோசனை சொன்னாராம்.
மனித உரிமை, தூக்குத் தண்டனை ஆகியவை குறித்து எத்தனையோ சாதகமான விஷயங்கள், தீர்ப்புகளை நாங்கள் எடுத்துவைக்கலாம். ஆனால், ராம்ஜெத்மலானிதான் நீதிமன்றத்தில் அழுத்தம் திருத்தமாகவும்... கூடுதல் கடுமையாகவும்கூட வாதாடுவார்.
கடுமையாகக் கடைசி வரைக்கும் போராடுவார்’ என்று மொகித் சவுத்ரி சொல்ல... அவருடன் பேச முடிவானது. 'எனக்கு ஏராளமான வழக்குகள் இருக்கின்றன. எனவே, இதில் ஆஜராக முடியாது. அதுவும் சென்னைக்கு வர இயலாது’ என்று ஜெத்மலானி சொன்னதும்... இந்த வழக்கறிஞர்கள் வைகோவை சந்தித்து விஷயத்தைச் சொன்னார்கள்.
இது ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்தது!
ஜெத்மலானியைத் தொடர்புகொண்ட வைகோ, ''மூன்று தமிழர்களின் உயிரைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.கோடிக் கணக்கான தமிழர்களின் சார்பாக நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். மறுப்பு ஏதும் சொல்லிவிடாதீர்கள்!'' என்று எடுத்த எடுப்பிலேயே அழுத்தம் தர... அவரால் மறுப்பு ஏதும் சொல்ல முடியவில்லை.
மறுநாள் வேலூர் சிறையில் பேரறிவாளனை சந்தித்த வைகோ, நம்பிக்கையுடன் இருங்கள். விடுதலை ஆவீர்கள்...’ என்று சொல்லிவிட்டு வந்தார்.
இது தொடர்பான அனைத்து ஆவணங்களுடன், 23-ம் தேதி ராம்ஜெத்மலானியின் வீட்டில் நீண்ட நேரம் ஆலோசனைகள் நடந்தன. ''எந்தத் தேதியாக இருந்தாலும், அனைத்து வழக்குகளையும் தள்ளிவைத்துவிட்டுத் தமிழர்களுக்காக வருகிறேன்!'' என்று ஜெத்மலானி சொல்லி இருக்கிறார்.
இந்த நிலையில்தான் 25-ம் தேதி மூவரின் தூக்கையும் உறுதி செய்து மத்திய அரசில் இருந்து கடிதம் வந்தது. மீண்டும் வைகோ உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ராம்ஜெத்மலானியை சந்தித்தனர்.
அனைத்துத் தகவல்களையும் விரிவாகக் கேட்டுக்கொண்ட ஜெத்மலானி, ''இவர்கள் மூவரையும் காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது'' என்றார் நெகிழ்வாக. ''மூன்று தமிழர்களின் உயிர்தான் எனக்கு முக்கியம். வாதாடுவதற்கான கட்டணத்தைப்பற்றிக் கவலைப்படவில்லை!'' என்று சொன்னாராம் ஜெத்மலானி.
ராம் ஜெத்மலானி, காலின் கான்சிவேல்ஸ், மொகித் சவுத்ரி ஆகிய மூவரது வாதங்கள், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரது உயிரைக் காக்குமா... என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்!
ஜூனியர் விகடன்

மரண தண்டனையிலிருந்து உயிர்களைக் காப்பதற்குப் போராடும் நாங்கள் அதற்காக வேறு உயிர்களை இழக்கக்கூடாது – பொன். பாலராஜன்

மரண தண்டனையிலிருந்து உயிர்களைக் காப்பதற்குப் போராடும் நாங்கள் அதற்காக வேறு உயிர்களை இழக்கக்கூடாது. இவ்வாறு நாடு கடந்த அரசின் சபாநாயகர் பொன். பாலராஜன் தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த அரசின் ஏற்பாட்டில் இன்று ரொறன்ரோ நகரிலுள்ள கனடியத் தமிழ்க் காங்கிரஸ் மண்டபத்தில் இடம்பெற்ற செல்வி. செங்கொடியின் வணக்க நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு பேசுகையில்,
தமிழினம் இன்று ஒரு புதிய வரலாற்று யுகத்திற்குள் புகுந்து கொண்டிருக்கிறது எனவும் இந்த மூவரின் தூக்குத் தண்டனை மனு நிராகரிப்பானது உறங்கிக் கிடந்த தமிழினத்தை மீண்டும் தட்டியெழுப்பியுள்ளது எனவும் தமிழக தொப்புட்கொடியுறவுகளிற்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லையென்றும் இந்தப் பொன்னான தருணத்தில் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென மன்றாட்டமாகக் கேட்பதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் உரையாற்றிய முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழத்திற்காக தன்னை அற்பணித்துச் செயலாற்றி வருபவருமான திரு. ஈழவேந்தன் அவர்கள் பேசுகையில்,
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் பிறந்த மண். அந்த மண்ணிலே பிறந்த செங்கொடி எப்படி அண்ணாத்துரையால் காஞ்சி பெருமையடைந்ததோ அதே போன்றதொரு பெருமையை அந்த மண்ணிற்குக் கொடுத்து விட்டார் என்று தெரிவித்தார்.
நாடு கடந்த அரசின் பிரதிப் பிரதமரான கலாநிதி ராம் சிவலிங்கம் இந் நினைவு நிகழ்வில் பேசுகையில்,
நாடு கடந்த அரசின் ஆழ்ந்த அனுதாபத்தை செல்வி செங்கொடியின் குடும்பத்தாருக்கும் இந்த ஆழ்ந்த துயரில் மூழ்கிப் போயிருக்கின்ற தமிழக உறவுகளிற்கும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் பேசிய தமிழ்த் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவரான திரு. துரைராஜா அவர்கள் பேசுகையில்,
விடுதலைப் போராட்டத்தில் பல்லாயிரம் மக்களைப் பலி கொடுத்த நாங்கள் தமிழக உறவுகளை மன்றாட்டமாகக் கேட்பதெல்லாம் உங்கள் உணர்வு எங்களிற்கு தேவை. தயவு செய்து உங்கள் உயிர்களை கொடுக்கும் நிகழ்வுகளை இனியும் நாங்கள் சந்திக்க முடியாது என வேதனை ததும்ப உரையாற்றினார்.
கனடியத் தமிழ்க் காங்கிரஸின் சார்பில் பேசிய திரு. துசி துரைரட்ணம் அவர்கள் அங்கு பேசுகையில்,
கனடியத் தமிழர்களின் சார்பில் செங்கொடியின் குடும்பத்தினருக்கு தமது அனுதாபத்தைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டதோடு, மரண தண்டனை ஒழிப்பிற்காக குரல்கொடுக்கும் அமைப்புக்களுடன் சேர்ந்து கனேடியத் தமிழர்கள் மரண தண்டணை ஒழிப்பை தமிழ்நாட்டில் மாத்திரமல்ல, உலகிலேயே நிறுத்தக் குரல் கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
நாடு கடந்த அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோ அன்ரனி, சண் உள்ளிட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் பல பொது அமைப்புக்கள் மற்றும் பழைய மாணவர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளும் தங்கள் அஞ்சலியை நேரடியாகச் செலுத்தினர்.
மாலை 4 மணியிலிருந்து 8 மணி வரை இடம்பெற்ற நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்கள் அஞ்சலியை செல்வி செங்கொடிக்கு உணர்வு பூர்வமாகச் செலுத்தினர்.

மூவரின் விடுதலை வேண்டி பிரித்தானியாவில் இந்தியத் தூதரகம் முன் நடைபெற்ற போராட்டம். (வீடியோ இணைப்பு)


பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்பாக இன்று (30-08-2011) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று பிரித்தானியா வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது.


இப்போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமன்றி வேற்றின மக்களுமாக பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டிருந்ததை காண முடிந்தது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தமது இளமை வாழ்வை கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் கழித்த பின்னரும், அவர்களுக்கு கொஞ்சமும் மனிதனேயமற்ற முறையில் தூக்குத்தண்டனைக்கு உட்படுத்துமாறு வழங்கப்பட்ட நீதியற்ற தீர்ப்பினை எதிர்த்து, உலகெங்கும் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் போராட்டங்களின் வரிசையில் லண்டனிலும் இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தத்து.

இப் போரட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் “இந்திய அரசே நீதியற்ற தீர்ப்பை மாற்று” “தூக்குத் தண்டனையை ரத்துச் செய்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து முழக்ககமிட்டனர்.

அத்தோடு கைகளிலே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உருவப்படங்கள், மற்றும் தூக்குத்தண்டனையை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் தாங்கி நீதிவேண்டி நின்றனர்.

இப் போராட்டத்தில் முத்தாப்பாய் தமிழகத்தில் இம் மூவரின் தூக்குத் தண்டனையை எதிர்த்து வேள்வித் தீயாகிய வீரமங்கை செங்கொடி அவர்களின் திருவுருவப் படத்திற்கு அகவணக்கம் செலுத்தி மலர் அஞ்சலியும் செய்யப்பட்டது.

இதே வேளை வீர மங்கை செங்கொடி அவர்களின் திருவுருவப்படங்களும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்களின் கரங்களில் பரவலாகக் காணமுடிந்தது.

இப் போராட்டத்தின் போது தற்போது தூக்குத் தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் மூவரில் ஒருவரான சாந்தனின் சகோதரி அவர்களும், தமிழ் சொலிடாரிற்ரி அமைப்பின் பிரதிநிதி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தயாபரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ம.தி.மு.க கட்சி சார்பில் இளங்கோ, ஆகியோர் உரையாற்றினர்.

இப் போராட்டத்தின் போது தூக்குத்தண்டனையை ரத்துச்செய்யக் கோரும் மனு ஒன்று இந்திய தூதரக அதிகாரியிடம் முருகனின் சகோதரியினால் கையளிக்கப்பட்டது.

இன்று மாலை 3:00 மணிக்கு ஆரம்பமான இப் போராட்டமானது மாலை 7::00 மணியளவில் தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் கோசத்துடன் நிறைவு பெற்றது.

இப் போராட்டம் லண்டனின் மத்திய பகுதியில் மாலை நேரத்தில் நடைபெற்றதினால் அதிகளவான வேற்றின மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








செங்கொடியின் உடல் இன்று அடக்கம் -செங்கொடியின் புரட்சிகர நடனம்! (வீடியோ இணைப்பு)


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து பலியான செங்கொடியின் உடல் அடக்கம் அவரது சொந்த ஊரில் இன்று (31.08.2011) நடக்கிறது.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி கடந்த 28.08.2011 அன்று காஞ்சீபுரத்தில் மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த இளம்பெண் செங்கொடி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தீக்குளித்து இறந்தார்.

தகவல் கிடைத்ததும் பல்வேறு கட்சி தலைவர்கள், தமிழ் அமைப்பு நிர்வாகிகள், சினிமா உலக பிரமுகர்கள் ஏராளமானோர் காஞ்சீபுரத்திற்கு விரைந்து வந்து செங்கொடிக்கு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல் சொந்த ஊரான மேல்கதிர்பூர் மங்களம்பாடி கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அங்குள்ள மக்கள் மன்ற அலுவலகத்தில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் சுமார் 7 மணி நேரம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

செங்கொடியின் உடல் அடக்கம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்ததால் உடல் அடக்கத்தை ஒரு நாள் தள்ளிவைக்க மக்கள் மன்றம் முடிவு செய்தது. அதன்படி நேற்று வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தது. 8 வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை அடுத்து செங்கொடியின் உடல் அடக்கம் இன்று (31.08.2011) நடக்கிறது. இதில் பங்கேற்க கட்சி தலைவர்கள், தமிழர் அமைப்பு நிர்வாகிகள் காஞ்சீபுரத்தில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

செங்கொடி பங்கேற்ற புரட்சிகர நடனம்!

ஏராளமானோர் புடைசூழ ஊர்வலமாகச் சென்ற செங்கொடியின் சடலம்: தலைவர்கள் அஞ்சலி


தூக்கு தண்டனையை தடுக்கக்கோரி தீ குளித்து இறந்த இளம்பெண் செங்கொடியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஊர்வலமாக அவரது சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ராஜிவ் கொலையில் 3 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்யக்கோரி காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்தார். மரணத்துக்கு காரணமாக அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. செய்தி அறிந்து ஏராளமானோர் திரண்டு வந்து கதறி அழுதனர்.

நள்ளிரவில் அங்கு வந்த மதிமுக தலைவர் வைகோ, நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சீமான், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்டோர் செங்கொடி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நேற்று உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டது. காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அலுவலர் வீரப்பன், எஸ்.பி. மனோகரன் அங்கு வந்தனர்.

அவர்களிடம், பொது மக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக பொது இடம் ஒதுக்க மக்கள் மன்றத்தினர் அனுமதி கோரினர். அதற்கு அவர்கள், மறுப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதையடுத்து செங்கொடி உடல் ஏற்றப்பட்ட வாகனம் ஏராளமானோர் புடைசூழ மதியம் 1 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம் இரவு 7 மணிக்கு கீழ்கதிர்ப்பூர் கிராமத்திற்கு சென்றது. அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. செங்கொடியின் இறுதி சடங்கு நாளை மாலை 4 மணிக்கு நடக்கிறது.





மும்பையில் நடந்ததாக பரபரப்பு: நயன்தாரா-பிரபுதேவா ரகசிய திருமணம்?


நயன்தாரா, பிரபுதேவா திருமணம் மும்பையில் ரகசியமாக நடந்ததாக
பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்தனர். பொது விழாக்களில் கை கோர்த்து பங்கேற்றனர். நயன்தாராவை மணப்பதற்காக பிரபுதேவா முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார். நயன்தாராவும் இரு வாரங்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார்.

இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என் எதிர்பார்க்கப்பட்டது. மும்பையில் அல்லது திருப்பதி கோவிலில் திருமணம் நடக்கலாம் என்றும் கூறப்பட்டது. நடிகர், நடிகைகள், நண்பர்கள், விருந்தினர்களை அழைத்து ஆடம்பரமாக திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடப்பதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது யாரையும் அழைக்காமல் ரகசியமாக இருவரும் திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இத்திருமணத்தில் இருவரின் பெற்றோர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்து முறைப்படி புரோகிதர்கள் வைத்து வேள்வி வளர்த்து இந்த திருமணம் நடந்தது என்கின்றனர்.

ரம்லத்துக்கு பிறந்த மகன்கள் மீது பிரபுதேவா இன்னும் பிரியமுடன் இருக்கிறார். அடிக்கடி அவர்களுடன் போனில் பேசுகிறார். விவாகரத்தான போது மகன்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள சொத்து மற்றும் வீடுகளை எழுதி கொடுத்துள்ளார்.

நயன்தாராவுடனான திருமணத்தை அழைப்பிதழ்கள் அச்சிட்டு ஆடம்பரமாக நடத்தினால் மகன்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கருதியதால் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. நெருக்கமான நடிகர், நடிகைகளுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து அளிக்க முடிவு செய்துள்ளார்களாம்.

திருமணத்தை மும்பை ரிஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனாலும் இந்த திருமணத்தை உறுதி செய்ய முடியவில்லை. பிரபுதேவாவுக்கு நெருக்கமானவரிடம் இது குறித்து கேட்டபோது, இருவருக்கும் திருமணம் நடந்ததாக மும்பையில் வதந்தி பரவி உள்ளது. அதில் உண்மை இல்லை. அடுத்த மாதம்தான் அவர்கள் திருமணம் நடக்கும் என்றார்.

தூக்குத் தண்டனையை இரண்டு மாதங்கள் நிறுத்தி வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான  மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது, தூக்குத் தண்டனையை எட்டு வாரங்கள் நிறுத்திவைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை செப்டம்பர் 9ம் தேதி தூக்கிலிடுமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து தமிழகமெங்கும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
மேலும், தூக்குதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மூவரின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து வருகிறது.
மனுதாரர்கள் சார்பில் டெல்லியை சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, மும்பை மூத்த வக்கீல்கள் மோகீத் சவுத்ரி, காலின் சால்வேல்ஸ் ஆகியோர் ஆஜராகினர்.
துரைசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வைகோ, அற்புதம்மாள் மற்றும் பல தமிழ் ஆர்வலர்களும் நீதிமன்றில் குழுமினர்.

மனு மீதான விசாரணையில், மூவரின் தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூக்கில் போட தடை விதிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கொண்டாடினர். மேலும், தூக்குக்கு எதிராக தமிழகமெங்கும் போராடியோர் பட்டாசுகள் கொளுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில்,
மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளமையானது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.
இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.
இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் 3 பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.
முன்னதாக நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருட கால தாமதம் மனிதாபிமானமே இல்லாத செயல்!- உயர்நீதிமன்றத்தில் ஜேத்மலானி ஆவேசம்

ஒருவர் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருடங்கள், 4 மாத கால தாமதம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 வருடங்களை அவர் சிறையில் கழித்த நிலையில் நீ நாளை தூக்கில் தொங்க விடப்படப் போகிறாய் என்று கூறுவது மனிதாபிமானமே இல்லாதது என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக இன்று ஆஜரானார் ராம்ஜேத்மலானி. அப்போது அவர் வாதிடுகையில், கிட்டத்தட்ட 11 வருடங்கள், நான்கு மாதங்கள் தாமதம் செய்துள்ளனர், இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து நிராகரிக்க. இது மிகப் பெரும் வேதனை.
ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில் கழித்து விட்ட நபருக்கு, கருணை மனு தாக்கல் செய்து 11 வருடங்கள் ஆகி விட்ட பின்னர், திடீரென கூப்பிட்டு உன்னை நாளை சிறையில் போடப் போகிறோம் என்று சொல்வது எந்தவகையில் நியாயம். இது மனிதாபிமானமே இல்லாத ஒன்று.
இவ்வளவு தாமதம் ஏன் என்று கேட்டு நிச்சயம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இது சாதாரண விஷயம் இல்லை. அடிப்படையிலேயே தவறு செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பங்கு இதில் மிகவும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 வருடங்கள் சிறையில் அடைபட்டிருப்பதே ஒருவருக்கு பெரும் மன உளைச்சலைக் கொடுக்கும் விஷயமாகும். இந்த வழக்கில் மிகப் பெரிய உளைச்சலை சந்தித்த ஒருவரை தூக்கில் போடும் முடிவை அரை மணி நேரத்தில் எடுத்துள்ளனர். இதை சாதாரணமாகஎடுத்துக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டார் ராம்ஜேத்மலானி.
இதையடுத்து கருணை மனுவை நிராகரிக்க ஏன் இத்தனை தாமதம் என்று கேட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்

பேரறிவாளனின் இளமைக் காலங்கள்... (படங்கள் இணைப்பு)