Thursday, 1 September 2011

ஜிம்பாப்வேயில் ஒளிந்திருக்கிறாரா கடாபி?-மனைவி, பிள்ளைகள் அல்ஜீரியாவுக்கு ஓட்டம்

பதவியிறக்கப்பட்ட லிபிய அதிபர் கடாபி ஜிம்பாப்வேயில் ஒளிந்திருக்கக்கூடும் என்று இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த நாளிதழான டெய்லி மெயிலில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

கடாபி ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேக்கு சொந்தமான ஜெட் விமானத்தில் கடந்த வாரம் ஜிம்பாப்வேயில் வந்து இறங்கினார். ஆனால் முகாபேயின் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் சரம்பா இதை மறுத்துள்ளார். கடாபியைப் பார்த்தால், என் சார்பில் நலம் விசாரியுங்கள் என்று அவர் கூறினார்.

ஒரு வேளை கடாபி ஜிம்பாப்வேயில் தஞ்சம் புக அனுமதி கேட்டால் கொடுக்கப்படுமா என்றதற்கு சரம்பா பதில் அளிக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கடாபி ஜிம்பாப்வேயில் தான் பதுங்கி இருக்க வேண்டும் என்று ஏராளமானோர் கருதுகின்றனர். அவர் கடந்த புதன்கிழமையே ஹராரே வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை ஹராரேவில் மின்வெட்டு ஏற்பட்டது. அது கடாபி வருவதை யாரும் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்காகத் தான் என்று சிலர் கருதுகின்றனர்.

முகாபேயின் அரசியல் எதிரிகள் கடாபி ஜிம்பாப்வேயில் வந்திறங்கியதைப் பார்த்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. கடாபியுடன் அவரது மகன் சைப் அல் இஸ்லாமும் தப்பித்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

கடாபியின் இன்னொரு மகனான காமிஸ் போராட்டத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று புரட்சிக்காரர்கள் தெரிவித்தனர். ஒன்று காமிஸ் இறந்திருக்கக்கூடும் அல்லது அவர் எப்பொழுதோ நாட்டை வி்ட்டு வெளியேறிவிட்டார் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மனைவி, மகன்,மகள் அல்ஜீரியாவில்

அதேசமயம், கடாபியின் மனைவி சபியா, மகன்கள் ஹன்னிபல், முகமது, மகள் ஆயிஷா ஆகியோர் தரை வழியாக அல்ஜீரியாவுக்கு தப்பியோடிவிட்டார்கள். அல்ஜீரியா கடாபியின் குடும்பத்தை வரவேற்று தஞ்சம் அளித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை என்று புரட்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் அகமது பானி தெரிவித்துள்ளார்.

லிபிய போராட்டத்தை அடக்குவதற்காக அல்ஜீரியா கடாபிக்கு உதவியதாக அவர் தெரிவித்தார்.

6 மெர்சிடீஸ் செடான்கள் கடந்த வாரம் லிபியாவில் இருந்து அல்ஜீரியாவுக்குள் நுழைந்ததைப் பார்த்ததாக ஒரு போராளி தெரிவித்தார் என்று எகிப்து நியூஸ் ஏஜென்ஸியான மெனா தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடாபியின் மனைவி, 3 பிள்ளைகள் அல்ஜீரியாவுக்கு வந்துள்ளதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.

கடாபி பதவிக்காக எதையும் செய்யக்கூடியவர். கடைசி நிமிடத்தில் கூட அவர் ஏதாவது செய்யக்கூடும் என்று போராளிகளின் தலைவர் அப்துல் ஜலீல் நேட்டோ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

தனி தமிழீழமே தொல்.திருமா பேச்சு (வீடியோ இணைப்பு)


உயிர்ப்பிச்சை கேட்டு மகிந்தவின் காலில் வீழ்ந்த ரூபவாகினி ஒளிப்பதிவாளர்

சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பிலுள்ள சிலர் தன்னைக் கொலை செய்வதற்கு முயற்சிப்பதாகவும், தனது உயிரைக் காப்பாற்றுமாறும் கோரி சிறிலங்கா ரூபவாகினி கூட்டுத்தாபன ஒளிப்பதிவாளரான சமன்குமார ராமவிக்கிரம சிறிலங்கா அதிபரின் காலில் வீழ்ந்துள்ளதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, ரூபவாகினி ஒளிப்பதிவாளரான சமன்குமார ராமவிக்கிரம போர்முனைச் செய்தி சேகரிப்புக்காக சிறிலங்காப் படையினருடன் தங்கியிருந்தார்.

அவரே சிறிலங்காப் படையினரின் போர்க்குற்றக்காட்சிகள் பலவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையிலேயே தன்னைக் கொலை செய்வதற்கு பாதுகாப்புத் தரப்பிலுள்ள சிலர் திட்டமிடப்பட்டுள்ளதாக கப்டன் ஜெயவீர என்ற இராணுவ அதிகாரி தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் சமன்குமார ராமவிக்கிரம சிறிலங்கா அதிபரிடம் கூறியுள்ளார்.
கப்டன் ஜெயவீரவும் சமரன்குமார ராமவிக்கிரமவுடன் இணைந்து பணியாற்றியவர் என்பதுடன், விடுதலைப் புலிகளின் மடிக்கணினிகள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களை போர் முனையில் இருந்து கடத்திச் சென்ற போது இவர்கள் இருவருமே சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்க்களக் காட்சிகள் எதையும் தான் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கவில்லை என்று கூறியுள்ள சமன்குமார ராமவிக்கிரம சிறிலங்கா அதிபரிடம் அழுது கொண்டே, தனது உயிரைக் காப்பாற்றுமாறு கெஞ்சியுள்ளார்.

இதையடுத்து அவரைத் துன்புறுத்த வேண்டாம் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோருக்கு மகிந்த ராஜபக்ச தொலைபேசி மூலம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

நீ என்ன கடவுளா? நடிகர் விஜய்க்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்!


 
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. இந்த விழாவையொட்டி ரசிகர்கள் மேற்கண்ட பேனர்களை மதுரையில் வைத்திருந்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் கூறியதாவது,


இவர் திட்டமிட்டே கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்நதவரான நடிகர் விஜய், எப்படி இந்து கடவுள்களான சிவனையும், முருகனையும் படைக்க முடியும்? தமிழகத்தின் அன்னா ஹசாரே என்று தன்னைத் தானே வர்ணித்து பேனர்களை வைக்கச் சொல்லும் விஜய், தனக்கு சம்பளம் எவ்வளவு என்பதை வெளிப்படையாகச் சொல்வரா? அந்த சம்பளத்திற்கு கட்டிய வருமான வரி கணக்கை காட்டுவாரா? அவருடைய கல்யாண மண்டபம் உள்ளிட்டவற்றிற்காக கட்டப்பட்டுள்ள வணிக வரி கணக்கை காட்டுவாரா? வேலாயுதம் படத்தை எப்படியாவது ஓட வைக்க வேண்டும் என்பதற்காக விஜய்யும், அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் இந்து மதத்தை புண்படுத்தும் இதுபோன்ற செயல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

உடனடியாக இந்த பேனர்களை திருப்ப பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்காவிட்டால், எங்கள் கட்சி போராட்ட களத்தில் இறங்கும் என்று இந்து மக்கள் கட்சி கண்ணன் தெரிவித்துள்ளார்.