Thursday, 18 August 2011

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பர் கொடூரக் கொலை

 கோவையில், தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு அக்கும்பல் தப்பி ஓடி விட்டது.

பெரியகுளம், தென்கரை சப்பாணி கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி 55 வயதாகும் இவர் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய நண்பர் ஆவார். கோவையில், பீளமேடு பாரதி காலனி பகுதியில் கெமிக்கல் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

சுதந்திர தினத்தையொட்டி வந்த விடுமுறை நாட்களை சொந்த ஊரில் கழிக்க குடும்பத்தோடு போயிருந்தார் சத்தியமூர்த்தி. நேற்று அதிகாலையில் ஊருக்கு வந்தார். பின்னர் பீளமேடு சென்ற அவர் அலுவகலத்தைத் திறந்து உள்ளே போனார். அப்போது பின்னால் ஆள் நடமாட்டம் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து பின் பகுதிக்குச் சென்றார். அப்போது கட்டடத்தின் உள்ளே சிலர் பொருட்களைத் திருடிக் கொண்டிருந்தனர். சத்தியமூர்த்தியைப் பார்த்து திடுக்கிட்ட அவர்கள் படு வேகமாக கீழே கிடந்த போர்வையை எடுத்து அவரது முகத்தில் மூடினர். பின்னர் சரமாரியாக தங்களது கையில் இருந்த ஆயுதங்களால் வெறி கொண்டு தாக்கினர். இதில் நிலை குலைந்த சத்தியமூர்த்தி ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

கொள்ளையர்கள், சத்தியமூர்த்தியின் கழுத்தையும் அறுத்து கோரமாக கொலை செய்துள்ளனர்.

இந்த நிலையில் காலை ஒன்பதே கால் மணியளவில் அலுவலகத்திற்கு வந்த டிரைவர் விக்னேஷ் கதவுகள் திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே போனபோது கொலை மற்றும் கொள்ளை நடந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டு அலறினார். நிறுவன உரிமையாளர் சசிக்குமார், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

சத்தியமூர்த்திக்கு மனைவி, இருமகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு சமீபத்தில்தான் கல்யாணம் நடந்தது. 2வது மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த கொடூரக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


சென்னை ரயில் பெட்டி ஆலையில் சிங்களர்களுக்குப் பயிற்சி-வைகோ கண்டனம்

 சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிப்பு ஆலையில் சிங்கள அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள மத்திய அரசின் பெரம்பூர் ரயில்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில், இலங்கையைச் சேர்ந்த 12 சிங்கள அதிகாரிகளுக்கு உயர் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதை எண்ணி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.

மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்வதையே தங்கள் அரசின் செயல்திட்டமாக வைத்து இருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

எனவே, மத்திய அரசின் ரெயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையில் சிங்களர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி ம.தி.மு.க.வினர் ஐ.சி.எப். தொழிற்சாலையை முற்றுகையிட்டு நேற்று கண்டனப் போராட்டம் நடத்தினார்கள்.

7 கோடி தமிழர்கள் குடிமக்களாக இருக்கும் இந்தியாவின் எந்த மூலையிலும் சிங்களர்களுக்கு எந்தவிதமான பயிற்சியும் அளிக்கக்கூடாது என்பதோடு, அவர்களை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


சகநடிகை தொந்தரவால் தற்கொலைக்கு முயன்ற புது ஹீரோயின்!

சக நடிகையின் டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்றதாக புதிய நடிகை அங்கீதா புகார் கூறியுள்ளார்.

சுற்றுலா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளவர் அங்கீதா. இவர் புதுமுகம் ஆவார். இவருக்கு தோழியாக சான்ட்ரா நடிக்கிறார். இவர்தான் படப்பிடிப்பு தளத்திலிருந்து கணவர் நடிகர் பிரஜனோடு நேற்று காணாமல் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சான்ட்ரா மீது ஹீரோயின் அங்கீதா புகார் கூறியுள்ளார். சான்ட்ரா தொல்லையால் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "நடிகை சான்ட்ரா தினமும் என்னை அவதூறாக பேசிவந்தார். மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் ஒரு கட்டத்தில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி என் சாவுக்கு காரணம் சாந்த்ராதான் என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்றேன்," என்றார்.

அப்போது அவர் எழுதிய கடிதத்தையும் காண்பித்தார்.

படப்பிடிப்புக்கு வந்த பிரஜின் - சான்ட்ரா மாயம், புது நடிகை அங்கீதா தற்கொலை முயற்சி போன்றவற்றால், இதுவரை பெயரே தெரியாமலிருந்த சுற்றுலா படம் பிரபலமாகிவிட்டது.

ஒருவேளை இதெல்லாம் திட்டமிட்ட விளம்பர முயற்சியோ என்றும் திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள்.


சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் இளைஞர் காங். மனு

 காங்கிரஸ் தலைவர்களையும் தொண்டர்களையும் இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், டிஜிபி ராமானுஜத்திடம் மனு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மனு கொடுத்து விட்டு வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் கூறுகையில், 
விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களை இழிவுபடுத்தியும் சீமான் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தோம். சீமான் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர்களை நிரபராதிகள் என்று பேசி வருகிறார்கள். இதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். உடனடியாக அவர்களை தூக்கிலிடவேண்டும். நீதி மன்றத்தில் விதிக்கப்பட்ட தீர்ப்பை பொதுக்கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்துள்ளோம்.

இது பற்றி பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அவர் பதில் அளித்தார். சீமான் வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார். இதே போக்கு நீடித்தால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம்.

அதே நேரத்தில் எங்களுக்கு விடுதலை புலிகள்தான் எதிரானவர்கள். ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்களை குற்றவாளியாக பார்க்கவேண்டும்.

தமிழர்களின் உணர்வுகளை இதில் சேர்க்கவேண்டாம். சீமான் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் நிச்சயமாக அடுத்தகட்டமாக தகுந்த பதில் அடி கொடுப்போம். இளைஞர் காங்கிரசை பொறுத்தவரை அமைதியாக இருக்க மாட்டோம் என்றார்.

முன்னதாக சத்தியமூர்த்தி பவனிலிருந்து டிஜிபி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர் காங்கிரஸார். அவர்கள் கொடுத்த மனுவில்,

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தூக்குதண்டனைக்கு எதிராகவும், தூக்குதண்டனை கைதிகளை ஆதரிப்பதும் நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். ராஜீவ்காந்தி படுகொலை தூக்குதண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இன்று குரல் கொடுப்பவர்கள் நாளை அப்சல் குருவையும் விடுவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தயங்க மாட்டார்கள்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக அரசின் நிலைமையை காரணமாக கொண்டு தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவி அதனால் வெடிகுண்டு கலாசாரம் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் தமிழர் விடுதலைப்படையை சேர்ந்த 2 பேர் பயங்கரமான வெடிகுண்டு தயாரிப்பதற்கான டெட்டனேட்டருடன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜீவ்காந்தி படுகொலைக்கு காரணமான தூக்குதண்டனை கைதிகளை ஆதரித்து சென்னையில் நாம் தமிழர் கட்சி மற்றும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த போலீசார் வழங்கிய அனுமதியை ரத்துசெய்யவேண்டும். பொதுக்கூட்டத்திற்கு தடையும் விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளனர் காங்கிரஸார்.


நடிகர் மாதவன், நடிகை பிபாஷா பாசு கண்டனம்


அன்னா ஹசாரே கைதுக்கு நடிகர் மாதவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவர்,  ‘’அன்னா ஹசாரேவை தடுத்த விதம், அதிகாரிகளின் மிகவும் முட்டாள்தனமான, அற்பத்தனமான நடவடிக்கை என்பது எனது கருத்து. இது பெரிய தவறு. அமைதியாக போராட்டம் நடத்தும் ஹசாரேவின் உரிமை, அப்பட்டமாக மீறப்பட்டது குறித்து சுப்ரீம் கோர்ட்டு மவுனமாக இருப்பது ஏன்?




தகவல் பெறும் உரிமை சட்டம் போல, லோக்பால் சட்டமும் பின்னாளில் தனக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று மத்திய அரசு பயப்படுகிறதா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை பிபாஷா பாசு,   ‘’நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கும் `ஊழல்` என்னும் பேயை கொல்ல ஹசாரேவுக்கு எல்லோரும் ஆதரவளிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

நடிகைகள் ஷபனா ஆஸ்மி, தியா மிர்சா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

'பாக்ஸ் ஆபீஸ் கிங்' ஷங்கருக்கு பிறந்தநாள்... ரஜினி வாழ்த்து!


பாலிவுட்டில் ஷோ மேன் ஆப் இந்தியா என்ற பெருமைக்குரிய அடைமொழியைப் பெற்றவர்கள் இருவர்தான். ஒருவர் ராஜ்கபூர். அவருக்குப் பிறகு சுபாஷ் கய்.

இன்று அந்தப் பட்டப்பெயர் பாலிவுட்டில் யாருக்குமே இல்லை. மாறாக தென்னிந்திய திரைப்பட உலகின் பாக்ஸ் ஆபீஸ் கிங் எனப் புகழப்படும் இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமாகியுள்ளது.

எந்திரனின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஷங்கரைத்தான் பாலிவுட்டிலிருப்பவர்களும் ஷோமேன் ஆப் இந்தியா எனப் புகழ்கின்றன.

அந்த ஷோமேன் இன்று தனது 48வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்!

இதுவரை 10 படங்களை இயக்கியுள்ளார் ஷங்கர். அவற்றில் இந்தியில் அவர் எடுத்த நாயக் (முதல்வன் ரீமேக்) தவிர மற்ற அனைத்தும் வெற்றிப் படங்கள்தான். குறிப்பாக பாய்ஸ் மட்டும்தான் இவற்றில் 100 நாட்கள் ஓடியது. மற்ற படங்கள் வெள்ளி விழா கண்டன.

அவரது கடைசி இரு படங்கள் சிவாஜி மற்றும் எந்திரன் சூப்பர் ஸ்டார் ரஜினி நாயகனாக நடித்தவை. எந்திரனின் வெற்றிதான் ஷங்கரின் இத்தனை வருட திரைவாழ்க்கையின் உச்சம் என்றால் மிகையல்ல.

பொதுவாக ரஜினியின் படங்களில் அவரைத் தவிர, வேறு யாரையும் ரசிகர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் எந்திரன் வெற்றியில் ரஜினிக்கு இணையான முக்கியத்துவத்தை ஷங்கருக்கும் அளித்தனர் ரசிகர்கள். வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு ரீமேக் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். இந்தப் படம் அவரது வெற்றிப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையுமா என்ற கேள்வியோடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

பிறந்த நாள் காணும் அவருக்கு ரசிகர்களும் திரையுலகப் பிரமுகர்களும் இன்று வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

ஷங்கரின் ஹீரோ ரஜினியும் இன்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார்.


ரஜினிக்கு மருத்துவ பரிசோதனை... பூரண குணம் அடைந்ததாக மருத்துவர்கள் அறிவிப்பு!

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து வந்துள்ள ரஜினியை, முதல் முறையாக மருத்துவர்கள் குழு மீண்டும் பரிசோதித்துப் பார்த்தது. ரஜினி மிகவும் நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ரஜினிக்கு கடந்த ஏப்ரல் 29-ந் தேதி 'ராணா' படப்பிடிப்பில் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இசபெல்லா மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

சிறுநீரக பாதிப்பு இருந்ததால் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். அங்குள்ள ஆஸ்பத்திரியில் ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பூரண குணமடைந்து கடந்த மாதம் 13-ந் தேதி சென்னை திரும்பினார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீடு மற்றும் கேளம்பாக்கம் பண்ணை இல்லத்தில் தங்கி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இதுவரை யாரையும் அவர் சந்திக்கவில்லை.

இதற்கிடையில் ரஜினி உடல் நிலையை மீண்டும் பரிசேதித்தனர் மருத்துவர்கள். டாக்டர்கள் ரஜினி வீட்டுக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்தனர். அவர் பூரண நலமடைந்து ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் மாதம் ராணா படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக அடுத்த மாதம் இறுதியில் இன்னொரு முறை ரஜினி உடல் பரிசோதனை செய்து கொள்வார் என கூறப்படுகிறது

ரஜினி மகளுடன் சண்டையா ?- அமலா பால் விளக்கம்

ஐஸ்வர்யா தனுஷுடன் தனக்கு சண்டை எதுவும் இல்லை என்றும் சமாதானமாகவே பிரிந்துவிட்டதாகவும் அமலா பால் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் '3' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தமான அமலா, கால்ஷீட் சொதப்பலால் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இப்போது அவருக்குப் பதில் புதிதாக ஒரு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய தேடி வருகின்றனர் ஐஸ்வர்யாவும் தனுஷும்.

இதற்கிடையே, பெரிய படத்திலிருந்து அமலா நீக்கப்பட்டதால், அவரை ஒப்பந்தம் செய்வது குறித்து தயாரிப்பாளர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழில் அடுத்து முப்பொழுதும் உன் கற்பனைகள் மட்டுமே அமலா பால் கைவசம் உள்ளது. மீதியெல்லாம் தெலுங்குப் படங்கள்தான். இன்னொன்று அறிமுகமான தமிழ் சினிமாவை விட, தெலுங்குப் படங்களில் நடிப்பதையே அவர் கவுரவமாகக் கருதுகிறார்.

சமீபத்தில் தனது முதல் தெலுங்குப் படத்துக்காக படப்பிடிப்புக்கு சென்று வந்த அமலா, தெலுங்கில் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக பேட்டி கொடுத்திருந்தார். மேலும் மேலும் அதிக தெலுங்குப் படங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

தெலுங்குப் படங்களுக்காகத்தான் தமிழ்ப் படங்களை புறக்கணிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, "தெலுங்கில் பெரிய வாய்ப்புகள் வருகின்றன. எனவே அவற்றுக்கு முன்னுரிமை தருகிறேன். '3' படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம், கால்ஷீட் இல்லாததுதான். நான் அந்தப்படத்துக்கு அக்டோபரில் தேதி தருவதாகச் சொன்னேன். ஆனால் அவர்கள் செப்டம்பரில் கேட்டார்கள். எனவே அவர்களிடம் நல்ல முறையில் சொல்லிவிட்டே விலகினேன்," என்றார்.


ரஜினி மகள் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக கமல் மகள் சுருதி

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் புதிய பட விவகாரத்தில் ஒரேநாளில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இன்று காலைதான் இந்தப் படத்திலிருந்து அதன் நாயகி அமலா பால் நீக்கப்பட்டார். தெலுங்குப் படங்களில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுத்துவிட்டதால், ஐஸ்வர்யா தனுஷின் '3' படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் தனுஷின் ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் கமல் மகள் ஸ்ருதிஹாஸன்.

இந்தப் படத்துக்கு முதலில் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டவர் ஸ்ருதிதான். இவரை மனதில் கொண்டே கதையை எழுதியதாக ஐஸ்வர்யா தனுஷ் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

ஆனால் தெலுங்கில் பிஸியாக இருப்பதால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை என ஸ்ருதி தெரிவித்ததால் அமலா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இப்போது, ஸ்ருதியின் தெலுங்குப் படம் ஒன்று இரண்டு மாதங்களுக்கு தள்ளிப் போய்விட்டது. இந்த இடைவெளியில் '3' படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டார் ஸ்ருதி.

இதைத் தொடர்ந்து 3 படம் மிகப் பெரிய அந்தஸ்தைப் பெற்றுவிட்டது.

பின்னே, சூப்பர் ஸ்டாரின் மகள் இயக்குகிறார், சூப்பர் ஸ்டாரின் மருமகன் ஹீரோவா நடிக்கிறார், உலக நாயகன் கமல்ஹாஸன் மகள் ஹீரோயினாக நடிக்கிறார் என்றால் சும்மாவா

நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!!


நடிகர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து, இந்து மதத்துக்கு மாறியுள்ள நடிகை நயன்தாராவுக்கு, இதுவரை உள்ளே நுழைய அனுமதி கிடைக்காத இந்து கோயில்களில் இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது. 

சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு, தனக்கு ஆறுதலாக இருந்த பிரபுதேவாவை காதலித்து வரும் நயன்தாரா விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தனக்காக தன் காதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்த பிரபுதேவாவுக்காக, சமீபத்தில் கிறிஸ்த்துவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. வேத விற்பன்னர்கள் முன்னிலையில் சுத்த பரிகாரமும் செய்துள்ளார்.

நயன்தாரா இதற்கு முன் பல இந்துக் கோயில்களுக்குச் சென்றுள்ளார். ஆனால் குருவாயூர், காளஹஸ்தி, பத்ராசலம் போன்ற கோயில்களுக்கு மட்டும் அவர் செல்லவில்லை. காரணம் பிற மதத்தினருக்கு இந்த கோயில்களில் அனுமதியில்லை. ஆனால் இப்போது நயன்தாரா இந்துவாக மாறிவிட்டதால், திருமணத்துக்கு முன் கோயில்களுக்குச் சென்று வருகிறார். நேற்று பத்ராச்சலம் ஸ்ரீ சீதா ராமச்சந்திர ஸ்வாமி கோயிலில் நடந்த, ஸ்ரீராமராஜ்யம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் நயன்தாரா. இந்த விழாவில் இளையராஜா, பாலகிருஷ்ணா போன்றவர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு கோயிலுக்குச் சென்று வழிபட்ட நயன்தாராவுக்கு சிறப்பு மரியாதையும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

அடுத்து குருவாயூர் கோயிலுக்குச் செல்கிறார் நயன்தாரா. கடந்த இரு வாரங்களுக்கு முன் நயன்தாராவின் காதலர் பிரபுதேவா, இந்தக் கோயிலுக்கு தனியாக சென்று வழிபட்டார். இந்த முறை நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்று சிறப்பு பூஜைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது - கல்கிசை நீதிமன்றத்தில் கோத்தாபய சாட்சியம்

 
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே நாட்டில் இருந்து தீவிரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மிக் விமானக்கொள்வனவு ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட சண்டேலீடர் நிறுவனத்துக்கு எதிராக, 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கல்கிசை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நேற்று இந்த வழக்கில் சுமார் 2 மணி நேரம் கோத்தாபய ராஜபக்ச சாட்சியமளித்திருந்தார்.

அவர் தனது சாட்சியத்தில், சிறிலங்காவில் போரின் போது என்ன நடக்கிறது என்பது பற்றி தகவல்களை இந்திய அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக வழங்கி வந்தாகவும் கூறியுள்ளார்.

1980களில் வடமராட்சியை கைப்பற்றும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு இந்தியாவுடனான தவறான புரிதல்களை காரணம் என்று கூறிய அவர், அப்போது இந்தியா தலையிட்டிருக்காது போயிருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்னரே தீவிரவாதத்தை முற்றாக அழித்திருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு மிக நெருக்கமாக உள்ள இந்தியா மட்டுமே இராணுவ ரீதியாகத் தலையிடக் கூடிய நிலையில் இருந்ததாவும் கூறியுள்ள கோத்தாபய ராஜபக்ச, இந்தியாவின் சரியான ஒத்துழைப்பு இருந்திருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்னரே போர் முடிவுக்கு வந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜய விமலரட்ண ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட வடமராட்சி நடவடிக்கையை கைவிட நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச போர் பற்றிய தகவல்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு உயர்மட்டக் குழுவொன்றை நியமித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின் போது பத்திரிகைகளில் வெளியாகும் போர் பற்றிய ஆய்வுகளை மக்கள் நம்புகின்ற நிலை இருந்ததாகவும் கூறிய கோத்தாபய ராஜபக்ச, அவர்கள் எழுதுகின்ற கட்டுரைகளில் காயமடைந்த படையினர் பற்றிய எண்ணிக்கை எப்போதுமே மிகைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன்காரணமாக படையினரின் உளவுரண் பாதிக்கப்பட்டதாகவும் கூறிய சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், போர்முனையில் என்ன நடக்கிறது, இழப்புகள் பற்றிய சரியான எண்ணிக்கை என்ன என்ற விபரங்கள் பொதுமக்களுக்குத் தேவைப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாகவே பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தை தொடங்கியதாகவும், போரின் இறுதிக்கட்டத்தில் 40 மில்லியனுக்கும் அதிகமானோர் அதனைப் பார்வையிட்டதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

தான் பாதுகாப்பு செயலராக பொறுப்பேற்ற போது தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியாது என்றே வெளிநாடுகளும், பொதுமக்களும் நம்பியிருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர் ஆயுதப்படைகளைப் பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும், அவர் கூறியுள்ளார்.

கிராமமக்களை பாதுகாப்பதற்கு குடிமக்கள் தொண்டர்படையை பலப்படுத்தியாகவும், அதன் ஆட்பலத்தை 19,000இல் இருந்த 42,000 ஆக அதிகரித்ததாகவும் கூறிய கோத்தாபய ராஜபக்ச, அவர்களில் 5000 பேர் இறுதிக்கட்டப் போரில் பங்குபற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 120,000 ஆக இருந்த இராணுவத்தின் ஆட்பலத்தை 220,000 ஆக அதிகரிப்பதற்கான அனுமதியை சிறிலங்கா அதிபர் தனக்கு வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் சிறிலங்கா படையினரின் உளவுரணை அதிகரிக்கும் திட்டங்கள் பலவற்றை வகுத்தே அவர்களை போருக்குத் தயார்படுத்தியதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

பாதுகாப்பு பிரிவில் என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் எந்தநேரத்திலும் எடுத்துக் கூறுவதற்கு சிறிலங்கா அதிபர் வாய்ப்பளித்திருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட ஆயுதம் ஒன்றின் வெடிபொருட்கள் தீர்ந்து போய் அவற்றை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியதாகவும், அதுபற்றி தான் சிறிலங்கா அதிபரிடம் கூறிய போது, அவர் சீனத் தலைவருடன் தொடர்பு கொண்டு தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்து கொடுத்ததாகவும் கோத்தாபய ராஜபக்ச தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆயுதங்கள் கிடைப்பது சிரமமாக இருந்த போதே சிறிலங்கா அதிபர் அவ்வாறு ஆயுதங்களை பெற்றுக் கொடுத்ததாக கூறிய அவர், அவசர தேவையென்றின் போது தான் நேரடியாகவே பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்களை தாக்காதே- யாழ் நகரில் ஓங்கி ஒலித்த குரல்கள்! (படங்கள் இணைப்பு)


உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல்களையும் படுகொலைகளையும் கண்டித்து யாழ். பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.