Saturday, 13 August 2011

நேதாஜி விமான விபத்தில் இறந்திருக்க முடியாது: டிரைவர் நிஜாமுத்தீன்

 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்று அவரது டிரைவர் நிஜாமுத்தீன் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்துவிட்டதாக சிலரும், உயிருடன் இருப்பதாக சிலரும் கூறி வருகின்றனர். எனவே, அவர் மரணம் குழப்பமாகவே உள்ளது. இந்நிலையில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்று அவரது டிரைவர் நிஜாமுத்தீன் என்பவர் தெரிவித்துள்ளார்.

நேதாஜியின் டிரைவராக இருந்ததாகக் கூறும் நிஜாமுத்தீன் (107) உத்தர பிரதேச மாநிலம் ஆஜம்கட் மாவட்டம், பிலாரியாகஞ்சில் உள்ள இஸ்லாம்புராவில் வசித்து வருகிறார். 

இது குறித்து நிஜாமுத்தீன் கூறியதாக செய்தித்தாள்களில் வந்த செய்தி:
1945-ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார். இந்த விமான விபத்து நடந்து 3, 4 மாதங்களுக்குப் பிறகு நான் தான் அவரை பர்மா, தாய்லாந்து எல்லை அருகே உள்ள சிடங்பூர் ஆற்றங்கரையில் இறக்கிவிட்டேன். விமான விபத்தில் இறந்திருந்தால் நான் எப்படி அவரை சந்திக்க முடியும். அவர் விமான விபத்தில் இறந்திருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். 

ஆனால் ஆற்றங்கரையில் இறக்கிவிட்ட பிறகு நேதாஜி என்ன ஆனார் என்று அவருக்குத் தெரியவில்லை. நேதாஜியுடன் தானும் வருவதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் நேதாஜி அவரைத் திருப்பி அனுப்பிவிட்டு சுதந்திர இந்தியாவில் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார். 

நேதாஜிக்கு நெருக்கமான சுவாமி என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிஜாமுத்தீன் சந்தித்துள்ளார்.

நேதாஜியின் ஆசாத் ஹிந்த் பௌஜ் வழங்கிய நாடு திரும்பல் சான்றிதழ் தான் நிஜாமுத்தீனுக்கும் நேதாஜியின் இயக்கத்திற்கும் இருந்த தொடர்பின் சான்று. அதில் நேதாஜி இயக்கத்தின் நிவாரணம் மற்றும் நாடு திரும்பல் குழுவின் தலைவர் சுவாமி(எஸ்வி சுவாமி) கையெழுத்திட்டுள்ளார்.


மங்காத்தாவில் நடிக்க மிரட்டப்பட்டாரா அஜீத்!


தமிழகத்தின் கடந்த ஆட்சியின் போது சினிமாவிலும் அரசியல் கலந்துவிட்டது, அதனால் தான் முக்கிய நடிகர்களை சில படங்களில் நடித்தாக வேண்டும் என்று மிரட்டுகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. அஜீத்தும் மங்காத்தா படத்தில் நடிக்க மிரட்டப்பட்டார், கட்டாயப் படுத்தப்பட்டார் என்றார்கள்.


ஆனால் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த செய்திகளை சப்பென்று ஆக்கியது வெங்கட் பிரபு சொன்ன விஷயம், முதலில் இந்த கதையில் அஜீத் சார் நடிப்பதாகவே இல்லை. சத்யராஜ் மற்றும் சிலரை வைத்துக் கொண்டு சின்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். க்ளவுட் நைன் சுஷாந்த்திடம் கதையை சொல்லி படம் இயக்க சம்மதம் வாங்கியாகிவிட்டது. தயாரிப்பாளர் துரை தயாநிதியிடம் அனுமதி வாங்கி பம்பாய் சென்று லொகேஷனும் முடிவானது. அந்த நேரத்தில் தான் அஜீத் சாரிடம் இருந்து போன் வந்தது. அப்போது அவர், நல்லா படம் பண்றீங்க! என்று வாழ்த்தினார். இப்போ மங்காத்தா படம் பண்றீங்களா என்றார். ஆமாம் என்றேன்.


டார்க் நைட்படத்தில் கீத் ஃப்லெச்சர் பண்ண வில்லன் கேரக்டர் மாதிரி எதனா இருந்தா சொல்லுங்க, நம்ம சேர்ந்து படம் பண்ணலாம் என்றார். உடனே நான் அமைதியாகிவிட்டேன். என்ன சைலண்ட் ஆகிட்டீங்க என்றார். இல்ல சார் மங்காத்தா படத்திலேயே அப்படி ஒரு கேரக்டர் இருக்கு என்றேன். நம்ம பசங்க எல்லாம் சேர்ந்து பண்ணலாம்ன்னு ஐடியா இருக்கு என்றேன். என்ன கேரக்டர் என்று கேட்டார். அந்த கேரக்டரின் லைனை சொன்னென். உடனே நான் நடிக்கிறேன் என்றார். படத்தில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியும் நான் நடிக்கிறேன் என்று சொன்ன அஜீத் சாருக்கு பெரிய மனசு,  அப்படிதான் இந்த மங்காத்தா அமைந்தது என்றார் வெங்கட்.


இது அஜீத்தோட 50வது படமாக அமைந்துவிட்டது. அதனால் படத்தில் எத்தனை பேர் இருந்தாலும் அஜீத் சாருக்கு தான் முக்கியத்துவம், ஆனால் அதை ஏற்றுக்கொண்டு நடிக்க சம்மதித்தார் அர்ஜுன் சார். அவருக்கு நன்றி. இது கெட்டவங்களோட கதை என்றும் தெரிவித்துக் கொண்டார் வெங்கட் பிரபு.


படத்தில் இரண்டு பாடல்கள் காட்டப்பட்டது. யுவனின்  அதிரடி இசைக்கு அஜீத் நடனம் சூப்பர். அதுவும் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல... என்று ரஜினி பாட்டு பாடும் போது திரையரங்கம் அதிரப்போவது உறுதி.

உலக சாதனைக்காக சிங்கத்துடன் வாழும் மனிதர்(படங்கள் இணைப்பு)

உலக சாதனை படைப்பதற்காக சிங்கத்துடன் 35 நாள் தங்கும் திட்டத்தோடு, அதன் குகைக்குள் நுழைந்திருக்கிறார் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர். உக்ரைனின் வாசிலிகாநகரை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் (40).அங்கு மிருக காட்சி சாலை நடத்தி வருகிறார். இவரது மிருககாட்சி சாலையில் கத்யா என்ற பெண் சிங்கம், சாம்சன் என்ற ஆண் சிங்கம், கரடிகள் மற்றும் பூனைகள் உள்ளன.





தனது மிருக காட்சி சாலைக்கு நிதி திரட்டுவதற்காகவும் உலக சாதனை படைப்பதற்காகவும், பெண் சிங்கத்துடன் 35 நாட்கள் தங்கும் முடிவோடு நேற்று முன்தினம் முதல் அதன் குகைக்குள் சென்றுள்ளார். குகையில் வெப் கேமரா, டாய்லட் மற்றும் குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அலெக்ஸாண்டர் கூறுகையில், கத்யா தற்போது கர்ப்பமாக உள்ளது.





இந்த மாத மத்தியில் அது குட்டி போடும். அதற்கு நான் உதவுவேன். கொடிய மிருகமாக இருந்தாலும் இதுபோன்ற நேரத்தில் அரவணைப்பை விரும்பும். நான் ஒரு ஓவியன் குகையில் எப்போதும் ஓவியம் வரைந்து கொண்டிருப்பேன். விலங்குகளுக்கு சிகரெட், பீர் வாசனை எரிச்சலூட்டும். எனவே அவற்றை முற்றிலும் தவிர்க்கிறேன் என்றார். அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ஜேம்ஸ் ஜாப்லான் என்பவர் சிங்கத்தோடு 2 வாரங்கள் கழித்ததே இதுவரை உலக சாதனையாக இருக்கிறது. இதை முறியடிக்கும் நோக்கத்தோடு குகைக்குள் புகுந்திருக்கிறார் அலெக்ஸாண்டர்.

செல்லபிராணியாக வளர்க்கப்படும் மீன் (வீடியோ இணைப்பு)

இலங்கையில் காலி மாவட்டத்தில் உள்ள கிராமத்து வீடு ஒன்றில் செல்லப் பிராணியாக அதிசய மீன் ஒன்று வளர்க்கப்படுகின்றது. இம்மீனால் இருபது நிமிடங்கள் வரை நீருக்கு வெளியில் உயிர் வாழ முடியும்.





இம்மீனுக்கு மிகவும் பிடித்தமான சாப்பாடு சொக்கலேட். வீட்டில் வளர்க்கப்படுகின்ற மற்றொரு செல்லப் பிராணியான பூனைக் குட்டி இம்மீனோடு நட்பு பாராட்டுகின்றது. இந்த மீனுக்கு பிடித்தமான உணவு சொக்லேட் என்ற போதிலும் இந்த மீன் சாப்பிடாத உணவே இல்லையாம்.

சோறு, மீன், மரக்கறி, பழங்கள் மற்றும் பலவித இனிப்புப் பண்டங்களையும் சாப்பிடுகின்றது.

கண்ணிவெடிகளில் உள்ள இருப்புத் துண்டுகளை விற்கும் சிறுவர்கள் !

கடும் பட்டினி காரணமாக வடபகுதி சிறுவர்கள் உயிராபத்தையும் கவனத்தில் கொள்ளாது இருப்புத் துண்டுகளைச் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் சிறுவர்கள் கண்ணிவெடி உள்ளிட்ட வெடிபொருட்களின் இரும்புத் துண்டுகளையும் மேலும் சிதறிக்காணப்படும் ஆபத்தான இரும்புத் துண்டுகளையும் சேகரித்து வருகின்றனர்.

இராணுவத்தினால் பாதுகாப்பற்ற பிரதேசம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் சென்று இவர்கள் இரும்புத் துண்டுகளைச் சேகரித்து வருகின்றனர். யுத்தம் காரணமாக பெற்றோரை இழந்த மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் இந்த நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர் என அறியப்படுகிறது.

இதேவேளை, இந்த மாவட்டங்களில் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சில சிறுவர்கள் கூலித்தொழில் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதன்காரணமாக சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் வடபகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது.

குறைந்தது அதற்கான எந்தவொரு வேலைத் திட்டத்தையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை. இவற்றுக்குப் பதிலாக அரசாங்கம் ஊடகக் கண்காட்சிகளையே நடத்தி வருகிறது என்று விசனம் தெரிவித்துள்ளனர் வடபகுதி மக்கள்.

மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கிறீஸ் மனிதர்கள்: பின்ணணியில் இராணுவம்?

நாட்டின் பல பகுதிகளிலும் மக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்தியுள்ள கிறீஸ் மனிதன் என்று கூறப்படுவோரின் செயற்பாடுகள் அதிகரிக்கும் நிலையில் இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இராணுவத்தினரினதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படுகின்றதா என்றே சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளது.

மலையகத்தில் ஆரம்பித்து தற்போது கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கிறீஸ் மனிதன் என்று கூறப்படுவோரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

இத்தனைக்கும் அரசாங்கம் ஆக்க பூர்வமான செயற்பாடுகள் எதனையும் செய்யாத நிலையில் அதற்கான எந்த பதிலும் தெரிவிக்கவுமில்லை இந்நிலையில் இப் பிரச்சனை நாளுக்கு நாள் பூதாகரமாகவே உருவெடுத்து வருகிறது.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்ட மாவடியில் இவ்வாறன ஒரு சம்பவம் இடம் பெற்றதாக பொதுமக்கள் தெரிவித்தும் சந்தேக நபர் பிடிக்கப்பட்டும் பொலிஸாரின் செயற்பாட்டில் திருப்தி இல்லாததால் மக்கள் பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

அத்துடன் சம்மாந்துறை பகுதியில் கிறீஸ் மனிதன் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை மக்கள் விரட்டிய போது அவர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குள் ஓடியதாகவும் உடனே பொலிஸ் நிலைய மின் விளக்குகள் அணைக்கப்பட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டதில் இறங்கினர்.

இதே வேளை திருகோணமலைப் இறக்கக்கண்டி பகுதியில் மது போதையுடன் வானில் வந்தவர்கள் இருளில் வானை நிறுத்திவிட்டு நின்றபோது அப்பிரதேசவாசிகள் அவர்களை விசாரித்துள்ளனர்.

அப்போது அவர்கள் பிஸ்டல் மற்றும் கத்தியை காட்டியதினால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் அவர்களை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை வானில் நிலாவெளி. அடம்பொடவெட்டை. இக்பால்நகர் போன்ற பகுதிகளில் இரண்டு இரண்டு பேராக இறக்கிவிட்டு சென்றதை அவதானிக்க முடிந்ததாகவும் பிரதேசவாசியொருவர் தெரிவித்துள்ளார்..

மர்மமனிதர்கள் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கிடையிலான கைகலப்பையடுத்து பொலிஸார் பொதுமக்கள் மீதுநடாத்திய துப்பாக்கிபிரயோகத்தில் ஓருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;

பொத்துவில் ஊறணி பிரதேசத்தில் மூன்று மர்மமனிதர்களை நேற்று வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் துரத்திச்சென்று பிடித்தனர் இதனை கேள்வியுற்ற 6 பொதுமக்கள்; பார்ப்பதற்கு பொத்துவில்pல் இருந்து ஊறணிப்பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை இராணுவத்தினர் ஊறணி பாலத்திற்கு அருகில் வைத்து தாக்கி கைதுசெய்து பின்னர் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இவர்களை விடுதலை செய்யுமாறும் மர்மமனிர்கள் தொடர்பாக பொலிசார் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றதை கண்டித்து பொதுமக்கள் இன்று காலையில் வீதிகளில் தடைகள் ஏற்படுத்தி ரயர்கள் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது ஆர்ப்பாட்டக்காரர் மீது பொலிசார் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அலியார் முகமது மஹஐன் என்பர் உயரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் மறைந்திருந்த மூன்று மர்ம மனிதர்களை இன்று மாலை 3 மணியளவில் பொதுமக்கள் மடக்கிபிடித்தனர்.

அவர்கள் கொச்சத் தமிழில் பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களை பொலிஸார் பொதுமக்களிடமிருந்து மீட்டுச் சென்றுள்ளனர். இதனையடுத்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பையடுத்து பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை கல்லுகளால் தாக்கி முற்றுகையிட முற்பட்டபோது பொலிஸார் பொதுமக்கள் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டதையடுத்து ஜங்கரன் 28 வயது ஆகிய இருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பிரதேசத்தில் பத்ற்ற நிலமை ஏற்பட்டதுடன் வீதிகளில் தடைகளை ஏற்படத்தி ரயர்கள் எரிக்கப்பட்டன . மீண்டும் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் துப்பாக்கி பிரயோகம் செய்த பொலிஸாரை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸ் நிலையம் மீது தாக்கதல் நடத்தினர்.

இதனையடுத்து பொலிஸார் ஆகாயத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டகாரரை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமல் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர் இராணுவத்தினர் வீதிகளில் நின்றவர்களை பொல்லுகளால் தாக்கி துப்பாக்கிபிரயோகம் செய்து ஆர்ப்பாட்டகாரரை கலைத்ததுடன் வீதிகளில் எரிந்துகொண்டிருந்த ரயர்கள் மீது பொதுமக்களின் துவிச்சக்கரவண்டிகள் போடப்பட்டு எரிக்கப்பட்டதுடன் பல மோட்டார் சைக்கிள்களை அடித்து சேதப்படுத்தி வீதிகளில் வீசினர்

கிறீஸ் பூதங்கள் ஏற்படுத்திய குழப்பங்களால் இவ்வாரம் குறைந்தது மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.

பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஆண்கள் ஆயுதங்களுடன் காவல் காக்கின்றனர்.

இப்பூதங்கள் குறித்து ஏராளமான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ஆனால் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

கிறீஸ் பூதங்களின் நடவடிக்கைகளுக்கு பொலிஸார் உதவி. ஒத்தாசைகள் வழங்குகின்றனர் என்கிற சந்தேகத்தில் பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களை முற்றுகையிடும் சம்பவங்களும் தொடர்கிறது .

இவ்வாறான சம்பவங்கள் மேலும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

01. நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி அவசரகால சட்டங்களை நீடிப்பதற்காகவா?

02. இதனை காரணம் காட்டி மூடப்பட்ட இராணுவ முகாம்களை மீண்டும் திறக்கவா?

03. மக்களை குழப்பதிலாழ்த்தி மக்களின் மனநிலையை திசை திருப்புவதுடன் வெளி நாடுகளையும் தற்போதைய இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் இருந்து திசை திருப்பவா?

04. மந்திரம் தந்திரங்களில் அதிக நாட்டமுள்ள இந்த அரசாங்கம் அவர்களின் நலனுக்காக ஏதும் புதையல் எடுக்கவா என இச் செயற்பாடுகள் சிந்திக்க வைத்துள்ளன.

கோட்டா மீது சீற்றம் கொண்ட ஜெயா (வீடியோ இணைப்பு)

இலங்கைக்கு எதிராக தமிழக முதலமைச்சர் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் வழங்கிய விமர்சனங்கள் தொடர்பாக நேற்று தமிழக சட்டசபையில் விவாதிக்கப்பட்டது.

இந்த சிறப்பு விவாதத்தின் போது தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் வழங்கிய விமர்சனங்களை முற்றிலும் மறுத்தார்.


கோட்டாபயவுக்கு ஜெயலலிதா பதிலடி - பி.பி.சி

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில், இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ பேட்டியளித்திருப்பதாகவும், அதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், இலங்கையில், சிங்கள மக்களுக்கு இணையாக தமிழ் மக்களுக்கும் சம உரிமை கிடைக்கும் வரை தனது அரசு ஓயாது என்றும் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான புகார்கள் குறித்தும், அதுதொடர்பாக ஐநா பொதுச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் விவாதம் நடத்தப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் மக்களுக்கு மீண்டும் முழு அளவில் மறுவாழ்வும், சம உரிமைகளுக்கும் கிடைக்கும் வரை இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், கச்சத் தீவு தொடர்பாகவும் அத் தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை, போர்க் குற்றவாளிகள் என அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, சமீபத்தில் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அந்தத் தீர்மானங்கள் தொடர்பாக கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்திருந்தார். அந்தப் பிரச்சினை, இன்று வியாழக்கிழை தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. அதுதொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஜெயலலிதா பேசும்போது, கோட்டாபயவின் கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

''ஐநா பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, அரசியல் ஆதாயத்திற்காக அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’’ என ஜெயலலிதா குறிப்பிட்டார்.

சிங்களர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் தான் நடத்தப்படுகின்றனர் என்றும்; மற்றவர்களை விட தங்கள் நாட்டு குடிமக்கள் மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது என ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம்; மற்றும் வலைகளை உலர்த்துவதற்கு அந்தத் தீவை பயன்படுத்திக் கொள்ளலாம் என அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதியளித்ததை சுட்டிக்காட்டிய ஜெயலலிதா, 'இந்த ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணான வகையில் நடந்து கொண்டு விட்டு தமிழ்நாடு அரசிற்கு அறிவுரை கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது' என ஜெயலலிதா காட்டமாக தெரிவித்துள்ளார்.

'சர்வதேச விசாரணையை அனுமதிக்க வேண்டும்'- ஜெ

இறுதிக்கட்டப் போரில், சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி இலங்கை ராணுவம் செயல்பட்டதாகவும், மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டதாகவும் ஐநா நிபுணர் குழு அறிக்கையை சுட்டிக்காட்டி ஜெயலலிதா புகார் கூறியுள்ளார். போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவோ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தோ எந்தவிதமான நடவடிக்கையும் இலங்கை அரசால் எடுக்கப்படவில்லை என ஜெயலலிதா புகார் கூறினார்.

'கோட்டாபய ராஜபக்ஷவின் பேட்டியிலிருந்தே, இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்திருக்கிறது என்று மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையிலேயே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் செய்யவில்லை என்றால், அது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தயார் என இலங்கை அரசு அறிவித்திருக்க வேண்டும்'என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு, இறுதி எச்சரிக்கை என பல்வேறு கண்துடைப்பு நாடகங்களை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நடத்தியதாகவும், அப்போதெல்லாம் வாய்திறக்காத கோட்டாபய இப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விமர்சித்திருப்பது அந்தத் தீர்மானத்துக்கு தாக்கம் இருப்பதையே காட்டுகிறது என ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.

"சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபயவுக்கு கொடுத்திருக்கிறது என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது."

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அளித்திருக்கிறது என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை; சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்குக் கிடைக்கும் வரை ஓயப் போவதில்லையெனவும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

கோட்டாபய கருத்துக்கு தமிழ் கூட்டமைப்பும் அதிருப்தி

இதற்கிடையே, பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. 2006ம் ஆண்டில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மகிந்த, நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் தமது அரசியல், பொருளாதார சூழ்நிலைகளை தீர்மானிக்கும் அளவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில், அதனை நிறைவேற்ற இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அரசாங்கத்துடனான பேச்சுக்களின்போது இணக்கம் காணப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், ஜனாதிபதியின் சகோதரரும் ஆலோசகருமான அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற தெரிவுக் குழு மூலமே அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு செல்ல முடியும் என்று தற்போது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்தப் பின்னணியில், அண்மையில் கோட்டாபய ராஜபக்ஷ ஹெட்லைன்ஸ் டூடே தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி அரசியல் தீர்வுத்திட்டம் பற்றிய அரசாங்கத்தின் போக்கில் அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.