Sunday, 4 December 2011

இந்திப்பட உலகின் மார்க்கண்டேயன்: நடிகர் தேவ்ஆனந்த் மரணம்


இந்திப்பட உலகின் மார்க்கண்டேயன் நடிகர் தேவ் ஆனந்த்  லண்டனில் இன்று  மாரடைப்பால்  மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. தேவ்ஆனந்த் சில நாட்களாகவே  உடல் நலம் இல்லாமல் இருந்து வந்தார். மருத்துவ பரிசோதனைக்காக சமீபத்தில் லண்டன் சென்றார். அவருடன் மகன் சுனில் மற்றும் குடும்பத்தினர் சென்றிருந்தனர்.

லண்டனில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தேவ்ஆனந்தின் உடல்நிலை இன்று அதிகாலை மோசமடைந்தது இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு  மாரடைப்பால்  மரணம் அடைந்தார். இந்த தகவல் அறிந்தும் இந்திப்பட உலகினரும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

தேவ் ஆனந்த்தின் உடல் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்திப்பட  உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர்  தேவ்ஆனந்த்,   வித்தியாசமான உடை அலங்காரம் மற்றும் ஸ்டைலால்  ரசிகர்களை வசீகரித்தவர். இவர் அணியும் தொப்பி மிகவும் பாப்புலர்.

கோட்டு  அணிந்து உடைக்கு மேலே கழுத்தை  சுற்றி கர்ச்சீப்பை கட்டி `டை' போல் தொங்க விட்டபடி   தோன்றுவது இவரது தனி ஸ்டைல்.  இந்த  ஸ்டைலை இந்தி  ரசிகர்கள் காப்பி அடித்தனர். 1946-ம் ஆண்டில் இந்திப்பட உலகில் அறிமுகமான தேவ் ஆனந்த் சுமார் 65 வருடங்கள்  இந்திப் பட உலகில் கொடிகட்டி பறந்தார்.

இளமை மாறாமல் இருந்ததால்   `மார்க்கண்டேயன் நடிகர்' என்று புகழப்பட்டார். 1923-ம்  ஆண்டில் பிறந்த  தேவ்ஆனந்த் தனது 23-வது வயதில் (1946-ல்) இந்திப்பட உலகில் காலடி  எடுத்து வைத்தார். `ஹம் ஏக் ஹெய்ன்' என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டில் (1947) `ஜிட்டி' என்ற படம் ரிலீசாகி சக்கைபோடு போட்டது.  அதன்பிறகு அவர் நடித்த எல்லா படங்களும் `சூப்பர் ஹிட்' ஆனது.

பேயிங் கெஸ்ட்', `பாஸி', ஜுவல் தீப்', `சி.ஐ.டி.', ஜானி மேரா நாம்', `அமிர்கரிப்', `வாரண்ட்', `ஹரே ராமா ஹரே கிருஷ்ணா', `தேஷ் பார்டெஸ்' உள்பட பல  படங்களில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். `ஜானி மேரா நாம்' என்ற படம் தமிழில் `ராஜா' என்ற பெயரில் சிவாஜியை கதாநாயகனாக  வைத்து தயாரிக்கப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட படங்களில்   நடித்துள்ள தேவ்ஆனந்த்   1949-ல் `நவகேதான் இண்டர் நேஷனல் பிலிம்ஸ்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 35-க்கும் மேற்பட்ட சினிமாக்களை தயாரித்துள்ளார். வஹிதா ரஹ்மான், ஹேமா மாலினி, வைஜயந்தி மாலா, ரேகா போன்ற முன்னணி நடிகைகளுடன் நடித்து உள்ளார். சில படங்களையும் இயக்கி உள்ளார். கடைசியாக இசையை அடிப்படையாக கொண்ட அமெரிக்க படம் ஒன்றை இயக்கினார்.

இந்தப் படத்தில் அமெரிக்க முன்னணி நடிகர், நடிகைகளுடன் முக்கிய பாத்திரத்தில்  நடித்துள்ளார். இவரது சமீபத்திய படங்களான `அவ்வால் நம்பர்', `சாவ்குரோர்', `சென்சார்' `மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்' `சார்ஜ்ஷீட்' ஆகிய சினிமாக்கள் தற்கால சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை.

இந்த படங்களில் தேவ் ஆனந்த் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். ஆனால் `அவ்வால் நம்பர்' படத்துக்கு பின்னர்  வந்த அவரது படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வசூல ஈட்டி தரவில்லை. தனது சில  படங்கள் தோல்வி அடைந்தது பற்றி அவர் குறிப்பிடுகையில், "நான் எப்போதும் கவலைக்கு இடம் கொடுப்பது இல்லை.

அடுத்த கட்டத்துக்கு செல்வது பற்றிதான் யோசிப்பேன். இதுதான் எனது வெற்றியின் ரகசியம்'' என்று கூறுவார். இந்திப்பட உலகில் பல சாதனைகளை படைத்துள்ள தேவ்ஆனந்துக்கு பல்வேறு பரிசுகளும், விருதுகளும் கிடைத்துள்ளன. ஆஸ்கர் விருதுக்கு சமமான 2 `பிலிம்பேர் அவார்டு'கள் இவருக்கு வழங்கப்பட்டது.

1958-ல் `கலாபாணி' படத்துக்கும், 1966-ல் `கைடு' படத்துக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. `ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' படத்தில் அப்போதைய ஆசிய அழகி பட்டம் வென்ற  ஜீனத்அமனை கதாநாயகியாக அறிமுகப் படத்தினார். இந்த படத்தில் வரும் தம்ஹரே தம்' பாடல் உலகம் முழுவதும் புகழ் பெற்றது.  இதன்மூலம் ஜீனத்அமன் கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்தார். `கைடு' படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட  5 பிரிவுகளில் 5 விருதுகளை தட்டிச் சென்றது.

`கைடு' படம் பின்னர் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது. 1993-ல் பிலிம்பேரின் வாழ்நாள் சாதனையாளர் விருதும், 1996-ல் ஸ்கிரீன் வீடியோகானின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு கிடைத்தது. கடந்த 2001-ல் மதிப்பு மிக்க `பத்மபூஷன்' விருது வழங்கி இவர் கவுரவிக்கப்பட்டார். 2002-ல் `தாதா சாஹேப் பால்கே விருது' வழங்கப்பட்டது.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்ற 3 பரிமாணங்களில் வெற்றிவாகை சூடியவர் தேவ்ஆனந்த். மரணம் அடைந்த தேவ் ஆனந்த்துக்கு சேட்டன் ஆனந்த், விஜய் ஆனந்த் என்ற இரண்டு சகோதரர்களும், ஷீல்காந்தாகபூர் என்ற சகோதரியும் உள்ளனர். பிரபல இந்திப்பட இயக்குனர் சேகர்கபூரின் தாயார்தான் ஷீல்காந்தாகபூர்.  தேவ் ஆனந்தின் சகோதரர்களும் சினிமா துறையில்தான் உள்ளனர். தேவ்ஆனந்தின் பல படங்களை  விஜய் ஆனந்த் இயக்கினார்

பழைய படங்களை பாதுகாக்க வேண்டும் : கமல் வேண்டுகோள்!!


பழைய படங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்க வேண்டும். அதற்கு மத்திய-மாநில அரசுகள் தான் உதவ வேண்டும் என்று ஃபிக்கி மாநாட்டில், நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஃபிக்கியின் ஊடகம் மற்றும் தொழில்துறை மாநாடு சென்னையில் 1 மற்றும் 2ம் தேதி நடந்தது. சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடந்த இந்த விழாவை கவர்னர் ரோசய்யா தொடங்கி வைத்தார். ஃபிக்கியின் ஊடகம் மற்றும் தொழில்துறை தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

மாநாட்டின் முடிவில் பேசிய கமல்ஹாசன், இந்தியா முழுவதும் திரைப்படத் தொழிலில் `டிஜிட்டல் முறை உருவாகி வருகிறது. இதனால் பழைய `ரீல் முறையை மாற்றி, நவீன யுக்திகளுடன் சினிமா எடுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் 3,500 பழைய படங்களை அரசாங்க உதவிகள் இல்லாமல் `டிஜிட்டல் முறையில் பாதுகாத்துள்ளோம். இதேபோல், இந்தியா முழுவதும் உள்ள பழைய படங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பழைய படங்களை `டிஜிட்டல் முறையில் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் உதவ வேண்டும். `டிஜிட்டல் மாற்றத்திற்கு தயாரிப்பாளர்கள் மத்தியிலும் வரவேற்பு உள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்ட சந்தேகங்களைக் களைய இந்த மாநாட்டின் மூலம் விளக்கம் தரப்பட்டது.

இந்த மாநாட்டில் இதுவரை இல்லாத வகையில் சென்சார் போர்டு அதிகாரிகள் வந்து தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். தயாரிப்பாளர்களின் சந்தேகங்களுக்கு அவர்கள் இன்முகத்துடன் பதில் அளித்தனர். இந்த மாநாட்டின் மூலம் தயாரிப்பாளர்கள், சென்சார் போர்டு அதிகாரிகள் இடையே சுமுகமான உறவு ஏற்பட்டுள்ளது.

இந்த 2 நாள் மாநாட்டில் திரைப்படத்துறைக்கு தேவையான நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் மூலம் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மாற்றத்தை கொண்டு வந்த இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்புக்கு (`பிக்கி) நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கமலஹாசன் கூறினார்

ஜெயலலிதா ஆட்சியில் ரத்த கண்ணீர் விடும் தாய்மார்கள்! குஷ்பு காட்டம்!


பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் தி.நகர் பஸ் நிலையம் அருகே நடந்தது. பகுதி செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார்.   நிர்வாகிகள் உதயசூரியன், மாரி, கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பேசியதாவது:

தமிழக மக்கள் உண்மையிலேயே பரிதாப சூழ்நிலையிலேயே இருக்கிறார்கள். தமிழக முதல் அமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கர்நாடக நீதிமன்றத்துக்குப் போய், 1400 கேள்விகளுக்கு பதில் கொடுத்திட்டு வந்தாங்க. ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் அந்த அம்மாவ பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்டுக்கிட்டு இருக்காங்க. அந்தக் கேள்விக்கு அந்த அம்மா பதில் கொடுக்கவில்லை.


கொடுக்கமாட்டாங்க என்று எங்களுக்கு நல்லாவே தெரியும். ஏன்னென்றால் பதில் என்ன என்பது அவர்களுக்கே தெரியவில்லை. அந்த கேள்வி என்ன கேள்வி. தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து மக்களும் அம்மையார் ஜெயலலிதாவைப் பார்த்து, ஏன் எங்களை பழிவாங்குறீங்க என்ற ஒரு கேள்வியை கேட்டுக்கிட்டு இருக்காங்க. நாங்களும் கேட்கிறோம் ஏன் இந்த பழி. திமுகவினர் மீது பழிவாங்கிக்கிட்டு இருக்கீங்க. அது எல்லோருக்கும் தெரியும். ஏதோ ஒரு பொய் வழக்கை போட்டு திமுகவில் இருப்பவர்களை கைதுசெய்துவிட்டு அவர்கள் மேல் கேஸ்

போட்டுக்கிட்டு இருக்கீங்க. எல்லமே பொய் வழக்குகள். இந்த 6 மாதத்துல தமிழக மக்களுக்கும் போர் அடிச்சு போச்சு.

தினமும் பேப்பரை பார்த்தா, யாரோ ஒருத்தரை பொய் வழக்கை போட்டு கைது செய்றாங்க. இந்த அம்மாவுக்கு வேற வேலை இல்லையன்னு நினைக்கிறாங்க. உண்மையிலுமே வேற எந்த வேலையும் இல்லையின்னு நினைக்கிறேன். ஏன்னென்னா காலை காத்தால காப்பி குடிச்சது முதல் இன்னைக்கு யாரை கைது செய்து, என்ன பொய் வழக்கு போடுறது. அந்த நினைப்புலத்தான் இருக்காங்களே தவிர, இன்னைக்கு தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த ஒரு நல்ல திட்டம் கொண்டு வரணும் ஒரு எண்ணம் சிந்திக்கிற அளவுக்கு புத்தி இல்லையென்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், மனசு இல்லையென்றுதான் சொல்லுவேன்.


கலைஞர் ஆட்சியில், 5 வருட ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியோட, மகிழ்ச்சியோட, சந்தோஷமாக, மரியாதையோட வாழ்ந்துக்கிட்டு இருந்தாங்க. ஆனால் இன்னைக்கி அதே மக்கள், கண்ணிர் விட்டுக்கிட்டு இருக்காங்க. அதுக்கு காரணம் யார். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தான். தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியா முழுவதும் ஒரு பெரிய தமிழ்ப்பாட்டு பரவிக்கிட்டு இருக்கு. பெரிய ஹிட் ஆகியிருக்கு. எங்கப்போனாலும் அந்தப் பாட்டைத்தான் கேட்டுக்கிட்டு இருக்காங்க எல்லாரும். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அந்த பாட்டைப் பாடும்போது உண்மையிலேயே அம்மையாரை ஜெயலலிதா பார்த்துதான் பாடுறாங்க என்று நினைக்கிறேன். ஒய் திஸ் கொலைவெறி, கொலைவெறி, கொலைவெறி, கொலைவெறிமா. ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு. தமிழ்நாட்டு மக்கள் உங்களை நம்பி ஓட்டு போட்டாங்க. அதுக்காக இந்த கொலைவெறியா.


அதிமுகவினர் ஒருத்தருக்கிட்ட நான் கேட்டேன். ஏங்க இப்படி பழிவாங்கிக்கிட்டு இருக்கீங்க மக்களுக்கிட்ட. அவுங்க சொல்றாங்க, , 1996ல எங்களுக்கு ஓட்டுப்போடல, 2006ல எங்களுக்கு ஓட்டுப்போடல அதுக்கு நாங்க பழி வாங்க வேண்டாமா. ஏப்பா பழி வாங்குறத்துக்கா மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டாங்க. நீங்க ஏதோ நல்லது செய்வீங்க என்றுதான் ஓட்டு போட்டாங்க.


நீங்கள் எல்லோரும் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தீங்க. ஒரு மாற்றம் வந்தா நல்லாயிருக்கும். ஐந்து வருஷம் கலைஞர் ஆட்சியில எல்லாத்தையும் நீங்க பார்த்திட்டீங்க. சரி ஒரு சின்ன மாற்றம் வரட்டும் என்று நீங்க ஆசைப்பட்டு அவங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைச்சீங்க. ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைச்சது என்ன வெறும் ஏமாற்றம்தான். வெறும் ஏமாற்றத்தில்தான் தமிழ்நாட்டு மக்கள் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. ஏன். நாம இவ்வளவு சொல்லிக்கிட்டு இருக்கோம். ஒரு கேள்விக்கு பதில் வரல. இதுக்கு முன்னாடி தேர்தல் பிரச்சாரத்தில் அந்த அம்மா எவ்வளவு பொய் சொன்னாங்க. நான் இத தரப்போறேன். அதச் சொல்லப்போறேன். நான் இதைச் செய்யப்போறேன் உங்களுக்கு.


இதுவரைக்கும் ஒரு திட்டத்தை கொண்டு வந்தாங்களா. இதுவரைக்கும் தமிழ் மக்களுக்காக ஒரு நல்ல திட்டம் கொண்டு வந்திருக்காங்களா. தமிழ்நாட்டு மக்களிடம் நான் கேட்கிறேன். இந்த 6 மாதத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டம் என்ன. யாராவது சொல்ல முடியுமா. யாராலும் சொல்ல முடியாது. ஏன்னா நல்ல திட்டம் கொண்டுவரவில்லை.


மே 13ம் தேதி தேர்தல் ரிசல்ட் வந்த உடனே காலை 10 மணிக்கு கலைஞர் வீட்டுக்கு கோபாலபுரம் போனேன். அங்கிருந்து மதியம் 2 மணிக்கு வெளியே வரும்போது, சுத்தியிருந்த பேப்பர்காரங்க என்னை கேட்டாங்க. திமுக தோல்விக்கு என்ன காரணம் என்ன என்று நினைக்கறீங்க. தைரியமா சொன்னேன். இது திமுகவின் தோல்வி கிடையாது. திமுகவுக்கு என்னைக்குமே தோல்வி கிடையாது. இது தமிழ்நாட்டு பொதுமக்களின் தோல்வி. அதுக்காக அதிமுககாரங்க வழக்கம்போல பலபேர் வழக்கு போட்டாங்க. பரவாயில்ல. வழக்கு போட்டு என்ன பண்ண போறீங்க. ஜெயில்ல தூக்கி போடுவீங்களா. உண்மையை பேசுறத்துக்கு நாங்கள் பயப்படமாட்டோம். தப்பு செய்திருந்தா பயப்புடுவோம். உண்மையை பேச திமுகவினருக்கு தைரியம் இருக்கு. உண்மையே பேசனும். அதற்கான விளைவு தெரியுது நமக்கு எல்லோருக்கும்.


தேர்தல் பிரச்சாரத்தில், விலைவாசி ஏறுவதற்கு காரணம் திமுக: மின்சாரம் இல்லை. தமிழ்நாடு பூரா இருட்டில் மூழ்கி கிடக்கு. அதற்கு காரணம் திமுக. எல்லாத்துக்கும் திமுக திமுக திமுக என்று சொல்லிதான் நீங்க பழி சுமத்திக்கிட்டு இருந்தீங்க.


ஆனால் இன்னைக்கி நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. காவல்துறையினர் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க. காவல்துறையினர் எங்க தப்பு நடக்குதோ, அங்கு தட்டி கேட்காம, மேலிடத்தில் இருந்து என்ன உத்தரவு வருதோ அதப்பாத்துட்டு வந்து திமுகவினரை கைது செய்யறதுல அவுங்க பிஸியாக இருக்காங்கன்னா, மக்களுடைய நன்மைக்காக, மக்களுடைய பாதுகாப்புக்காக அவுங்களுக்கு எங்க நேரம் கிடைக்கப்போகுது? இவ்வாறு பேசினார்.

பிரசாந்த் மறுமண அறிவிப்பு

 


பிரசாந்த் மறுமணம் விரைவில் நடக்கும் என்று அவரது அப்பா தியாகராஜன் கூறினார்.

இதுபற்றி அவர்,    ‘’கடந்த 1983ம் ஆண்டு மலையூர் மம்பட்டியான் வெளியாகி வெற்றி பெற்றது. அப்போதே இப்படத்தை இன்னும் சில மாற்றங்கள் செய்திருந்தால், கொஞ்சம் பிரமாண்டமாக எடுத்திருந்தால், வெற்றி இன்னும் பெரிதாக இருந்திருக்குமே என்று எண்ணினேன்.

28 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தை ரீமேக் செய்கிறேன். அன்று நான் நினைத்த மாற்றங்களை இதில் செய்திருக்கிறேன்.


 மம்பட்டியானாக பிரசாந்த் நடிக்கிறார். மலையூர் மம்பட்டியானில் காட்டு வழி போற பொண்ணே..என்ற பாடலை இளையராஜா பாடினார். அதேபாடலை இப்படத்தில் நான் பாடி இருக்கிறேன்.

இதை ரீமிக்ஸ் பாடலாக சிம்புவும் பாடி இருக்கிறார். ஹீரோயின் மீரா ஜாஸ்மின். தமன் இசை. மலையூர் மம்பட்டியான்இந்தி ரீமேக்கில் ரஜினி நடிப்பில் கங்குவாஎன்ற பெயரிலும்,

தெலுங்கில் கிருஷ்ணமராஜு, கன்னடத்தில் அம்பரிஷ் நடிப்பிலும் வெளியானது. இப்போது தயாராகியுள்ள மம்பட்டியான்படத்திற்கும் மற்ற மொழிகளில் இருந்து ரீமேக் உரிமை கேட்டுள்ளனர்.


இதற்கிடையில், ‘பிரசாந்த் மீண்டும் திருமணம் செய்வாரா?’ என்று கேட்கிறார்கள். அவரை ஏமாற்றி திருமணம் செய்தது செல்லாது என்று கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு சொல்லிவிட்டது. அவர் எத்தனை நாளைக்குத்தான் பிரம்மச்சாரியாக இருக்க முடியும். மம்பட்டியான்ரிலீஸின் போது அவரது திருமணம் பற்றிய அறிவிப்பு வரும்’’என்று கூறினார்.

சிம்புவின் 'ஒஸ்தி'க்கு சிக்கல் தீர்ந்தது - திட்டமிட்ட தேதியில் ரிலீஸ்!

 


பாலிவுட்டில் சல்மான்கான் நடித்து வெற்றி பெற்ற 'தபாங்' படம், தமிழில் சிம்பு நடிக்க 'ஒஸ்தி' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. தரணி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 8-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஒஸ்தி படத்தை திரையிடமாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்த படத்தின் சாட்டிலைட்உரிமை பெற்றுள்ள டி.வி. நிறுவனம் தங்களுக்கு தர வேண்டிய டெபாசிட் தொகையை திருப்பி தர வேண்டும் என்றும் பணத்தை தராவிட்டால் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். 

இது குறித்து ஒஸ்தி பட தயாரிப்பாளருக்கும் தியேட்டர் அதிபர் சங்கத்துக்கும் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தது. முடிவில் இரண்டு தரப்பினர் இடையே சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து, படத்தை குறிப்பிட்ட தேதியில் திரையிட அனைத்து சங்கங்களும் ஒத்துக் கொண்டன.

இதனால் சிம்புவின் 'ஒஸ்தி' படம், வரும் டிசம்பர் 8 அன்று திட்டமிட்டபடி ரிலீஸ் ஆக இருக்கிறது

`ஒய்திஸ் கொலை வெறிடி'; பாடலுக்கு இந்தி பாடலாசிரியர் எதிர்ப்பு


 நடிகர் தனுஷ் `3' என்ற படத்தில் 'ஒய்திஸ் கொலை வெறி டி' என்ற  பாடலை  எழுதி பாடியுள்ளார். ஒய்திஸ் கொலை வெறிடி பாடல் ஆங்கிலம் கலந்து எழுதப்பட்டு  உள்ளது. இந்த பாடல் இன்டர்நெட்டில் வெளியான ஐந்து நாட்களில் பத்து  லட்சம் பேர் கேட்டனர். தற்போது எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளது.

இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. பெண்களை   இழிவுபடுத்துவது போல் வரிகள்   உள்ளன என்று  பெண்கள் சங்கத்தினர் கண்டித்தனர். இந்திப்பட உலகில்  40 வருடமாக பாடல் எழுதும் முன்னணி பாடலாசிரியர் ஜாவித் அக்தரும்  தனுஷ்  பாடலுக்கு எதிர்ப்பு  தெரிவித்துள்ளார்.

அவர் கூறும் போது மக்கள் உணர்வுகளை அவமதிப்பது போல் ஒய் திஸ் கொலை வெறி பாடல் அமைந்துள்ளது. எல்லோரும் மன்னனை புகழ்கிறார்கள். ஆனால் மன்னன்  நிர்வாணமாக  நின்று கொண்டு இருப்பது போல் இப்பாட்டு உள்ளது. மனம் போன போக்கில் பாடியுள்ளார் என்றார். பள்ளிகளில் மாணவர்கள் இப்பாடலை பாடுகின்றனர்.

இந்த பாட்டு குழந்தைகள் மனதை மிகவும் பாதிக்கும் என்று ஆசிரியை ஒருவர் கூறினார். பெண்களை கேலி செய்ய இளைஞர்கள் இப்பாட்டை  பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுந்தர் கூறும் போது  பெண்ணால் பாதிக்கப்பட்ட  இளைஞனின் உணர்வுகளை பாடல் பிரதி பலிப்பதால் சூப்பர் ஹிட்டாகியுள்ளது என்றார்

சென்னை திரும்பினார் ஊழல்ராணி... விமான நிலையத்தில் கருணாநிதி வரவேற்பு

 


கலைஞர் கருணாநிதியின் மகளும், திமுக எம்.பி.யுமான கனிமொழி, 2ஜி அலைவரிசை வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் 20-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

டெல்லி திகார் சிறையில் 194 நாட்கள் இருந்த அவர் கடந்த மாதம் 28-ந்தேதி ஜாமீனில் விடுதலை ஆனார். அவருடன் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 5 பேர் ஜாமீன் பெற்றனர். கனிமொழிக்கு 28-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது என்றாலும் கோர்ட்டு உத்தரவு மற்றும் ஆவணங்கள் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் 29-ந்தேதி இரவு 7 மணி அளவில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் நாளில் டெல்லியில் இருக்க வேண்டும் என்பதால் அங்கேயே தங்கி இருந்தார். இன்று சி.பி.ஐ. கோர்ட்டுக்கு விடுமுறை என்பதால் 200 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்ப முடிவு செய்தார்.

அதன்படி இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் கனிமொழி எம்.பி.யை சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர்.

டெல்லி விமான நிலையத்தில் கனிமொழி நிருபர்களிடம் கூறுகையில், "2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் என் மீது குற்றமில்லை என்பதை நிரூபிப்பேன், இந்த வழக்கில் பலரும் விடுதலையானது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

மதியம் 1.45 மணி அளவில் கனிமொழி சென்னை வந்து சேர்ந்ததும் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி விமான நிலையம் சென்று வரவேற்றார். ராஜாத்தி அம்மாளும் உடன் சென்றார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தயாளுஅம்மாள், செல்வி, மு.க. தமிழரசு, மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், பொங்கலூர் பழனிச்சாமி, ஐ.பெரியசாமி, மைதீன்கான், சுப.தங்கவேலன், பூங்கோதை, தமிழரசி, சற்குணபாண்டியன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், நடிகை குஷ்பு மற்றும் செ. குப்புசாமி, எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயதுரை மற்றும் எப்.எம்.ராஜரத்தினம், கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கனிமொழியை வரவேற்க தி.மு.க. கொடியுடன் விமான நிலையத்தில் குவிந்தனர்.

கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.   கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் அவரை வரவேற்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. தி.மு.க. கொடிகளும் பேனருடன் இடம் பெற்றிருந்தன.

மானமிகு கனிமொழி கருணாநிதி அவர்களே வருக, இனமான எழுச்சியே வருக, இரும்பு கூண்டின் பூட்டு திறந்தது.. பாட்டுக்குயிலே... கனிமொழியே வருக, சூழ்ச்சி மேகங்களை சுட்டெரித்து வரும் சூரிய கதிரே வருக, ஆறுதல் கூற வந்தவர்களை நலம் விசாரித்து ஆறுதல் கூறி அனுப்பிய கனிமொழியே வருக, சோதனை பொறுத்தாய்.. தண்டனை பொறுத்தாய்... பொறுத்தார் பூமி ஆள்வார், இயக்கத்தின் தியாகமே, ஏழைகளின் இதயமே வருக... வருக.., எறும்புக்கும் தீங்கு இழைக்காத உனக்கு இத்தனை துயரங்கள் எதற்கு? என்பன போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

சினிமா பின்னணி பாடகி, பெண் டாக்டருக்கு செல்போனில் `செக்ஸ்' தொல்லை;என்ஜினீயர் கைது


சென்னையில் பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் பல் டாக்டராக பணிபுரிபவர் ருக்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் தனியார் ஆஸ்பத்திரியில் பல் டாக்டராக பணிபுரிகிறேன். எனது தாயார், மகப்பேறு டாக்டராக உள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு என்னிடம் ஆறுமுகம் சுப்பிரமணியம் என்ற என்ஜினீயர் பல் வலிக்கு சிகிச்சை பெற வந்தார். அப்போது எனது செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டார். தான் அமெரிக்காவில் வேலை பார்ப்பதாக தெரிவித்தார். தேவைப்பட்டால் போனில் மருத்துவ ஆலோசனை கேட்பதற்கு எனது செல்போன் நம்பரை கொடுத்தேன்.

மேலும் எனது இ-மெயில் முகவரியையும் கொடுத்தேன். இதை வைத்து அந்த என்ஜினீயர் செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலம் எனக்கு `செக்ஸ்' தொல்லை கொடுத்தார்.   அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவரது மனைவியும், குழந்தையும் சென்னையில் வசிக்கிறார்கள். நான் அவருக்கு எவ்வளவோ அறிவுரை சொல்லியும் கேட்கவில்லை.

என்னை காதலிப்பதாகவும், என்னை 2-வது திருமணம் செய்து கொள்வதாகவும் தொல்லை கொடுத்தார். ஆன்லைன் மூலம் எனக்கு நகைகள், பூச்செண்டு போன்றவற்றை காதல் பரிசாக அனுப்பினார். அவற்றை நான் திருப்பி அனுப்பினேன். அவரது அன்பு தொல்லை பின்னர் காமத்தொல்லையாக மாறியது.

ஆபாச தகவல்களை செல்போன் மூலமும், இ-மெயில் மூலமும் அனுப்ப ஆரம்பித்தார். அவரது தொல்லை அத்துமீறிப்போகவே, நான் 2008-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தேன். கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் விசாரணை நடத்தினார்.

அப்போதே அவரை கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி இருந்தால், இப்போது இந்த தொல்லை எனக்கு ஏற்பட்டிருக்காது. அவரது மனைவி மற்றும் குழந்தை நலன் கருதி, அவரை ஜெயிலுக்கு அனுப்பவில்லை. இனிமேல் தவறு செய்யமாட்டேன் என்று அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இதனால் இரக்கப்பட்டு அவரை மன்னித்து, புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன்.

ஆனால் சிறிது காலம் அமைதியாக இருந்த அவர் இப்போது மீண்டும் தனது `செக்ஸ்' சேட்டைகளை தொடங்கிவிட்டார். தினமும் எனக்கு ஆபாச தகவல்கள் அனுப்பி எனது நிம்மதியை கெடுத்து வருகிறார். எனது தாயாருக்கும் தகவல் அனுப்பி தொல்லை கொடுக்கிறார். என்னை அவரது மனைவி போல பாவித்து தகவல் அனுப்புகிறார்.

இதுபோல் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியது எனக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டது. திருமணமாகாத என்னை, அவரது தகவலை பார்த்து, எனது குடும்ப நண்பர்களும், உறவினர்களும், எனக்கு எப்போது திருமணம் நடந்தது என்று கேள்வி கேட்டு துளைத்து எடுக்கிறார்கள்.

அவர்களுக்கு பதில் சொல்லி என்னால் சமாளிக்க முடியவில்லை. மேலும் நான் அவருக்கு பல் சிகிச்சை அளித்தபோது, அவருக்கு முத்தம் கொடுத்து, நான்தான் அவரை காதலித்ததாகவும் தகவல் அனுப்பி கேவலப்படுத்தி விட்டார். அவர்மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, அவரது `செக்ஸ்' தொல்லையிலிருந்து எனக்கு விடுதலை கொடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை வடபழனி அனைத்து மகளிர் போலீசுக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் குழலி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது.   புகார் கூறப்பட்டுள்ள என்ஜினீயர் ஆறுமுகம் சுப்பிரமணியம், அமெரிக்காவில் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு அவர் விமானத்தில் சென்னை வந்தார். அமெரிக்காவில் இருந்தபடியே செல்போன் மற்றும் இ-மெயில் மூலம் தொல்லை கொடுத்து வந்த அவரை சென்னை வரும்போது பொறி வைத்து பிடிக்க பெண் போலீஸ் தனிப்படை போலீசார் காத்திருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு விமானத்தில் வந்து இறங்கியபோது, ஆறுமுகம் சுப்பிரமணியத்தை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். வடபழனி போலீஸ் நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் போலீசாரிடம் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் எனது சொந்த ஊராகும். நான் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து உள்ளேன். பிரபல தனியார் நிறுவனத்தின் அமெரிக்க கிளையில் மாதம் ரூ.1.75 லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்தேன். எனது மனைவியும் எம்.சி.ஏ. பட்டதாரிதான். செல்போனில் இளம்பெண்களிடம் செக்ஸ் விளையாட்டு விளையாடுவது எனது பொழுது போக்கு ஆகும்.

நான் 7 தடவை சிகிச்சைக்காக, டாக்டர் ருக்மணியை சந்தித்தேன். அப்போது அவர்மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு, அவரை காதலிக்க தொடங்கிவிட்டேன். அவர் எனது காதலை ஏற்கவில்லை. ஒரு முறை எனது தவறையும் அவர் மன்னித்தார். மீண்டும் நான் அவருக்கு தொல்லை கொடுத்தது எனது தவறுதான். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

என்ஜினீயர் ஆறுமுகம் பிரபல சினிமா பின்னணி பாடகி ஒருவருக்கும் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பின்னணி பாடகி போலீசில் புகார் கொடுக்கவில்லை. அவரை தனது ரசிகராக பார்ப்பதாக அந்த பாடகி போலீசாரிடம் கூறிவிட்டாராம். கைதான என்ஜினீயர் ஆறுமுகம் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த முறை நான் மன்னிப்பு கொடுக்கமாட்டேன் என்று புகார் கொடுத்த பெண் டாக்டர் போலீசாரிடம் கூறிவிட்டார். இது ஆறுமுகத்துக்கு மட்டுமல்ல, இதுபோன்ற குற்றங்கள் புரிபவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் அந்த டாக்டர் தெரிவித்துவிட்டார்.கைதான என்ஜினீயரின் மனைவியும் நேற்று போலீஸ் நிலையத்துக்கு வந்திருந்தார்.

அவர் தனது குழந்தைக்காக, கணவர் செய்த தவறுகளை மன்னித்துவிட்டதாக போலீசாரிடம் கூறினார். என்ஜினீயர் ஆறுமுகம் நல்ல கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் அனைவரும் நல்லநிலையில் உள்ளனர். தனது தவறான நடத்தை மூலம் என்ஜினீயர் ஆறுமுகம் தனது வாழ்க்கையை தொலைத்து நிற்பதாக அவரது குடும்பத்தினர் வருத்தம் அடைந்து காணப்படுவதாகவும் போலீசார் கூறினார்கள்.

மின்சாரம் இல்லையா? புகார் கொடுங்க! ரூ.50 பெறுங்கள்!



மின்சாரம் தடைபடும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும், 50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு, மின் வாரியம் நிவாரணம் தர வேண்டும்,'' என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மின் நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் நுகர்வோரின் குறை தீர்ப்புக்கான காலக்கெடு குறித்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு விவரம்: மின் நுகர்வோர், தங்களது குறைகள் தொடர்பான அனைத்து முறையீடுகளையும், மின் பகிர்மான கழகத்தின் பிரிவு அலுவலகங்களில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ தரலாம். பிரிவு அலுவலர்கள் அல்லது அவர்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்கள், மனுக்களை பெற்று, எழுத்து மூலம் ஒப்புகை தர வேண்டும். இதற்காக, பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும், பதிவேடு பராமரிக்க வேண்டும். இணைப்பை இடமாற்றுதல், மின்சார தடை, பெயர் மாற்றம், கட்டணப் பிரிவு மாற்றம், கட்டணப் பிரச்னை, தற்காலிக இணைப்பு, வோல்டேஜ் பிரச்னை, வைப்பு நிதி திரும்பப் பெறுதல் மற்றும் அனைத்து வகை மின் நுகர்வு பிரச்னைகளுக்கு மனுக்கள் தரலாம்.

நிவர்த்தி செய்வதற்கான காலக்கெடு:

 நீட்டிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி இல்லாத குறை: தாழ்வழுத்தம் 30 நாட்களில், உயரழுத்தம் 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் அல்லாத நீட்டிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி: தாழ்வழுத்தம் 90 நாட்கள், உயரழுத்தம் 120 நாட்கள்; டிரான்ஸ்பார்மருடன் கூடிய நீட்டிப்பு, மேம்பாட்டு பணி: தாழ்வழுத்தம் 90 நாட்கள், உயரழுத்தம் 180 நாட்கள். மீட்டர் அல்லது இணைப்பு இடமாற்றம்: 25 நாட்கள்; மின்தடம் மாற்றுதல்: 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் இடமாற்றம்: 90 நாட்கள்; மீட்டர் புதுப்பித்தல்: 30 நாட்கள்; கட்டண வகை மாற்றம்: 7 நாட்கள்; பெயர் மாற்றம்: 7 நாட்கள்; கட்டண கணக்கு பிழை திருத்தம்: பணம் செலுத்தும் இறுதி நாட்களுக்குள், குறைகளை தீர்க்க வேண்டும். இவ்வாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மின்வெட்டுக்கு நிவாரணம்:

 மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்தடை பிரச்னைகளை தீர்க்க, மணிக்கணக்கில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட கெடுக்குள் குறைகளை தீர்க்கத் தவறினால், மின்வாரியத்தில் இருந்து, நுகர்வோருக்கு நிவாரணம் தர வேண்டும். பிரிவு அலுவலகங்கள், குறைகளை தீர்க்க தவறும்போதும், நிவாரணத்திலும் திருப்தி அடையாத நுகர்வோர், அந்தந்த பகுதி மின் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்ப்பு மையத்தில் முறையிடலாம். இந்த மையங்கள் குறித்து அலுவலக முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் (இ-மெயில்) உள்ளிட்ட விவரங்களை, மின்வாரிய இணையதளத்தில் வெளியிட வேண்டும். குறை தீர்ப்பகத்தின் உத்தரவை மேல்முறையீடு செய்ய விரும்புவோர், சென்னை எழும்பூரில் உள்ள, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் குறை தீர்ப்பாயத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.