Monday, 5 September 2011

காலி முகத்திடலில் குப்பைக்குள் மகிந்தர்!


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு காலி முகத்திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது பாதுகாவலர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் சகிதம் நடைப் பயிற்சியை மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட படங்கள்.

ஞாயிற்றுக் கிழமைகளில் உடற்பயிற்சி செய்வதற்காக அதிகாலையிலேயே பெருமளவு பொதுமக்கள் காலி முகத் திடலில் கூடுகின்ற போதிலும், மகிந்தர் நடைப் பயிற்சி மேற்கொண்ட பகுதிக்குள் நுழைய யாரும் அனுமதிக்கப்படவில்லை.







தெற்காசியாவைப் பாதுகாத்தோம்! ஆனால் கொலைக் களத்தில் சிக்கியுள்ளோம்!! மகிந்த ஆதங்கம்


பொறுப்புக் கூறவேண்டிய விடயங்கள் தொடர்பில் தமக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் இவற்றின் பெரும்பாலானவை குண்டுத் தாக்குதல்களில் இடம்பெற்ற பொதுமக்களின் உயிரிழப்புக்கள் தொடர்பானவை எனவும் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மனிதாபிமான நடவடிக்கைகளை குழப்புவதன் மூலம் சிறந்த நட்புறவினை கட்டியெழுப்ப முடியுமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

தெற்காசியாவை பயங்கரவாத்தில் இருந்து பாதுகாத்து பயங்கரவாதத்தை தோற்கடித்த நாடென்ற பெருமையுடன் இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதனால் தற்போது தாம் கொலைக்களத்தில் சிக்கியுள்ளதாகவும் கொழும்பில் ரொட்றி கழகத்தின் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான தெற்காசிய மாநாட்டில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு எம்மிடம் மிகக்குறைந்த வளங்களே இருந்ததன. பொருளாதார மற்றும் யுத்த நிலையில் பலம் பெற்றிருந்தாலும் பொதுமக்களை படுகொலை செய்யும், மனிதகுல அழிப்பு ஆயுதங்களை தயாரிப்போரின் ஆதரவை பயங்கரவாத முறியடிப்பின் போது பயன்படுத்தவில்லை.

நாட்டிலிருந்த பயங்கரவாத்தை தோற்கடித்த தேசம் என்ற வகையிலும் தெற்காசியாவை பயங்கரவாத்திலிருந்து பாதுகாத்துள்ளோம் என்ற வகையிலும் பெருமையடைகிறோம்.

ஒரு தசாப்த காலத்திற்கும் அதிகமாக எம்மிடமிருந்த பொருளாதார மற்றும் ஆயுத பலத்தினை விடவும் தற்போது அதிகம் கொண்டிருந்த போதிலும் கொலைக்களத்தில் சிக்கியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

பலத்த சிரமங்களுக்கு மத்தியில் நாட்டில் ஸ்திரமான சமாதானத்தை தற்போது நிலைநாட்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

இதனைத் தவிர பொறுப்புக் கூறவேண்டிய விடயங்கள் தொடர்பில் தமக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுவதாகவும் இவற்றின் பல குரல்கள் குண்டுத் தாக்குதல்களில் இடம்பெற்ற பொதுமக்களின் உயிரிழப்புக்கள் தொடர்பானவை.

மனிதாபிமான நடவடிக்கைகளை குழப்புவதன் மூலம் சிறந்த நட்புறவினை கட்டியெழுப்ப முடியுமா எனவும் ஜனாதிபதி அப்போது கேள்வியெழுப்பினார்.





சாக்கடையில் வீசப்பட்ட ஆண் குழந்தை:நெஞ்சை உருக்கும் சம்பவம்


ஆண் சிசுவை, சாக்கடையில் வீசிச்சென்ற இருவரை திருப்பூர் போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம் பண்ணாரியம்மன் நகரில் நேற்று நடந்த சென்ற சிலர், அதிகளவு ரத்தம் இருந்ததை பார்த்து, திடுக்கிட்டனர் ரத்த துளிகள் ரோட்டின் எதிர்புறம் உள்ள சாக்கடை வரை இருந்தன.

அங்கு, எட்டிப்பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பிறந்து, குறைந்த நேரமே ஆகியிருந்த, அழகான தும்பை பூ போல் இருந்த ஆண் குழந்தை, சாக்கடைக்குள் இறந்த நிலையில் கிடந்தது.

தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் குழந்தை சாக்கடையில் கிடந்ததை கண்ட பலரும் வேதனைப்பட்டனர். சில பெண்கள் மயங்கி விழுந்தனர். குழந்தையை பார்க்கும் தைரியமான மனம் கூட இல்லாமல் பலர் கண்களை மூடிக்கொண்டனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், "நேற்று மதியம் 2.30 மணிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் பைக்கில் வந்தனர். ரோடு சந்திப்பில் நின்றிருந்தனர். எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியாக உள்ளதால், ஐந்து நிமிடம் கூட இருவரும் நிற்கவில்லை.

அப்போதே இருவரும் பைக்கில் ஏறி வேகமாக சென்று விட்டனர். அவர்கள் தான் குழந்தையை வீசியிருக்க வேண்டும்' என்றனர். "குழந்தை உயிருடன் சாக்கடையில் வீசப்பட்டதாகவும்' சிலர் கூறினர். "பிரசவமே ரோட்டில், சாக்கடையோரத்தில் தான் நடந்தது' என்றும் சிலர் தெரிவித்தனர்.

கள்ளத்தொடர்பு, திருமணமாகாமல் தாய்மையானது, இளம் வயது காதல் என ஏதோ ஒரு பிரச்னையால், பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசியிருக்கிறார், அந்தப்பெண்.

ரூரல் போலீசார், சாக்கடையில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கல் மனம் படைந்த பெண் மற்றும் உடன் வந்த ஆண் யார், ஏன் வீசிச்சென்றனர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன் இதே பகுதியிலுள்ள குப்பை தொட்டியில், பிறந்த சில நாட்களே ஆன ஆண் குழந்தையை வீசிச்சென்ற சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!


காதலுக்காக 1000 மைல்கள் தூரத்தை நடந்து கடக்கத் துணிந்துவிட்டார் இந்த காதல் மன்னன். சீனாவை சேர்ந்த லியூ பிவின் எனும் 29 வயது ஆண் ஒருவர், 23 வயதாகும் லிங் சூ எனும் பெண்ணை தீவிரமாக காதலித்தார்.

அவரது காதலை அவளிடம் சொல்லியபோது, அவள் விளையாட்டாக, 1000 மைல்கள் கால்நடையாக வந்து என்னிடம் காதலை சொன்னால் ஏற்றுக்கொல்கிறேன் என்றாள்.

உடனே காரியத்தில் இறங்கிவிட்டார் லியூ பிவின், காதலி இருக்கும் தென்கிழக்கு சீனாவில் இருந்து அண்ணளவாக 1000 மைல் தொலைவில் இருக்கும் குவாங்டொங் மாகாணத்தில் இருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கிவிட்டார்.

தற்பொழுது 500 மைல்களுக்கு மேல் தாண்டிய நிலையில், தனது முயற்சியில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்.



ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை

நடிகர் விஜய் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணி விழாவும், `வேலாயுதம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மதுரையில் நடந்தது. அப்போது எனது ரசிகர்களில் சிலர் என் மீதுள்ள அன்பின் மிகுதியால், என்ன கடவுளாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார்கள்.

அதைப்பார்த்த அடுத்த வினாடியே ரசிகர்களை அழைத்து, இப்படியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. அதை அகற்றி விடுங்கள்'' என்று கண்டிப்புடன் கூறினேன். என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ரசிகர்கள் உடனே அதனை அகற்றி விட்டனர்.

இனி இப்படி செய்ய மாட்டோம் என்றும் உத்தரவாதம் தந்தார்கள். முடிந்து போன இந்த விஷயத்தை சிலர் விஷமாக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம், இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, எங்களை பிரிக்கவோ, பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது.

நான், சாதி, மத, இனத்துக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவன். ஆயிரம் பேர்களை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்ன சாதி- மதம் என்று எனக்கு தெரியாது. என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். எனக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் நற்பணி இயக்கம் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் என்ன சாதி-மதம் என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ், தமிழினம் ஒன்றேதான். ஒரு மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படி ஆர்வம் மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனி, வருங்காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு சுவரொட்டிகளோ, நோட்டீசுகளோ வெளியிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியிருக்கிறார்.

மர்ம மனிதர்களைக் காப்பாற்ற மக்கள் மீது இராணுவம் தாக்குதல்! உடுவிலில் சம்பவம்!

உடுவில் ஆலடிப் பகுதியில் வீதிக்கு வந்த பொதுமக்கள் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிப் பிடி மற்றும் கொட்டன்களால் தாக்கப்பட்டதில் மோசமான காயங்களுக்கு உள்ளான மூவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்றுமாலை யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
சந்தேகப்படும்படியாக நடமாடிய நபர்களைத் துரத்திச் சென்றபோதே இராணுவத்தினர் திடீரென வந்து தங்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர் என்று அந்தப் பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் தெரிவித்தனர்.
நேற்றுப் பகல் நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று அந்த மக்களைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார். இராணுவத்தினர் கை, கால்களில் மட்டுமன்றி தமது பிறப்பு உறுப்புக்களை இலக்கு வைத்தும் தாக்கினர் என்று மக்கள் முறையிட்டனர்.
தாக்குதலின் பின்னர் தாம் பிடித்த மூவரை இராணுவத்தினர் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் அவர்களை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். ந.குபேரன் (வயது 38), ச.உதயகுமார் (வயது 42), ச.விஜயகுமார் (வயது 40) ஆகியோரே நீதிமன்றின் முன் கொண்டு வரப்பட்டனர்.
அவர்கள் மூவரையும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். எதிர்வரும் செவ்வாய்க் கிழமை மருத்துவ அறிக்கையுடன் அவர்களை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப் படுத்துமாறும் உத்தரவிட்டார்.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துள் அடங்கும் மயிலிட்டிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து உடுவில் ஆலடியில் வசித்த மக்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனிடம் அந்த மக்கள் தெரிவித்ததாவது:
இராணுவத்தினர் எமது பகுதிக்கு வந்த சற்றுநேரத்திலேயே சந்தேகநபர்களின் நடமாட்டத்தை நாம் வீடுகளில் உணர்ந்தோம். நாம் முதலில் பார்த்த போது 5 இராணுவத்தினர் நின்றனர். சற்று நேரத்தில் அவர்களில் ஒருவரைக் காணக்கிடைக்கவில்லை.
பின்னர் யாரோ அடையாளம் தெரியாத நபர் நடமாடுவதாக எழுந்த கூச்சலை அடுத்து அந்த நபரைத் தேடி ஊர் ஆண்கள் அங்குமிங்குமாக அல்லோலகல்லோலப்பட்டு ஓடிக் கொண்டு இருக்கும்போது எதிரே அந்த 5 இராணுவத்தினரும் வந்தனர்.
அவர்கள் கைகளில் கொட்டன்களை வைத்திருந்தனர். எம்மீது கொட்டன்கள், துப்பாக்கிப் பிடிகளால் அடித்தனர். கர்ப்பிணிப் பெண் என்றுகூடப் பார்க்காமல் ஒருவரைத் தாக்கினர்.
இப்படி இராணுவத்தினர் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவதை நிறுத்த வேண்டும். அவர்களின் அடக்குமுறைக்குள் நாம் தொடர்ந்தும் வாழ முடியாது என்றனர் மக்கள்.

மூவர் தொடர்பான கருணை மனு தகவல்களை வெளியிட மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீதான தகவல் பரிவர்த்தனை விவரங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மயில்சாமி என்ற வக்கீல் இதுதொடர்பாக தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். அதில், கருணை மனுக்கள் மீது மத்திய அமைச்சரவை அளித்த பரிந்துரை, மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் இடையிலான தகவல் பரிவர்த்தனைகள், மத்திய அரசுக்கும், தமிழகஅரசுக்கும் இடையிலான தகவல் பரிவர்த்தனைகள், யார் யாரெல்லாம் கருணை மனுவை ஆதரித்து மனு செய்திருந்தனர், பரிந்துரை செய்திருந்தனர் என்பது உள்ளிட்ட விவரங்களை தனக்கு அளிக்க மத்திய அரசு மறுப்பதாக கூறியிருந்தார்.

இதை விசாரித்த தகவல் ஆணையம், மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை வெளியிடுவது பாதுகாப்பு சம்பந்தமானது என்பதால் அதைத் தவிர்த்து பிற தகவல்களை மனுதாரருக்கு அளிக்குமாறு மத்திய உள்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் அளிக்கப்பட்டால் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க இத்தனை ஆண்டு காலம் தாமதமானது ஏன் என்பது குறித்த விவரங்கள் வெளியாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விசித்திரம் பாம்பை கடித்தவர் கைது

நியூயார்க்: ‘பாம்பு கடித்தவர் சாவு’ என்பதற்கு பதில், தவறாக படித்திருப்போமோ என்று மறுபடி தலைப்பை படித்திருப்பீர்கள். ஆம். அமெரிக்காவில் பாம்பை கடித்து ரத்த காயம் ஏற்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

நம்மூரில் பாம்பை கண்ட துண்டமாக அடித்து துவைத்தாலே யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியிருக்க, அது கடிப்பதற்கு முன் பாம்பை மனிதன் கடிப்பதெல்லாம் தப்பா... என்று ‘லஞ்சம் வாங்கினால் தப்பா, இதுக்கெல்லாமா கொல்வாங்க?’ என்று ‘இந்தியன்’ படத்தில் நிழல்கள் ரவி கேட்பதுபோல பரிதாபமாக கேட்கத் தோன்றுகிறதா?

கலிபோர்னியாவை சேர்ந்த டேவிட் செங்க் (54) கடித்தது, பக்கத்து வீட்டு செல்லப் பிராணியான மலைப் பாம்பை. வழக்கமாக பக்கத்து வீட்டை எட்டி பார்க்காத டேவிட், நேற்று முன்தினம் வீட்டுக்குள் நுழைந்து உங்கள் செல்லப் பிராணியை ஒரு நிமிடம் கொஞ்சி விட்டு தருகிறேன் என்றார்.

சரி என்று 4 அடி நீள மலைப் பாம்பை அதன் எஜமானர் எடுத்து கொடுத்தார். பாம்பும் எஜமானரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாம்பை கடித்துக் குதறினார் டேவிட். அவரிடம் போராடி பாம்பை காப்பாற்றிய பக்கத்து வீட்டினர், உடனடியாக அதை கால்நடை டாக்டரிடம் காட்டினர். டேவிட் செங்கை மாட்டிவிட போலீசுக்கு போன் போட்டனர்.

வாயில் ரத்தம் சொட்ட நின்ற டேவிட் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் ‘‘மது மயக்கத்தில் இருந்ததால் என்ன நடந்ததென்று தெரியவில்லை. எனக்கு பாம்பு என்றால் பிடிக்காது. ஒருவேளை அதனால் கடித்திருக்கலாம்’’ என்றார்.

டேவிட் கடித்ததால் வயிறு கிழிந்த பாம்பை மருத்துவமனையில் அட்மிட் செய்த டாக்டர், 10 தையல்கள் போட்டு சில நாட்கள் ரெஸ்ட் எடுக்க (எஜமானரிடம்) வலியுறுத்தினார்.

லண்டன் வோல்த்தம்ஸ்ரோவ் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா (வீடியோ இணைப்பு)



லண்டன் வோல்த்தம்ஸ்ரோவ் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. இத்திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

தாயகத்திலிருந்து வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன் மற்றும் மாவைசேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். படங்கள் மற்றும் காணொளி தொகுப்பை இங்கே காணலாம்.













அமெரிக்க தூதரிடம் நாராயணன் கூறியது என்ன? விக்கிலீக்ஸ் அம்பலம்


மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட டேவிட்கோல்மென் ஹெட்லியை நாடு கடத்தி கொண்டுவர இந்தியா ஆர்வம் காட்டவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக �செயல்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த டேவிட்கோல்மென் ஹெட்லி மீது அமெரிக்க கோர்டில் வழக்குப்பதிவு செய்யபப்ட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய இணைதளமான விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவலில் கூறியுள்ளதாவது:மும்பை தாக்குதலில் லஷ்கர் தொய்பா அமைப்புக்கு உதவியதாக ஹெட்லி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை அமெரிக்க கோர்டில் நடந்துவருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதியன்று இது குறித்து இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இருந்த திமோதி ரோமர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.�கே. நராயணனிடம் தெரிவித்தார். அதற்கு, நாராயணன் ஹெட்லியை மும்பை தாக்குதல் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு வர ஆர்வமில்லை. இந்த நேரத்தில் ஹெட்லியை நாடு கடத்தி வருவது கடினம் தான். பெரும் சிக்கல் ஏற்படும் என கூறினார். இவ்வாறு விக்கீலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

நாராயணன் விளக்கம் : விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் குறித்து பேட்டியளித்துள்ள எம் கே நாராயணன், விக்கீலீக்ஸ் தகவல் குறித்து அமெரிக்காவிடம் தான் கேட்க வேண்டும். ஹெட்லியை நாடு கடத்தி கொண்டு வருவதில் தீவரமாக இருந்தோம். அதிகாரிகளுக்கு மத்தியிலான் பேச்சுக்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஹெட்லியை நாடு கடத்துவதில் இந்தியா ஆர்வமாக இருந்தது. தீவிரமாக செயல்பட்டோம் என கூறினார்

பா.ஜ., கண்டனம் :விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, இந்த தகவல் ஒன்றும் ஆச்சர்யமளிப்பதல்ல. பயங்கரவாதத்தை கையாள்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டவில்லை. ஹெட்லியை நாடு கடத்துவதில் இந்தியா தீவிரமாக செயல்பட வேண்டும் என கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு ரகசிய ஆவணங்கள்:மேலும் அவிழ்த்து விட்டது "விக்கிலீக்ஸ்'

கேன்பெரா: "விக்கிலீக்ஸ்' இணையதளம் தன் வசம் இருந்த மேலும் இரண்டரை லட்சம் அமெரிக்க வெளியுறவு ரகசிய ஆவணங்களை, நேற்று முழுவதுமாக வெளியிட்டது. இதனால், அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், ஆஸ்திரேலிய அரசால் கைது செய்யப்படக் கூடும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க வெளியுறவு ரகசிய ஆவணங்களை லட்சக்கணக்கில் வெளியிட்டு பிரபலம் அடைந்த, "விக்கிலீக்ஸ்' இணையதளம், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து வெளிவரும் "தி கார்டியன்', அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து வெளிவரும்,"தி நியூயார்க் டைம்ஸ்', ஜெர்மனியின் "டெர் ஸ்பைஜல்' , ஸ்பெயினின்,"எல் பைஸ்' மற்றும் பிரான்சின்,"லீ மாண்ட்' ஆகிய பத்திரிகைகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. அதன்படி, அமெரிக்க ரகசிய ஆவணங்கள் இந்தப் பத்திரிகைகள் மூலம் முதலில் வெளியாகும். அதன்பின்,"விக்கிலீக்ஸ்' இணையதளத்தில் இந்த ஆவணங்கள் வெளியாகும்.

ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி தனது மகள் கனிமொழி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. ஆனால் துணைவி ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால்தான் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி என்று முன்னாள் அமெரிக்கத் துணைத் தூதர் டென்னிஸ் ஹாப்பர், அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.



இதுதொடர்பாக அந்தத் தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருந்த டென்னிஸ் ஹாப்பர் அனுப்பிய கேபிளில், மூத்த காங்கிரஸ் உறுப்பினர் சிவப்பிரகாசம் என்பவர் தன்னிடம் பேசியது குறித்த தகவல்களை வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ளார்.

அதில் பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் சற்றும் பொருத்தமில்லாதவர். அவர் ஒரு மோசமான பிரதமராக இருப்பார். அவர் அடிப்படையில் ஒரு அதிகாரி. விலைவாசிப் பிரச்சினையால் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

மேலும் பிரகாசம் கூறுகையில், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங், திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் பதவிக்கு போட்டியிட தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அர்ஜூன் சிங், கருணாநிதியைக் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் அதற்கு கருணாநிதி ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக சோனியா காந்தி பிரதமராக விரும்புவதாக கூறினார் என்றார்.

அதேபோல தனது மகள் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வருவதில் கருணாநிதிக்கு விருப்பம் இல்லை என்றும், அவருடைய தாயார் ராஜாத்தி அம்மாளின் தொடர் வற்புறுத்தல் காரணமாகவே கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி சீட்டை கருணாநிதி கொடுத்ததாகவும் சிவப்பிரகாசம் கூறியுள்ளார்.

முதல் மனைவியான தயாளு அம்மாளின் இரு மகன்களான அழகிரி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் செல்வாக்கோடு இருப்பதைப் பொறுக்க முடியாமல்தான் மகள் கனிமொழியை அரசியலுக்கு கொண்டு வர ராஜாத்தி அம்மாள் துடித்ததாகவும் சிவப்பிரகாசம் கூறியதாக ஹாப்பர் தனது கேபிளில் கூறியிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.