Sunday, 23 October 2011

சிறிலங்காவின் புதிய நுழைவுவிசா நடைமுறையால் இந்தியா அதிருப்தி


சிறிலங்காவின் புதிய நுழைவுவிசா நடைமுறை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நுழைவிசைவு பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 50 டொலர் கட்டணத்தைக் குறைக்குமாறும் சிறிலங்காவிடம் இந்தியா கோரியுள்ளது.

இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் இது தொடர்பாக சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பணிப்பாளர் சூலானந்த பெரேராவை கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன்போது, இந்தியக் குடிமக்கள் சிறிலங்கா நுழைவிசைவைப் பெறுவதற்கு 50 டொலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிகமானது என்றும் இந்தக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் இந்திய தூதுரக அதிகாரி தம்மிடம் கேட்டுக் கொண்டதாக சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசின் பதிலை அவர் கோரியதாகவும், ஆனால இது அரசாங்கத்தின் கொள்கை சார்ந்த விடயம் என்பதால் தமது திணைக்களம் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும், ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்கலாம் என்று நம்புவதாகவும் சூலானந்த பேரேரா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா குடிமக்கள் இந்திய நுழைவுவிசா பெறுவதற்கு 650 ரூபா கட்டணத்தை மட்டுமே செலுத்தி வரும் நிலையில், சிறிலங்கா 50 டொலர் கட்டணமாக அறவிட முடிவு செய்துள்ளது இந்தியாவைக் கடும் அதிருப்தி கொள்ள வைத்துள்ளது.

சார்க் நாடுகளுக்கு இடையில் உறவுகளையும் தொடர்புகளையும் அதிகரித்துக் கொள்வதற்கு நுழைவுவிசா நடைமுறைகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா இறுக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: