Monday, 8 August 2011

இயற்கையாக மரணமானோரையும் புலிகளே கொன்றதாக பட்டியலிட்டுள்ள கோத்தாபயவின் உண்மை அறிக்கை

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் ‘மனிதாபிமான நடவடிக்கையின் உண்மைசார்ந்த அறிக்கை‘ ஒன்று கூறி, நான்காவது கட்ட ஈழப்போர் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளில் பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்ற பட்டியலில் பருத்தித்துறை தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம், உடுப்பிட்டித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இராசலிங்கம் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவருமே இந்த அறிக்கையில் மரணமானதாக குறிப்பிடப்பட்டுள்ள திகதிக்குப் பின்னரும் உயிரோடு வாழ்ந்து இயற்கையாகவே மரணம் அடைந்தவர்களாவர்.

இதுபோலவே புலிகளுடன் நெருங்கிய உறவு வைத்திருந்து- அவர்களால் மாமனிதர்களாகவும், நாட்டுப்பற்றாளர்களாகவோ கௌரவிக்கப்பட்டவர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரியநாயகம் சந்திரநேரு, ஜோசப் பரராஜசிங்கம், சின்னதம்பி சிவமகாராசா, நடராசா ரவிராஜ், சிவநேசன் மற்றும் விக்னேஸ்வரன் போன்றவர்கள் கூட புலிகளால் கொல்லப்பட்டது போலவே அறிக்கையிடப்பட்டுள்ளது.

புலிகளால் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளவர்களில் பலர், வேறு இயக்கங்களினாலும், உள்முரண்பாடுகளாலும் கொல்லப்பட்டவர்களும் அடங்கியுள்ளனர்.

இவை எல்லாவற்றையும் புலிகளின் தலையில் சுமத்தியுள்ளது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு.

2006 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியை மையப்படுத்திய- போர் பற்றிய அறிக்கையாக இது குறிப்பிடப்பட்டாலும், அந்தக் காலப்பகுதிக்குரிய முழுமையாக தகவல்கள் ஏதும் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை.

2006இல் மனிதாபிமானப் போர் தொடங்குவதற்கு முன்னர் 19,282 படையினர் கொல்லப்பட்டதாகவும், 82,104 படையினர் காயமுற்றனர் அல்லது அங்கவீனமுற்றதாகவும், 2609 பேர் காணாமற் போயுள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் 2006இற்குப் பின்னர் நடந்த போரில் எத்தனை படையினர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் என்ற விபரம் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.

அதுமட்டுமன்றி போரில் கொல்லப்பட்ட புலிகள் பற்றிய புள்ளிவிபரங்களையோ அல்லது பொதுமக்களின் விபரங்களையோ இந்த அறிக்கை கொண்டிருக்கவில்லை.

ஒட்டுமொத்தப் போரில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 9800 பொதுமக்கள் புலிகளால் கொல்லப்பட்டதாகவும், 10,000 பேர் காயமடைந்ததாகவும் மட்டும் கூறப்பட்டுள்ளது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எத்தனை பேர் அவர்களால் கொல்லப்பட்டார்கள் என்ற விபரம் தெரியாது என்று மட்டும் கூறப்பட்டுள்ளதே தவிர, போருக்குள் அகப்பட்டு மாண்டவர்களின் விபரத்தை இந்த அறிக்கையில் பதிவு செய்யவேயில்லை.

அதுமட்டுமன்றி புலிகளால் சிங்கள, முஸ்லிம் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், படுகொலைகள் பற்றிய புள்ளிவிபரங்கள் அனைத்தும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள போதும் தமிழ் கிராமங்கள் மீதான தாக்குதலகள், குண்டுவீச்சுகளில் கொல்லப்பட்ட தமிழர்கள் பற்றிய எந்தத் தகவலும் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை.

தமிழர்களின் இழப்புகளை மறைக்கும் வகையில் முற்றிலும் பக்கச்சார்பான ஒரு அறிகையாகவே இது தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசு புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுத்ததற்கான காரணம் என்ன என்பதை வலியுறுத்துவதற்கே இந்த அறிக்கையில் அதிக பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

போர் எப்படி நடத்தப்பட்டது, அதன் போது எவ்வளவு பேர்- எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பன போன்ற அடிப்படைப் புள்ளிவிபரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை.

மேலோட்டமாக 2006 தொடக்கம் 2009 வரையான போர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, அதை மையப்படுத்திய அறிக்கையாக இது அமையவில்லை.

புலிகளின் ஆயுதபலம் எவ்வளவு, ஆட்பலம் எவ்வளவு என்று பட்டியல் போட்டு பக்கங்கள் நிரப்பப்பட்டுள்ளதே தவிர, தேவையான முக்கிய தரவுகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

புலிகளை எதற்காக அழிக்க வேண்டியிருந்தது என்பதை விளக்க கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம்,போரின் உண்மைகளை எடுத்துக் கூறுவதற்கு அளிக்கப்படவில்லை.

குறிப்பாக போரின் முடிவில் சரணடைய முன்வந்த புலிகள் பற்றி ஒரு வரியேனும் இந்த அறிக்கையில் கூறப்படவில்லை.

மனிதாபிமானப் போரின் உண்மைசார்ந்த பகுப்பாய்வுகள் என்று கூறி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் உண்மைகளை மறைப்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

No comments: