![]() |
| அதிகரித்து வரும் அனைத்துலக அழுத்தங்களைச் சமாளிக்க முன்னாள் போராளிகளின் விடுதலையை சிறிலங்கா அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைவதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அலரிமாளிகையில் வைத்து நேற்று 1800 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வு, அனைத்துலக சமூகத்தின் ஆதரவை இலக்கு வைத்து நடத்தப்பட்டதே என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சரணடைந்த முன்னாள் போராளிகளை வெளிநாட்டு இராஜதந்திரிகளையோ, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு உள்ளிட்ட அனைத்துலக மனிதாபிமான அமைப்புகளின் பிரதிநிதிகளையோ பார்வையிட அனுமதிக்காத சிறிலங்கா அரசாங்கம், இப்போது வெளிநாட்டு இராஜதந்திரிகளின் முன்னிலையில் அவர்களை விடுதலை செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. நேற்றைய நிகழ்வில் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றெனிஸ், மற்றும் பல்வேறு நாடுகளின் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் கலந்து கொண்டிருந்தனர். புனர்வாழ்வின் போது தொழிற்பயிற்சிகளை நிறைவு முன்னாள் போராளிகளுக்கான சான்றிதழ்களையும் வெளிநாட்டு இராஜதந்திரிகளே வழங்கியுள்ளனர். ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்திலும், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் நியுயோர்க்கில் நடத்திய சந்திப்புகளின் போதும், சிறிலங்கா அரசு கடும் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. போர்க்குற்ற விசாரணைகள் குறித்த அனைத்துலக அழுத்தங்களை சமாளிப்பதற்கும், இந்தமாத இறுதியில் பேர்த் நகரில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில், அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை தவிர்ப்பதற்குமே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பிய கையோடு அனைத்துலக இராஜதந்திரிகளின் முன்னிலையில் பெருமளவு முன்னாள் போராளிகளை விடுதலை செய்துள்ளதாகவும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் கருத்து வெளியிட்டுள்ளன. |
Saturday, 1 October 2011
மகிந்தவின் அலரிமாளிகை நாடகம் - அனைத்துலக சமூகத்தை திசைதிருப்பும் முயற்சி
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment