Saturday, 1 October 2011

சிறிலங்காவுடன் போருக்கு தயாராகும் கனடா பேர்த்தில் மோதல் வெடிக்கும் என்கிறது றொய்ட்டர்


 
சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் தொடர்பாக கனடா நேற்று பகிரங்கமாக விமர்சித்துள்ள நிலையில், அவுஸ்ரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாடு இருதரப்பு இராஜதந்திர மோதலுக்கான களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக றொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், போர்க்குற்றங்கள் தொடர்பான தீவிரமான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுவதற்கும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற கனடாவின் கவலையை தான் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் நேற்று கூறியுள்ளார்.

கனேடிய நாடாளுமன்ற பொதுச்சபையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இதன்காரணமாக பிரித்தானியாவின் கொலனியாக இருந்த 54 நாடுகளின் கூட்டமைப்பான கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் கனடாவும், சிறிலங்காவும் இராஜதந்திர ரீதியாக நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக றொய்ட்டர் செய்தி கூறுகிறது.

உலகம் முழுவதிலும், குறிப்பாக சிறிலங்காவின் மனிதஉரிமைகளுக்காக கனடா தொடர்ந்து உரக்கக் குரல் எழுப்பும் என்றும் கனேடிய நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் கரிஜியானிஸ், அனைத்துலக நீதிமன்றங்களில் நீதி நிலைநாட்டப்படும் வரை சிறிலங்காவை கொமன்வெல்த் அமைப்பில் இருந்து இடைநிறுத்தி வைக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்று கனேடியப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாது போனால், 2013 இல் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் கூறியிருந்தார் என்றும் றொய்ட்டர் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: