சிங்கப்பூரில் 46 நாட்கள் சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி, சென்னையில் நடந்த `ராணா' படப்பிடிப்பின்போது, நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் 2 முறை சென்னை இசபெல்லா ஆஸ்பத்திரியிலும், அதன்பிறகு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார்.
அவர் மூச்சுக்குழாயில் தொற்று, நுரையீரலில் நீர்க்கோர்ப்பு, சிறுநீரக கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள். ஒரு கட்டத்தில், அவருடைய உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு, `டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ரஜினிகாந்த் பூரண குணம் அடைய வேண்டி, தமிழ்நாடு முழுவதும் அவருடைய ரசிகர்கள் கோவில்களில் விசேஷ பூஜை நடத்தினார்கள். சிலர் மண்சோறு சாப்பிட்டார்கள். இன்னும் சிலர் அலகு குத்தி தேர் இழுத்தார்கள்.
டாக்டர்களின் தீவிர சிகிச்சையினாலும், ரசிகர்கள் பிரார்த்தனையாலும் ரஜினிகாந்தின் உடல்நிலை தேற தொடங்கியது. அவருக்கு மேலும் நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், கடந்த மே மாதம் 27-ந் தேதி, சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிங்கப்பூர் டாக்டர்கள் அவருக்கு மேலும் சில நவீன பரிசோதனைகளை மேற்கொண்டு, அவருடைய நோய்க்கான மூலகாரணத்தை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தார்கள். அதன்பிறகு, ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
அவர் படிப்படியாக குணம் அடைந்தார். கடந்த மாதம் 24-ந் தேதி அவர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் இருந்து `டிஸ்சார்ஜ்' ஆனார். `டிஸ்சார்ஜ்' ஆனதும் ரஜினிகாந்த் தன் உடல்நலம் பற்றி விசாரித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோருடன் நன்றி தெரிவித்து போனில் பேசினார். உடல்நலம் பெற வேண்டி கோவில்களில் பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
சிங்கப்பூர் டாக்டர்கள் அறிவுரைப்படி ரஜினிகாந்த் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில், சுமார் ஒரு மாத காலம் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். ரஜினிகாந்துடன் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் தங்கியிருந்தார்கள். மருமகன் தனுஷ் அடிக்கடி சிங்கப்பூர் சென்று மாமனாரிடம் உடல்நலம் விசாரித்து வந்தார்.
சிங்கப்பூரில் ரஜினிகாந்த் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு தினமும் 3 டாக்டர்களை கொண்ட ஒரு மருத்துவக்குழு சென்று, அவருடைய உடல்நிலையை பரிசோதித்து வந்தார்கள். அவர் பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து, சென்னை திரும்புவதற்கு டாக்டர்கள் அனுமதித்தார்கள். 46 நாட்கள் சிங்கப்பூரில் இருந்த ரஜினிகாந்த், சென்னைக்கு திரும்பலாம் என்றதும் உற்சாகம் அடைந்தார். நேற்று காலையில் இருந்தே அவர் பழைய சுறுசுறுப்புடன் காணப்பட்டார்.
இந்திய நேரப்படி, மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் சென்னைக்கு புறப்பட்டார். ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்து சென்னை திரும்புகிற தகவல் பரவியதும், சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிய ஆரம்பித்தார்கள். ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி, வாழ்த்து அட்டைகளை பிடித்தபடி நின்றார்கள். அவர்களிடம் இருந்து ரஜினிகாந்த் பிரியாவிடை பெற்றார். ரஜினிகாந்த் பயணம் செய்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சரியாக இரவு 9.50 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கியது.
ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரும் வந்தனர். அதே விமானத்தில் காதல் மன்னன் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை மானுவும் வந்தார். விமானத்தில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த், விமான நிறுவனத்துக்கு சொந்தமான மினி பஸ்சில், முக்கிய பிரமுகர்கள் வரும் 6-வது எண் `கேட்'க்கு வந்தார். ஊதா நிற ஜீன்ஸ் பேண்ட்டும் வெள்ளை நிற சட்டையும் அணிந்து இருந்தார். முகத்தில் தாடி வளர்ந்து இருந்தது. கண்ணாடி அணிந்து இருந்தார்.
ரஜினிகாந்தை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர். மினி பஸ்சை விட்டு இறங்கிய ரஜினிகாந்த் ரசிகர்களை நோக்கி வேகமாக நடந்து வந்தார். ரசிகர்களை நோக்கி கை அசைத்த படி வந்த அவர், பின்னர் இரு கைகளையும் குவித்து அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் உற்சாக மிகுதியால் ரஜினிகாந்தை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள். ``எங்கள் பிரார்த்தனைகளுக்கு பலன் கிடைத்து விட்டது. தலைவர் நூறு வருடங்கள் வாழ்வார்'' என்று சில ரசிகர்கள் கண்ணீர் மல்க கோஷம் எழுப்பினார்கள். ஒரு ரசிகர் ரஜினிகாந்துக்கு வெள்ளி வாள் ஒன்றை பரிசாக வழங்கினார்.
பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை முழங்கவும் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் கரகாட்டமும் இடம் பெற்றது. ரசிகர்களின் வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், கை அசைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தபடி 10.40 மணிக்கு தனது காரில் ஏறி, விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார். ரஜினிகாந்த் வருகையையொட்டி, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ரஜினிகாந்தை வரவேற்றும், வாழ்த்தியும் அவருடைய ரசிகர்கள் விமான நிலையத்தில் இருந்து சென்னை நகரம் முழுவதும் வழிநெடுக பேனர்களும், வரவேற்பு வளைவுகளும் அமைத்திருந்தார்கள். அவைகளை எல்லாம் பார்த்து ரஜினிகாந்த் நெகிழ்ந்து போனார். சென்னை திரும்பிய ரஜினிகாந்த், கேளம்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் சில வாரங்கள் ஓய்வு எடுக்கிறார். அதன்பிறகு, `ராணா' படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.


No comments:
Post a Comment