Friday, 15 July 2011

துப்பாக்கி விளிம்பு நெற்றிக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் கிளிநொச்சி மக்கள்

 கிளிநொச்சியில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி வற்புறுத்துகின்றனர் என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி, மாசார் பிரதேசத்தில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்தும் கூட்டமைப்பின் பிரசாரத்துக்கு இடையூறு செய்வது குறித்தும் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் தொடர்ந்து கூறியவை வருமாறு:

கிளிநொச்சி பச்சிளம்பள்ளி பிரதேசத்துக்குத் தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்றுகொண்டிருந்த எனது ஆதரவாளர்களை இராணுவம் தடுத்து நிறுத்தி, கட்சி மற்றும் எம்.பிக்களின் பெயர் விவரங்களைக் கேட்டுள்ளது.

அத்துடன் நேற்றுக்காலை பச்சிளம்பள்ளி பிரதேசத்திலுள்ள பல வீடுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று இராணுவத்தினர் வற்புறுத்தி உள்ளனர். இராணுவத்தின் கெளரவம் வெற்றிலைச் சின்னத்திலேயே தங்கியுள்ளது என்று கூறி இராணுவச் சிப்பாய்கள் இராணுவ சீருடை தரித்துக்கொண்டு வீடுவீடாகச் சென்று வற்புறுத்துகின்றனர்.

கிளிநொச்சி, ஆணைவிழுந்தான் பகுதியில் தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்றின் உதவித்திட்டத்தின் கீழ் 100 வீட்டுத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் உதவியுடன் இவ்வீட்டுத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த 100வீடுகளில் 30வீடுகளுக்கான அத்திபாரத்தை இட்டுள்ள இராணுவத்தினர் எஞ்சியுள்ள 70 வீடுகளுக்கான பணிகளை ஆரம்பிக்க வேண்டுமானால், வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் கூறியுள்ளனர்.

இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்­ இன்று (நேற்று) பகல் பளை பிரதேசத்துக்கு நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தரவுள்ளார் என்று கூறி வீடுகளுக்குச் சென்று இராணுவத்தினர் அமைச்சரின் நிகழ்வில் கலந்துகொள்ள வரும்படி மக்களிடம் கடுந்தொனியில் கட்டாயப்படுத்தியுள்ளனர். அத்துடன், வீடுகளிலுள்ளோரின் விவரங்களையும் இராணுவத்தினர் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலைமைக்கு மத்தியில் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்தாலும் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அதனைச் செய்யமுடியாதுள்ளது. அதேபோன்று இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் இந்த அடாவடித்தனங்களுக்கு மக்களே சாட்சிகள் என்றாலும், முன்வந்து சாட்சி தெரிவிக்க எவருக்கும் தைரியமில்லை.

ஏனென்றால் அடுத்த நாள் துப்பாக்கி விளிம்பு நெற்றிக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்தத் தேர்தல்கள் முடியும்வரை வடமாகாணத்திலுள்ள எம்.பிக்களும் பொதுமக்களும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் உள்ளனர்.

எப்படியாவது சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் சென்றாலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் போன்று ஆகிவிடும். அதாவது, அளவெட்டியில் கூட்டமைப்பினர் மீதான தாக்குதல் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. கூட்டமைப்பின் எம்.பிக்களின் கண்களுக்கு முன்னால் இடம்பெற்ற சம்பவங்களின் விசாரணைகளே இவ்வாறு இருக்கும்போது மக்களும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நீதிமன்றம் சென்றால் நீதி கிடைக்கும் என்பதில் சந்தேகம் என்றார்

No comments: