Sunday, 3 July 2011

பாராட்டு விழா - நடிகர்களை விரட்டி விட்ட ஜெயலலிதா

பாராட்டு விழா - நடிகர்களை விரட்டி விட்ட ஜெயலலிதா

பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா எடுத்தே களைத்துப் போன நடிகர் சங்கக் கூட்டம், இப்போது ஜெ.விற்குக் காவடி எடுக்க ரெடி ஆகிவிட்டது. ஜெ. முதல்வர் பொறுப்பேற்றதுமே பாராட்டு விழா நடத்த அனுமதி கேட்டார்கள். இவர்களைப் பற்றி அறிந்ததாலோ என்னவோ ஜெ.வும் ‘இப்போது அதற்கு நேரமில்லை’ என்று சொல்லியதாகச் செய்திகள் வந்தன.
இப்போது மீண்டும் ஈழத்திற்கு ஆதரவாக ஊர்வலம் நடத்த அனுமதி கேட்கின்ற சாக்கில், பாராட்டு விழா நடத்த ஆசைப் படுவதாகத் தெரிவித்துள்ளார்கள். இவருக்கு இப்போது பாராட்டு விழா நடத்தத் துடிக்கும் நடிகர்கள், சென்ற ஆட்சியில் ஏன் இதைச் செய்யவில்லை? அப்போது ஜெ.வின் அருமை இவர்களுக்குத் தெரியவில்லையா? இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் ஜெ.விற்குப் பாராட்டு விழா நடத்தியவர்கள் தானே? இடையில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஜெ.வைப் பாராட்ட மனம் வராதது ஏன்?

அப்படியென்றால் பாராட்டு விழா கலைஞர்/ஜெ.விற்கா அல்லது முதல்வர் பதவிக்கா என்று யோசிக்க வேண்டிய அவசியம் நேர்கிறது நமக்கு. இதன் மூலமாக அவர்கள் அடையப் போவது என்ன, அடைந்தது என்ன என்று பார்த்தால் உண்மை நமக்கு விளங்கும்.
நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவர் முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அது எவ்வளவு கஷ்டமான விஷயமாக உள்ளட்து? எத்தனையோ அரசு அலுவலக மேஜையைத் தாண்டித்தான் அந்த மனு, முதல்வர் அலுவலகம் நுழைகிறது. ஆனால் ஒரு நடிகரோ நடிகையோ நினைத்த நேரத்தில் முதல்வரைச் சந்திப்பது மட்டும் எப்படி முடிகிறது? ரம்பா, சோனா, குஷ்பூ என சென்ற ஆட்சியில் முதல்வரைச் சந்தித்த நடிகைகள் ஏராளம். வாக்களித்த மக்களை விட எந்த விதத்தில் இவர்கள் உயர்ந்தவர்கள்? வாக்களிக்கும் மக்களுக்கு இல்லாத சலுகை இவர்களுக்கு மட்டும் ஏன்? இது பல நாட்களாக நம் மனதில் இருந்து வரும் கேள்விகள்..

இந்த முறை முதல்வரைச் சந்தித்த நடிகர்கூட்டம் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக்கோரி ஊர்வலம் போக அனுமதி கேட்கப் போனதாகவே சொல்லப்பட்டது. ஆனால் தொடர்ந்து கூடவே அவர்கள் முதல்வரிடம் சேர்த்துப் போட்ட பிட்டைப் பார்க்கும்போது, இவர்கள் அவரைச் சந்தித்த நோக்கமும், பாராட்டு விழாவுக்கு அழைத்த நோக்கமும் தெளிவாக விளங்கி விட்டது நமக்கு. 

அவர்களது கூடுதல் கோரிக்கை,   தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பையனூர் பகுதியில் 7 ஏக்கர் நிலம் கடந்த ஆட்சியில் லீசுக்கு ஒதுக்கப்பட்டது. அதை நிரந்தரமாக சொந்தமாக்கிக் கொள்ள அனுமதி வேண்டும். எவ்வளவுஇ நியாயமான கோரிக்கை. நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகர்கள் எல்லாம் தெருக்கோடியில் புரளும் பிச்சைக்காரர்கள், அவர்களது சங்கத்திற்கு நிலம் ஒதுக்குவது நியாயம் தானே...இதே போன்று பஞ்சாலைத் தொழிலாளர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், கட்டிடக் கட்டுமானத் தொழிலாளர்களின் சங்கங்களுக்கு உதவ முன் வருமா இந்த அரசுகள்? மற்றவர்களுக்கு இல்லாத சலுகை இவர்களுக்கு ஏன்?
இதில் நல்ல விஷயம், இவர்கள் குல்லாப் போட முயல்வதை உணர்ந்த முதல்வர், அதிமுக ஆதரவு நடிகர்களை மட்டுமே சந்தித்துள்ளார். அவர்களின் கோரிக்கைக்கும் ‘அப்புறமாப் பார்க்கலாம்..போயிட்டு வாங்க ராசா’ என்று பதில் சொல்லி அனுப்பி வைத்து விட்டார்.

ஐந்து வருடங்களாக தன்னைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, இப்போது ஓடி வரும் இவர்களைப் பற்றி அவர் மனதில் எவ்வளவு கேவலமாக நினைத்திருப்பார்? நடிகர் சங்கத்தின் ஆட்டத்திற்கு ஜெ.யாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

No comments: