சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் உடல்நிலைக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி என்று செய்திகள் வருகின்றன. ’சிகிச்சைக்காக அமெரிக்கா போகலாம்’ என்றும் சொல்கிறார்கள். அதே நேரத்தில் சில விஷமிகள் மனித நேயமற்ற முறையில் தொடர்ந்து விஷமத்தனமான வதந்தியைப் பரப்புகிறார்கள்.
பொதுவாகவே ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையே போதிய இடைவெளி விடுவதும், இமயமலைப் பகுதியில் ஓய்வெடுப்பதும் ரஜினியின் வழக்கம். எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் வேரு யாரும் அமர்ந்து விட முடியாது என்பதை பலமுறை நிரூபித்தவர். எதனாலோ இப்போது அவசர அவசரமாக அடுத்த படமான ராணா வேலையில் இறங்கினார்.
’சுல்தான் தி வாரியர்’ படத்திற்கு கோடி கோடியாகக் கொட்டிய பின்னும், படச்சுருளைக் கண்ணில் காண முடியாத தயாரிப்பு நிறுவனங்கள் கொடுத்த பிரஷர் கூடக் காரணமாக இருக்கலாம். ஏற்கனவே காசு விஷயத்தில் சுத்தமானவரான ரஜினியும், கணக்கை செட்டில் செய்ய ராணாவை நடித்துக் கொடுக்க முன் வந்திருக்கலாம்.
ஆனால் ஆரம்பித்தில் இருந்தே இந்தப் படம் நம் மனதைக் கவரவில்லை என்பதே உண்மை. எந்திரனுக்கு இருந்த வரவேற்பும் இதற்கு இல்லை. எதனாலோ ‘பாபா’ ஃபீலிங் வந்து கொண்டே இருந்தது. படப்பிடிப்பு பூஜை போஸ்டரைப் பார்த்த போது, அந்த ஃபீலிங் கன்ஃபார்ம் ஆகியது.
தொடர்ந்த கெட்ட செய்தியாக அவருக்கு மூச்சுத் திணறல் என்று செய்தி வந்து சேர்ந்தது. நாமும் ஆரம்பத்தில் சாதாரண விஷயம் என்றே நினைத்து, அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து வரும் செய்திகளைப் பார்க்கும்போது, ஏதோவொரு கவலை மனதில் குடிகொள்கிறது.
உடல்நலம் தேரும்வரை இந்தப் படத்தைத் தள்ளி வைப்பதும், முடிந்தால் இதைத் தலைமுழுகுவதுமே நல்லது.
நம்மையெல்லாம் மகிழ்விக்க ஏற்கனவே வேலைக்காரன் - ராஜாதிராஜா-படிக்காதவன் - நெற்றிக்கண் - மூன்றுமுகம் - அண்ணாமலை - பாட்ஷா - சந்திரமுகி-எந்திரன் போன்றவை இருக்கும்போது, இப்படிக் கஷ்டப்பட்டு நடித்து ராணாவை உருவாக்குவது அவசியம் தானா?
உடல்நிலை சரியில்லாமல் போன அமிதாப் திரும்பி வரும்வருவதர்கு பல ஆண்டுகள் ஆனபோதும், அவரது ரசிகர்கள் அவரை மறந்து விடவில்லை. அவருக்கான எதிர்பார்ப்பு குறையவும் இல்லை. அமிதாப்பை விடவும் உணர்ச்சிகரமான ரசிகர்களை வைத்திருக்கும் ரஜினி, பூரண ஓய்வு எடுத்துக் கொண்டு புதுப் பொலிவுடன் வரவேண்டும்.
ஜக்குபாயைச் சுருட்டி விட்டு, சந்திரமுகியுடன் திரும்பி வந்தது போல், இம்முறையும் ரஜினி செய்யலாம். ரஜினியின் நீண்ட நாள் ஆசையான ஐஸ்வர்யா ராயுடன் நடிப்பதே நிறைவேறி விட்டபின், கொஞ்ச நாள் ஓய்வு எடுப்பதில் என்ன தயக்கம்?
ஒரு ரசிகராக நமக்குத் தேவை ரஜினி தானேயொழிய ராணா அல்ல!




No comments:
Post a Comment