| அமெரிக்காவின உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் மூன்ற நாள் பயணமாக செப்ரெம்பர் 12ம் நாள் கொழும்பு வரவுள்ளார். கடந்த மாத இறுதியில் கொழும்பு வரத் திட்டமிட்டிருந்த பிளேக் ஐரின் சூறாவளியினால் தனது பயணங்களைப் பிற்போட்டிருந்தார். தற்போது அவர் தனது பயணத் திட்டங்களை மாற்றியமைத்து எதிர்வரும் 12ம் நாள் கொழும்பு வருவதற்கு ஒழுங்குகளைச் செய்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு வரும் பிளேக் இரண்டு விடயங்களை வலியுறுத்தவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு கொண்டு செல்வது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை மீளத் தொடங்குவது குறித்தும் சிறிலங்கா அரசிடம் அவர் வலியுறுத்துவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 19வது கூட்டத்தொடரில் விவாதிப்பது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 12ம் நாள் தொடங்கும் 18வது கூட்டத்தொடரில் கொண்டு வருவது குறித்து அமெரிக்கா இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சிறிலங்காவுக்குத் தெரியப்படுத்தியிருந்தது. ஆனால் அது சிறிலங்கா விவகாரத்தை அனைத்துலக மயப்படுத்தி விடும் என்பதால், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அந்தத் திட்டத்தை உடனடியாகவே நிராகரித்து விட்டது. எனினும் இந்தப் பயணத்தின் போது பிளேக் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இறுக்கமாக வலியுறுத்துவார் என்றும் சிறிலங்காவின் நிலைப்பாட்டை மீளாய்வு செய்யுமாறு அழுத்தம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தொடர்ச்சியாக மறுத்து வருவதால் மற்றொரு நாடு சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்று கவலையும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் மத்தியில் தோன்றியுள்ளது. மூன்று நாள் சிறிலங்கா பயணத்தின் போது யாழ்ப்பாணத்துக்கும் செல்ல திட்டமிட்டுள்ள பிளேக், கொழும்பில் இருந்து செப்ரெம்பர் 14ம் நாள் புதுடெல்லி செல்லவுள்ளார். அங்கு அவர் தூதுவர் நிலையில் அல்லாத அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். |
Sunday, 4 September 2011
கடும் அழுத்தம் கொடுப்பார் பிளேக் கவலையில் சிறிலங்கா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment