![]() |
| சென்னை விமான நிலையத்தில் கடந்த வாரம் அவசரமாகத் தரையிறங்கிய சிறிலங்கா விமானப்படை விமானம் சீனாவில் இருந்து ஆயுத தளபாடங்களை ஏற்றி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடுவானில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரியிருந்தது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அந்த விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த விமானம் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் ஏழு பேருடன் விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற கொண்டிருந்த போதே அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர். ஆனால் அந்த விமானம் சீனாவில் இருந்து சிறிலங்கா விமானப்படைக்கு ஆயுததளப்பாடங்களை ஏற்றி வந்தது என்று சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் கூறியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ரஸ்ய தயாரிப்பான அன்ரனோவ் 32 ரக போக்குவரத்து விமானம் கொழும்பில் இருந்து டாக்கா சென்று முதலில் எரிபொருள் நிரப்பியது. அதன் பின்னர் சீனாவின் குங்மின் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு சீனாவின் சொங்குயிங் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தது. அங்கிருந்து சீனாவின் எவ்-7 ஜெட் போர் விமானங்களுக்கான உதிரிப்பாகங்களையும், ஒரு தொகுதி வெடிபொருட்களையும் ஏற்றிக் கொண்டு கொழும்பு வரும் போதே சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக சிறிலங்கா விமானப்படை வட்டாங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அந்த விமானத்துக்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் முழுமையான பாதுகாப்பை வழங்கியதாகவும் கொழும்பு வாரஇதழ் தெரிவித்துள்ளது. அதேவேளை சீனாவில் இருந்து ஆயுதங்களை ஏற்றி வந்த சிறிலங்கா விமானத்துக்கு சென்னையில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்பதாலேயே அது கொழும்பில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற போது அவசரமாகத் தரையிறங்கியதாக சென்னை அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. |
Sunday, 4 September 2011
சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment