Sunday, 11 December 2011

மனைவி, வக்கீல், விவாகரத்து... எல்லாமே போலி – 'பலே' கோவை எஞ்ஜினியர்!!


போலி மனைவியை ஆஜர்படுத்தி போலி வழக்கறிஞர் மூலம் விவாகரத்து பெற்று இரண்டாம் திருமணம் செய்துள்ளார் கோவை இஞ்சினிய ஒருவர். மோசடியில் ஈடுபட்ட அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சொர்ணலதாவுக்கும் கடந்த 2004 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சொர்ணலதா சிங்கப்பூரிலும் டிப்ளமோ என்ஜினீயரான சிவக்குமார், ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதை அடுத்து சிவக்குமார் குடும்பநல கோர்டடில் வழக்கு தொடர்ந்தார். உறவினர்கள் கணவன் மனைவி இருவரிடமும் சமாதானம் பேசியதன் அடிப்படையில் சிவக்குமாரும், சொர்ணலதாவும் சேர்ந்து வாழ சம்மதித்தனர்.

இதைத்தொடர்ந்து விவாகரத்து வழக்கு முதலில் வாபஸ் பெறப்பட்டது. இந்தநிலையில் சிவக்குமார் மீண்டும் வேலைக்காக ஆஸ்திரேலியா சென்றார். கோவையில் தங்கி இருந்த சொர்ணலதா, சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுவிட்டார்.

போலிமனைவியுடன் விவாகரத்து

சொர்ணலதாவுடன் சேர்ந்து வாழ விரும்பாத சிவக்குமார் சொர்ணலதாவை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை மண முடிக்க திட்டமிட்டு கோவை வந்து தங்கினார். பின்னர் போலியாக ஒரு பெண்ணை பார்த்து அவரை தனது மனைவி சொர்ணலதாவாக நடிக்க ஏற்பாடு செய்தார்.

அந்த பெண்ணும் சிவக்குமாரும் கோவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர். எளிதில் விவாகரத்து கிடைப்பதற்கு வசதியாக ரகுபதி என்பவர் சொர்ணலதாவுக்காக ஆஜர் ஆவதுபோலும், ஆனந்தராஜ் என்பவர் சிவக்குமாருக்கு ஆஜர் ஆவது போலவும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.

வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. வழக்கின் முடிவில் சிவக்குமாருக்கும், சொர்ணலதாவுக்கும் விவாகரத்து வழங்குவதாக கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த ஜுன் மாதம் 23 ந்தேதி குடும்ப நல கோர்ட்டு இந்த உத்தரவை வழங்கியது.

இரண்டாவது திருமணம்

விவாகரத்து பெற்ற கையோடு 2 வது திருமண நடவடிக்கையில் சிவக்குமார் இறங்கினார். பீளமேடு சின்னச்சாமி அவென்யூவை சேர்ந்த பூர்னேஸ்வரியை சிவக்குமார் 2 வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் இம்மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்றது.

இந்த தகவல் சிங்கப்பூரில் இருந்த சொர்ணலதாவுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சொர்ணலதா கோவை திரும்பினார். சிவக்குமாரை சந்தித்து இதுகுறித்து கேட்டார். அப்போது சிவக்குமாரும், அவருடைய நண்பர் மாரிமுத்துவும் சேர்ந்து சொர்ணலதாவை மிரட்டினர்.

போலீசில் புகார்

இதுகுறித்து சொர்ணலதா போலீசில் புகார் செய்தார். அதனடிப்படையில் என்ஜினீயர் சிவக்குமார், வக்கீல்களாக ஆஜர் ஆன ரகுபதி, ஆனந்தராஜ், 2 வது மனைவி பூர்னேஸ்வரி, சிவக்குமாரின் நண்பர் மாரிமுத்து ஆகிய 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிவகுமார் ஆஸ்திரேலியாவிற்குத் தப்பிச் செல்லாத வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

No comments: