தமிழக சட்டத்துறை அமைச்சராகப் பதவி ஏற்று வெறும் 34 நாட்கள் மட்டுமே அப்பதவியிலிருந்த பரஞ்சோதி, சட்ட சிக்கல் காரணமாக பதவியை இழந்துள்ளார்.
திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்சோதி இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவரை அமைச்சராக்கியபோதே, இரண்டாவது மனைவி என்று உரிமை கொண்டாடி டாக்டர் ராணி என்பவர் புகார் கொடுத்திருந்தார். அமைச்சர் பரஞ்சோதி, தன்னை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். என்னிடம் இருந்து 60 பவுன் நகைகள் மற்றும் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார் என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதைக் கண்டுகொள்ளவில்லை முதல்வர் ஜெயலலிதா. பரஞ்சோதியை அமைச்சராக்கி முக்கியமான சட்டத்துறையை கையில் கொடுத்தார்.
இந்த நிலையில் பரஞ்சோதி மீதான புகார் வழக்காக மாறியது. அந்தப் பெண் டாக்டர் கொடுத்த மோசடி புகார்களின் மீது நீதிமன்ற உத்தரப்படி, அமைச்சர் பரஞ்சோதி மீது திருச்சி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால் வேறு வழியின்றி அவரை ராஜினாமா செய்ய வைத்தார் முதல்வர். இந்த ராஜினாமாவை ஏற்குமாறு ஆளுநருக்கு பரிந்துரை செய்த ஜெயலலிதா, கூடவே செல்வி ராமஜெயத்தையும் நீக்கியுள்ளார்.
ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 4 வது முறையாக அமைச்சரவையை மாற்றியுள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment