Monday, 14 November 2011

போர்நிறுத்த உடன்பாட்டின் பின்னணியில் இருந்தது ‘றோ‘ சொல்ஹெய்ம்

2002இல் சிறிலங்காவில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகளை இரகசியமாக சந்தித்த விபரத்தை நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரும், அந்த நாட்டின் சுற்றாடல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் அம்பலப்படுத்தியுள்ளார்.ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்படுவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்த விடயம் முதல்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் பற்றிய மிகப்பெரிய தகவல் களஞ்சியமான அறிக்கையை வெளியிட்ட பின்னர், தனது செயலகத்தில் பேசிய போதே எரிக் சொல்ஹெய்ம் போரநிறுத்த உடன்பாட்டில் இந்தியாவின் பங்கு பற்றிய பல இரகசியங்களை வெளியிட்டுள்ளார்.

2002 பெப்ரவரியில் போர்நிறுத்த உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளை இந்திய அதிகாரிகள் இரகசியமாக சந்தித்துள்ளனர்.

ஆனால் இந்தச் சந்திப்பு எங்கே நடந்தது என்றோ இருதரப்பிலும் சந்திப்புகளில் பங்கு பற்றியவர்கள் யார் என்பது பற்றியோ தகவல்களை வெளியிட சொல்ஹெய்ம் மறுத்து விட்டார்.

இது உண்மையானால், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையின் பின்னர் 1992இல் விடுதலைப் புலிகளை புதுடெல்லி தடை செய்த பின்னர், இந்திய அதிகாரிகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பாக இருக்கும்.

நோர்வேயின் அனுசரணையுடனான போர்நிறுத்த உடன்பாட்டை வரைவதில் அப்போது இந்தியாவில் ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதாக அரசாங்கம் பின்னணியில் முக்கிய பாத்திரம் வகித்ததாகவும் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

கொழும்பையும் விடுதலைப் புலிகளையும் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு இணங்க வைப்பது குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்தியாவின் புலனாய்வு முகவர் அமைப்பான ‘றோ‘ அதிகாரிகளுடன் பலமுறை சந்தித்துப் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘றோ‘ அதிகாரிகளுடனான பல சந்திப்புகள் புதுடெல்லி விமான நிலையத்தில் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

போர்நிறுத்த உடன்பாட்டில் இந்தியாவின் பங்கை அவரது இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ‘வின் தலையீடு பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என்று கோரப்பட்டதால், இந்தப் போர்நிறுத்த உடன்பாடு நோர்வேயின் தனித்துவமான குழந்தை போலவே கருதப்பட்டது.

2001-2002 இல் சிறிலங்கா மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் போர்நிறுத்த உடன்பாடு குறித்து அமைதியாக கலந்துரையாடியதாக கூறியுள்ள எரிக் சொல்ஹெய்ம், ஒவ்வொரு முன்னேற்றம் குறித்தும் புதுடெல்லிக்கு அறியத் தரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

போர்நிறுத்த உடன்பாடு குறித்து இந்தியா குரல் ஆலோசனைகளை வழங்கியதுடன், தொடர்ந்து நல்ல உள்ளடக்கங்களை புதுப்பித்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

“சமாதான முயற்சிகளில் ‘பிரதான அனைத்துலக சக்தி‘ தொடர்புபடுவதை இந்தியா விரும்பவில்லை, எந்தெந்த நாடுகள் சிறிலங்கா போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவில் பங்கேற்க வேண்டும் என்று கூட இந்தியாவே பரிந்துரைத்தது.

இந்திய அதிகாரிகள் அதில் தெளிவாகவே இருந்தனர். சிறிலங்காவை பிளவுபடுத்தப்படுவதை கடுமையாக எதிர்த்த அவர்கள், தமிழீழத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர்.

2006இல் புற்றுநோயால் மரணமான விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம், பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருந்தார். இந்திய நலன்களுக்கு விரோதமாக எதையும் செய்ய முடியாது என்று அவர் கருதியிருந்தார்.

ஆனால் 2001 தொடக்கம் 10 தடவைகளுக்கு மேல் நான் சந்தித்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஒரு இராணுவ மேதையாக இருந்தாலும், அனைத்துலக அரசியல் விவகாரங்களில் முழுமையான அனுபவம் கொண்டவரல்ல.

ராஜிவ்காந்தி கொலையில் தமது குழுவுக்குத் தொடர்பில்லை என்று பிரபாகரனும், பொட்டுஅம்மானும் பலமாதங்களாக வலியுறுத்தியதாக அன்ரன் பாலசிங்கம் என்னிடம் முறையிட்டார்.

அவர்கள் தாம் அதைச் செய்யவில்லை என்று பாலசிங்கத்தை சமாதானப்படுத்த முயன்றனர்.

தான் அதை நம்பவில்லை என்றும், அதன் பின்னர் தன்னிடம் பொய் சொல்வதை அவர்கள் நிறுத்திக் கொண்டதாகவும் பாலசிங்கம் என்னிடம் கூறினார்“ என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

No comments: