Friday, 9 September 2011

இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறிவிட்டார் சிறிலங்கா அதிபர் - பிரகாஸ் கரட் குற்றச்சாட்டு


சிறிலங்காவில் தமிழர்களுக்கு சமஉரிமையும், அதிகபட்ச சுயநிர்ணய உரிமையும் கொண்ட அரசியல் தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஸ் கரட், மத்திய குழு உறுப்பினர்கள் பிருந்தா கரட், வரதராஜன், தமிழ்நாடு மாநில பொதுச்செயலர் ராமகிருஸ்ணன், அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்தின் பொதுச்செயலர் சுதா சுந்தர்ராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா மற்றும் பெருமளவு பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தப் போராடத்தில் பங்கேற்க பெருமளவு இடதுசாரித் தொண்டர்கள் புதுடெல்லி வந்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரகாஸ் காரட், தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு ஒன்றை வழங்குவதாக இந்திய மத்திய அரசுக்கு வழங்கிய வாக்குறுதியை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச காப்பாற்றத் தவறி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாக தமிழ்மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்த சிறிலங்கா அரசை இணங்க வைக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருப்பதாகவும் அவர சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கு உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா, போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா அரசு தமிழ்மக்களை இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்மக்கள் தமக்கு சமஉரிமை வழங்குமாறும், தமிழை அரசகருமமொழியாக அங்கீரிக்குமாறும் கோரிய போது தான் அவர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசு போராளிகளுக்கு எதிராக தொடுத்த போர் தமிழ்மக்களுக்கு எதிரான போராகவே நடத்தி முடிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் மீதும், அதன் படைகள் மீதும் நடுநிலையான அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிருந்தா கரட், சிறிலங்கா ஆயுதப்படைகளால் சிறிலங்காவில் தமிழ்ப் பெண்கள் மோசமான முறைகளில் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments: