Saturday, 27 August 2011

நெடுந்தீவில் ஒரே குழியில் 8 மனித மண்டை ஓடுகள் மீட்பு! அத்திபாரம் வெட்டும்போது வெளிக்கிளம்பின

நெடுந்தீவு உதவி அரச அதிபர் பணிமனைக்குப் பின்புறமாக புதிய கட்டடம் அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டும்போது, எட்டு மனித மண்டை ஓடுகள் மீட்கப்பட்டுள்ளன.
உதவி அரச அதிபர் பணிமனைக்குப் பின்புறத்தில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சில தென்பட்டன.
எச்சங்கள் தென்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் அத்திபாரம் வெட்டும் பணிகள் உடனடியாக இடை நிறுத்தப்பட்டன.
இது தொடர்பாகப் பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து நேற்று ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா, சட்ட வைத்திய அதிகாரி எஸ். சிவரூபன் ஆகியோர் முன்னிலையில் அந்த இடம் தோண்டப்பட்டது.
இதன்போது 8 மனித மண்டை ஓடுகள், எலும்புக் கூட்டு எச்சங்கள் என்பன அந்தக் குழியில் இருந்து மீட்கப்பட்டன.
இவற்றுடன் உடைகளோ வேறு எந்தவிதமான தடயப் பொருள்களோ காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த எலும்புக் கூடுகள் 10 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனச் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை குறித்த நெடுந்தீவுப் பிரதேசம் கடந்த பல வருடங்களாக டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

No comments: