காரைக்கால் திருநள்ளாரில், கொம்யூன் ஊராட்சியின் தங்கும் விடுதி, கட்டணக் கழிப்பறை, கடை ஆகியவற்றின் ஏலத்தில் பிச்சைக்காரர்கள் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.காரைக்கால் திருநள்ளாரில், பிரசத்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்@தாறும் ஆயிரக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கிலும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் தேவஸ்தானம், கொம்யூன் ஊராட்சி ஆகியவை கழிப்பறை, தங்கும் விடுதிகளைக் கட்டியுள்ளது.இவை ஆண்டுதோறும் ஏலம் விடப்படுவது வழக்கம்.கோவில் குளத்தின் அருகே உள்ள கொம்யூன் ஊராட்சியின் கழிவறை மற்றும் தங்கும் விடுதி, வணிக வளாகத்தில் உள்ள 13வது எண் கடை ஆகியவற்றிற்கு நேற்று கொம்யூன் ஊராட்சி அலுவலகத்தில் ஏலம் நடந்தது. காலை 11.30 மணியில் இருந்து ஏலம் எடுக்க ஒவ்வொருவராக அலுவலகத்திற்கு வந்து முன்வைப்புத் தொகையைக் கட்டினர். திடீரென, மூன்று பிச்சைக்காரர்கள், ஏலம் விடும் அறைக்கு வந்தனர்.இவர்கள், திருநள்ளார் பகுதியில் சுற்றித்திரியும் சங்கரன்பந்தல், வைத்தீஸ்வரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் கணேசன், சண்முகம் மற்றும் மாணிக்கம்.
கையில் தட்டுடன் வந்த அவர்கள், அதில் ஏலத்தின் முன்தொகையாக ஒவ்வொருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்து, கொம்யூன் அதிகாரிகளிடம் வழங்கி தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். பின், ஏலம் நடந்த இடத்தில் முன்வரிசையில் அமர்ந்து ஏலத்தை கவனித்தனர். ஏலம் துவங்கியதும், அனைவரும் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். அப்போது பிச்சைக்காரர் மாணிக்கம், 50 ஆயிரம் வரை ஏலம் கேட்டார்.
அங்கிருந்த ஆணையர் சுபாஷ், ஏலத்தொகை கட்ட உங்களிடம் பணம் உள்ளதாக என கேட்டார். அதற்கு, எங்களிடம் கோடி ரூபாய் பணம் உள்ளது என்று தெரிவித்தனர். ஏலம் எடுத்துவிட்டு நீங்கள் கிளம்பி விடுவீர்கள், எனவே பணம் வைத்திருப்பதற்கான வங்கி ஆவணம், இருப்பிட ஆவணம் எதையாவது ஒன்றை காட்டுங்கள் என்று ஆணையர் சுபாஷ் கேட்டார். அதன்பின், பிச்சைக்காரர்கள் அமைதியாக அமர்ந்துவிட்டனர். பின், தொடர்ந்து ஏலம் விடப்பட்டது. ஏலம் 1.26 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.ஏலத்தில் பிச்சைக்காரர்களும் கலந்து கொண்டது, திருநள்ளார் கொம்யூனில் பரபரப்பாக பேசப்பட்டது.

No comments:
Post a Comment