Friday, 3 February 2012

விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: கருணா பேட்டி


இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பு மிகவும் வலுவாக இருந்தபோது, கிழக்கு மாகாண பொறுப்பை முரளிதரன் என்ற கருணா கவனித்து வந்தார். வரி வசூல் பணத்தை கொள்ளையடித்து, முறைகேடாக செயல்பட்டதால் அவரிடம் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் விளக்கம் கேட்டார். 

இதையடுத்து ஈழத் தமிழர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர், விடுதலைப் புலி அமைப்புக்கு துரோகம் செய்து விட்டு இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டார். விடுதலைப்புலிகள் முகாம்கள் அனைத்தையும் காட்டிக் கொடுத்தது இவர்தான். அந்த துரோகத்துக்கு பரிசாக இவருக்கு மகிந்த ராஜபக்சே மந்திரி பதவி கொடுத்துள்ளார்.

இவர் உதவியுடன்தான் உலகம் முழுக்க வாழும் விடுதலைப்புலி தலைவர்களை சிங்கள அரசு தேடி வருகிறது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் ரகசியங்களை வெளியிடப் போவதாக மீண்டும் ஒரு துரோக அறிவிப்பை கருணா வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- 

ஜெனீவாவில் உலக மனித உரிமை கவுன்சில் மாநாடு நடைபெற உள்ளது. அதில் நானும் கலந்து கொள்வேன். அந்த மாநாட்டில் விடுதலைப்புலிகளின் எல்லா ரகசியங்களையும் வெளியிடுவேன். பிரபாகரனும், விடுதலைப்புலிகளும் ஏராளமான போர் குற்றச் செயல்கள் செய்துள்ளனர். எந்தெந்த அரசியல்வாதிகளை அவர்கள் கொலை செய்தனர் என்ற பட்டியல் என்னிடம் உள்ளது. அதை வெளியிடுவேன். 

மேற்கத்திய நாடுகள் சில விடுதலைப்புலி தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளன. அந்த தலைவர்கள் எங்கெங்கு பதுங்கியுள்ளனர் என்பதும் எனக்கு தெரியும். அவர்களையும் காட்டிக் கொடுப்பேன். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களும், ஜெனீவா மாநாட்டுக்கு செல்லப்போவதாக தெரிய வந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் ஒரு அங்கமாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்தது. கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு அவர்கள் கல் எரியக்கூடாது. இதை நான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன்.

இவ்வாறு கருணா கூறினார்

No comments: