Wednesday, 7 September 2011

சிறிலங்காப் படைகளின் வெளிநாட்டுப் படைஅதிகாரிகளும் பார்வை (படங்கள் இணைப்பு)


சிறிலங்காப் படைகளால் திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்டு வந்த கடற்காகம் தாக்குதல்-2 போர்ப்பயிற்சியை வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் குழுவொன்றும் பார்வையிட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் திருகோணமலை மக்கெய்சர் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட பணய மீட்பு நடவடிக்கையின் ஒத்திகையையே வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் குழு பார்வையிட்டுள்ளது.

அமெரிக்கா, ரஸ்யா, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஸ் போன்ற நாடுகளின் தூதரகங்களில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள் இந்தப் பயிற்சியைக் காண திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும் இந்தப் போர்ப்பயிற்சியை நேரில் பார்வையிட்டுள்ளார்.

மூன்று வாரகாலம் இடம்பெற்ற இந்தப் போர்ப்பயிற்சியில் சிறிலங்காவின் முப்படைகளையும் சேர்ந்த 4000 படையினர் பங்கேற்றுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவு, கொமாண்டோ படைப்பிரிவு மற்றும் 1வது விஜயபா படைப்பிரிவு, 20வது கஜபா படைப்பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த படையினரே இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மன்னார் சிலாவத்துறையில் மேற்கொள்ளப்பட்ட நீர்க்காகம் -1 தாக்குதல் போர்ப்பயிற்சி ஈரூடக நடவடிக்கையை மையப்படுத்தியே இடம்பெற்றிருந்தது.

ஆனால் இம்முறை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பின் பேரில் படகுத்துறைகள் மீதான தாக்குதல், உயர் பெறுமான இலக்குகள் மீதான தாக்குதல், வேவு, இலக்குகளைக் கண்காணித்தல், வான்வழி நடவடிக்கைகள், கடல்வழி நடவடிக்கைகள், ஈரூடக தரையிறக்கம், தேடிப்பிடிக்கும் நடவடிக்கைகள், எதிரிகளின் கோட்டைக்குள் வான்வழியாக தரையிறங்குவது, பதுங்கித் தாக்குதல், தேடுதல் நடவடிக்கைகள், தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகள மற்றும் பணய மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழு அளவிலான போர்ப்பயிற்சியாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிறப்பு நடவடிக்கையின் தளபதியாகவும், நீர்க்காகம் தாக்குதல் பயிற்சியின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் கே.பி.ஜெயசேகர நியமிக்கப்பட்டிருந்ததாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொமாண்டோ றெஜிமென்ட்டின் 110 அதிகாரிகளும், சிறப்புப் படைப்பிரிவின் 90 அதிகாரிகளும், 400 கடற்படையினரும், 150 விமானப்படையினரும், 2750 சிறிலங்கா இராணுவத்தினரும் பங்கேற்ற இந்தப் போர்ப்பயிற்சி நேற்றுமாலையுடன் முடிவுக்கு வந்துள்ளது.

கடற்சண்டைகள் தொடர்பான போர்ப் பயிற்சிகள் காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவுக் கடலில் மேற்கொள்ளப்பட்டதுடன், காங்கேசன்துறையில் இருந்த கடற்படைக்கப்பல் மற்றும் படகுகளில் கொண்டு வரப்பட்ட சிறிலங்காப் படையினரை தரையிறக்கும் பயிற்சிகள் புடவைக்கட்டுப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.












No comments: