Monday, 21 November 2011

கடற்புலிகளை எதிர்கொண்ட இந்திய கடற்படையினர் – நான்கு ஆண்டுகளின் பின் வெளியான இரகசியம்

கடற்புலிகள் ஆயுதங்களை ஏற்றிவந்த ‘சிறிகிருஸ்ணா‘ என்ற இழுவைப்படகு, மாலைதீவு கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டபோது, அதனை இடைமறித்த மாலைதீவு கடலோரக் காவல்படைக் கப்பலில் இந்தியக் கடற்படையினரும் இருந்தனர் என்பதை மாலைதீவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.காலியில் கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரியான லெப்.கேணல் மொகமட் இப்ராகிம், 2007ஆண்டு மாலைதீவு கடற்பரப்பில் கரையோரக் காவல்படையினரை எதிர்கொண்ட போது விடுதலைப் புலிகளே ‘சிறிகிருஸ்ணா‘ என்ற இழுவைப் படகிற்குத் தீமூட்டிக் கொண்டதாகக் கூறியுள்ளார்.

கப்பலின் மேல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன்களில் இருந்த டீசலை ஊற்றிய பின்னரே கப்பலுக்குத் தீ வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மாலைதீவு கடலோரக் காவல்படையினர் எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்த்ததை அடுத்து, கடற்புலிகளால் கடத்தப்பட்ட அந்த இந்திய இழுவைப் படகில் இருந்த இந்தியர் ஒருவரை கடலில் குதிக்க அனுமதித்தனர். அவரை கடலோரக் காவல்படை கப்பலான ‘ஹுராவி‘ மீட்டது“ என்றும் லெப்.கேணல் மொகமட் இப்ராகிம் கூறியுள்ளார்.

முன்னதாக ‘சிறிகிருஸ்ணா‘ கடும்மோதல் ஒன்றையடுத்தே மூழ்கடிக்கபட்டதாக தகவல் வெளியானது. தற்போது மாலைதீவு பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ள தகவல் அதற்கு முற்றிலும் முரண்பாடானதாக உள்ளது.

“இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் ‘சிறிகிருஸ்ணா‘ கடற்புலிகளால் கொண்டு செல்லவோ கைவிட்டுச் செல்லவோ முடியவில்லை.

‘ஹுராவி‘யின் பணியாளர்கள் வேறு பணிகளில் ஈடுபட்டிருந்ததால் அந்த இடத்துக்குச் சென்றடைய ஒன்றரை மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டது. அதற்குள் ‘சிறிகிருஸ்ணா‘ தப்பிச் சென்றிருக்க முயன்றிருக்கலாம்.

அவர்களை சரணடைய வைப்பதற்கு பல மணிநேரம் பேச்சுக்களை நடத்தினோம். இதன்போது பல இந்திய அதிகாரிகளும் மாலுமிகளும் ‘ஹுராவி‘யில் இருந்தனர்.

2007 மே மாதம் இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு சொற்பகாலம் முன்னதாகவே ‘ஹுராவி‘யை இந்தியா வழங்கியிருந்தது.

எனவே மாலைதீவு கடலோரக் காவல்படையினருக்கு அதனைக் கையாளும் பயிற்சியை வழங்க இந்திய அதிகாரிகளும் மாலுமிகளும் அதில் தங்கியிருந்தனர்.

மாலைதீவு கடற்படையினரின் கைகளில் அந்த ஆயுதங்கள் விழுவதைத் தடுப்பதற்காகவே கடற்புலிகள் ‘சிறிகிருஸ்ணா‘வுக்குத் தீவைத்து அழித்தனர்.

ஆனால் அதில் இருந்து தப்பியவரை விசாரிக்க சிறிலங்கா கடற்படைக்கு மாலைதீவு அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

அது ஆழ்கடலில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் ஏனைய கப்பல்களை சிறிலங்கா கடற்படை குறிவைப்பதற்கு வசதியானது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments: