Sunday, 27 November 2011

தப்பிச் சென்ற புலிகளை இலக்குவைக்கும் சிறீலங்கா.

சிறீலங்கா அரசின் தற்போதைய அச்சம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகமே. அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் பலம் சிறீலங்கா அரசிற்கு தொடர்ந்து இருக்கக்கூடிய தலையிடியாகவே உள்ளது.
தமிழ் மக்கள் வாழுகின்ற நாடுகளில் அவர்களிற்கு வளர்ந்துவரும் அரசியல் செல்வாக்கும் எதிர்காலத்தில் சிறீலங்காவிற்கு பிரச்சினைக்குரிய ஒன்றாகவே அமைந்தவிடும் என்பதே, சிறீலங்கா அரசிற்கு இருக்கக்கூடிய கவலை.
சிறீலங்காவில், தமிழர்கள் முன்வைக்கும் தமிழீழக் கோரிக்கைக்கு, புலம்பெயர் தமிழ்ச்சமூகம் தொடர்ந்து வலுவான ஆதரவை வழங்கும் என்பதுடன், தமிழ்த்தேசியக் கோட்பாட்டிற்கு முரணாக தமிழ்த் தேசியக் கட்சிகள் செல்லமுடியாதவாறு ஒரு நாணயக் கயிற்றை வைத்திருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்களே என்பது சிறீலங்கா அரசின் கணிப்பாகும்.
போரின் பின்னர் புலம்பெயர்ந்த சமூகம் மெல்ல மெல்ல தளர்ச்சியடைந்துவிடும் என்பதும், உள்நாட்டில், தமிழ்த் தேசியவாதம் நீர்த்துப்போய்விடும் என்பதும் சிறீலங்கா அரசின் கணிப்பீடாகவும் இருந்தது.
அதேவேளை, புலம்பெயர்ந்த தேசங்களில், தமிழ்த்தேசியக் கட்டமைப்புக்கள் சிலவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய வகையில், தன் வலையமைப்புக்களை சிறீலங்கா அரசும், அதன்நேசநாடுகளும் கொண்டிருந்தன. புலத்தில் தமிழ்த்தேசிய எழுச்சியை மெல்ல மெல்ல மழுங்கடிப்பதே அவற்றின் நோக்கமாக இருந்தது. புலத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி, சர்வதேச ஆதரவை ஒரு நிலைப்படுத்தும், ஏற்பாடுகளை அல்லது பிரதிநிதிகளின் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்வதும் அதன் நோக்கமாகும்.
இந்தவகையில் நாடுகடந்த தமிழீழ அரசையும் அதன் பிரதமர் உருத்திரகுமாரையும் தமிழ்மக்கள் மத்தியில் இருந்து அந்நியப்படுத்தும் முயற்சியில் சிறீலங்கா தரப்பு ஈடுபட்டுள்ளது. அதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசை அங்கீகரிக்கக்கூடாது எனவும், உருத்திரகுமார் கைதுசெய்யப்படவேண்டும் எனவும் சிறீலங்கா அரசு ஏனைய நாடுகளை வலியுறுத்திவருகின்றது.
போர்க்காலத்திலும், அதற்கு முன்னரும் போருக்குப் பின்னருமான காலகட்டத்தில், தப்பிச் சென்ற போராளிகள் குறித்து குறைந்த மதிப்பீட்டையே சிறீலங்கா அரசு கொண்டிருந்தது. உயிர்தப்பி வெளியேறியவர்கள், தமது சொந்த வாழ்க்கைக்குத் திரும்பி, அமைதியடைந்துவிடுவார்கள் என்பதும், விடுதலைப் புலிகளின் முக்கியமான தனபதிகள், அதன் தலைமைக் கட்டமைப்புக்கள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில், தப்பிச் சென்றவர்களால், நெருக்கடிகள் உருவாக வாய்ப்பில்லை என்பதுவுமே சிறீலங்கா அரசின் நம்பிக்கையாக இருந்தது.
ஆனால், சிறீலங்காவை விட்டு தப்பி வெளியேறிச் சென்ற போராளிகள், மீள இயங்குவது குறித்த அச்சம் சிறீலங்கா அரசிற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. அவர்கள், மீள்கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக சிறீலங்கா அரசின் புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது.
போர் மௌனித்த பின்னர், தப்பிச் சென்ற போராளிகள், அரசியல் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
போரை மையப்படுத்தியதாக அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தால், அதனை சிறீலங்கா அரசால், மீள்பயங்கரவாதத்திற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன எனக் கூச்சலிட்டு, சர்வதேச நாடுகளின் ஆதரவைப்பெற்று அவற்றை அடக்க அதற்கு இலகுவாக இருந்திருக்கும்.
ஆனால், உலகின் போக்கையும் அதன் எதிர்பார்ப்பையும் புரிந்துகொண்டு, தமது செயற்பாடுகளை அரசியல் ரீதியாகவும், இராஜதந்திரவழிமுறைகளுக்கூடாகவும் நகர்த்திவரும் புலம்பெயர்ந்த புலிகள் சிறீலங்கா அரசிற்கு மிகப்பெரும் நெருக்கடியாக உருமாறியுள்ளனர்.
நேரடியாக கொடிய யுத்தத்தை எதிர்கொண்டவர்கள், மக்களின் அவலங்களைப் பார்த்தவர்கள், அவற்றை நேரடியாக அனுபவித்தவர்கள், வெளிநாடுகளிற்குத் தப்பிச் சென்று, அமைதியாக சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள் என, நம்பியதே சிறீலங்காவின் தப்பாகிப்போய்விட்டது.
இப்போது, தமிழ்மக்கள் மத்தியில் அவர்களைச் செயற்பட முடியாத சூழ்நிலைகளை உருவாக்குவதே சிறீலங்கா அரசின் திட்டம்.
தப்பிச் சென்ற புலிகள், சிறீலங்கா புலனாய்வுப் பிரிவின் கைக்கூலிகள் என்று, சிறீலங்கா அரசின் புலனாய்வுப் பிரிவே ஒருபரப்புரைத் திட்டத்தை வரைந்து, புலம்பெயர் தமிழர்கள் சிலருக்கூடாக அதனைப் பரவவிட்டுள்ளது.
அதேவேளை, விசா மற்றும் தங்குமிடவசதிகள் வேலைகள் இன்றி வாழும் இவர்கள், ஒரிடத்தில் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடியாத வகையில், நெருக்கடிகளை ஏற்படுத்தி, அவர்களை சட்டச் சிக்கல்களில் மாட்டவைக்கும் முயற்சிகளும், அவர்களைப் பற்றிய விபரங்கள் புகைப்படங்களுடன், இணையத்தளங்கள் பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் சிறீலங்காப் புலனாய்வுத் துறை ஈடுபட்டுள்ளது.
தமிழர்களைப் பொறுத்தவரை, யாராக இருந்தாலும், அவர்கள் சிறீலங்கா புலனாய்வத் துறைக்கு வேலை செய்பவர்கள், சிறீலங்கா அரசுடன் தொடர்புபட்டவர்கள் என்று கூறினால், அவர்களை முற்றாக நிராகரித்துவிடுவார்கள் என்பது சிறீலங்காப் புலனாய்வுத் துறைக்கு நன்கு தெரியும். அதனையே அது தன்கையில் எடுத்துள்ளது.
அது சிறீலங்காப் புலனாய்வுத் துறைக்கு பெரிதும் உதவும் ஒன்றாக உள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக அன்றுதொடக்கம் நிற்கும் ஊடகங்கள், தாயகத்தில் தமிழ்மக்களுக்காக சேவையாற்றும் பொது அமைப்புக்கள், மற்றும் புதிய சூழ்நிரையில் தோற்றம்பெற்றிருக்கும் அமைப்புக்கள் யாவும், சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவுடன் இயங்குகின்றன என்ற செய்தி,
அவற்றை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் சிறீலங்காப் புலனாய்வப் பிரிவால் வரையப்பட்ட திட்டமே.
அந்தத் திட்டத்தின் அடுத்த அத்தியாயமே, புலம்பெயர்ந்த புலிகள் மீதான குற்றச்சாட்டு.
சிங்களத்தின் இந்தச் சதித்திட்டத்தை, அறிவுள்ள தமிழ் இனம் நன்கு புரிந்துகொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
தாயகத்தில் மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராளிகள், இந்த மக்களின் விடுதலைக்காக, புலத்திலும், தமது அயராத பங்களிப்பை வழங்கி, அந்த மக்களின் விடுதலைக்கு வழிசமைப்பார்கள். அதுவே தேசியத் தலைவரின் விருப்பமும், எதிர்பார்ப்புமாகும்.

No comments: