
லிபியா, பென்காசி நகரில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டு, அமெரிக்க தூதரும் கொல்லப்பட்ட தினத்தன்று அங்கு நடைபெற்ற சில மர்ம நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த விபரங்கள் இதுவரை மறைக்கப்பட்டிருந்தன. தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க தூதரகத்தில் இருந்து வெறும் 1 கி.மீ. தொலைவில், சி.ஐ.ஏ.வின் ரகசிய இடம் (CIA safe house) ஒன்று இருந்திருக்கிறது. அந்த வீட்டில் இருந்தவர்கள் சி.ஐ.ஏ.வின் ஆட்கள் என்பது, ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
தூதரகம் தாக்குதலுக்கு உள்ளானபோது, இரவு சுமார் 9.40க்கு, அந்த துப்பாக்கி சத்தங்கள், சி.ஐ.ஏ. ரகசிய இடத்தில் இருந்தவர்களுக்கு கேட்டிருக்கிறது. தூதரகத்தில் இருந்தவர்களை காப்பாற்ற செல்வதற்கு இவர்கள் அனுமதி கேட்டபோது, மேலதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்தும் தாக்குதல் நடக்கும் சத்தம் கேட்கவே, இவர்கள் ரேடியோ மூலம், மீண்டும் அனுமதி கோரியுள்ளனர். இரண்டாவது தடவையும் அனுமதி மறுக்கப்பட்டது. இவர்களை தலையிட வேண்டாம் என்று கூறியதிலும் ஒரு மர்மம் உண்டு.
அந்த வீட்டில் சி.ஐ.ஏ. ஆட்கள் தங்கியிருந்தது பரம ரகசியம் என்பதால், அவர்களை “நீங்கள் இதில் தலையிட வேண்டாம்” என்று மேலதிகாரிகள் தடுத்து விட்டனர். அந்த வீட்டில் தங்கியிருந்தவர்களிடம் ஆயுதங்களும் இருந்தன. அதில் இருவர் Navy SEAL படைப்பிரிவில் (பின்லேடன் வேட்டைக்கு சென்ற அதிரடிப்படை) முன்பு பணிபுரிந்தவர்கள். அதிரடித் தாக்குதலில் அனுபவம் பெற்றவர்கள். தூதரகத்தில் இருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்ட உடனேயே இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தால், கொல்லப்பட்ட அமெரிக்க தூதரின் உயிரையும், அங்கு கொல்லப்பட்ட மற்றையவர்களையும் இவர்கள் காப்பாற்றியிருக்கலாம். சரி. இவர்கள் அங்கே எதற்காக ரகசியமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர் ? லிபியாவில் கடாபிக்கு எதிராக போராளி அமைப்புகள் யுத்தம் புரிந்த நாட்களில், கடாபியை ஒழித்துக் கட்டவேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பமாகவும் இருந்தது. அதற்காக அமெரிக்கா வெளிப்படையாக யுத்தத்தில் இறங்காமல், கடாபிக்கு எதிராக போராடிய குழுக்களுக்கு மறைமுகமாக ஆயுத உதவி செய்தது.
இந்த ஆயுதங்களை சி.ஐ.ஏ., லிபியா எல்லைவரை கொண்டுவந்து கொடுக்க, போராளிக்குழுக்கள் அவற்றை லிபியாவுக்கு உள்ளே கடத்திக்கொண்டு சென்றார்கள். போராளிக் குழுக்கள் லிபிய ராணுவத்தை ஜெயித்தது, இப்படியான ரகசிய ஆயுத சப்ளை கிடைத்ததால்தான்.யுத்தம் முடிந்தபின், தாம் கொடுத்த ஆயுதங்களில் எல்லளவு ஆயுதங்கள் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டன என சி.ஐ.ஏ. ஒரு உத்தேசக் கணக்கு எடுத்தது. அதில், இவர்கள் ரகசியமாக சப்ளை செய்த ஆயுதங்களில், யுத்தத்தில் பயன்படுத்தப்படாத ஆயுதங்கள் இன்னமும் ஆயுதக் குழுக்களின் கைகளில் இருப்பதை சி.ஐஏ. தெரிந்து கொண்டது. முக்கியமாக, சுமார் 20,000 எண்ணிக்கையில் MANPADS, (தோளில் வைத்து சுடும் சிறு ஏவுகணைகள். இவற்றால் தாழ்வாகப் பறக்கும் வர்த்தக விமானங்களை வீழ்த்தலாம்) லிபியாவில், ஆயுதக் குழுக்களின் கைகளில் தேங்கிவிட்டதை சி.ஐ.ஏ. தெரிந்து கொண்டது.
உளவு வட்டாரங்களில் கிடைக்கும் தகவல்களின்படி, இந்த ஆயுதங்களை திரும்ப வாங்கும் முயற்சியில் சி.ஐ.ஏ. சிலரை இறக்கி விட்டுள்ளது. யுத்தம் நடந்தபோது சும்மா கொடுத்த ஆயுதங்களை, இப்போது அவர்களிடம் இருந்து மார்க்கெட் விலைக்கு வாங்கிக் கொள்கிறது சி.ஐ.ஏ.பணம் கொடுக்காவிட்டால் ஆயுதக் குழுக்கள், இந்த ஆயுதங்களை எதற்காக சி.ஐ.ஏ.வுக்கு கொடுக்க வேண்டும்? தேவையென்றால் வெளியே விற்றுக் கொள்ளலாமே? இதனால், இலவசமாக கொடுத்தவர்களே மார்க்கெட் விலை கொடுத்து வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் சி.ஐ.ஏ. டீமுக்கு பாதுகாப்பு கொடுக்க ரகசியமான லிபியாவில் தங்கியிருக்கும் டீமே, நாம் குறிப்பிட்ட ரகசிய இருப்பிடத்தில் இருந்த ஆட்கள். சி.ஐ.ஏ.வின் GRS (Global Response Staff) பிரிவைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
இப்போது புரிகிறதா கதைச் சுருக்கம்? தூதரகத்தில் உள்ளவர்களை காப்பாற்ற இவர்கள் வெளிப்பட்டு, அதன்மூலம் இவர்கள் லிபியாவில் என்ன செய்கிறார்கள் என்ற விவகாரம் வெளியே தெரிய வந்தால் எவ்வளவு சிக்கல் வரும் என்று புரிகிறதா?அதுதான் இவர்கள் போய் உதவி செய்ய மேலதிகாரிகள் அனுமதிக்கவில்லை.ஒரு கட்டத்தில், தூதரகத்தில் இருந்து தொடர்ந்தும் துப்பாக்கிச் சத்தம் கேட்கவே, மேலதிகாரிகளின் சொல்லையும் மீறி, சி.ஐ.ஏ. ரகசிய இடத்தில் இருந்த இருவர், அமெரிக்க துதரகம் இருந்த இடத்துக்கு சென்றிருக்கிறார்கள்.
அதற்குள் அங்கு தாக்குதல்கள் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டிருந்தன. தூதரகம் எரிந்துகொண்டிருந்தது. எரிந்து கொண்டிருந்த தூதரக கட்டத்துக்குள் இருந்தவர்களை வெளியே கொண்டுவந்தது, இவர்கள்தான். இல்லாவிடில், உயிரிழப்புகள் இன்னமும் அதிகமாக போயிருக்கும். மேலதிகாரிகளின் உத்தரவை மீறி சென்ற இவர்கள், தூதரக கட்டடத்துக்குள் இருந்தவர்களை வெளியேற்றியபின் அங்கு நிற்காது, இரவு சுமார் 12 மணிக்கு, தமது ரகசிய இருப்பிடத்துக்கு திருப்பிவிட்டனர். இங்குள்ள மற்றொரு விஷயம், தாக்குதல் தொடங்கிய உடனேயே, தகவல் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அவசர உதவி அனுப்பி வைக்கும்படி கோரிக்கையும் விடப்பட்டது.
லிபியா பென்காசி நகரில் இருந்து வெறும் 480 மைல்கள் தொலைவில், அமெரிக்க ராணுவத்தின் சிகொனெல்லா (இத்தாலி) ராணுவத் தளம் இருந்தது. அந்த தளத்தில், அதிரடிப்படை டீம்கள் இரண்டு இருந்தன. தகவல் கிடைத்ததும் அந்த முகாமில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அதிரடிப் படைகளை அனுப்பியிருந்தால், சுமார் 2 மணி நேரத்தில் அவர்கள் பென்காசிக்கு சென்றிருக்க முடியும். ஆனால், அப்படியொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பென்காசியில் அமெரிக்க தரப்புக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த விபரங்கள் நேற்று வெளியாகியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment