Tuesday, 30 October 2012

பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடிக் கோரிய தமிழீழத்தை வழங்க கோத்தபாய விரும்புகிறாரா?

பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடிக் கோரிய தமிழீழத்தை வழங்க கோத்தபாய விரும்புகிறாரா?
பிரபாகரன் நிராகரித்த 13ஆவது அரசியல் திருத்தத்தை ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூக்கிப் பிடிக்கிறது என்று கேட்டிருக்கிறார் கோத்தபாய ராஜபக்ச.
அப்படியெனில் பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடிக் கோரிய தமிழீழத்தை வழங்க கோத்தபாய விரும்புகிறாரா? என்பதுதான் பெரும் சந்தேகமாக இன்று தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
13ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை அழித்துவிடலாம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சொல்லியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
போரில் புலிகளை அழிக்கலாம் என்று எப்படி சொன்னாரோ, மக்களை அழிக்கலாம் என்று எப்படி ஆணையிட்டாரோ? அப்படியே 13ஆவது அரசியல் திருத்த சட்டத்தையும் அழித்துவிடலாம் என்று மகிந்த ராஜபக்சவின் தம்பி கோத்தபாய ராஜபக்ச சொல்லியுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான இனப்பிரச்சினையை மீண்டும் உச்சமானதொரு கட்டத்திற்குள் நகர்த்தும் ஒரு அபாயத்தின் அறிவிப்பாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு ஒரு துளியேனும் சாதகத்தைக் கொண்டதொரு சட்டம் இருக்கக்கூடாது என்பதையே சிங்களப் ஆட்சியாளர்களான ராஜபக்ஷேக்கள் விரும்புகிறார்கள்.
13ஆவது அரசியல் திருத்தச் சட்டம் என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம்.
இலங்கை சுகந்திரமடைந்த பின்னர் இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் வெடித்து. எழுபதுகளின் இறுதியில் அது ஆயுதப்போராட்டமாக மாறியது.
இந்நிலையில் ஈழப்போராளி இயக்கங்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது 1987இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் நடைபெற்று இனப்பிரச்சினையை தீர்க்கும் விதமாக இந்தியா ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்தது.
இந்தியாவில் உள்ள கூட்டாட்சி முறையை ஒத்த ஆட்சி முறையொன்றை வழங்கி தமிழர்களுக்கு ஒரு தீர்வை வழங்குவதாகச் சொல்லி இந்த அரசியல் திருத்தம் முன்வைக்கப்பட்டது.
தனிநாடு கோரிய போராட்டம் நடந்த அக்காலத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பு, காவல்துறை, காணி அதிகாரம் உட்பட்ட சில அதிகாரங்கள் உள்ளடங்கலாக இந்த திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
ஈழப்போராளி இயக்கங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்ட கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த அரசியல் தீர்வுத் திட்டத்தை நிராகரித்திருந்தார்கள்.
விடுதலைப் புலிகளின் எதிர்ப்பின் மத்தியிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமாக வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு தேர்தலும் நடைபெற்றது.
இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் யுத்தம் மூண்ட சூழலில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா வடக்கு கிழக்கு மாகாணசபை ஆட்சியை கலைத்தார்.
மகிந்தராஜபக்ச ஆட்சியில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் யுத்தம் மூளும் அபாயம் நிலவிய சூழலில் இனப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் விதமாக அரசியல் சட்டத்தில் இருந்த வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு நீதிமன்றம் மூலம் பிரிக்கப்பட்டது.
13ஆவது சரத்தை அழிக்க வேண்டும் என்று கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்ட வேளை அவ்வாறு அழிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று மகிந்த ராஜபக்சவின் இன்னொரு தம்பியான பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கை அரசின் உத்தியோகபூர்வமான கருத்தாகவே அமைந்திருந்தது. இலங்கை அமைச்சர்களுக்கும் தமிழ் பிரதிநிதிகளுக்குள்ளும் பெரும் பதற்றம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக்;கொள்ளும் நிலைமையை இந்த அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலைமையை உருவாக்கி இனப்பிரச்சினையை திசைதிருப்பும் திட்டத்தைக் கொண்ட அறிவிப்பா? என்ற ஐயமும் எழுந்துள்ளது.
1310 பற்றிய அழுத்தங்கள் அரசாங்கத்திற்கு பிரயோகிக்கப்படும் சூழலில் போதிய அதிகாரமற்ற 13ஆவது திருத்தத்தை திணிக்கத் தான் இவ்வாறு அரசியற் புரளியை அரசு கிளபபுகிறதா? என்ற ஐயமும் நிலவுகிறது.
ஏனெனில் இலங்கை அரசு எதை? எதற்காக அறிவிக்கிறது? என்றும் அதற்கடுத்து என்ன செய்யும்? என்றும் எந்த வல்லுனர்களாலும் உணர முடியாது.
ஆனால் இந்த மாதிரியான அறிவிப்புக்களுக்குப் பின்னால் தமிழ் மக்களுக்கு பெரும் துயரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. அதிலும் ராஜபக்ச ஆட்சியில் எதிர்பாராத துயரம் தொடர்ந்து வந்து தமிழ் மக்களை தாக்கிக்கொண்டிருக்கிறது.
1310 பிரபாகரனுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வென்று சொல்லியுள்ள கோத்தபாய ராஜபக்ச இந்தியாவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இதைப்பற்றி பேச முடியாது என்றும் சொல்லியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்காக முன்வைக்கப்பட்ட தீர்வு என்பதன் மூலம் புலிகளை அழித்த பின்னர் அந்த தீர்வு தேவையில்லை என்றும் அதையும் அழிக்கலாம் என்றும் சொல்ல வருகிறார் கோத்தபாய.
1310 தமிழ் அரசியல்வாதிகள்தான் கோருகிறார்கள் என்று கோத்தபாய சொல்வதைப்போல காணி அதிகாரத்தை தமிழ் அரசியல்வாதிகள் கோருகிறார்கள் அதை தமிழ் மக்கள் கேட்கவில்லை என்று பசில்ராஜபக்ச ஒருமுறை குறிப்பிட்டார். அண்மையில் வடக்கில் இடம்பெயர் அகதிகள் என்று யாருமில்லை என்று கோத்தபாய குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு எங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வீடு திரும்பாமல் தவித்துக் கொண்டிருக்கையில் அவர் இப்படிச் சொன்னார். முள்ளிவாய்க்காலிலும் மாதகலிலும் அவர் இப்படிச் சொன்ன பின்னரே மீள்குடியேற்றம் நடந்தது.
அதைப்போல இப்பொழுது இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்று சொல்லியிருக்கிறார். இனப்பிரச்சினையால் வாழவும் மீளவும் முடியாமல் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தபடியிருக்கும் நிலையிலேயே கோத்தபாய இப்படிச் சொல்லியருக்கிறார். இன்னும் கொஞ்ச காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களென்று யாரும் இல்லை என்றும் கோத்தபாய கூறக்கூடும்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் 13ஆவது திருத்த சட்டத்தையும் விடுதலைப் புலிகள் நிராகரித்தார்கள். இது விடுதலைப் புலிகள் செய்த வரலாற்று தவறு என்று சிலர் விமர்சனம் செய்தார்கள்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரிப்பு முதல் இப்பொழுது 13ஆவது அரசியல் திருத்த சட்டத்தை அழிக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட யோசனை வரை இலங்கை அரசின் தொடர் நடைமுறைகளைப் பார்க்கையில் இவை எவ்வாறான பலமான அரசியல் சட்டம்? என்றும் அவற்றுக்கு என்ன சக்தி உள்ளன? என்றும் இப்பொழுது உணர முடிகிறது.
அன்று விடுதலைப் புலிகள் இலங்கை இந்திய ஒப்பந்த அரிசயல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் இன்று அதை அழித்து சிங்களப் பேரினவாத ஆட்சியை தமிழர்நிலத்தில் விரிக்க சட்ட திருத்தத்தை இலங்கை அரசு கொண்டு வந்திருக்கும்.
இவ்வாறான இலங்கை அரசின் நடவடிக்கைகள் புலிகள் இலங்கை இந்திய ஒப்பந்த தீர்வுத்திட்டத்தை நிராகரித்தது சரியானதே என்று நியாயப்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளன. இந்தப் படிப்பினையில் அடிப்படையில் பார்க்கையில் தனிநாடுதான் சரியான தீர்வு என்ற சூழலுக்கு தமிழர்கள் மீண்டும் நிர்பந்தமாகத் தள்ளப்படுகிறார்கள்.
இலங்கை அரசோடு இணைந்து கூட்டாட்சி அமைந்தால் என்ன நடக்கும்? என்பதையும் தமிழர்களுக்கு சாதகமான சின்ன சட்டங்கள்கூட இலங்கை அரசின் யாப்பில் இருந்தால் அவைகளுக்கு என்ன கதி ஏற்படும்? என்பதையும் இந்த சட்ட அழிப்பு எச்சரிக்கைகள் தெளிவாக்குகின்றன.
இலங்கை அரசுகளின் அராஜகங்களினாலும் இனப்படுகொலை நடவடிக்கைகளினாலும் தமிழர்கள் தனிநாடு கோரிப் போராடினார்கள். தனிநாடல்லாத ஒரு தீர்வுக்கு சென்றால் எது எப்படியான விளைவைத்தரும் என்பதை இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்து உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.
மீள்குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு, இராணுவமயம் என்று எல்லா வகையிலும் தமிழ் மக்களை தொடர்ந்து தாக்கும் சூழலில்தான் சிங்கள அரசு இந்த நடவடிக்கையை தொடக்கியிருக்கிறது.
யுத்தம் முடிந்த பின்னர் 13ஆவது அரசியல் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உலகநாடுகள் இலங்கையைப் பணித்தன.
விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போகிறோம் என்று சொல்லியே இலங்கை அரசு கொடும் இனப்படுகொலை யுத்தத்தை நடத்தியது.
ஐ.நாவும் இந்தியாவும்கூட 13ஐ நடைமுறைப்படுத்தும்படி இலங்கை அரசை தொடர்ந்து நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறன.
13ஐ நடைமுடுறைப்படுத்துவேன் என்று சொல்லிய இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அதற்கு அப்பாலான தீர்வை வழங்குவேன் என்றும் குறிப்பிட்டார்.
புலிகள் நிராகரித்த இவ் அரசியல் திருத்த சட்டத்தை வைத்து யுத்தம் நடத்திக் கொண்டு மறுமுனையில் ’13 பிளஸ் தருகிறோம்’ என்று ஒரு கதையைப் சொல்லியே சில தமிழ் அரசியல்வாதிகளை தனது யுத்த அரசியல் நலனுக்காக கையாண்டது.
13ஐ அழித்தால் மீண்டும் மேதாதல் வரும் என்று பிள்ளையான் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். முக்கியமாக கிழக்கில் பிள்ளையான், வடக்கில் டக்கிளஸ் தேவானந்தா முதலியவர்களை 13 பிளஸ் என்ற தீர்வை காட்டி முழுமையாக தனக்குள் இழுத்தது அரசு.
யுத்தம் முடிந்த நிலையில் எந்த தீர்வுத் திட்டத்தையும் முன் வைக்காமல் காலத்தை கடத்திக் கொண்டு வந்தது இலங்கை அரசு. இந்த நிலையில்தான் இணைந்த மாகாண சபையுடன் காணி, காவல்துறை அதிகாரங்களுடன் அரசில் தீர்வை முன்வைக்குமாறு இனப்படுகொலையில் ஈடுபட்ட சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்வந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தை முதல் எல்லா சமிக்கைகளையும் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிக்கு இப்பொழுது எச்சரிக்கை விடுத்திருக்கிறது அரசு. பேச்சுவார்த்தை மூலம் எந்தத் தீர்வையும் எட்டுவது இலங்கை அரசுகளின் செயற்பாடாக ஒரு பொழுதும் இருந்ததில்லை.
ஒரு பிரதேசசபையைகூட தமிழர்கள் ஆளக்கூடாது என்று நினைக்கிறது ராஜபக்ச அரசு. அந்த அடிப்படையில்தான் வடக்கு மாகாண சபையை தமிழர் தரப்பு கைப்பற்றினால் அது இலங்கை அரசுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று கருதுகிறது.
வடக்கு மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டிய நிர்பந்தம் இலங்கை அரசுக்கு உள்ளது. இந்நிலையில் 13ஐ அழித்தல் என்பது தமிழ் மக்கள் தரப்பில் எந்த சிறு நிர்வாகமும் செல்லாது தடுக்கும் நடவடிக்கையாக அமையும் என்று ராஜபக்ச அரசு நம்புகிறது.
வடக்கில் இராணு ஆக்கிரமிப்பை நிலைநிறுத்தல், காணி அபகரிப்பில் ஈடுபடல், தமிழர்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தல் என்று எல்லா வகையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தமிழர்களை ஒடுக்கி இல்லாமல் செய்யும் திட்டத்திற்கு 13உம், வடக்கு மாகாண சபைத் தேர்தலும் தடையாக உள்ளதாக அரசு நினைக்கிறது. எனவே அதை அழித்தால் வெற்றிகரமாக எஞ்சிய தமிழர்களை துடைத்தெறிந்து சிங்கள ஆக்கிரமிப்பை மேற்கொள்ளலாம் என்பதே அரசின் திட்டம்.
சமாதான யுத்தம் நடத்தி ஈழமக்களை படுகொலை செய்த பின்னரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு சென்ற சூழலில் 13ஆவது சரத்தையும் அழிக்கும் பொழுது இலங்கை அரசோடு பேசுவதற்கு உண்மையில் இனி என்ன இருக்கிறது? நாங்கள் எந்த தீர்வுக்கும் இணங்க மாட்டோம் என்பதை அது வெளிப்படையாகவே உணர்த்துகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த எச்சரிக்கை மூலம் இலங்கை அரசாங்கம் சொல்லுகிறது. ஈழத் தமிழ் மக்களுடன் நாம் எதையும் பகரிமாட்டோம் என்று உலக நாடுகளுக்கும் சொல்கிறது.
வாழ் நிலத்திற்காகவும் அதற்கான உரிமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் ஈழத் தமிழினம் போராடியது. அந்தப் போராட்டத்தையும் அழித்து மக்களை இனப்படுகொலை செய்தது இலங்கை அரசு.
எல்லா அராஜகங்களையும் செய்யும் பொழுது நிராகரிக்கப்பட்ட அரசியல் சரத்தை காட்டியது. இப்பொழுது அந்த சரத்தையும் அழிப்பேன் என்பதன் மூலம் ஈழத் தமிழ் மக்களை இனப்பிரச்சினையின் தொடக்க காலத்திற்குத் தள்ளுகிறது. இலங்கைத் தமிழர்களின்அரசியல் பிரச்சினைக்கு 13 சரியான தீர்வல்ல என்று தமிழர் தரப்பால் சொல்லப்பட்டது. ஆனால் அதையும் அழிக்க வேண்டும் என்று நிற்கிறது இனவாத அரசு.
இலங்கையில் மீண்டும் இரத்தம் பாயும் காலத்தை உருவாக்க முனைகிறது சிங்கள அரசு.
தமிழர்களை அவர்களின் தாயகத்திலிருந்து அழித்து எந்தவொரு சிறுநலனையும் தமிழர்களுக்கு பகிரக்கூடாது என்று இலங்கை அரசு திட்டமிட்டு செயலாற்றும் பொழுது நாம் என்ன செய்வது?
காலத்திற்கும் அநீதிக்கும் ஏற்ற வகையில் மீண்டும் போராட வேண்டிய சூழலை அரசாங்கங்கள் ஈழத் தமிழர்களுக்கு நிர்பந்திக்கிறது

No comments: