Wednesday, 14 December 2011

அத்துமீறி பறக்கும் அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்: பாகிஸ்தான் மிரட்டல்

 


கடந்த மாதம் 26-ந்தேதி ஆப்கானிஸ்தான் எல்லையில் முகாமிட்டு இருந்த பாகிஸ்தான் ராணுவ முகாமின் மீது அமெரிக்க தலைமையிலான நேட்டோ போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. அதில் 24 வீரர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோபடைகளுக்கு லாரிகள் மூலம் பெட்ரோல் மற்றும் உணவு பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் ஷாம்சி விமான படை தளத்தில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.

இங்கிருந்து பறந்து சென்று அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணைகளை வீசி பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை அழித்து வந்தது. பாகிஸ்தானின் நடவடிக்கையை தொடர்ந்து தற்போது ஷாம்சி விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்க ராணுவம் முற்றிலும் வெளியேறியது. நேற்று கடைசி விமானம் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் ஏவுகணை வீச பயன்படுத்தப்படும் அதிநவீன கருவிகள் போன்றவற்றை எடுத்து சென்றது.

ஷாம்சி விமான தளம் தற்போது பாகிஸ்தான் ராணுவ வசம் உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு புதிய ராணுவ கொள்கையை வகுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ மற்றும் அதன் நட்பு நாடு களின் படைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தால் அதிரடி தாக்குதல் நடத்தலாம். மேலும் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் பறக்கும் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மற்றும் நேட்டோ விமானங்களை சுட்டு வீழ்த்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணுவ அதிகாரி கூறும்போது, எங்கள் எல்லைக்குள் அத்து மீறி நுழையும் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மற்றும் நேட்டோ படைகளை எதிரிகளாக கருதி சுட்டு வீழ்த்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

No comments: