![]() |
| இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரகசிய செய்தி ஒன்றை சிறப்புத் தூதுவர் மூலம் கடந்தவாரம் அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா அதிபரின் சிறப்பு தூதுவராக புதுடெல்லி சென்ற பதில் வெளிவிவகார அமைச்சர் டியு.குணசேகர கடந்த வெள்ளிக்கிழமை இந்த இரகசிய செய்தியை இந்தியப் பிரதமரிடம் நேரில் கையளித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது அமைச்சர் டியு.குணசேகர வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார். அதேவேளை, இந்தியப் பிரதமரிடம் கையளிக்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் இரகசிய செய்தி என்ன என்பது பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆயினும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்குமாறு மகிந்த ராஜபக்சவினால் அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம் என்று இராஜதந்திர வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைகள் குறித்த இந்தியா தனது நிலைப்பாடு, ஐ.நாவில் அதுபற்றிய விவாதம் வரும்போதே அறிவிக்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா அண்மையில் கூறியிருந்தார். இந்த நிலையிலேயே இந்தியாவின் ஆதரவை உறுதிசெய்து கொள்வதற்காக மூத்தஅமைச்சர் டியு.குணசேகரவை சிறிலங்கா அதிபர் புதுடெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. வழக்கமாக பசில் ராஜபக்சவை அல்லது ஜி.எல்.பீரிசை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் மகிந்த ராஜபக்ச இம்முறை மூத்த அமைச்சர் டியு.குணசேகரவை தெரிவு செய்திருப்பது குறித்து கொழும்பு அரசியல் வட்டாரங்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலையிலான அரசாங்கத்தின் சார்பில் நல்லெண்ணப் பயணம் ஒன்றுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரல்லாத அமைச்சர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டது இதுவே முதல்முறை என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன. |
Tuesday, 13 September 2011
இந்தியப் பிரதமருக்கு இரகசிய செய்தி - சிறப்புத்தூதுவர் மூலம் அனுப்பினார் மகிந்த
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment