Tuesday, 23 August 2011

படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன (படங்கள் இணைப்பு)


யாழ்.நகரில் நேற்றிரவு படையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே திடீரென ஏற்பட்ட முறுகல் நிலை அடிதடியாக மாறியதில் இருவர் காயமடைந்தனர். இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன.

அங்கு கூட்டம் கூடிய மக்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் விரட்டி விரட்டி கொட்டன்களால் தாக்கினர். பதிலுக்குப் பொதுமக்கள் கற்களாலும் கையில் கிடைத்த பொருட்களாலும் படையினரைத் தாக்கினர்.






இதனையடுத்துக் கூட்டத்தைக் கலைக்க படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: இரவு 9 மணியளவில் சென். நீக்கலஸ் சனசமூக நிலைய மைதானத்தில் மக்கள் திரள ஆரம்பித்தனர்.

ஓட்டோ ஒன்றில் வந்த சிலர் திருட முயற்சித்தார்கள் என்றும் வீட்டுக்காரர்கள் சுதாகரித்துக் கொண்டதால் தப்பிச் சென்றனர் என்றும் பரவிய தகவல்களையடுத்தே மக்கள் அங்கு திரண்டனர் என்று கூறப்படுகின்றது.

மக்கள் பதற்றத்துடன் திரண்டதையடுத்து உடனடியாக அந்த இடத்துக்குப் படையினர் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கும் அங்கு கூடியிருந்த இளைஞர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில் தப்பிச் சென்ற திருடர்கள் இராணுவ முகாமுக்குள் புகுந்தனர் என்று செய்தி பரவ ஆரம்பித்ததால் பதற்றம் அதிகரித்துப் படையினர் மீது மக்கள் கற்களை வீச ஆரம்பித்தனர்.

இராணுவத்தினர் வந்த வாகனமும் அடித்து நொருக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்ததும் பொதுமக்களைக் கொட்டன்களால் தாக்க ஆரம்பித்தனர்.

சிதறி ஓடிய மக்களை அவர்கள் விரட்டி விரட்டித் தாக்கினர். யாரோ சிலர் வீட்டுக்குள் நுழைய முயன்றார்கள் என்றும் பிடிக்க முயன்ற போது தப்பிச் சென்றுவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டு இங்கு வந்தோம். இராணுவத்தினரும் பொலிஸாரும் வந்தனர்.

பின்னர் அவர்கள் எங்களைத் திடீரெனத் தாக்க ஆரம்பித்தனர் என்று தப்பி ஓடிக் கொண்டிருந்தபோது ஒருவர் தெரிவித்தார். வீதியில் நின்றவர்களையும் பெண்களையும் பொலிஸார் கண்மூடித்தனமாகத் தடிகளாலும் கொட்டன்களாலும் தாக்கினர்.

பொலிஸாரிடமிருந்து தப்ப ஓடி முயற்சித்த பெண் ஒருவர் மதிலுடன் மோதுண்டு காயமடைந்தார். குழப்பத்தில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பலரைப் பொலிஸார் பிடித்து வாகனத்தில் ஏற்றியதைக் காண முடிந்தது.

எங்களைத் துரத்தி வந்த பொலிஸார் ஒவ்வொருவராகப் பிடித்து வாகனத்தில் ஏற்றினர். என்னையும் பிடித்து ஏற்றப் பார்த்தனர். அவர்களின் கைகளிலிருந்து பறித்துக் கொண்டு இருட்டுக்குள் ஓடி மறைந்து ஒருவாறு வீடு வந்து சேர்ந்தேன் என்றார் ஒருவர்.





No comments: