இலங்கைக்கான அமெரிக்க நிதியுதவிகளை தடைசெய்யும் பிரேரணை ஒன்று சமீபத்தில் காங்கிரஸால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது சட்ட வரமுறையாகும் சாத்தியங்களும் காணப்படுகிறது. இவ்வாறு இது ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டால், நடப்பு ஆண்டில் 13 மில்லியன் டொலர் தொகையையும், அடுத்த ஆண்டில், 55 மில்லியன் டொலர் தொகையையும் இலங்கை இழக்கவுள்ளது. இலங்கை பணத்தில் இது கிட்டத்தட்ட 7.5 பில்லியன் ரூபாய்கள் ஆகும். குறிப்பிட்ட பிரேரணை சட்டமாக்கப்படுவதற்கு முன்னர், அதைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசு அதீத பிரயத்தனங்களை எடுக்கின்றது ,அதன் ஒரு பகுதியாக சில பல்தேசிய நிறுவனங்கள் சிறிலங்காவுடனான வர்த்தக உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அமெரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க முனைவதாக தகவல்கள் கசிந்துள்ளது.கொகா கோலா, போயிங் உள்ளிட்ட 12 பல்தேசிய நிறுவனங்கள் சிறிலங்கா - அமெரிக்க வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன எனத் தற்போது அறியப்படுகிறது. அதாவது அமெரிக்க கம்பெனிகளை வைத்து இலங்கை பாரிய இரகசிய காய் நகர்த்தல் ஒன்றை மேற்கொள்ள தயாராகியிருக்கிறது. இந்தக் கடிதத்தில் சிறிலங்காவின் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருவதைக் காண்பிக்கும் புள்ளிவிபரங்களைச் சுட்டிக்காட்டி , சிறிலங்கா - அமெரிக்க வர்த்தக உறவுகள் வலுப்படுத்தப்படுவது இருநாடுகளுக்கும் நன்மையை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளதாம்.
சிறிலங்காவுக்கான உதவிகளை அமெரிக்கா தடை செய்யவுள்ளது பற்றி இந்தக் கடிதத்தில் நேரடியாக எதுவும் குறிப்பிடப்படாத போதும்- அமெரிக்க அரசுக்கு மறைமுகமாக அழுத்தம் ஒன்றைக் கொடுக்கும் முயற்சியாகவே இது கருதப்படுகிறது. இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறிலங்கா ஆண்டுதோறும் 13 மில்லியன் டொலர் அபிவிருத்தி நிதியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட இலங்கை அரசின் சார்பில் பிரதிநிதிகள் குழு ஒன்று வாஷிங்டன் செல்லவுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை விடவும் இலங்கை பிறிதொரு இரகசியத் திட்டத்தையும் வைத்துள்ளதாம். அதாவது அமெரிக்காவின் நிதி உதவிகள் தடைப்பட்டால் துண்டு விழும் தொகையை சீனாவிடம் இருந்து பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசானது மேற்குலகுகளிடம் இருந்து தொடர்ந்தும் தன்னை அன்னியப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment