Thursday, 10 November 2011

சவீந்திர சில்வாவை ஐ.நா பதவியில் இருந்து நீக்குமாறு 10 மனிதஉரிமைக் குழுக்கள் பான் கீ மூனுக்கு கடிதம்

தனக்கு எதிரான போர்க்குற்ற வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியுயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு சட்டவாளர்கள் பதில் மனு ஒன்றை நேற்றுமுன்தினம் தாக்கல் செய்துள்ளனர்.அதேவேளை, பத்து அனைத்துலக மனிதஉரிமைகள் குழுக்கள் ஒன்றிணைந்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவர் பதவிக்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சமர்ப்பித்த அறிமுக ஆவணத்தை நிராகரிக்குமாறு கோரியுள்ளன.

சித்திரவதைகள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்கள் போன்ற போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது சமஸ்டி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

“போர்க்குற்றவாளி ஒருவரை ஐ.நா தனது பதவித் தரத்தில் வைத்துள்ளது. இது ஒரு உளவியல் மற்றும் சட்ட நடவடிக்கை“ என்று அமெரிக்க பல்கலைக்கழக வொசிங்டன் சட்டக் கல்லூரியின் மனிதஉரிமைகள் பிரிவின் பணிப்பாளர் அலி பேடன் தெரிவித்துள்ளார்.

“மிகப்பெரிய அனைத்துலக கட்டமைப்பான ஐ.நா அமைதி மற்றும் நீதியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலுள்ளது.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டியது ஐ.நாவின் கடமை.

தனது குற்றங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு அவர் இராஜதந்திர விலக்குரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

போர்க்குற்றங்களிலும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் இராஜதந்திர விலக்குரிமையை ரத்துச் செய்து அவரது அறிமுக ஆவணத்தை நிராகரித்து, அவரை விசாரணை செய்வதற்கு ஒத்துழைக்க வேண்டும்“ என்று பத்து மனிதஉரிமை அமைப்புகள் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியுள்ளன.

மனிதஉரிமைகள் மற்றும் அரசியலமைப்புக்கான ஐரோப்பிய நிலையம், மனிதஉரிமைகள் - அமெரிக்கா, சித்திரவதைகளுக்கு எதிரான உலக அமைப்பு, அரசியலமைப்பு உரிமைகளுக்கான நிலையம், ட்ரயல், யால் சட்டப் பாடசாலை அலாட், லொவென்ஸ்டன் அனைத்துலக மனித உரிமைகள் கிளினிக், குற்றமயப்படும் சமூகங்களுக்கு எதிரான பரப்புரை மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட மக்கள் சமூகம் ஆகியன இணைந்தே இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளன.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் அறிமுக ஆவணத்தை நிராகரித்து- சட்டத்தை மீறும் அரசாங்கங்களின் அநீதிகளுக்கு, ஐ.நா பாதுகாப்பு அளிக்காது என்றதும், போர்க்குற்றவாளிகளுக்கும் பாரிய கொடூரங்களைப் புரிந்தவர்களுக்கும் தங்குமிடமாக அமையாது என்றதுமான ஒரு செய்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

“சிறிலங்கா இராணுவத்தில் போர்க்குற்றங்களைப் புரிந்த அதிகாரிகளை சிறிலங்கா அரசாங்கம் வெளிநாடுகளில் இராஜதந்திரப் பதவிகளில் அமர்த்தியுள்ளது.

உலகெங்கும் 22 முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் இராஜதந்திரப் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் அனைத்துலக முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது“ என்றும் இந்த அமைப்புகள் கூறியுள்ளன.

No comments: