Saturday, 3 September 2011

அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக பிரித்தானிய அதிகாரிகளிடம் மனு


லண்டனில் வசிக்கும் அடேல் பாலசிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவொன்றை பிரித்தானிய அதிகாரிகளிடம் கையளிக்க அங்குள்ள சிங்கள அமைப்புகள் சில நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறார் போராளிகள் தற்கொலை செய்வதற்கு நேரடிக் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டை அவர் மீது சுமத்துவதற்கு இந்த சிங்கள அமைப்புகள் மூலம் சிறிலங்கா அரசு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகச் செயற்படும் சில தமிழர்களும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் சிறிலங்கா அரசசார்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறார் போராளி ஒருவருக்கு அடேல் பாலசிங்கம் கழுத்தில் சயனைட் வில்லையை அணிவித்து விடும் காணொலி ஒன்றை இதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தவுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து கொண்டு இன்னொரு நாட்டின் சிறார்களின் தற்கொலைக்கு காரணமாக இருந்தார் என்று அடேல் பாலசிங்கம் மீது குற்றம் சுமத்த சிறிலங்கா அரசும் சிங்கள அமைப்புகளும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்த போது சுமார் 1000 சிறார் போராளிகள் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த 1000 சிறார்களினதும் தற்கொலைக்கு அடேல் பாலசிங்கமே காரணம் என்று அவர் மீது குற்றம் சுமத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: