| தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரும், தற்போது அரச தடுப்புக்காவலில் உள்ளவருமான கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கடந்த மே 14 ஆம் திகதி CNN -IBN சேவைக்கு வழங்கிய பேட்டியின் முக்கிய அம்சங்களின் வரிவடிவமாகும். இலங்கை அரசாங்கத்துடனான யுத்தத்தின்போது விடுதலைப்புலிகள் அமைப்பு தோல்வியடைந்தமைக்கான பிரதான காரணம் விடுதலைப்புலிகள் இலங்கையின் சகோதர நாடானதும், வல்லரசுமான இந்தியாவுடன் முதலில் போர் புரிந்தமையாகும் என்று கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது எமக்கு ஆதரவு அளித்துவந்த மக்களை இழந்தோம். 35 வருடங்களுக்கும் மேற்பட்ட நீண்ட யுத்தம். இதனால் மக்கள் சலிப்படைந்தனர். போரில் பலர் இறந்தனர். மக்கள் அதிக விலை கொடுத்துவிட்டனர். இதுவும் தோல்விக்கான ஒரு காரணமாகும் என்றார். 2006 ஆம் ஆண்டு சுதந்திரம் கோரி அதாவது தமது தனிஈழக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்துலக சமூகத்திடம் பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ஒரு நாடுகூட இதனை ஏற்று ஆதரவளிக்க முன்வரவில்லை. இதிலிருந்து நான் கூறவருவது என்னவெனில் உலகம் பிரிவினைவாதத்தை விரும்பவில்லை என்றார். ஜேர்மனி, அமெரிக்கா, நோர்வே,கனடா, ஜப்பான் போன்ற பல உலகநாடுகள் இலங்கை அரசாங்கத்துடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை வலியுறுத்தின. ஆனால் புலிகள் தமது கொள்கையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அவர்களின் ஒரே இலக்கான தனிஈழம் என்ற கடுமையான போக்கை தொடர்ந்து கடைபிடித்து வந்தார்கள். 2008 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பித்திருக்கையில், ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியன விடுதலைப்புலிகளுக்கு வழங்கும் நிதிகளை நிறுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி அறிக்கை வெளியிட்டார். இதனால் உலகை எதிர்த்து எம்மால் எழுந்து நிற்கமுடியவில்லை. கே.பி.யிடம் ஐ.நா நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக கேட்கப்பட்டபோது, “அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் தவறு செய்துள்ளதாக ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் இந்த அறிக்கையைக் கொண்டு இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. இது மேலும் இடையூறுகளையே ஏற்படுத்தும். இந்த அறிக்கையினால் யாரும் நன்மையடையப் போவதில்லை. போர் முடிவடைந்துவிட்டது. உணவு, உடை மற்றும் அவர்களின் வாழ்க்கையை ஆரம்பிப்பதே மக்களின் தற்போதைய தேவையாகும். மக்கள் தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றும்படியே கேட்கின்றனர். இதனையே நிறைவேற்ற வேண்டும். எனவே சர்வதேச சமூகத்திடமும், புலம்பெயர் தமிழர்களிடமும் இதனையே நான் கூறவிரும்புகிறேன். ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் குழுக்கள் மீண்டும் ஒரு யுத்தத்தை இலங்கையில் ஏற்படுத்தமுனையுமாயின், என்னை கொன்றதன் பின்னேரே அவர்களால் அதனை நடத்த முடியும் என்று கே.பி தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் தலைமைகளை காப்பாற்றுவதற்கு தாம் கப்பலை அனுப்புவதாக பல ஐரோப்பிய நாடுகள் கூறியிருந்தன. ஆனால் அதற்கான காலம் முடிவடைந்துவிட்டது. கடந்த 35 வருடங்களாக உள்நாட்டு யுத்தத்தில் எனது வாழ்க்கை செலவழிந்துவிட்டது. கடந்த 2 வருடங்களாக வீட்டுக்காவலில் உள்ளேன். இன்னும் எத்தனை வருடங்களுக்கு இவ்வாறு இருக்கப்போகின்றேன் என்று எனக்குத் தெரியாது. எனவே எனது மிகுதி வாழ்க்கையை வன்னியில் உள்ள சிறுவர்களுடன் கழிக்க விரும்புகிறேன் என்று பாதுகாப்புச் செயலாளருடன் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் போரில் பிள்ளைகளை இழந்த, பாராமரிக்க யாருமற்ற முதியவர்களையும் பராமரிக்க விரும்புகிறேன். மற்றும் அங்கவீனமானவர்களுக்கு, முக்கியமாக அங்கவீனமான பெண்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். அவர்களது முகங்களில் சந்தோசத்தை பார்ப்பதே எனது கனவாகும் என்று கே.பி அந்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார் |
| 29 Jun 2011 |
Wednesday, 29 June 2011
இந்தியாவைப் பகைத்தமையாலேயே புலிகள் தோற்றனர்! கே.பி க்கு வந்த சுடலை ஞானம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment