Thursday, 22 March 2012

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த நாடுகளின் முழுப்பட்டியல்


ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது. 15 நாடுகள் எதிராகவும், 8 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தும் இருந்தன. அந்த நாடிகளின் முழுப்பட்டியல் விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:-

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-

01.ஆஸ்திரேலியா
02.பெல்ஜியம்
03.பெனின்
04.கேமரூன்
05.சிலி
06.கோஸ்டாரிக்கா
07.செக் குடியரசு
08.கௌதமாலா
09.ஹங்கேரி
10.இந்தியா
11.இத்தாலி
12.லிபியா
13.மொரிசியஸ்
14.மெக்சிகோ
15.நைஜீரியா
16.நார்வே
17.பெரு
18.போலந்து
19.மால்டோவா குடியரசு
20.ரோமானியா
21.ஸ்பெயின்
22.சுவிட்சர்லாந்து
23. அமெரிக்கா
24.உருகுவே

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-

01.வங்கதேசம்
02.சீனா
03.காங்கோ
04.கியூபா
05.ஈக்வேடர்
06.இந்தோனேசியா
07.குவைத்
08.மாலத்தீவு
09.மௌரிடானியா
10.பிலிப்பைன்ஸ்
11.கத்தார்
12.ரஷ்யா
13.சவுதி அரேபியா
14.தாய்லாந்து
15.உகாண்டா

வாக்களிக்காத நாடுகள்:

01.அங்கோலா
02.போஸ்ட்வானா
03.பர்கினா பசோ
04.ஜிபூடி
05.ஜோர்டான்
06.கிர்கிஸ்தான்
07.மலேசியா
08.செனகல்

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி...


இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஈழ தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உயிர் தப்பிய தமிழர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் சித்ரவதை செய்து ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.

இலங்கையில் நடந்த இந்த கொடூர செயல்களுக்கான ஆதாரங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. மனதை பதறவைக்கும் இந்த காட்சிகளை கண்டு உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானம் மீது தற்போது விவாதம் நடந்து வருகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினர்களாக 47 நாடுகள் உள்ளன. தீர்மானம் வெற்றி பெற 24 நாடுகளின் ஆதரவு தேவை.

இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்து நடுநிலைமை வகித்தன.

இதன்மூலம் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடிவு பிறக்கும் என சர்வதேச மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா தீர்மானம் நிறைவேறினால்...தமிழர்களை மிரட்டும் சிங்கள ராணுவம்


ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் நிறைவேறினால் தமிழர் பகுதிகளில் பெரும் கலவரம் வெடிக்கும், ரத்த ஆறு ஓடும் என்பது போல பீதியைக் கிளப்பி வருகிறார்களாம். மேலும் யாழ்ப்பாணத்திலும் தேவையில்லாமல் பெருமளவில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறதாம்.

இலங்கையின் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் யாழ்ப்பாணம் மற்றும் தமிழர் பகுதிகள், கொழும்பில் வசித்து வரும் தமிழர்கள் பெரும் பீதியுடன் காணப்படுகின்றனர். சிங்களர்கள் மீண்டும் ஒரு இனவெறித் தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர். இருந்தாலும் பூணைக்கு இப்போதாவது ஒரு மணியைக் கட்ட சர்வதேச சமுதாயம் முன்வந்துள்ளதே என்ற வேகத்தில் அவர்கள் உள்ளனர். எனவே என்ன வந்தாலும் சந்திப்போம், அமெரிக்க தீர்மானம் வெற்றி பெறட்டும் என்ற மன நிலையில் அவர்கள் உள்ளனராம்.

யாழ்ப்பாணம் துரையப்பா அரங்கில் சாகச நிகழ்ச்சி என்ற பெயரில் இலங்கை ராணுவத்தினர் சர்க்கஸ் காட்டிக் கொண்டுள்ளனராம். இதற்காக கடந்த 2 நாட்களாகவே ராணுவத்தினர் பெருமளவில் வந்து குவிந்துள்ளனர். ஆயுதங்களைப் பிடித்தபடி பஸ்களில் வந்திறங்கிக் கொண்டுள்ளனர்.

இதனால் மன ரீதியாக மக்களை ராணுவம் அச்சுறுத்தி வருகிறதாம். இருந்தாலும் யாழ்ப்பாண மக்களிடையே ஒருவிதமான திடமான மன நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே கொழும்பில் சிங்கள ரவுடிக் கும்பல்கள் இப்போதே தமிழர்களை மிரட்ட ஆரம்பித்து விட்டனவாம். தீர்மானம் எங்களுக்குப் பாதகமாக இருந்தால் அவ்வளவுதான் என்று தமிழர்களை அவர்கள் மிரட்டி வருகிறார்களாம். அதைத் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்க்கிறதாம் போலீஸ்.

பல தமிழர்கள் இந்த மிரட்டல்களால் அச்சமடைந்துள்ளனர். பாதுகாப்பு கருதி வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனராம்.

பல தமிழர்கள் இத்தகைய அச்சுறுத்தல்கள் குறித்து ஐ.நா. அலுவலகம், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் தூதரக அலுவலகங்களுக்கு தகவல் அனுப்பி தங்களுக்கு ஏதும் நேராமல் பார்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனராம்.

சிங்களர்கள் மீண்டும் இனவெறித் தாக்குதலில் ஈடுபட்டால் அதிலிருந்து தப்பிப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழர்களும், தமிழர் கட்சிகளும் மேற்கொண்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெறும் 7 நாடுகள் மட்டுமே ஆதரவு.. பீதியில் ராஜபக்சே

 


ஜெனீவா/கொழும்பு/டெல்லி: அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க ஆதரவைத் திரட்டி வரும் இலங்கை குழுக்கு பெரும் அதிர்ச்சியூட்டும் வகையில், வெறும் 7 நாடுகள் மட்டுமே இதுவரை அந்த நாட்டுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனவாம். இதனால் பெரும் பீதியடைந்துள்ள ராஜபக்சே, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏதாவது செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம்.

தற்போதைய நிலையில் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கியூபா உள்ளிட்ட 7 நாடுகள் மட்டுமே இலங்கைக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனவாம். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் மொத்தம் 46 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதில் ஒரு தீர்மானம் நிறைவேற 24 உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இதுவரை 23 நாடுகள் -இந்தியா உள்பட - ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் சில நாடுகளும் ஆதரவு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது இலங்கை. தங்களது தரப்பில் ஆதரவு நாடுகளின் எண்ணிக்கை 7 என்ற சிங்கிள் டிஜிட்டுக்குக் குறைந்து போய் விட்டதால் என்ன செய்வது என்று புரியாமல் இலங்கைக் குழு புலம்பிக் கொண்டுள்ளதாம்.

இலங்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ் ஒரு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதை பெரும்பாலான நாடுகளும் புறக்கணித்து விட்டன. இலங்கை போடும் விருந்தை சுவைப்பதற்காக மேற்கண்ட 7 நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே ஆவலோடு வந்திருந்தனராம். இதனால் விருந்தை கசப்புணர்வுடன் இலங்கைத் தரப்பு முடித்ததாம்.

இதற்கிடையே, கடைசி நேர முயற்சியாக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை ராஜபக்சே தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியாவின் நிலையை மாற்றிக் கொள்ளுமாறு கெஞ்சி கேட்டுக் கொண்டாராம்.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எடுத்துச் சொல்லி இந்தியாவின் நிலையை மாற்ற வேண்டும் என்று அவர் பிரணாப்பிடம் கோரினாராம். ஏற்கனவே நேற்று கிருஷ்ணாவை, சந்தித்த பெரீஸ் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். அதற்கு கிருஷ்ணா, கை விரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்தே பிரணாப்பைத் தொடர்பு கொண்டார் ராஜபக்சே என்கிறார்கள். ஆனால் பிரணாப் என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை.

நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், சோனியா காந்தியிடமும் கூட ராஜபக்சே பேசி ஆதரவு கோரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் ஆதரிப்போம் என்று சொல்லி விட்டதால் இந்திய அரசு தனது நிலையை இனி மாற்றிக் கொள்ளாது என்றே கருதப்படுகிறது.