Tuesday, 28 February 2012

காப்பாற்றுங்கள்- மேனனுக்கு கோத்தபயா அவசர கோரிக்கை

 


ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டின்போது தங்களுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை முறியடித்து தங்களைக் காக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனனுக்கு ராஜபக்சேவின் தம்பியான கோத்தபயா ராஜபக்சே அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேனனுடன் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். தொலைபேசி மூலம் இந்த அவசர உரையாடல் நடந்துள்ளதாம்.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது தெற்காசிய பிராந்தியத்தில் பல சிக்கல்களை உருவாக்கும் என்று மேனனுக்கு மறைமுகமாக எச்சரிக்கை கலந்த அறிவுரையையும் கோத்தபயா கொடுத்துள்ளாராம்.

கோத்தபயாவின் இந்த கெஞ்சல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை வட்டாரத்தில் மேனன் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பலமுறை இலங்கைக்காக சர்வதேச அளவில் இந்தியா தொடர்ந்து வக்காலத்து வாங்கி வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு கொடுத்த எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றாமல் போக்கு காட்டிக் கொண்டிருக்கிறது இலங்கை. இதனால் இந்தியாவும் சமீப காலமாக இலங்கை விவகாரத்தில் அதிருப்தியுடனேயே உள்ளது. இதுதான் இலங்கையை தற்போது கவலைக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது

ஜெனீவாவில் திரண்டு தமிழர்கள் ஆர்ப்பாட்டம்


ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையின் போர்குற்றங்களுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதைத் தொடர்ந்து ஜெனீவாவை நோக்கி ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்து தமிழர்கள் பெருமளவில் திரண்டு வந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் அவை முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மனித உரிமைகள் மாநாட்டின் முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கில் தமிழர்கள் திரண்டுள்ளதால் இலங்கை அரசின் பீதி அதிகரித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில்தான் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்ற நல்ல செய்தி உலகத் தமிழர்களுக்கு வந்து சேர்ந்துள்ளது.

இதனால் இலங்கைக்கு எதிரான உலகளாவிய நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் ஜெனீவாவில் தமிழர்கள் குவிந்துள்ளனர். சுவிட்சர்லாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் இவர்கள் வந்துள்ளனர். தொடர்ந்தும் வந்தவண்ணம் உள்ளனர்.

நேற்று தொடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டின்போது இவர்கள் மாநாட்டு அரங்குக்கு அருகே கூடி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

அனன்யா-ஆஞ்சநேயன் திருமணம் நடக்குமா?

ஆஞ்சநேயன்தான் என் கணவர். எங்கள் திருமண தேதி விரைவில் முடிவாகும்என்றார் அனன்யா. நாடோடிகள்’, ‘எங்கேயும் எப்போதும்உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அனன்யா. இவருக்கும் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் இத்திருமணம் நடக்காது என்று தகவல் வெளியானது. இதை மறுத்த அனன்யா, ‘ஆஞ்சநேயனைத்தான் மணப்பேன்என்றார். அவர் மீண்டும் அதை உறுதி செய்து நேற்று அளித்த பேட்டி:

எங்களைப் பற்றி ஆதாரமில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள். ஆஞ்சநேயன்  திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பதை என்னிடம் கூறி இருக்கிறார். என்னை ஏமாற்றவில்லை. இருவரும் விரும்பியே திருமணம் செய்ய முடிவு செய்தோம். பத்திரிகைகளில் வந்ததுபோல் அவருக்கு குழந்தைகள் கிடையாது. சிறந்த நணபரான அவருடன் என் உறவு உறுதியாக இருக்கிறது. ஆஞ்சநேயன் பெற்றோரும், என் பெற்றோரும் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விரைவில் திருமண தேதி முடிவாகும். எனக்கும் இதயம் இருக்கிறது. இதில் எங்கள் குடும்பம் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து நாங்கள் வேலைக்கு செல்ல வேண்டும். இதை மற்றவர்கள் மனதில் வைத்துக்கொண்டு எழுத வேண்டும். இப்போதுகூட மலையாள பட ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு அனன்யா கூறினார்.

ரஷ்ய பிரதமரை கொல்ல தீவிரவாதிகள் சதிதிட்டம்

 


ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை கொல்ல செசன்ய தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ரஷ்யாவில் வரும் மார்ச் 4ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது பிரதமராக உள்ள விளாடிமிர் புடின், இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், உக்ரைன் நாட்டில் துறைமுக நகரமான ஒடேசாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குண்டு வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்தார். அங்கிருந்த மற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மூவரும் தீவிரவாதிகள் என்பதும், அவர்கள் வெடிகுண்டு தயாரிக்கும் போது தவறுதலாக குண்டு வெடித்து விட்டது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

கைதானவர்களில் மட்யேவ் என்பவன் ரஷ்யாவை சேர்ந்தவன். இன்னொருவன் பியான்சின். இருவரும் துருக்கியில் இருந்து அரபு எமிரேட் நாடு வழியாக உக்ரைன் வந்ததாக கூறினர். மேலும், ரஷ்யாவை சேர்ந்த செசன்யா தீவிரவாதி டோக்கு உமரோவ் உத்தரவுப்படி, பிரதமர் புடினை கொலை செய்ய சதி திட்டம் வகுத்து வந்ததாகவும் கூறியுள்ளனர். இந்த 2 தீவிரவாதிகளும் தற்கொலை படையாக உருவெடுத்து, ரஷ்யாவில் அதிபர் தேர்தல் முடிந்ததும் புடினை கொல்ல திட்டமிட்டிருக்கின்றனர்.

இதையடுத்து, ரஷ்ய உளவு படையிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த செய்தியை ரஷ்யாவில் சேனல் ஒன்என்ற டி.வி. நேற்று வெளியிட்டது. இதனால், ரஷ்யாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நடத்தப்படும் நாடகம் என்று எதிர்க்கட்சியினர் வர்ணித்துள்ளனர்.

அஜீத்தின் பில்லா-2' வில் கவர்ச்சி வேடத்தில் நயன்தாரா !?


நயன்தாராவும்-பிரபுதேவாவும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்துள்ளனர். நயன்தாரா மீண்டும் சினிமாவில் குதிக்கிறார். நாகார்ஜூனா ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ்ப் படங்களில் நடிக்கவும் பேசிவருகின்றனர். காதல் முறிவு விரக்தியால் கவர்ச்சியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் கேரக்டரை கவர்ச்சியாக உருவாக்கி கதைகளை தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில் 'அஜீத்தின் பில்லா-2' படத்தில் நடிக்க நயன்தாராவை அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 'பில்லா' படத்தில் அஜீத்துடன் நயன்தாராவும், நமீதாவும் நடித்தனர். அப்படத்தில் நயன்தாரா நீச்சல் உடையில் தோன்றினார். எனவே பில்லா-2 படத்திலும் நயன்தாரா இருந்தால் படம் வெற்றி பெறும் என்று சென்டிமென்டாக படக்குழுவினர் கருதுகின்றனர்.

அவரை கவுரவ தோற்றத்தில் ஓரிரு காட்சியிலாவது நடிக்க வைத்து விடவேண்டும் என்று ஆர்வப்படுகின்றனர். இதுகுறித்து நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதிலும் நயன்தாரா கவர்ச்சியாக தோன்றுவார் என்று தெரிகிறது.

இப்படத்தில் அஜீத் ஜோடியாக பார்வதி ஓமன குட்டன் நடிக்கிறார். சக்ரி டோலட்டி இயக்குகிறார்.

'3' படத்தில் கிளைமாக்சை மாற்ற ரஜினி வற்புறுத்தல்?


தனுஷ்-ஸ்ருதி ஜோடியாக நடிக்கும் படம் '3'. ரஜினி மகள் ஐஸ்வர்யா இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் எழுதி பாடி உலகம் முழுவதும் பிரபலமான 'கொலை வெறி' பாடல் இதில் இடம் பெற்றுள்ளதால் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையில் '3' படத்தை ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டியதாக செய்தி வெளியாகியுள்ளது.

படம் ரஜினிக்கு மிகவும் பிடித்து போனதென்றும் மகள் ஐஸ்வர்யா திறமையான இயக்குனராக தன்னை நிலைநிறுத்தி உள்ளதாக சந்தோஷப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அத்துடன் தனுஷ், ஸ்ருதியின் நடிப்பு ரஜினியை மிகவும் கவர்ந்ததாம். இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக பாராட்டினாராம். படத்தின் கிளைமாக்ஸ் சோகமாக இருந்தது. ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும் அதை மகிழ்ச்சியான கிளைமாக்சாக மாற்றும்படி அறிவுரை சொன்னதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து கிளைமாக்சை மாற்ற தனுசும், ஐஸ்வர்யாவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்களாம்.

ராஜீவ் கொலை கைதி பேரறிவாளன் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்

 தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. 30-ந்தேதி வரை தேர்வு தொடர்ந்து நடக்கிறது. 

வேலூர், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 38 ஆயிரத்து 854 மாணவ, மாணவிகள் தேர்வு எழுகிறார்கள். பிளஸ்-2 தேர்வு ஏற்பாடு குறித்து தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அதிகாரிகள் பூபதி, நாராயணசாமி முன்னிலை வகித்தனர். இதில் தலைமை ஆசிரியர்களுக்கு பிளஸ்-2 தேர்வுக்கான ஆணை வழங்கப்பட்டன. 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற 8-ந்தேதி பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார். இதேபோல் வேலூர் ஜெயிலில் உள்ள மற்றொரு கைதி சசிகரன் என்பவரும் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்.

இவர்களுக்காக வேலூர் ஜெயிலில் பிளஸ்-2 தேர்வு மையம் அமைக்கப்படுகிறது. கைதிகளுக்காக ஜெயிலில் பிளஸ்-2 தேர்வு மையம் அமைப்பது இதுவே முதல் முறையாகும்.

பேரறிவாளன் ஏற்கனவே டிப்ளமோ படித்துள்ளார்.  இந்த ஆண்டு வேலூர், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 8 புதிய பிளஸ்-2 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது.

வேலூர் கல்வி மாவட்டத்தில் சைனபுரம், பென்னாத்தூர், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் குடியாத்தம், நத்தம், ஜாட்டியாபள்ளி, கொரட்டி, வெலக்கல்நத்தம், சிருஷ்டி மேல்நிலைப்பள்ளிகளில் புதிதாக பிளஸ்-2 தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.

கோச்சடையானில் ரஜினியுடன் நாகேஷ் ; வெளிவராத புதிய தகவல்கள்

 


கோடம்பாக்கம் முதல் ஜப்பான் வரை எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் படம்  'கோச்சடையான்’. ரஜினி, ஷோபனா, ஜாக்கி ஷெரஃப், சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ருக்மணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படக்குழுவிடம் பேசியதில் கிடைத்த சில சுவாரஸ்யமான தகவல்கள் :

* நின்றுபோனதாக அறிவிக்கப்பட்ட 'ராணாபடத்தின் முதல் பாகம்தான், 'கோச்சடையான்’.

* 'எந்திரன்படத்தைவிட அதிநவீனத் தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்தப் படத்தில், அப்பா, மகன் என்று இரண்டு வேடங்களில் வருகிறார் ரஜினி.

* தந்தைக்கு ஜோடி ஷோபனா, தனயனுக்கு தீபிகா படுகோன்.

* தங்கை கேரக்டரில் நடிக்க சிநேகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இடையில் என்ன நடந்ததோ, இப்போது 'பொம்மலாட்டம்ருக்மணி வருகிறார். ருக்குவுக்கு ஜோடி... ஆதி.   

* இறந்துபோன நடிகரை நடிக்கவைக்கும் விஞ்ஞான முயற்சியை படத்தில் செய்கிறார்கள். ஆம், தொழில்நுட்பத்தின் உதவியால்நாகேஷ் நடிக்கிறார். மகன் ரஜினியுடன், 'காதலிக்க நேரமில்லைஒல்லி நாகேஷூம், அப்பா ரஜினியுடன் 'பஞ்சதந்திரம்நாகேஷூம் நடிக்கிறார்கள். 

* வில்லன் ரோலுக்கும் மறைந்த இந்தி நடிகர் அம்ரீஷ்பூரியை இதேபோன்று நடிக்கவைக்க நினைத்தார்களாம். அந்த வேடத்துக்கு இப்போது ஒப்பந்தம் ஆகி இருப்பது ஜாக்கி ஷெராஃப்.

* சரித்திர வசனங்களை கே.எஸ்.ரவிக்குமார் எழுதி இருக்கிறார். டயலாக் டெலிவரி சரியாக வருமா என்பதில் ரஜினிக்குக் குழப்பம். அதனால், டப்பிங் ஸ்டுடியோ வந்த ரஜினி, வரலாற்று வசனங்களை பல்வேறு மாடலில் பேசிக்காட்டி, திருப்தியான ஒன்றைத் தேர்வு செய்திருக்கிறார்.

* மார்ச் 19-ம் தேதி லண்டனில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

அடுத்த படம் ! : ஷங்கர்


ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'நண்பன்'. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பையும் பெற்றது.

ஷங்கரின் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. தமிழில் கமல், தெலுங்கில் பிரபாஸ், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷங்கர் என்றும், இப்படத்தில் கெஸ்ட் ரோலில் ஜாக்கி சான் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

இப்படத்தினை இதுவரை இந்திய திரையுலகமே கண்டிராத மெகா பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்திருக்கார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் என்று கோடம்பாக்க தகவல்கள் கூறின.

ஆனால் இந்த தகவல்கள் அனைத்தையும் மறுத்து இருக்கிறார் ஷங்கர். இதுகுறித்து ஷங்கர் தனது இணையத்தில் " நண்பன் படத்தை மிகப்பெரிய வெற்றி பெற வைத்ததற்கு நன்றி.  அதற்கு உறுதுணையாக இருந்த எல்லா ஊடகங்களுக்கும் நன்றி.

இப்போது எனது அடுத்த படத்தின் கதையை தயார் செய்து வருகிறேன். இப்படத்திற்காக இதுவரை நான் யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. " என்று தெரிவித்து இருக்கிறார்.

Monday, 13 February 2012

ரஜினியின் கோச்சடையான் புதிய ஸ்டில்லை வெளியிட்டார் சௌந்தர்யா


கோச்சடையான் படத்தில் ரஜினியின் புதிய ஸ்டில்லை இன்று வெளியிட்டுள்ளார் ரஜினியின் மகளும் படத்தின் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினி.

இந்த ஸ்டில்லில் வில்லேந்தி நிற்கிறார் ரஜினி. இது முழுக்க பர்பார்மென்ஸ் கேப்சரிங் எனும் முறையில் டிசைன் செய்யப்பட்ட ஸ்டில் ஆகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் முதல் டிசைனை வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் ஸ்டில் ஒரிஜினல் ரஜினியைக் கண்முன் நிறுத்தியது.

இப்போது வெளியாகியுள்ள ஸ்டில்லில் உள்ள ரஜினி அனிமேஷன் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கோச்சடையானில் சரத்குமார், நாஸர், ஜாக்கி ஷெராப், ருக்மினி உள்பட பலர் நடிக்கின்றனர். தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார்.

ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

நயன்தாரா பற்றி கேள்வி! பதில் சொல்லாமல் புறப்பட்ட பிரபுதேவா!

 


பிரபல நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவா சனிக்கிழமை (11.02.2012) ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் ராகு கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜையில் கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரம் பூஜை செய்தார். பின்னர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானபூங்கோதை அம்மையாரை தரிசனம் செய்தார்.


தரிசனம் முடிந்ததும் அவருக்கு கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் தீர்த்தப்பிரசாதங்கள், சாமிபடங்களை கோவில் நிர்வாகிகள் வழங்கினர். காலை 11.30 மணிக்கு கோவிலுக்கு வந்த அவர் பகல் 1 மணிக்கு கோவிலை விட்டு வெளியே வந்தார்.


அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், தற்போது இந்திப்படம் ஒன்றில் நடித்து வருகிறேன். ரவுடி ராத்தோடு' என்ற அந்த இந்திபடத்தில் நான் தான் கதாநாயகன். வருகிற ஜுன் மாதம் 15ந் தேதி படம் வெளியாகிறது. ரசிகர்கள் இந்த படத்தை ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்" என்றார்.


தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் உங்களுக்கும், நயன்தாராவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு நோ கமெண்ட்ஸ்'. நான் சாமி தரிசனம் செய்ய வந்தேன். தற்போது அதைப்பற்றி பேசவிரும்பவில்லை என கூறி விட்டு வேகமாக சென்று விட்டார்.

தனுஷின் சச்சின் பாடல் YOUTUBE-இல் இருந்து நீக்கப்பட்டது

 


தனுஷ், மனைவி ஐஸ்வர்யாவுடன் நேற்று முன்தினம் ( பிப்ரவரி 08 ) திருப்பதிக்கு சென்றார்.  அவர்களுடன் இசையமைப்பாளர் அனிருத் சென்று இருந்தார்.

தனுஷ் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்திய பின்னர், முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன நேரத்தில் தரிசனம் செய்தார்கள்.

தரிசனம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வந்த நடிகர் தனுஷ் நிருபர்களிடம்  " எனது மாமனார் நடிகர் ரஜினிகாந்த், ஏழுமலையான் அருளால் பூரண நலத்துடன் இருக்கிறார்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் '3' படத்திற்காக நான் சொந்தக் குரலில் பாடிய 'WHY THIS KOLAVERI' பாடல் தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட புகழ் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தானில் இந்த பாடலுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாக அங்குள்ள எனது ரசிகர்கள் தெரிவித்தனர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பற்றி பாடியுள்ள பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்.

எனவே, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் நான் தொடர்ந்து சினிமாவில் சொந்த குரலில் பாடுவேன். " என்று தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் தனுஷ் உருவாக்கிய சச்சின் பாடலை YOUTUBE இணையத்தில் இருந்து நீக்கி விட்டார்கள். இதற்கு தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " யாரோர் சச்சின் பாடலை இணையத்திலிருந்து நீக்கச் செய்திருக்கிறார்கள். ஒரு வாரமாக இரவு பகல் பாராமல் அப்பாடலுக்காக உழைத்திருக்கிறோம். அதை நீக்கிக் செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. சீக்கிரமே மீண்டும் இணையத்தில் அப்பாடலை வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். சட்டப்படி இதனை எதிர்கொள்வோம்." என்று தெரிவித்தார்.

தற்போது சச்சின் பாடல் மீண்டும் YOUTUBE இணையத்தில் மீண்டும் இணைக்கப்பட்டுவிட்டது.

மீண்டும் 'TRENDING'ல் தனுஷ்! (வீடியோ)


தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் வெளியாகி அனைவரது வரவேற்பை பெற்றது. டிவிட்டர் TRENDINGல் தொடர்ந்து 3 நாட்கள் முதல் இடத்தில் இருந்தது.

இதனால் KOLAVERI பாடல் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானது. பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் BOOST நிறுவனம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினுக்காக ஒரு பாடல் தயார் செய்து தருமாறு தனுஷை கேட்டுக் கொண்டது.

இப்பாடல் எப்படி தயாராகி வருகிறது என்பது குறித்து தனுஷ் பேசி முதலில் ஒரு TEASER ஒன்றை வெளியிட்டார்கள். தற்போது அதன் முழு வீடியோ பதிவையும் வெளியீட்டு இருக்கிறார்கள்.

அவ்வீடியோ பதிவு வெளியான 1 மணி நேரத்திற்குள் இந்தியா முழுவதும் TWITTER TRENDINGல் 7ம் இடத்தை பிடித்து இருக்கிறது. சச்சினுக்காக தனுஷ் உருவாக்கி இருப்பதால் கொலவெறி பாடலை விட இப்பாடல் பெரும் வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

வெளியான 1 மணி நேரத்திற்குள் TWITTER TRENDINGல் இடம் பெற்று இருப்பதால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தனுஷ் மற்றும் அனிருத்.

அப்பாடல் வீடியோ வடிவில்...


அப்பாடல் வரிகள் :

Yo Boys...
I am Sing Song..
Cricket Song
Sachin Song

Sachin... Sachin.... Sachin....

Super Mama... Ready... 1, 2, 3, 4...

One Plus one-u two -u two -u
If not sachin who-u? who-u?
28 states glue-u glue-u
nothing else to prove-u prove-u

Hey you are my pride-u
Hey roller coster ride-u
Every players guide-u
we are your side-u
We unite in your name sachin

Hey come-u Mama...
Hey hit- u Mama...
Hey six-u Mama...
hey Super-u Mama...

Hey come-u Mama... Sachin...
Hey hit- u Mama... Sachin...
Hey six-u Mama... Sachin...
Hey Super-u Mama... Sachin...

One day test u t20
Entertainment Guarantee...
89 your entry
Bringing Honour to our country..

Hey every Bowler-u Fear-u Fear-u
Cricket balls Tear-u Tear-u
Bharath Ratna Near-u Near-u
Come on India Cheer-u cheer-u

Darling of the mass-u
Demi god Face-u
oh little master
master blaster
you are our Boost-u..

11 மணிநேர மின்வெட்டு: கோவையில் பல்லாயிரம்பேர் ஆர்ப்பாட்டம் - போலீஸ் தடியடி!


கோவையில் 8 மணி நேர மின்வெட்டைக் கண்டித்து 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

11 மணிநேர மின்வெட்டு

கோவையில் தினசரி குறைந்த பட்சம் 8 மணி நேரம் முதல், அதிக பட்சமாக 11 மணிநேரம் வரை மின் தடைநீடிப்பதால் தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். மின் தடையைக் கண்டித்து கோவையில் உள்ள 36 தொழில் அமைப்பினர் கூட்டாக இணைந்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று கோவையில் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோவையில் உள்ள வேலாண்டிபாளையம், ஆவாரம்பாளையம் பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, சின்ன வேடம்பட்டி, சிகோ, அரசூர், மலுமிச்சம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் என்ஜினீயரிங், குறுந்தொழில் கூடங்கள், வார்ப்பட தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. சில தொழிற்சாலைகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

இது தவிர கோவையில் உள்ள காட்டூர், பழையூர், இடையர்பாளையம், ஒண்டிப்புதூர், உள்ளிட்ட பல பகுதிகளில் மோட்டார் பம்பு, உதிரிபாகங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டு கிடந்தன.

ஆர்ப்பாட்டம்- கஞ்சித்தொட்டி

இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை 10.30 மணிக்கு கோவை தமிழ்நாடு ஓட்டல் முன்பு தொழில் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொடிசியா தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொழில் அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி, பலர் கைகளில் கறுப்பு கொடிகள், சிம்னி விளக்குகளை பிடித்தபடி கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் தடையில்லாமல் மின்சாரம் வழங்கு, பாரபட்சம் இல்லாமல் மின்சாரம் வழங்கு, உடலுக்கு தேவை உயிரோட்டம், தொழிலுக்கு தேவை மின்னூட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கஞ்சி தொட்டிகளை திறந்து, தொழிலாளர்களுக்கு இலவச கஞ்சி வழங்கினர்.

ரூ.250 கோடி உற்பத்தி இழப்பு

இது குறித்து போராட்டக்குழுவினர் சிலர் கூறுகையில், கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொடிசியா, சிமா, இந்திய தொழில் வர்த்தக சபை, தமிழ்நாடு பம்பு உற்பத்தியாளர் சங்கம், சிஸ்பா, காட்மா, டேக்ட் ஆகிய குறுந்தொழில் சங்கங்கள், கோவை சிறுமின் விசை பம்பு உற்பத்தியாளர் சங்கம், கோவை மாவட்ட வார்ப்பட சங்கம், சிறு வார்ப்பட ஆலை உரிமையாளர் சங்கம், கோப்மா, உள்ளிட்ட 36 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உரிமையாளர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர்.

கோவையில் ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு, 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ரூ.250 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது என்றனர்.

மறியல்- தடியடி

சில அமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் இருந்து கிளம்பி, கோவை டவுன் பஸ் நிலையம் எதிரே உள்ள சிக்னல் பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை.

ஆவேசத்துடன் அவர்கள் கோஷம் போட்டவாறு அங்கிருந்து செல்லாமல் அடம் பிடித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நாலா புறமும் கலைந்து ஓடினர்.

வாகனங்களில் வந்த பலரும் பீதியடைந்து ஓடினார்கள். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண், மற்றும் ஓட்டல் தொழிலாளியான முருகன் ஆகியோர் கூட்டத்தில் சிக்கிக் கொண்டனர். இதில் காயம் அடைந்த முருகனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லேசான காயத்துடன் அந்த பெண், அங்கிருந்து ஆட்டோவில் கிளம்பினார்.

இதைத் தொடர்ந்து போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பிய சில தொழிலாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்